Tuesday, June 18, 2013

விவாகரத்தின் மறுபக்கம்
பார்த்து வாங்கும் ஒரு மாம்பழத்தை சுவையாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஒரு புறத்தில் அழுகிப்போயிருந்ததைக் கண்டால் உடனே தூக்கி தூரவீசிவிடுகிறோம். அதுபோலத்தான் இப்போது திருமண வாழ்க்கையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பிறகும் விவாகரத்து ஏன் ஏற்படுகிறது? என்று ஆராய்ந்தால் விடை எளிதாகவே கிடைத்துவிடும்.

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது சமூகத்தினரால் கூர்ந்து கவனிக்கக்கூடிய பெரிய சம்பவமாக இருந்தது. ஆனால் இன்று அது வீட்டுக்கு வீடு நடக்கும் சாதாரண சம்பவமாக மாறிக்கொண்டிருக்கிறது. பெற்றோர்களை விட அதிகமாக படித்து விட்ட இளைஞர்கள் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். அந்த வாழ்க்கையில் சந்தாஷம் மட்டுமே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். துயரங்கள் வரும்போது எளிதாக துவண்டு போய் அவசர முடிவு எடுத்துவிடுகிறார்கள்.

இன்றைய அவசர உலகில் நாம் பயன்படுத்துவதில் ``யூஸ் அண்ட் த்ரோ'' பொருட்கள் மிக அதிகம். அந்த பொருட்களை போலத்தான் ஆண்- பெண்ணையும், பெண், ஆணையும் கருதுகிறார்கள். `நாம் விரும்பும்போது திருமணம் செய்துக்கொள்ளலாம். ஏதாவது பிரச்சினை வந்தால் தூக்கி எறிந்துவிடலாம்' என்று நினைக்கிறார்கள். அதன் பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பது குறைவு.

திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல. 2 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இயங்கி, புதுமண தம்பதியினருக்கு பலத்தை கொடுத்து புது தெம்பை அளிக்கிறது. சமூக கட்டமைப்புகளும் அதற்கு துணைபுரிகிறது. ஒரு திருமணத்தில் குடும்பங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறதோ, அதைவிட அதிகமாக ஒரு விவாகரத்தில் குடும்பங்கள் துன்பத்தை சந்திக்கின்றன.


தற்போது விவாகரத்துகள் அதிகரித்துவரும் நேரத்தில், நியாயமான விவாகரத்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஒருவரை புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, அவமானப்படுத்தி, அசிங்கமான காரணங்களைக் கூறி விவாகரத்துக்கு முயற்சிப்பது அதிகரித்து வருகிறது. இது ஒரு தொற்றுநோய் போல உலகெங்கும் பரவி வருகிறது.

பெண்கள் இப்போது நிறைய படித்து, வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் எதிர்காலத்தை பணம், பதவி, அந்தஸ்தாக மட்டுமே பார்க்கிறார்கள். சாப்பிடுவதும், தூங்குவதும், விதவிதமாக ஆடைகள் அணிவதும், ஆடிப்பாடி கொண்டாடுவதையும்தான் வாழ்க்கை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால் அவர்கள் திருமணத்தின் முக்கியத்தையும், திருமண வாழ்க்கையை காப்பாற்ற பல விதங்களில் முயற்சிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

கணவன், மனைவியில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்துவிடக்கூடாது. எழுந்துவிட்டால் அதில் யாராவது ஒருவர் தாழ்ந்து கொள்ள வேண்டும். ஒருவரின் சுயமரியாதையை கெடுக்கும் விதத்தில் அவமரியாதை செய்யாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

திருமணம் என்பது ஒருவரை ஒருவர் அடக்கி ஆள கொடுக்கும் உரிமை அல்ல. தவறுகளை எடுத்துச் சொல்ல இருவருக்குமே உரிமை இருக்கிறது. ஆனால் அடுத்தவர்கள் முன்னால் வைத்து பகிரங்கமாக தன் இணையை குறை சொல்ல இருவருக்குமே உரிமை இல்லை. அப்படிச் செய்தால் அது அவமானமாகிவிடுகிறது.

திருமணம் கணவன்- மனைவி இருவரின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. நிகழ்காலத்தில் சின்ன, சின்ன வேறுபாடுகளை நீக்கினால் மட்டுமே இருவரும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். வளமான எதிர்காலத்தை பற்றிய சிந்தனையோடு செயல்பட்டால், நிகழ்காலத்தில் உள்ள சின்னச்சின்ன பிரச்சினைகளை எளிதாக களைந்துவிடலாம்.

ஆண், பெண் இருவருக்கும் குடும்பத்தை நிர்வகிப்பதில் பொறுப்பு இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில், நாள் முழுவதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் நேரம் இரண்டு பேருக்குமே அந்த கூட்டுபொறுப்பை நிறைவேற்ற பொறுமை இல்லை.தேவையற்ற டென்ஷன், கோபம், வெறுப்பு போன்றவைகளால் இருக்கும் பொறுமையையும் இழந்து, மல்லுக்கட்ட தயாராகிவிடுகிறார்கள். அதுவே பிரச்சினைகளுக்கும், பிரிவுகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.


*********************

தினதந்தி

முஸ்லிம்களின் சுயநலம்சிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டுதான் அடுத்த அடி வைப்பார்கள். அப்போது நினைத்தேன். அம்மா ஒரு மனிதாபிமானத்தில் இப்படி செய்கிறார்கள் என்று. பிறகு தான் இந்த குர் ஆன் வசனங்கள் அறிந்தேன்.

99:7எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

4:40 (ஓர் அணுவளவுநன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து,அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.

இங்கு தான் தரவிருக்கும் கூலியாக இறைவன் கூறியுள்ளதெல்லாம் இந்த உலகில் மட்டுமல்ல.... மறு உலகிலும் தான்... இந்த உலகில் உள்ள இன்பங்கள்,வாழ்க்கைதரங்களைத் தான் மனிதன் கண்டுகொண்டானே.... இவ்வுலகில் கிடைக்கும் அதிகபட்ச சந்தோஷம் என்ன என்பதையும் மனிதன் அறிந்தவையாக இருக்கும்பட்சத்தில் அதனையே அவன் மீண்டும் மீண்டும் தருவதாக்க் கூறியிருந்தால் இன்னும் அதிகமதிக நன்மைகள் செய்ய மனிதனுக்கு எங்கிருந்து ஆர்வம் வரும்?? அவன் காணாதநினைத்துப் பார்க்க முடியாத நற்கூலிகளைத் தருவதாக இறைவன் வாக்களித்திருப்பது தானே நம்மை மேலும் மேலும் நன்மைகள் செய்யத் தூண்டுகின்றன. ஆகயார் காலிலும் குத்திவிடக்கூடாது என கல்லை அகற்றியது பிறர்நலத்திற்காகச் செய்த்து போல் தோன்றினாலும் இறைவனின் நன்மைகளை எதிர்பார்த்து செய்ததினால் அது முழுக்க முழுக்க சுயநலம்தான்.
========================================================================

தமது பிள்ளைகளின் படிப்பு/திருமண செலவுகளுக்குப் பணம் கேட்டு வரும் உறவினர்களுக்கு/மக்களுக்கு அம்மா  அவர்களை வெறுங்கையோடு அனுப்பியதேயில்லை. அப்போ நினைத்திருக்கிறேன். அம்மா ஒரு மனிதாபிமானத்தில் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று. பிறகுதான் இந்த குர் ஆன் வசனம் அறிந்தேன்.

33:35.......... தர்மம் செய்யும் ஆண்களும்பெண்களும்நோன்பு நோற்கும் ஆண்களும்பெண்களும்தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும்பெண்களும்அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும்பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர்தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660

ஆக, அம்மா,அப்பா செய்த தானதர்மங்கள் பிறருக்கு உதவி செய்வதற்காகச் செய்திருந்தாலும் இறைவனின் நன்மைகளை எதிர்பார்த்து அவர்கள் செய்த்தினால் சுயநலத்தின் அடிப்படையில் தான்.
========================================================================

கல்லூரியில் படிக்கும்போது முதன்முதலாகப் பர்தா அணிந்த போது பவர்கட் சமயங்களில் ஸ்ஸப்பா ..... வேர்வை தாங்க முடியலையே”  என வேதனையில் இருந்த போது நினைத்திருக்கிறேன்.... அந்த சமயம் மாணவிகளாகிய நாங்கள் வேர்வையில் நெளிவதைக் கண்ட எங்கள் ஆங்கில வாத்தியார் மாண்புமிகு Y.செய்யது முஹம்மது அவர்கள் கவலைப்படாதீர்கள் மாணவிகளே.... நீங்கள் இம்மையில் படும் வேதனைகளுக்கு மறுமையில் இறைவன் நற்கூலி வழங்குவான்” என்ற உண்மையினை  ஆறுதலாகக் கூறியது மறக்கவே முடியாது. அப்பொழுது இந்தக் குர் ஆன் வசனம் நினைவில் வந்து இருந்த கொஞ்ச நொஞ்ச  மன,உடல் வருத்தங்களை மறைத்தன

94:5ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
7:42.  ....- எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் -....
பர்தாவை பெண்களுக்கு மட்டுமே நன்மைகளை அள்ளித்தரும் மற்றுமொரு வாய்ப்பாக உணர்ந்தேன்மகிழ்கிறேன். பிறர் பார்வையையும் எண்ணங்களையும் தீயவழியிலிருந்து பாதுகாப்பதற்காக நான் பர்தா அணிந்து கஷ்டப்பட்ட்து போல் தோன்றினாலும் என் உடலை பிறர் பார்வையிலிருந்து மறைப்பதற்காகவும் அதற்காக இறைவன் வாக்களித்திருக்கும் நன்மைகளுக்காகவும் சுயநலத்தோடுதான் நான் பர்தா அணிகிறேன்.
========================================================================

சில வருடங்கள் முன்புஎன் மாமி என் மாமாவிடம் மரம் வளர்க்கச் சொல்லி எத்தனையோ நோட்டிஸ், விலம்பரமெல்லாம் பார்க்கிறோமே... நம் வீட்டு முன்னாடியும் ஒரு மரம் வைப்போமா எனக் கேட்டவுடன் ஆகா... நம் மாமிக்குத் தான் எத்தனை சமூகப்பற்று....தேசப்பற்று... என நினைத்துப் பெருமிதம் கொண்டேன். பிறகுதான் இந்த ஹதீஸ் அறியப்பெற்றேன்.

6012. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை. என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மரம் நட முனைந்தவுடன் அதை முருங்கை மரமாகத் தேர்வு செய்து இறைவனின் நற்கூலிகளைப் பெறுவதற்காகவும் செய்த சுயநல செயலேயின்றி வேறில்லை என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.

========================================================================

உலகின் எந்த மூலையில் அநீதி இழைக்கப்பட்டாலும் உலகின் அனைத்து மூலைகளிலிருக்கும் முஸ்லிம்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் கண்டன்ங்கள் வருவதை நாம் கண்கூடாக்க் காண்கிறோம். அநீதமிழைக்கப்பட்டவர்களுக்க்த் தம் ஆதரவையும் அனுதாபங்களையும் அக்கறையையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள் என நினைத்தேன். ஆம்...அதேதான்... பிறகுதான் இந்த ஹதீஸ் தெரிந்துகொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம் ஹதீஸ் இலக்கம்:78)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோமகத்தானதை (அல்லாஹ்மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோஉணவை தூரமாக்கிவிடவோ முடியாது.” (ஸுனனுத் திர்மிதி)

அவ்வாறு கண்டன்ங்களைத் தெரிவிக்காதவர்கள் எல்லாம் கோழை எனவும் மனிதர்களின் பிரதி செயல்களுக்கு அஞ்சுபவர்கள் எனவும் நினைத்திருந்தேன். இவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் அநீதம் செய்யும் மக்களுக்குப் பயந்து தான் தமது கோபத்தை அடக்கி வெளிப்படுத்தாமலும் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள் எனவும் நினைத்திருக்கிறேன். பிறகுதான் இந்த குர் ஆன் வசனம் அறியப்பெற்றேன்.

3:134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும்துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்தவிர கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்


ஆகஇவர்கள் கோபத்தைக் காண்பிப்பதும் அல்லது பொறுமையுடன் செல்வதற்கும் இவர்கள் முதற்முக்கியக் காரணமாக்க் கருதுவது இறைவனிடம் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் நன்மைகளைத்தானேயன்றி மற்ற இரக்கம்அக்கறைபச்சாதாபம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
========================================================================

முன்பு நான் வழக்கமாகப் பங்கெடுத்த குர் ஆன் வகுப்பில் மரம் நடுதல் போன்ற நாம் செய்யும் நற்செயல்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் மனிதாபிமான அடிப்படையில் இருக்கவேண்டுமா அல்லது இறைவன் அளிக்கவிருக்கும் அந்நன்மைகளுக்கான நற்கூலிகளை எதிர்பார்த்து செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்த்து. அதாவது ஒரு செயலின் அடிப்படை பிறர்நலம் நோக்குதலா அல்லது (இறைவன் தனக்குக் கொடுக்கவிருக்கும் நன்மைகளை எதிர்பார்க்கும்) சுயநலமா என்பதே கேள்வி.

பதில் இவ்வாறு கூறப்பட்ட்து: கண்டிப்பாக மேற்கூறப்பட்ட சுயநலத்தோடு தான் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்”.

பதிலை இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உண்மையும் புலப்படும். தொடர்ந்து பிறர்நலத்தோடு செய்யப்படும் செயல்கள் சில நேரங்களில் சலிப்பைத் தரக்கூடும். ஏன் நமக்காக மட்டும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. இதையே... இறைவனுடைய பொருத்தத்திற்காகவும் அவன் தரும் நற்கூலிக்காகவும் நம்முடைய சுயதேவைக்காகச் செய்தால் கூட அச்செயலை அவன் அனைவருக்கும் நலமாக்கி வைக்க வல்லவன்.

ஆகஇஸ்லாம் மனிதர்கள் செய்யும் ஒரு செயலை நியாயப்படுத்தி அச்செயலுக்காக அவர்களுக்கு மறுமையில் நன்மைகளைக் கூலியாக வாக்களிக்கிறது என்றால் அச்செயல் இவ்வுலகத்திற்கும் அதன் ஜீவன்களுக்கும் நல்வித பாதிப்புகளையே உருவாக்கவல்லவை எனவும் இவ்வனைத்திலிருந்தும் தெளிவாகிறது. முஸ்லிம்கள் செய்வதை வைத்து இஸ்லாத்தை எடை போடுவதைத்தவிர்த்து இஸ்லாம் கூறுவதை வைத்து அதனை ஆராய வேண்டும். 

ஆமா... பழிக்குப் பழி வாங்கச் சொல்லும் மதம், நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ளச் சொல்லும் மதம்இதையெல்லாம் எப்படித்தான் ஏத்துக்கிட்டு ஜால்ரா போடுறீங்களோ தெரியலைன்னு பல இடங்களில் பலர் சொல்லிட்டு இருக்கிறதுதானே நினைவிற்கு வருகிறது. ஒரேயொரு விஷயம்... சினிமாவில் ஹீரோ தனக்கு அநீதி இழைத்தவனை க்ளைமாக்ஸில் கொன்று பழி தீர்த்தால் கைதட்டிவிசிலடித்துஅந்த ஹீரோவிற்கு கட்-அவுட் வைத்துஅவருக்கு நிஜ வாழ்வில் உடம்பு முடியலேன்னா அவருக்காக ப்ரார்த்தனை எல்லாம் செய்யப்படுகின்றன... அதே நியாத்தை நிஜ வாழ்வில் சொன்னா கசக்குது.... அந்த நியாயத்தைச் செயல்படுத்தும் முஸ்லிம்களை தீவிரவாதின்னு சொல்வது எந்த வித்த்தில் நியாயமாகும்??! தனக்கு ஏற்பட்ட பேரிழப்பினால் அநீதம் இழைக்கப்பட்டவர் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தவே பழி வாங்குவது போல் தோன்றினாலும் இனி அடுத்து தவறு/அநீதி இழைப்பவரைத் தான் இப்பழி வாங்கும் நடவடிக்கை தடுக்கும் என்பது புலப்படும். ஆக இதிலும் சமூகநலத்திற்கு இட்டுச்செல்லும் சுயநலம்.

உயிருக்கு உயிர்கண்ணுக்குக் கண்மூக்குக்கு மூக்குகாதுக்குக் காது,பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். 
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். 
(அல் குர் ஆன் 5:45)
  
========================================================================

நான்கு மனைவிகளிடமும் நீதமாக நடந்து கொண்டால் யாருக்கு என்ன குறைந்து விடப் போகிறது??! இது குறித்து பலர் பக்கம் பக்கமாக பலருக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் சில உங்கள் பார்வைக்கு இந்த விளக்கமும்...இந்த விளக்கமும்.... கண்டிப்பாகதெளிவு கிடைக்கும்.

இறைவனுக்காகவும் அவன் தரவிருக்கும் நற்கூலிகளுக்காகவும் செய்யும் எந்தச் செயலாயினும்அது பக்கா சுயநலமாக இருந்தாலும்எந்த நிலையிலும் பிறர் நலம் பேணுவதாகவே அமைகின்றன. நன்மைகளை எதிர்பார்க்கும் சுயநலமின்றி பிறர்நலம் இல்லை... பிறர்நலமின்றி (சுவனம் செல்லுதல் எனும்) சுயநலம் இல்லை. இறைவனது அடிமைகளாய் இருந்து அவன் தரும் கூலிக்காக செய்யும்எச்செயல்களும் நற்செயல்களே...இது போல்இஸ்லாம் கூறும் ஒவ்வொன்றிலும்உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுமெனும் உத்வேகத்தில் மட்டும் ஆராய்ந்தால் பதில் நிச்சயம் கிடைக்கும்.
========================================================================

http://enrenrum16.blogspot.com/2013/04/selfish-muslims.html

Hoatzin (வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்

இந்த பதிவு சரியான முறையில் கையாளப்பட்டிருந்தால் இதில் உள்ள 
சில தகவல்கள் உங்களை வியப்பின் உச்சத்திற்கு கொண்டுச்செல்லலாம் 
Hoatzin (வாட்சின் என்று உச்சரிக்க வேண்டும்) - பார்ப்பதற்கு கொள்ளை 
அழகாக இருக்கும் இந்த பறவையினம் தென் அமெரிக்க கண்டத்தில் வசிக்கின்றது. கயானா நாட்டின் தேசியப்பறவை.


கோழி அளவிலான இவை பல ஆச்சர்யத்தன்மைகளை
 தன்னகத்தே கொண்டவை. வேறு எந்த பறவையினத்துக்கும்
 இல்லாத தனித்துவங்கள் இவற்றிற்கு உண்டு. 

படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இவற்றின் பெயரைக் 
கேட்டாலே சில பரிணாமவியலாளர்களுக்கு அலர்ஜி தான். 
ஆம், பரிணாமவியலாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துக்கொண்டிருக்கின்றது இந்த உயிரினம்.

ஏன் இவை பரிணாமவியலாளர்களுக்கு கடுமையான 
சவாலாக விளங்கிக்கொண்டிருக்கின்றன? அப்படி என்ன ஆச்சர்யத்தன்மைகளை, தனித்துவங்களை இவை
 கொண்டிருக்கின்றன? 

அறிந்துக்கொள்ள தொடருங்கள்...

ஆச்சர்யங்கள் மற்றும் தனித்துவங்கள்:  

பல்வேறு நிறங்களை தன் உடலில் கொண்டுள்ள வாட்சின், 
ஒரு சரிவர பறக்கத்தெரியாத பறவை. இறக்கைகளை
 படபடவென்று அடித்துக்கொண்டு மரம் விட்டு மரம் பாயியுமே 
தவிர, நீண்ட தூரத்திற்கு அதனால் பறக்க இயலாது. 

தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் வசிக்கும் வாட்சின், 
ஆற்று நீருக்கு மேலே உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டும். 
ஆண் பெண் என்று இரண்டுமே முட்டைகளை மாறி மாறி 
அடைக்காக்கும். 

ஆச்சர்யமான உடலமைப்பை தன்னிடத்தே கொண்டவை 
இதனுடைய குஞ்சுகள். எப்படியென்றால், குஞ்சுகளின் ஒவ்வொரு
 இறக்கையின் இறுதியிலும் இரண்டு நகங்கள் உண்டு.இந்த நகங்கள் ஆபத்தான சூழ்நிலையில் குஞ்சுகளுக்கு 
உதவுகின்றன. எப்படி என்பதற்கு ஒரு உதாரணத்தை சொன்னால்
 உங்களுக்கு புரிந்துவிடும். கழுகு போன்ற ஆபத்துக்கள் 
வாட்சினின் கூட்டை நெருங்கினால், குஞ்சுகளை விட்டு 
விட்டு தாய் தந்தை பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்கு 
சென்றுவிடும் (குஞ்சுகள் தங்களை காத்துக்கொள்ளும் என்ற 
எண்ணம் இதற்கு காரணமாக இருக்கலாம்). 

இந்த குஞ்சுகள் என்ன செய்யுமென்றால், ஆபத்து நெருங்கும்
 போது, கூட்டிலிருந்து அப்படியே தாவி கீழே உள்ள ஆற்றில் 
விழுந்துவிடும். ஆபத்து நீங்கும் வரை நீருக்கடியில்
 நீந்திக்கொண்டிருக்கும். ஆபத்து விலகிவிட்டதாக 
உணர்ந்துவிட்டால், கரையேறி, தன் இறக்கைகளில்
 உள்ள நகங்களை பயன்படுத்தி மரமேறி தன் கூட்டிற்கு
 திரும்ப வந்து சேர்ந்துவிடும்.

இதில் மற்றொரு வியப்பான தகவல் என்னவென்றால், 
குஞ்சுக்களாக இருக்கும்போது நன்கு நீந்தவும் மரமேறவும் 
தெரிந்த இவற்றிற்கு, பெரியவர்களானதும், இந்த இரண்டு 
தன்மைகளும் இவற்றை விட்டு போய்விடுகின்றன.

வாட்சின்கள் சைவத்தை உணவு முறையாக கொண்டவை. 
அதிலும் இலைகளையே அதிகம் உண்பவை. இவற்றை 
உணவுக்காக பிடிப்பதில்லை தென் அமெரிக்க பழங்குடியினத்தவர். 
இதற்கு காரணம், இவற்றின் இறைச்சி ருசியாக இருக்காது 
என்பதோடு மட்டுமல்லாமல், இவற்றிலிருந்து வெளிவரும் 
ஒருவித துர்நாற்றமும் மற்றுமொரு காரணம். உணவுக்கு
 வேறெதுவும் கிடைக்காத கடைசிக்கட்டத்தில் மட்டுமே 
இவற்றை பிடிக்கின்றனர் பழங்குடியினத்தவர்.


உலகின் மற்ற பறவையினங்களுக்கு இல்லாத ஒரு 
தனித்தன்மை வாட்சின்களுக்கு உண்டு. அது, இவற்றின் 
செரிமான மண்டலம் (Digestive System) தான்.      

மற்ற பறவைகளில், அவை உண்ணும் உணவுகள் gizzard எனப்படும் 
இரப்பையில் உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கின்றது. ஆனால் வாட்சின்களிலோ, இவற்றினுடைய பெரிய தொண்டைப்பையில் 
(Crop) உணவு செரிமானம் நடக்கின்றது. இது அறிவியல்ரீதியாக
 மிகவும் ஆச்சர்யமான விசயமாகும்.

வாட்சின்களின் தொண்டைப்பை இரண்டு பகுதிகளாக
 பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உணவுகளை சேமித்து
 வைப்பதற்கும், மற்றொன்று செரிமானத்திற்கும்
 பயன்படுகின்றது.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் மற்றொரு தகவல், இந்த பறவைகள்
 தங்களது தொண்டைப்பையில் உணவுகளை நிறுத்திவைக்கும் 
நேரம்தான். திரவ உணவுகளை சுமார் 18 மணி நேரங்கள் வரையும், 
திட உணவுகளை சுமார் 1-2 நாட்கள் வரையும் நிறுத்திவைக்கின்றன.
 உலகில் வேறெந்த பறவைக்கும் இப்படியான தன்மை கிடையாது.

பாதி அறைத்த நிலையில் தொண்டைப்பையில் உள்ள 
உணவுகளை மேலே கொண்டுவந்து தங்கள் குஞ்சுகளுக்கு 
உணவாகக் கொடுக்கின்றன இந்த பறவைகள். வாட்சின்களின் 
உணவில் ஏதேனும் நச்சுப் பொருட்கள் இருந்தால் அவை 
தொண்டைப்பையில் உள்ள திரவங்களால் நீக்கப்பட்டு
 தூய்மையான உணவுகளே குஞ்சுகளுக்கு செலுத்தப்படுகின்றன.

வியப்புக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய
 மற்றொரு தகவல், வாட்சின்களுடைய தொண்டைப்பையும் 
அதன் தன்மைகளும் கால்நடைகளை ஒத்திருக்கின்றன என்பதுதான்.
 ஆம், மாடு போன்ற கால்நடைகளும் இப்படியான செரிமான 
மண்டலத்தையே கொண்டிருக்கின்றன.

வாட்சின்கள் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள பதிவின்
 இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்...

மர்மங்களும், குழப்பங்களும்: 

வாட்சின்களின் வினோதமான உடலமைப்பும், இயல்புக்கு 
மாற்றமான தன்மைகளும் பரிணாமவியலாளர்களை பெரும் 
குழப்பத்திலேயே ஆழ்த்திருக்கின்றன.

  • இவை எந்த உயிரினத்திலிருந்து பரிணாமம் அடைந்து                             வந்திருக்கும்?
  • உலகின் மற்ற பறவையினங்கள் தங்களுக்குண்டான                                                           gizzard செரிமான மண்டலத்தை கொண்டு பிரச்சனைகள்                                       இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்க, இவைகளுக்கு மட்டும் கால்நடைகளுக்கு இருப்பது போன்ற செரிமான மண்டலம்                                 உருவாகத் தேவை என்ன? 

- இப்படியான கேள்விகளுக்கு இதுவரை திருப்திகரமான முடிவுகள் 
எதுவும் எட்டப்படவில்லை.

'பரிணாமத்தில் விடையில்லா கேள்விகள்தான் நிறைய 
இருக்கின்றனவே?, இதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது'
 என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க 
வேண்டும். பல கேள்விகளுக்கு அப்படி இப்படி என்று 
எதையாவது கூறி 
சமாளிக்கவாவது முயற்சி செய்வார்கள் பரிமாணவியலாளர்கள். 
ஆனால் வாட்சினை பொறுத்தவரை அப்படியான அனுமானம் கூட
 கிடையாது. ஒரு பெரிய வெற்றிடம் மட்டுமே.

டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் (DNA Sequence data) கூட
 சூழ்நிலையை மோசமாக்கினவே தவிர சீராக்கவில்லை.

No satisfying evolutionary hypothesis has been proposed, and the situation has become worse with the availability of DNA sequence data - wikipedia
இதுவரை எந்தவொரு திருப்திகரமான பரிணாம அனுமானமும் முன்வைக்கப்படவில்லை. டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன - wikipedia  

இப்படியான படுகுழப்பமான சூழ்நிலை வாட்சின்கள் விசயத்தில்
நீடிப்பதாலேயே இவற்றை வேறெந்த (பறவை) குடும்பத்தோடும் 
சேர்க்காமல் இவற்றிற்கென தனி குடும்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்
 (Family-Opisthocomidae).

உலகின் பெரும்பான்மை உயிரினங்களான பூச்சிகளின் 
தோற்றத்தில் எப்படி விடைத்தெரியாமல் விழிப்பிதுங்கி 
நிற்கின்றனரோ, அதுபோலவே வாட்சின்களின் விசயத்திலும்
 நிற்கின்றனர் பரிணாமவியலாளர்கள். (பூச்சிகளின் தோற்றம் 
குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

இருக்கும் தலைவலி போதாதென்று மற்றுமொரு புது பிரச்சனை 
வாட்சின்கள் விவகாரத்தில் தற்போது கிளம்பியுள்ளது.   

அறிவியல் ஆய்விதழான "Naturwissenschaften"-னில்,  (5th October, 2011) வெளிவந்த
 ஒரு ஆய்வுக்கட்டுரை, வாட்சின்கள் குறித்த புது தகவலை கூறுகின்றது. அதாவது, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான எலும்புத்துண்டுகள் வாட்சின்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றன என்ற தகவல்தான் அது.

அப்படியென்றால், வாட்சின்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சார்ந்தவைகளாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

பிரச்சனை இங்கு தான் ஆரம்பிக்கின்றது. வாட்சின்கள் தென் 
அமெரிக்காவில் மட்டுமே வசிக்கின்றன. வாட்சின்களின் 
மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை என்றால், 
எப்படி அவை தென் அமெரிக்காவிற்கு வந்தன? சற்று தூரம் கூட 
பறக்க முடியாத அவை, ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்கவிற்கும்
 நடுவில் இருக்கக்கூடிய 1000 கி.மீ (க்கும் மேலான) அகலம் கொண்ட அட்லான்டிக் பெருங்கடலை எப்படி தாண்டின?

இவைகளின் மூதாதையர் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவைகளாக இருந்திருக்கலாம் என்று நினைத்தாலும் கூட, 1000 கி.மீ தூரத்தை 
கடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றது Science Daily தளம். 

But how does a bird, which is an especially poor long-distance flyer, manage to cross a sea that is over 1,000 kilometres wide? Even if the flying capabilities of the Hoatzin's ancestors were better, it is highly unlikely that they could have managed this distance in the air - Science Daily, 4th Oct 2011

பிறகு எப்படித்தான் கடந்தன?

இங்கு தான் ஒரு சூப்பர்(??) விடையை கூறுகின்றனர் பரிணாமவியலாளர்கள். அதாவது மிதவைப் போன்ற ஒன்றில் ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாமாம் வாட்சின்கள் (drifting flotsam, rafting event).


மிதவை என்றால் நாம் பார்க்கக்கூடிய கட்டுமரங்கள் போன்று 
இருக்கலாம், அல்லது ஒரு சிறு தீவு போன்ற நிலப்பரப்பு அப்படியே 
தண்ணீரில் மிதந்து செல்வதாக இருக்கலாம். நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

இப்படி கண்டம் விட்டு கண்டம் மிக நீண்ட தூரம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மிதவையில் செல்ல வாய்ப்புண்டா? அப்படி இதுவரை ஒரு பயணத்தை சோதித்து பார்த்திருக்கின்றார்களா? அல்லது இதுவரை 
அப்படியொரு பயணத்தை யாராவது பார்த்திருக்கின்றார்களா?

பரிணாமவியலாளர்களின் இத்தகைய கற்பனை கதைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு அப்படி
 சொல்வதைத்தவிர வேறு வழியும் இல்லை. டார்வினின் காலத்தில்
 இருந்து பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்களை 
தேடிக்கொண்டிருப்பவர்கள் தானே இவர்கள்? ஆதாரங்கள் 
எதுவும் இல்லாதபோது இப்படியான எண்ணங்கள் தோன்றத்தான் 
செய்யும்.

எது எப்படியோ, வாட்சின்கள் தொடர்ந்து இவர்களுடன் 
கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றன.'வாட்சின்கள் 
விவகாரத்தில் மர்மமான முறையில் பரிணாமம் வேலை 
செய்திருக்கின்றது' என்ற (வழக்கமான) பதிலை சொல்லி
 தங்களை சமாதானப்படுத்திக்கொண்டு காலம் பதில் 
சொல்லும் என்று காத்திருக்கின்றனர்.

இதுவரை பரிணாம விசயத்தில் எதிர்மறையான பதில்களையே 
இவர்களுக்கு சொல்லியுள்ள காலம், வாட்சின்கள் விசயத்திலாவது
 இவர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய பதிலை சொல்லுமா??.....
இவர்களுடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம்....இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Pictures taken from:
1st Picture - 'Its Nature' website.
2nd Picture - Howstuffworks website and tailored by aashiq ahamed.
3rd Picture - Scientific American blog. 

My sincere thanks to:
1. Lynx Edicions.

References:
1. Across the Atlantic On Flotsam: New Fossil Findings Shed Light On the Origins of the 
Mysterious Bird Hoatzin - Science Daily, 4th oct 2011. link
2. HBW 3 - Family text: Opisthocomidae (Hoatzin) -  Handbook of the Birds of the World, Lynx
 Edicions. link
3. Hoatzins are no longer exclusively South American and once crossed an ocean - Scientific 
American blog, 5th oct 2011. link
4. Hoatzin - Encyclopedia Britannica. link
5. Hoatzin - howstuffworks. link
6. Hoatzin — the strangest bird in the Amazon: Houston Chronicle, 9th April 2010. link
7. Hoatzin - Wikipedia. link
8. Hoatzin (Opisthocomus hoazin) - Guyana Birding. link
9. More Taxa, More Characters: The Hoatzin Problem Is Still Unresolved - Molecular 
Biology and Evolution, Oxford Journals. link
10. The Case of the Mysterious Hoatzin: Biogeography Fails Neo-Darwinism Again - 
Evolution News, 5th Nov 2011.link
11. Opisthomocus hoazin - Oiseaux birds. link
12. RELIC OF PREHISTORY? - Last Refuge. link
13. Hoatzin – Beautiful Stinkbird: Suite 101. link
14. Oceannic dispersal - wikipedia. link
15. Biogeographical Challenges to Neo-Darwinian Evolution - Idea center. link
16. The Horrible Hoatzin - Its Nature. link


***************************************

நன்றி :
ஆஷிக் அஹமத் அ

நிதர்சனம்...
சேவல் கூவியது.
நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய
அன்போடு என்னை வாழ்த்துகிறது.. என்று கதிரவன் பூரித்துப் போனான்.

மாலை வந்தது.

கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.

சாயும் போது.

நான் விழுகிறேனே.. என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா என்று ஏங்கினான்.

சேவலை அவன் எதிர்பார்த்தான்.

வரவில்லை.

விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான்.

“எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை.”


**********************

-காசி ஆனந்தன்-

அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள்
குழந்தைகளுக்கு நாம் அதிகம் தருவது அட்வைஸ். அது எளிமையானது.யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர்கள் முக்கியமாகத் தர வேண்டியது ஐடியா...ஐடியா...ஐடியா மட்டுமே.

ஒரு குழந்தை தனது ரிப்போர்ட்டில் 4 நூறுகளுடனும்,ஒரு 50 மதிப்பெண்களுடனும் வீட்டிற்கு வந்தால்,பெற்றோர் கேட்கும் முதல் கேள்வியே ஏன்? இந்த பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தையின் எதிர்பார்ப்பு என்ன? மற்ற பாடங்களில் தான் பெற்ற 100 மதிப்பெண்களுக்கான பாராட்டாகத்தான் இருக்கும். அந்த பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற என்ன காரணம்? அதை எவ்வாறு களைவது? இந்த ஐடியாவை பெற்றோர்கள்தான் தரவேண்டும்.


நாம் வெறுமனே குழந்தைகளை அதைச் செய், இதைச்செய் என்றுதான் சொல்கிறோமே தவிர அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில்லை.
குழந்தைகளைப் பாரட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். பாராட்டுக்கு மயங்காதவர்கள் யார்தான் இருக்கிறார்கள். சின்னச் சின்ன செயல்களைக்கூட பாராட்டக் கற்றுகொள்ளுங்கள். இது அனைவருக்கும் பொருந்தும். மனைவிகூட பாராட்டைத்தான் எதிபார்க்கிறாள். நாம்தான் அதைச் செய்வதில்லை.


சில குழந்தைகள் சுமாராகத்தான் படிக்கும். ஆனால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடையும். கீழேயுள்ள மதிப்பெண்களைப் பாருங்கள்.
ஆங்கிலம் - 200க்கு 39, கணக்கு - 175 க்கு 59, அறிவியல் 100 க்கு 45, புவியியல் - 75 க்கு 34, வரலாறு - 75 க்கு 20.
இவ்வளவு சுமாரான மதிப்பெண் வாங்கிய அந்த மாணவன் யார்? இந்திய விடுதலைக்காக இறுதிவரை போராடிய மகாத்மா காந்திதான் அவர்.(நன்றி : சிபி.கே.சாலமன்)


ஷிவ் கெரோ சொன்னது: வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
அனுபவத்தின் மூலம் சிலர் முன்னேறியுள்ளனர்.

நிறைய அறிவியல் அறிஞர்கள் பள்ளிப் படிப்பைக்கூட முடித்திருக்கவில்லை. அதேபோல் அக்பருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனால் சிறந்த நிர்வாகத்திறன் உடையவர். காமராசர் தொடக்கக் கல்வியே முடிக்க வில்லை. ஆனால் தொலைநோக்குப்பார்வையுடன் தமிழகத்தை முன்னேற்றியவர். பள்ளிக்கூடத்தில் வெறும் ஐந்தாண்டுகள் மட்டுமே படித்த பெர்னாட்ஷா உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். ஆனால் இவர்களெல்லாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஐடியாவைக் கற்றிருந்தார்கள்.

குழந்தைகளுக்கு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், இணைந்து கொள்ளுதல், பாராட்டும் எண்ணம் போன்ற பண்புகளை வளர்க்க வேண்டும்.
வெற்றி பெறும் மனநிலையைப் பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்கு
வளர்ப்பு முறை மிக முக்கியம். இதற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் உதவி செய்ய வேண்டும்.எதிர்காலக் கனவுகளை வெல்லக் கற்றுக்கொடுக்க வேண்டும்.


இவையாவுமே அட்வைஸ் மூலம் வருவதில்லை. குழந்தைகளை வளர்க்கும் விதம், அவர்கள் முன்னே நாம் நடந்து கொள்ளும் விதத்தின் மூலம் வருவது.
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும்,பாடிக் கறக்கிற மாடை பாடித்தான் கறக்கணும்.
ஒரு மனிதனுக்கு எது ஒன்று உணவாக இருக்கிறதோ இன்னொருவனுக்கு அது விஷமாக இருக்கலாம். என்றுமே அட்வைஷ் விஷம்தான்.


அதுவும் இன்றைய தலைமுறையினர் கேட்கும் மனநிலையிலும் இல்லை. அவர்களுக்கு என்ன தேவை என்பதை நாம்தான் உணரச்செய்ய வேண்டும். சிறு வயதிலேயே கஷ்டத்தை உணரவைத்தால்தான் அவர்களுக்கு பணத்தின் அருமை புரியும்.சிறு வயதிலேயே பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு முன்பாகவே நாம் பெரியவர்களை அவமதித்தால் அது அவர்களின் மனதில் பதிந்துவிடும். இது நாளை நமக்கு எதிராக திரும்பவும் செய்யும் என்பதை மறக்காதீர்கள். அறிவியல் சிந்தனைகளை வளர்க்க கற்றுக் கொடுங்கள். தொலைக்காட்சிகளில் தொலைந்து விடாமல் காப்பது நம் கடமை. நாம்தான் தொலைந்து கிடக்கிறோம். குழந்தைகள் மீது பழி போடுகிறோம்.
பல சமயங்களில் நம்முடைய விருப்பத்தைதான் குழந்தைகள் மீது திணிக்கிறோம். அவர்களின் விருப்பங்கள், தேடல்களுக்கு முக்கியத்துவம் தருவதேயில்லை.
துரியோதனன், தர்மர் இரண்டு பேரும் பார்த்தவற்றை கர்ணன் கேட்கும்பொழுது துரியோதனன் தீய செயல்களையும் ,தர்மர் தான் பார்த்த நல்ல செயல்களையும் சொல்லுவார்கள். நாம் எப்படியோ அப்படித்தான் நம்மைச் சுற்றியுள்ளவையும் இருக்கும்.


குழந்தைகள் செய்யும் சிறு தவறுகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம் அல்லது அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளச் செய்யலாம்.
குழந்தைகளுடன் கலந்து பேச நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதைவிடுத்து விவாதம் செய்துகொண்டு இருக்கிறோம். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளைப் பொறுமையாகக் கேளுங்கள், அவர்களுடன் சண்டை புரியாதீர்கள், அல்பமான விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.


குழந்தைகளைத் தூண்டுவதன் மூலம் வெற்றியாளர்களாக மாற்ற முடியும்.அது செயல்பாடுகளைச் செய்வதற்கான தூண்டுதலாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஏர்ல் நைடிங்கேல் சொல்வதுபோல் ஒரு மதிப்புமிக்க இலக்கை படிப்படியாக அடைதலே வெற்றி என்பதாகும். அதை நாம் குழந்தைகளை அடையச்செய்வது நம் கடமையாகும்.


*******************
ஈகரை தமிழ் களஞ்சியம்