Wednesday, February 20, 2013

சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்!



பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்த்து ஆளாக்குவதற்குள் அவற்றுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் எண்ணில் அடங்காதவை. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க நாம் பாடுவதை போலவே பறவை களும் பாடுபடுகிறது. குஞ்சுகளைப் பறி கொடுப்பது முதல் வேட்டையாட்களிடம் சிக்கி கைகால்களையும் உயிரையும் கூட இழக்கிற வாய்ப்புகள் உண்டு.

ஆனால், வேட்டையாடிகள் எப்போதும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதில்லை. சின்ன பலவீனமான பறவைகள், கூட்டமாகச் சேர்ந்து எதிரிகளைத் தொல்லைப் படுத்தி விரட்டி விடுகின்றன. இவ்வாறு கும்பலாய் பாய்வது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. என்ன இருந்தாலும் அது ஒரு மிகவும் அபாயகரமான வழக்கம். அதற்குச் சான்றாகப் பல உயிரிழப்புகள் உள்ளன. இருந்தாலும் வேறு தற்காப்பு உபாயம் இல்லாத பறவைகள், கும்பலாய் பாயும் உபாய உத்தியைத்தான் பரவலாகக் கையாளுகின்றன. அவை தமக்கு ஏற்படக்கூடிய விபத்து வாய்ப்புகளை எவ்வாறு குறைத்துக் கொள்கின்றன? ஆபத்தின் அளவைக் கண்காணித்து அதற்கேற்ற முன் ஜாக்கிரதையுடன் செயல்படுகின்றனவா?

இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்காக போச்சும் நகரில் உள்ள "ரூர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்யூரியோ, ரீகல்மான் என்கிற இரண்டு ஜெர்மானிய ஆய்வர்கள், குள்ள ஆந்தை அல்லது குருவிக் கழுகு போன்ற பெரிய "டிட்' என்ற சிறிய பறவைகள் கையாளுகிற கும்பல் உத்தியை ஆராய்ந்திருக்கின்றனர்.

தமது கூட்டைக் காக்கும் முயற்சியில் எதிரிகளின் வயிற்றுக்குள் போய்விடாமலிருக்க, அவை குறைந்தது எட்டுவிதமான போர்த்தந்திரங்களைக் கையாளுவாதாகத் தெரிகிறது.

"டிட்' என்ற குட்டிப் பறவை, ஆந்தைகளை நேரடியாகப் பாய்ந்து நெருங்குவதில்லை. முன்னும் பின்னுமாகத் தாவிப்பறந்து, பல்வேறு கோணங்களிலிருந்து அபாயத்தின் அளவை அனுமானிக்கின்றன.

ஆந்தைகளை அவை அணுகுகிற முறைகள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆந்தையை நெருங்க நெருங்க அவற்றின் தாவல் தொலைவு குறைகிறது. "டிட்' எனும் இந்தப் பறவைகள் தொடர்ந்து விபத்து வாய்ப்புகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கின்றன.

"டிட்' எதிரியைத் தொல்லைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளபோது "சர்சர்' என்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் எழுப்புகிறது.சத்தத்தைக் கேட்டு எதிரி "டிட்' வருவதைக் கவனித்துவிடும் என்பதை நோக்கும்போது, இந்த வழக்கத்தின் நோக்கம் புரியவில்லை.

ஆனால், "டிட்' எதிரியை நெருங்க நெருங்க அதிகமாக வேகத்தில் சத்தம் போடுகிறது. ஒலியை எழுப்புவதுடன் அங்குமிங்கும் துள்ளிப் பறந்து கொண்டேயிருப்பதால் எதிரிக்குக் குழப்பம் ஏற்பட்டு அது இரையைப் பிடிக்கிற வாய்ப்பை இழக்கிறது என்று கருத இடமிருக்கிறது அல்லது வலுவான குரலெழுப்புவதன் மூலம் "டிட்' தனது சுறுசுறுப்பையும் தேக வலுவையும், எதிரியிடம் சிக்காமல் தப்பக்கரண சாமர்த்தியத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்றும் சொல்லலாம். இவ்வளவு நீடித்த சத்தம் போடுவதற்குத் தேவையான ஆற்றலை, ஒரு நல்ல வலுவும், உடல் நலமும் கொண்ட பறவையால் தான் பெற்றிருக்க முடியும்.

எது எப்படி இருந்தாலும் ஆந்தை, தொல்லை பொறுக்க முடியாமல் ஓடிவிடுகிறது. அது திருட்டுத்தனமாக இரையை நெருங்குகிற வாய்ப்பு மறைந்து போகிறது. "டிட்டு'கள் போடும் கூச்சலைக் கேட்டு ஆந்தையை விட அதிக வலுவுள்ள வேட்டையாடிகள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தால், அது ஆந்தைக்கே ஆபத்தான விஷயம். எனவே, வேறு எங்காவது போய் வேட்டையாடுவதைத் தவிர அதற்கு வழியில்லாமல் போகிறது.
---------------------------------------------------------------
சிறுவர் மலர்