Monday, December 31, 2012

DNA fingerprinting பரிசோதனை என்றால் என்ன?






ஆறு வேறுபட்ட நபர்களின் எளிமையான DNA fingerprinting மாதிரிகள் ஒப்பிடப்படும் முறை - மிக எளிமையான பரிசோதனை ஒன்றின் முடிவு இது. 

எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்பது டிஒக்சிரைபோநியுகிளியோரைட்டு (Deoxyribonucleic acid) மூலக்கூறுகள் கொண்டு ஆக்கப்பட்டது. 

எமது உடற்கலத்தின் கருவில் இருக்கும் பரம்பரை அலகுக்குரிய டி என் ஏ மூலக்கூறுகள் எமது பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் பெருமளவில் ஒத்திருக்கும். சிறிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இது ஆளாளுக்கு அவரவரின் குடும்ப பராம்பரிய அடிப்படையில் வேறுபட்டிருக்கும்.

எனவே ஒரு சந்தேக நபரினை டி என் ஏ பகுப்பாய்வின் மூலம் அடையாள காண வேண்டின் அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கலத்தின் கருவில் காணப்படும் சேதமாகாத டி என் ஏ யை, வெட்டும் நொதியங்கள் (restriction enzyme) எனும் வேதியல் கொண்டு துண்டு துண்டாக்கி பின்னர் அவற்றை ஏற்றமுள்ள முனைகளுக்கிடையில் சிறிய மின்னழுத்தத்தின் கீழ் டி என் ஏ துண்டங்கள் மற்றும் நிறமூட்டிகள் பரவக் கூடிய அகரோஸ் ஜெல் (Agarose gel) தகட்டில் பரவ விடுவர்.

நொதியத்தினால் வெட்டப்பட்ட டி என் ஏ துண்டங்கள் அகரோஸ் ஜெல்லில் பரவும் போது துண்டங்களின் பருமனிற்கு ஏற்ப அவற்றின் பரவல் வேகம் அல்லது தூரம் மாறுபடும். சிறிய துண்டங்கள் வேகமாக நகரும். பெரியவை மெதுவாக நகரும். ஆனாலும் இதற்கு நாட்கள் கிழமைகள் என்று அதிக நேரம் ஆகாது.


 

அப்படி டி என் ஏ துண்டங்கள் பரவிய தகட்டில் இருந்து பெறப்படும் அடையாளக் குறிகள் பாவனைக்கு இலகுவாக அமைய நைலோன் தகடொன்றில் பதிக்கப்பட்டு பெறப்படும். பின் அது கதிரியக் கூறுகளிடையே பரிகரிக்கப்பட்டு தேவையான டி என் ஏ பட்டிகள் பெறப்பட மீதமுள்ளவை கழுவி அகற்றப்படும். இவ்வாறு பெறப்படும் தகவலே டி என் ஏ fingerprinting அல்லது பகுப்பாய்வு தகவல் அல்லது தரவு என்று சுருங்கக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஊதா கடந்த கதிர்ப்பின் கீழ் ஆய்வு செய்வது இலகுவாக இருக்கும்.

உண்மையில் இதில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. மேற்கூறியது பொதுவான ஒரு வழிமுறையாகும்.


பொதுவாக ஒரு நபரை அவருடைய குடும்பத்தாரின் டி என் ஏ தரவுகளின் அடிப்படையில் இனங்காண வேண்டின் குறித்த நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல்களுடன் அவருக்கு நெருங்கிய இரத்த சம்பந்தமுள்ள அதாவது குறிப்பிட்ட நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளில் இருந்து பெற்ற டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளும் அவசியம்.அப்போதுதான் ஒப்பிட்டு தரவுகளை சரி பார்க்க முடியும். பொதுவாக உலகில் தேடப்படும் நபர்களின் அவர்களின் உறவினர்களின் டி என் ஏ தகவல்களை அரசுகள் சேகரித்து வைப்பது இப்போது வழமை ஆகும்.

இந்த டி என் ஏ பகுப்பாய்வுக்கு அதிக நேரம் எடுப்பதில்லை. சில மணி நேரங்கள் போதுமானது. ஆனால் சந்தேக நபரின் உறவினர்களின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் பெற முடியாத நிலை இருப்பின் சந்தேக நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளை சரி பார்த்துக் கொள்வது சிரமமானது.

அதுமட்டுமன்றி ஒரு நடுநிலையான ஆய்வின்றி இதுதான் இன்னாரின் டி என் ஏ தரவு என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம் அங்கு கோடுகளே கண்ணுக்குத் தெரியும். அந்தக் கோடுகளின் அடிப்படையில் நாம் இதுதான் இவரின் தகவல் என்று வெளியில் இருந்து உறுதிப்படுத்த முடியாது. நாம் குறித்த மாதிரியை குறித்த நபரின் உறவுகளின் மாதிரியோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் பரிசோதித்து ஒப்பிட்டே இறுதி முடிவுகளை சரி பார்க்க முடியும்.

ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு இதுதான் இன்னாரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் என்றால் அதிலிருந்து அவரை இனங்காண முடியாது. அதில் அவரின் உருவமோ அமைப்போ தெரியப் போவதில்லை. அவரின் அந்தத் தரவை அவரின் உறவினர் என்பவரின் மாதிரியோடு பரிசோதனை ரீதியில் நம்பத்தகுந்த நிலையில் ஒப்பிட்டு பெறப்படும் தரவுகள் மூலமே உறுதி செய்ய முடியும். எனவே டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை சரியான நடுநிலையான அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் நிகழும் பரிசோதனையின் வாயிலன்றி வேறு வகைகளில் உறுதிப்படுத்த முடியாது.

----------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் 

No comments:

Post a Comment