Thursday, December 20, 2012

தேங்காய் நண்டு

                 

மனிதர்களில் பராக்கிரமசாலிகளை நாம் பாராட்டத்தான் செய்வோம். ஆனால், விலங்குகளில் மட்டும் பராக்கிரமசாலிகளை வசை பாடப் பழகிவிட்டோம். அப்படி நம்மிடம் கெட்ட பெயர் வாங்கிய பராக்கிரமசாலி தான் திருட்டு நண்டு எனப்படும் தேங்காய் நண்டு!"
"நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற விலங்கினங்களிலேயே இதுதான் மிகப் பெரியது. மூன்றடிக்கு மேல் நீளமும் நான்கு கிலோ வரை எடையும் இருக்கும். தண்ணீரில் வாழும் பெரும்பாலான நண்டுகளுக்கு மத்தியில்.... நிலத்தில், அதிலும் தென்னை மரங்கள் அடர்ந்த பகுதிகளில் அதிகம் வாழும் நண்டுகள் இவை. தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து அதன் நாரையும் உரித்து உடைத்து உட்கொள்வதால்தான் தேங்காய் நண்டு என்ற பெயரைப் பெற்றது.

மனிதர்கள் வாழக்கூடிய பகுதிக்கு இது வந்தால் அவ்வளவுதான். மனிதர்கள் பயன்படுத்தும் சட்டி,பானை இத்யாதிகளை எல்லாம் ஏதோ உணவுப் பொருள் என்று நினைத்து உருட்டிக் கொண்டு போய்விடும். அதனால்தான் திருட்டு நண்டு என்றும் பெயர் பெற்றது.

                       

இந்த வகை நண்டுகள் கடல் நீரில்தான் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சிப்பி, நத்தை,சங்கு, ஆமை போன்ற உயிரினங்களின் ஓடுகளில் ஒட்டிக்கொண்டு சிறிது காலம் வாழும்.கொஞ்சம் வளர்ச்சியடைந்தாலும் தரைக்கு வந்து நிலத்தில் குழிகளைத் தோண்டி, மெத்தென்று தேங்காய் நார்களைப் போட்டு அதில் வசிக்க ஆரம்பிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் அதிகம் வாழும் தேங்காய் நண்டுகள், பல நிறங்களிலும் காணப்படுகின்றன. நல்ல நுகரும் சக்தி இருப்பதால் இவை எளிதில் இரையைக் கண்டுபிடிக்கின்றன. பொதுவாக இது மற்ற நண்டினங்களிருந்து மாறுபட்
டு  இருப்பதால் இதை உண் விரும்ப மாட்டார்கள்.

ஆனால், இந்த நண்டின் மாமிசத்தில் மருத்துவ குணம் உண்டென்று ஒரு புரளி உள்ளதால் சில நாடுகளில் இதை வேட்டையாடுவதும் உண்டு. இதனால் இந்த இனம் சில பகுதிகளில் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது!
 
                    

  http://www.eegarai.net

பசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்


                 

உச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவரும். அம்மா அறைக்குள் அழுதபடி இருந்தார். ஒரு புறம் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்ற கவலையாக இருக்கலாம். மறுபுறம் அப்பாவிடம் இரவும் காலையும் வாங்கிய அடியினால் ஏற்பட்ட வலியாகவும் இருக்கலாம்.
நேற்று இரவு அப்பா காசு கொண்டுவருவார் என நம்பிக்கொண்டு காத்திருந்தோம்.. அவர் காசு கொண்டுவந்தால் காலையும் மதியமும் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என அவாப்பட்டுக்கொண்டும் மனம் அங்காலாய்த்துக்கொண்டும் இருந்தோம். இப்பவெல்லாம் நல்ல சாப்பாடு என்பது காலையில் ஒரு துண்டுப் பாணும் சினியும் அல்லது வாழைப்பழமும் மதியம் பருப்பும் தக்காளிக் குழம்பும் தான். ஆனால் அப்பா காசு கொண்டுவரவில்லை. நாம் நித்திரை கொள்ளும் நேரம் குடித்துவிட்டு ஆடி ஆடி வந்து சேர்ந்தார். அம்மாவுக்கு கோவம் பொத்துக்கிட்டு வர, திட்டு திட்டு என அப்பாவை திட்டினார். “இந்த மனுசன நம்பி வந்தனே…” எனப் புலம்ப தொடங்கியவர்… “…அந்தாளும் (அவரது தகப்பன்) இந்தாள (கணவரை) நம்பி கட்டிக்கொடுத்து விட்டு மேலே போய்ட்டுது… நான் தான் கஸ்டத்தை அனுபவிக்க வேண்டும்…வீட்டில சமைக்க ஒன்றும் இல்ல… பிள்ளைகளும் பசியில இருக்குதுகள்… இந்த மனுசனுக்கு இதிலெல்லாம் அக்கறையில்லை…. ஆன குடி மட்டும் வேண்டிக்கிடக்குது….” என வழமைபோல தனது கஸ்டங்களை சொல்லி முடித்தவர்… சிறிது நேரத்தில் பொறுக்க முடியாமல் தன் கணவரின் கோட்டைப்பிடித்து இழுத்து “உங்களுக்கு மூளை இல்லையா…” என உலுக்கினார். அப்பாவுக்கும் குடியிலும் ரோசம் பொத்துக்கொண்டு வந்தது… தனது பலம் முழுவதையும் திரட்டி அம்மாவின் கண்ணத்தில் “பளார்” என ஒரு அறைவிட்டார். பசிக்களையுடன் இருந்த அம்மாவிற்கு தன் மீது இடி விழுந்ததுபோல் இருந்திருக்கவேண்டும் சுருண்டுபோய் ஒரு மூலையில் கிடந்தவர்… மூக்கை சீறி சீறி தனது சாரியில் பிறட்டியவாறு அப்பாவைத் திட்டிக் கொண்டும் அழுதுகொண்டு அந்த அறையின் ஒரு மூலையில் இருந்தார்… அப்பாவும் அம்மாவிற்கு அடித்த அடியில் சக்தியிழந்து இன்னுமொரு மூலையில் தூங்கிப்போனார்…. நாமும் (குழந்தைகள்) பசிக் களையில் இவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியில் தூங்கிப் போனோம்….
காலையில் அப்பாவும் அம்மாவும் மீண்டும் சண்டை போடும் சத்தம் கேட்டு நாம் கண்விழித்தோம் ஆனால் படுக்கையை விட்டு எழும்பவில்லை… அம்மா அப்பாவுடன் சண்டை பிடித்துக்கொண்டே அப்பா கக்குசுக்குப் (மலம்) போவதற்காக தண்ணியை ஒரு பக்கெட்டில் நிறைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றார்… ஒதுக்குப் புறமாக தொடராக இருந்த பத்து வாலி மலசல கூடங்களின் முதலாவதாக இருந்த ஒன்றிக்கு கொண்டு போய் தண்ணிப் பக்கெட்டை வைத்தார். இந்த மலசலக் கூடங்களை இப்பொழுது யாரும் அதிகமாகப் பாவிப்பதில்லை… எல்லோருக்கும் அவர்கள் வீடுகளுக்குள் நவீன மலசலக் கூடங்கள் இருக்கின்றன… அம்மா கக்குசை (மலசல கூடத்தை) சுத்தம் செய்து விட்டு அப்பாவை அழைத்தார்… அப்பா போனபின்… இந்த இடைவெளியில் அம்மா என்னை எழுப்பி “டேய் விடியிரத்திற்குள்ள ரோட்ல ஏதாவது காசு விழுந்திருக்கா எனப் போய்ப் பார்” என்றார்.
இன்றுபோல் அப்பா குடித்துவிட்டு வரும் மற்ற நாட்களிலும் மற்றவர்கள் எழும்புவதற்கு முதல் அதிகாலையிலையே சென்று ரோட்டு ரோட்டாக பார்த்து விழுந்திருக்கும் காசுகளைப் பொறுக்கி வருவேன் நான்… இது நிச்சயமாக அப்பாவின்ட காசுதான்…. இன்றும் காசு கிடைக்கும் என்ற அவாவில் நானும் அவசரஅவரமாக வெளிக்கிட்டு ஓடினேன்…. நேற்று இரவு பெய்த மழையில் மண்ணும் மரங்கள் செடிகள் கொடிகள் பூக்கள் என அனைத்தும் குளித்து சுத்தமாகவும் அழகாகவும் இருந்தன… இது அதிகாலையை அழகாக்கியதுடன் என் மனதையும் இதமாக்கியது…
சேர்க்குல ரோட்டுக்கு பஸ் டிப்போ ரோட்டாலா சுத்தி வராமல் குறுக்கால ஏற படிக்கட்டு ஒன்று இருக்கின்றது.. அப்பா குடித்து விட்டு வரும் நாட்களில் எங்களுக்காக ஏதாவது சாப்பாடும் கேக் துண்டுகளும் வாங்கிவருவார். ஆனால் இந்தப் படிக்கட்டுல ஏற முடியாமல் தடுக்கி தடுமாறி முதல் படிக்கட்டிலையே விழுந்து விடுவார்… பின் தட்டுத்தடுமாறி எழும்பி ரோட்டின் இந்த முலையிலிருந்து மற்ற முலைக்கு சென்று வளைந்து வளைந்து நடந்தும் ஆடிக்கொண்டும் வீட்டுக்கு வந்து சேருவார்… ஆனால் ஆரம்ப படிக்கட்டிலையே அவர் நம் மீதான அன்பு அல்லது அக்கறையினால் வாங்கி வந்த சாப்பாடுகள் எல்லாம் விழுந்துவிடும்… சிலநேரம் சில்லரைக் காசுகளையும் கொட்டிவிடுவார்… இன்றும் அந்தப் படிக்கட்டில் சாப்பாட்டு பார்சல் ஒன்று மழையில் நனைந்து கரைந்து போயிருந்தது… இது நிச்சயமாக அப்பா எங்களுக்காக வாங்கி வந்ததாகத்தான் இருக்கவேண்டும்… .ஆனால் இந்தமுறை சில்லறைக் காசு ஒன்றும் கீழே விழுந்திருக்கவில்லை…. மண்ணுடன் கரைந்து போன சாப்பாட்டை பார்த்த ஏக்கத்துடனும் காசு கிடைக்காத ஏமாற்றத்துடனும் வீட்டுக்குத் திரும்பிவந்தேன்…
அப்பா கக்குசுக்கு (மலம்) கழித்துவிட்டு வந்து காலையிலையே அம்மாவிடம் காசு கேட்டார்… “என்னட்ட எங்க காசு இருக்கு…… பிராங்கிளின் ஹொட்டல்  (அட்டனிலிருக்கின்ற சாரயக்கடைகளில் ஒன்று) முதலாளியிடம் போய் கேளுங்கோ… கிடைக்கிற காசையெல்லாம் அங்கதானே கொடுக்கிறனிங்கள்…” எனக் கத்தினார் அம்மா… அப்பாவுக்கு அதக் கேட்கப் பொறுக்கவில்லை… ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை… ”கனக்க கதையாமல்… வாய மூடு…” என ஆங்கிலத்தில் கத்தினார்… அம்மாவும் விடுவதாக  இல்லை…. அம்மாவும் யாரிடம் தான் சண்டைபிடிப்பது… அவவும் அமைதியாக இருக்கவில்லை… பதிலுக்கு கத்தினா… கடைசியாக காலையிலையே அப்பாவிடம் அடிவாங்கினா பின்தான் அழுதுகொண்டு அமைதியானார்… அப்பா வீட்டில் நிற்க முடியாமல் வழமையைப் போல தனது பரன (பழைய) கோட்டையும் போட்டுக்கொண்டு பைல் கட்டுக்களையும் தூக்கி தனது கமக் கட்டுக்குள் இறுக்கிக்கொண்டு வெளியே போனார்….
                                       
அப்பாவிற்கு நேற்றைய குடிவெறி இன்னும் அவருக்கு முறியவில்லை போல…. இல்லாவிட்டால் இப்படி காலையிலையே சண்ட பிடிக்க மாட்டினம்… விடியக்காலையிலையே எழும்பி சந்தோஸமாகக் கதைத்துக்கொண்டு தேத்தண்ணியையும் குடித்துக்கொண்டு கனவு காணத் தொடங்கிவிடிவினம்… ஆனால் இன்று விட்டுக்குள் சனியன் வந்துவிட்டதாக்கும்…. இப்பொழுதெல்லாம் எங்கள் விட்டுக்கு அடிக்கடி சனியன் வருகின்றது…. இப்படியான நாட்களையெல்லாம் அம்மாவும் அப்பாவும் சனியன் பிடித்த நாட்கள் என்றுதான் எப்பொழுதும் சொல்வார்கள்… நாட்கள் என்ன தவறுசெய்தனவோ…? அல்லது இந்த நாட்கள் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கின்றனவோ…? யாருக்குத் தெரியும்…
அம்மா இருந்த கொஞ்ச சீனியில் தேத்தண்ணி ஊத்தி எங்களுக்கும் தந்தா…. வாயைக் கொப்பளித்துவிட்டு அதைக் குடித்தோம்… கொஞ்நேரத்திற்குப் பின் கோபால் பற்பொடியைக் கொண்டு பல் விளக்கி… ஆளாளுக்கு ஒரு கப் தண்ணியில் முகம் கழுவிவிட்டு..“அம்மா… பசிக்குது அம்மா…” என அழுதோம்… ஒப்பாரி வைக்க ஆரம்பித்தோம் “சமைக்க ஒன்றும் இல்ல… பாண் வாங்கவும் காசில்ல… காலையிலையே ஒப்பாரி வைக்காம பேசாம இருங்கோ…” என்றார்… சில நாளைக்கு அம்மா சொல்வதைக் கேட்காமல் தொடர்ந்து கத்தி அழுதுகொண்டிருப்போம்… பத்து வயதைக் கடக்காத எங்களுக்கு அவர்களின் கஸ்டங்களப்பத்தி என்ன தெரியும்… ஆனால் இன்டைக்கு அப்படி அழுவதற்கு நம்மிடமும் சக்தி இருக்கவில்லை…. அதைவிட மேலும் கத்தி அழுதால் அப்பாவின் மேல் உள்ள கோவத்தை அம்மா எங்கள் மீதும் காட்டலாம் என்ற பயத்தினால் பசியுடன் பேசாம வெளியில் வந்து குந்தியிருந்தோம்…
பக்கத்து வீட்டு பிள்ளைகள் விளையாடக் கூப்பிட்டார்கள்… நாங்கள் வரவில்லை எனக் கூறிவிட்டு வெளிக் கானில் சும்மா உட்காட்ந்து அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்…. வீட்டுக்கு கீழேயிருக்கின்ற பள்ளத்தாக்கில் பெரும் ஓலி எழுப்பி பகல் பன்னிரெண்டு மணி பொடிமெனிக்கே சென்று கொண்டிருந்தது… விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடிச் சென்று மேட்டிலிருந்து அதைப் பார்த்து கொண்டு அதில் பயணிப்பவர்களுக்கு கையசைத்து ஆனந்தமடைந்தார்கள்… நாம் அதில் ஆர்வமில்லாது அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்… பக்கத்து வீட்டு ஆன்டி தன் குழந்தைகளை சாப்பிட வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு சென்றா…. நாம் வெளியில் தொடர்ந்து இருப்பதைக் கவனித்த அவவுக்குப் புரிந்திருக்கும்… இன்றைக்கு எங்கள் வீட்டில் சமையல் இல்லையென… “கேட்டால் சாப்பாடு கொடுக்கவேண்டும்… இப்படி கேட்டுக் கொடுத்தால் பின் ஒவ்வொரு நாளும் கொடுக்கின்ற பழக்கமாகிவிடும்”  என அவர் மனதுக்குள் நினைத்ததால் கேட்காமலே வீட்டுக்குள் போனா…

                                            
நாம் இருக்கின்ற இடம் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒட்டிக் கொண்ட பத்து வீடுகள் வரிசையாக இருக்கின்ற வீடுகள். பொதுவாக தேயிலைத் தோட்டங்களில் இவ்வாறு உள்ள வீட்டுத் தொடரை லயம் என்பார்கள். ஆனால் இதனைப் “பேலி” வீடுகள் என்பார்கள்.  வீட்டு வாசல்கள் இணைந்து… அனைவருக்கும் பொதுவான நீண்ட ஒரு முத்தம் இருக்கும்…. இந்த வீடுகளில் உள்ளமைப்பு…. ஆரம்பத்தில் ஒரு சிறிய விராந்தையிருக்கும். அதன் பின் பெரிய அறை இருக்கும். இதையே அனைவரும் படுக்கையறையாக பயன்டுத்துவார்கள். அதற்கடுத்ததாக சிறிய அறை ஒன்று. இதைச் சிலர் குசினியாகவும் பயன்படுத்துவர். இதற்குப் பின் சிறிய வெளியும் மண்மேடு அல்லது மலையின் மேட்டுப்பகுதியும் இருந்தது… இந்த மேட்டுப் பகுதியில் மேலும் இரு பேலி வீடுகள் இருக்கின்றன… பணம் இருக்கின்ற பெரும்பான்மையானவர்கள் இந்த வெளியை மறைத்து குசினியாகவும் குளிப்பதற்குற்கும் பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் விட்டுக்குள்ளே தமக்கான நவீன மலசலக் கூடத்தையும் கட்டினார்கள். இதுதான் இப்பொழுது பிரபல்யம். பத்தடி ஆழமான குழியை வெட்டி, சிமேந்தினால் கட்டி குந்தியிருக்கின்ற கக்கூசை கட்டுகின்றார்கள். இதனால் இவர்கள் பொது வாலி மலசலகூடத்தைப் பயன்படுத்துவதில்லை…. முன் வாசலிலிருந்து பார்த்தால் பின்பக்கம் வரை தெரிகின்ற மாதிரித்தான் வீட்டிற்குள் செல்வதற்கான வழி இருக்கும். இந்த வீடுகளின் கூரைகளிலிருந்து மழைக்காலங்களில் விழும் தண்ணீர் ஓடுவதற்காக கட்டப்பட்டதுதான் நாம் குந்தியிருந்த கான். வீட்டின் முன் உள்ள கான் வெய்யில் காலங்களில் காய்ந்துபோயிருக்கும். ஆனால் வீட்டின் பின்னாலுள்ள கானில் எப்பொழுது சமைத்த ஊத்தை தண்ணி நிறைந்து இருப்பதால் தூர்நாற்றம் அடித்துக் கொண்டேயிருக்கும்.
இவ்வாறன ஒரு வீட்டொன்றில்தான் முன் விராந்தையை அடைத்து எமக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். வீட்டின் பின்னால் கடைக்கோடியிலிருக்கின்ற குசினியை அம்மா மட்டும் பயன்படுத்தலாம். அங்கு செல்வதற்கு மட்டுமல்ல முன் விராந்தையைத் தாண்டிச் செல்வதற்கே நமக்கு அனுமதியில்லை. அம்மா தான் சமைத்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இந்தக் குட்டி அறைக்குள் வருவா. இந்த அறைக்குள்தான் நாம் சாப்பிடுவது… படுப்பது… சண்டைபிடிப்பது என எல்லாம் நடக்கும். அந்தப் பேலி வீடுகளில் நம்மைப்போன்று வாழந்தது நாம் மட்டும்தான். இன்று நமக்கு சாப்பாடு இல்லாத்தால் கானில் குந்தியிருந்து வானத்தை வாய் பார்த்துக்கொண்டிருந்தோம். பின் அருகிலிருக்கின்ற மண்ணைக் கிண்டி விளையாடியபடி கொஞ்ச நேரம்…. மதியவேளை ஆதலால் பக்கத்து வீடுகளிலிருந்து வரும் சமையல் மணம் நமது பசியை மேலும் அதிகரித்தது. இளமையில் வறுமையும் பசியும் குழந்தைகளுக்கு கொடுமை….

                                          
இப்பொழுது பாடசாலை விடுமுறை. இதனால் அங்கு கிடைக்கின்ற திரிபோசவும் பிஸ்கட்டும் இல்லாமல் போய்விட்டது. அதிருந்தால் அதை உருண்டை பிடித்தாவது சாப்பிடலாம்…. அல்லது பள்ளிக்கூடம் இருந்தால்… இப்படி சாப்பாடாமல் போகின்ற நாட்களில் உதயராஜ், நடராஜ், ஜெயராம், ரவீந்திரன் போன்ற நண்பர்களின் சாப்பாடுகளை பங்குபோட்டு சாப்பிடுவேன். நான் சாப்பிடுவதற்காக அவர்களே  தருவார்கள். இன்று அதற்கும் வேட்டு விழுந்துவிட்டது. இன்று வெள்ளிக்கிழமை என்றாலும் கோயிலுக்குப் போனால் ஏதாவது சாப்பிடலாம். பரிட்சைக்காலங்களைத் தவிர மற்ற நாட்களில் கோயிலுக்குப்போவது பிரசாதத்தை வாங்கி அந்த நேர சாப்பாடாக சாப்பிடத்தான். இந்தக் கையிலும் அந்தக் கையிலும் என மாறி மாறி வாங்கி அதிக பிரசாதம் கிடைத்தால் வீட்டுக்கும் கொண்டு வருவேன்… வீட்டார் பசியாற… அல்லது சில காலங்களில் அட்டனிலுள்ள  பெரிய பணக்கார்களான கடை முதலாளிகளின் உறவுகளின் கலியாண நிகழ்வுகள் மலை உச்சியிலிருக்கின்ற (பணக்கார) மாணிக்கப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நடைபெறும்… நாமும் போய் அந்தக் கல்யாணப் பந்தியில் குந்திவிடுவோம். அவர்கள் நமக்கு முன்பின் தெரியாதவர்களாக இருப்பார்கள். சிலர் யார் என்று பார்க்காமல் சாப்பாட்டு பந்தியில் இருக்க விடுவார்கள். சிலர் ஒரளவு நேரத்திற்குப் பின்தான் விடுவார்கள். சிலர் விடவே மாட்டார்கள். அப்படியான நாட்களில் ஏமாந்து வீடு திரும்ப வேண்டியதுதான்.
இன்று முஸ்லிம்களின் நோன்பு காலமாக இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். பக்கத்து வீடுகளிலிருக்கின்ற முஸ்லிம் குழந்தைகளுடன் நாமும் சென்று பள்ளி வாசலில் நோன்பிருக்கின்ற முஸ்லிம்களுக்கு கொடுக்கின்ற கஞ்சியும் ரொட்டியும் வாங்கி வருவோம். நல்ல ருசியான சாப்பாடு…. ஆனால் கடந்த வருடம் “நோன்பிருக்கின்ற முஸ்லிம் மதத்தவர்களுக்குத்தான் முன்னுரிமை…”  எனக் கூறி எங்களை பிச்சைக்கார்களுடன் நிற்கும்படி கூறிவிட்டார்கள். நாம் இங்கு எடுப்பது பிச்சைதான். ஆனால் நாகரிக பிச்சை. இதனால் பிச்சைக்காரர்களுடன் எம்மையும் நிற்பாட்டியது நமக்கு பெரிய அவமானப் பிரச்சனையாகப் போய்விட்டது. வெட்கமாகவும் போய்விட்டது… அதுவும் நாம் பிச்சைக்காரர்கள் உடன் வரிசையில் பின்னுக்கு நின்றதால் அந்த வரிசை பிரதான வீதியில் செல்வோர் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது… நம்முடன் படிப்பவர்கள் அப்பாவின் நண்பர்கள் தோழர்கள் கண்டால் மேலும் எங்கள் மானம் மட்டுமல்ல அப்பாவின் மானமும் போய்விடும் என்ற தவிப்பும் இருந்தது…. இதைவிட பிச்சைக்காரர்களுடன் நின்றபோது அவர்களிடமிருந்து வீசிய மணம் பொறுக்க முடியாதிருந்தது. ஆனாலும் பசி மானத்தை வென்று அதையும் பொறுத்துக்கொள்ளப்பண்ணியது. இந்த அனுபவத்தால் கடந்த வருடத்துடன் இனி நோன்பு காலங்களில் பள்ளிவாசலில் கஞ்சி வாங்கப் போவதில்லை என முடிவெடுத்திருந்தோம். பசியிருந்தாலும் பரவாயில்லை அவ்வாறு போய் மானங்கெடுவதற்கு தயார் இல்லாமல் இருந்தது நமது மனதிற்கு. இந்த மனநிலை போனவருடம். ஆனால் இந்த வருடம்… இன்று சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் மனம் என்ன கூறியிருக்குமோ… ? பசி வென்றிருக்குமா…? மானம் வென்றிருக்குமா…?
                       
இவ்வாறு பட்டினி இருக்கும் நாட்களில் பசி பொறுக்க முடியாதபோது பக்கத்துவீடுகளில் மிஞ்சிய சாப்பாடு ஏதுவும் இருக்கா எனக் கேட்டு வாங்கி சாப்பிடுவது வழக்கம். தொடர்ச்சியாக ஒரு வீட்டில் கேட்காமல் மாறி மாறி ஒவ்வொரு வீடாக கேட்பது நமது வழமை. அவர்களும் பழைய அல்லது மிஞ்சிய சாப்பாடுகள் இருந்தால் தருவார்கள்… பத்து வீடுகள் கொண்ட பேலியில் நான்கு தமிழ் முஸ்லிம் குடும்பங்களும் நான்கு தமிழ் சைவக் குடும்பங்களும் இரண்டு சிங்களக் குடும்பங்களும் இருந்தார்கள். ஒரு சிங்களக் குடும்பம் அங்கிருப்பவர்களைவிட வர்க்கத்தில் உயர்ந்ததால் மற்றவர்களுடன் கதைப்பதில்லை. அவர்கள் அந்த வீட்டில் இருப்பது கூட வெளியே ஒருவருக்கும் தெரியாததுபோல் அவர்கள் செயற்பாடுகள் அமைதியாக இருக்கும். வீட்டுக்குள் தான் இருப்பார்கள். இதற்கு அவர்களுக்கு குழந்தைகளும் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். முதல் வீட்டில் இருக்கின்ற சிங்களக் குடும்பம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்கள். சண்டைக்காரர்கள். இனவாதிகள்.   இதனால் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் அவர்களுடன் கதைப்பதில்லை.
நாம் அந்தப் பேலியின் மறுமுனையிலிருக்கின்ற ஒரு முஸ்லிம் வீட்டின் முன்னறையில் குடியிருந்தோம். நாமிருந்த வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருக்கின்றனர். தாய் (நாம் உம்மா என அழைப்போம்) ஒவ்வொரு நாளும் ஐந்து தடவைகளும் தவறாமல் தொழுகையில் ஈடுபடுவா. இவ்வாறான நேரங்களில் நாம், குழந்தைகள், சத்தம் போடக்கூடாது. சத்தம் போட்டால் தொழுகை முடிய வந்து பேச்சு விழும். அவ எங்களை பேசுவது அம்மாவிற்குப் பிடிக்காது. ஆனால் திருப்பி அவரைப் பேச அம்மாவிற்குப் முடியாததால் எங்களை அடிப்பா.. “.சத்தம் போடாமல் இருக்கேலாத…” எனக் கேட்டு… நாங்கள் அம்மாவிடமிருந்து அடிவாங்காமல் தப்பித்து ஓட முயற்சிப்போம்… இது தினசரி நடக்கும் காட்சி….

                  
இன்று வழமையாக கேட்காத ஒரு விட்டில் சாப்பாடு கேட்பது என முடிவெடுத்து அந்த வீட்டுக்குப் போனேன். அந்த வீட்டுக்கார் அட்டன் நகரில் “கணேசன்” என்ற பெயரில் புடவைக் கடை வைத்திருக்கின்றார். இதனால் அவரின் மனைவியை “கணேசன் அன்டி” எனக் கூப்பிடுவோம். அவர் வீட்டு வாசல் திறந்திருந்தது… “கணேசன் அன்டி” என வாசலிலிருந்து தலையை வீட்டுக்குள் போட்டு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கேட்காதவாறு கூப்பிட்டேன். உள்ளிருந்து வந்த சமையல் மணம் என் பசியை மேலும் துண்டிவிட்டது… தனது சாரியை சரிசெய்தபடியும் கையை அதில் தூடைத்தபடியும் பின்பக்கத்திலிருந்த குசினியிலிருந்து வெளியே வந்தா அன்டி… வாசலில் நின்று கேட்டால் பக்கத்து வீட்டுக்கும் கேட்கும் என்ற வெட்கத்தில் அவ உள்ளே வரச்சொல்லும் முன்பே நான் உள்ளே சென்று, “அன்டி இன்டைக்கு வீட்டில ஒன்றும் சமைக்கவில்ல… பழைய சாப்பாடு மிச்சம் ஏதும் இருக்கா…”  என தயங்கித் தயங்கி கேட்டேன்… “ஓமடா இருக்கு….தாரன் …அதற்கு முதல்… இந்த சாப்பாடக் கொண்டு போய் கடையில மாமாட்ட கொடுத்துட்டு வாறியா… அதுக்கிடையில் உனக்கு சாப்பாடை போட்டு வைக்கிறன்…” என்றா…
இப்படித்தான் நாம் உதவி கேட்டால் பதிலுக்கு அவர்களும் நம்மிடம் ஏதாவது உதவி கேட்பார்கள் அல்லது வேலை சொல்வார்கள்… நமது தேவை நிறைவே வேண்டும் என்றால் மறுக்காமல் செய்யத்தானே வேணும்… நானும் சாப்பாடு கிடைக்கும் என்ற ஆர்வத்தில் ஓம் என்டு… அவர் தந்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டு எனது வாகனத்தை ஸ்டாட் செய்தேன். ஒரு கையில் சாப்பாடு இருக்க…. மறுகையால் அக்சிலேட்ட்டரை முறுக்குவதாய் பாவனை செய்ய… வாய் “புறுக் குறுக் “ என சத்தம் போட… காற்சட்டையின் பின்னால் குண்டிப்பக்கத்திலுள்ள இரண்டு சிறிய ஓட்டைகளிலிருந்து புகைவருவதுபோல் கற்பனை செய்ய… என் கால்கள் ஓடத்தொடங்கின… அம்மா எப்பவும் சொல்லுவா …”உனக்கு சாக்குலதான் காற்சட்டை செய்துபோட வேண்டும்…” என… “போற இடங்களில சக்கப்பணிய இருந்து தேய் தேய் எனத் தேய்த்து … எல்லாக் காற்சட்டைகளையும் ஓட்டையாக்கிவிடுவாய்…” எனப் பேசாத நாளில்லை…அதை யார் காதில வாங்கினா…அவவுக்குத் தெரியாது நான் வாகனம் ஓட இது எவ்வளவு உதவியாக இருக்குது என… ரோட் நேராக இருந்தபோதும் எனது வாகனம் வளைத்து வளைத்து ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு என மாறி மாறி முன்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது…. ஆனால் எனது மனம் பின்நோக்கி ஓடியது…
இப்பொழுது ஒரு இரண்டு வருடமாகத்தான் எங்களுக்கு இந்தக் கஸ்டம்… அட்டன் மல்லியப்பு வீட்டிலிருந்தபோது … அது பெரிய வீடாக இருந்தது… எந்த நேரமும் சாப்பாடு இருந்தது… சில நாளைக்கு பக்கத்திலிருக்கின்ற தம்பிராஜா அங்கில் ராதா அன்டி வீட்டுக்குப் போனால் பட்டர் பூசிய பாண் கிடைக்கும்… டேஸ்டாக இருக்கும்… அங்குபோவது எங்களுக்கு எப்பொழுதும் விருப்பமான ஒன்று… கீழ் தளத்தில் அவரின் வைத்தியசாலை இருந்தது… மேல் தளத்தில் வீடும் கட்சி அலுவலகமும் இருந்தது…. ஒரு நாள் அப்பா கட்சி அலுவலகத்திலிருந்து கோவமாக வந்தவர் வீட்டை நோக்கி நடந்தார்… நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்… மல்லியப்பு கடைகள் ஆரம்பிக்கின்ற இடத்தில் ஒரு பாலம்… அதனருகில் ஒரு முஸ்லிம் சாப்பாட்டுக் கடை இருக்கின்றது… இந்த இடத்தில் வைத்து எங்களுக்குப் பின்னால் வந்த இரண்டு பேர் அப்பாவை அடித்தனர். அப்பாவும் அடிக்கப்போனார்… ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து அப்பாவை அடித்துப்போட்டனர்… நான் பயத்தில் அருகிலிருந்த ஹோட்டலுக்குள் போய் நடுங்கிக் கொண்டு இருந்தேன்… அப்பொழுது எனக்கு எழு வயது இருக்கும்… கடையில் இருந்த ஆட்கள் வெளியில் வந்து சண்டையை நிறுத்தினர்… அந்த இரண்டும் பேரும் வந்த வழியே மீண்டும் கட்சி அலுவலகம் இருக்கின்ற பக்கமாகச் சென்றார்கள்…. அப்பா என்னையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்த பின்… அம்மாவையும் கூட்டிக் கொண்டு பொலிஸில் (முறைப்பாடு) என்றி போடச் சென்றார்கள்… பின் வீட்டுக்கு வந்து அன்று இரவிரவாக கதைத்துக் கொண்டிருந்தார்கள்… இரண்டு நாட்களில் நாம் வீடு மாறினோம்… பெரிய தனி வீட்டிலிருந்த நாம் ஒரே நாளில் மிகச் சிறிய அறைக்கு குடிவந்தோம்… இந்தப் பேலி வீடுகளில் நாம் மட்டும்தான் இப்படி வாழ்கின்றோம். மற்றவர்கள் எல்லோரும் தனித் தனி வீடுகளில் தான் வாழ்கின்றனர். அன்று பிடித்த கஸ்டம் சனியன்தான் இன்னும் தொடர்கின்றது…. இப்பவெல்லாம் இப்படித்தான் அம்மா அப்பா இருவரும் அடிக்கடி புலம்புவார்கள்….
இந்தப் பழைய நினைவுகளுடன் மனம் இருக்க…எனது உடல் வாகனம் நான் அறியாமலோ ஓடி ஓடி அவர்களின் கடைக்கு வந்துவிட்டது… அவர்களிடம் சாப்பாட்டைக் கொடுத்து விட்டு… பிரதான வீதியால் மீண்டும் ஓடி அட்டன் பஸ் டிப்போவிற்கு போகின்ற வீதிக்கு திரும்பினேன்… இந்த சந்தியிலிருந்து பார்த்தால் பிராங்கிளின் ஓட்டல் முன்பக்கம் நன்றாகத் தெரியும்.. இது ஒரு சாராயக்கடை… அப்பா பழைய கருத்தக் கோட்டையும் போட்டுக் கொண்டு அதன் முன்னால் நின்றுகொண்டு நண்பர்களுடன் ஏதோ கதைத்து விவாதித்துக்கொண்டிருந்தார்… நிச்சயமாக அரசியலாகத்தான் இருக்கும்… தனது பக்க நியாயத்தை வலியுறுத்தி வாதாடிக்கொண்டிருப்பார்… அப்படித்தான் அவரை எப்பொழுதும் கண்டிருக்கின்றேன்… இப்பவெல்லாம் அப்பா வெளிக்கிட்டு இந்த றோட்டலுக்கு காலை ஏழு மணிக்கே வந்துவிடுவார்… இதற்கு முன்னால் நின்று கொண்டு கடைக்கு வருகின்ற பத்திரிகைகளை முதல் ஆளாகப் படித்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்… ஆங்கிலப் பேப்பரை முதலிலும் தமிழ் பத்திரிகைகளை பிறகும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை முழுவதையும் ஓசியில் வாசித்துவிடுவார்… அதன்பின்தான் நண்பர்களுடன் விவாதம் ஆரம்பிக்கும்…

                       
அப்பாவிற்கு இந்த றோட்டல் முதலாளி தங்கநாயகமும் நண்பர் தான்… இந்த றோட்டலின் மூலையில் அட்டன் புகையிரதநிலையத்திற்குப் போடப்பட்ட தகரவேலியுடன் இருக்கின்ற சின்னஞ்சிறிய கடை வைத்திருக்கின்ற செருப்புத்தைக்கின்ற பண்டா என்ற கிழவரும் நண்பர் தான்… இந்த றோட்டலுக்கு முன்னாலிருக்கின்ற புதிய செங்கொடி சங்க உறுப்பினர் தட்டை சுப்பையா… முன்பக்க கட்டிடத்திலிருக்கின்ற சட்டத்தரணி சச்சிதானந்தம்… றோட்டலின் பின்னாலிருக்கின்ற அஜந்தா ஸ்டோரின் மேலேயிருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சி ஏ.ஓ.இராமையா…. இவர்கள் எல்லோரும் (பழைய) தோழர்கள்… நண்பர்கள்… இப்படி இவருக்கு சமூகத்தின் பல மட்டங்களிலும் நண்பர்கள் இருக்கின்றனர்…. பல நண்பர்கள் தேயிலைத் தோட்டங்களிலிருந்தும் வருவார்கள். இவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்… கங்காணிமார்… டீமேக்கர்… சில தொரமாரும் இருக்கின்றார்கள்… மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து கற்பிக்கும் ஆசிரியர்கள் எனப் பலர்… அப்பாவின் தோழர்கள், நண்பர்கள், மற்றும் தொழிற்சங்க வேலைகள் செய்ய வருவோர்  எல்லோரும் எங்களுக்கு மாமா என்ற உறவுடையவர்கள்…  அம்மாவிற்கு ஐந்து தம்பிமார் இருந்தும் அவர்களை நாம் மாமா என்று கூப்பிட்ட சந்தர்ப்பம் மிகவும் அரிது… அது வேறு கதை….வேறு களம்… மேற்குறிப்பிட்ட மாமாமார் சிலருக்கு ஐனவரி முதலாம் திகதி அல்லது சித்திரை புத்தாண்டு நாட்களில் என்றால் பொங்கல் அல்லது பால்சோறு அம்மா செய்து கொடுக்க… அவர்களிடம் கொடுத்து கைவிசேமாக காசு வாங்குவது எங்கள் வழமை… இன்று அதுவும் சாத்தியமில்லை…
இந்த நண்பர்களில் பலர் அப்பாவிடம் இருந்த தொழிற்சங்க சட்டங்கள் மற்றும் மொழிப் புலமைகளைப் பயன்படுத்தி தங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்வார்கள்… ஆனால் அதற்குரிய ஊதியம் மட்டும் கொடுக்க மாட்டார்கள்… பதிலாக ஒரு கிளாஸ் ரிங் (சாராயம்) வாங்கிக் கொடுப்பார்கள்… இப்படி ஆளாளுக்கு ஒரு ரிங் வாங்கிக் கொடுக்க நாள் முடிவில் அப்பாவிற்கு வெறி ஏறிவிடும்… நாங்கள் வீட்டில் பசியுடன் இருப்பதையும் மறந்து வீதியின் இரு பக்கங்களை ஆடி ஆடி அளந்து கொண்டு வீடு வந்து சேருவார்… இப்படித்தான் கடந்த இரண்டு வருடங்கள் நமது வாழ்க்கை ஓடுகின்றது…
அப்பாவை றோட்டலின் முன்னால் கண்டதனால் என் மனம் அவர் பின்னால் போக…. எனது உடல் வாகனம் என்னை ஏற்றிக் கொண்டு பிராங்கின் ஓட்டல்…அஜாந்த ஸ்டோர்ஸ்…பள்ளிவாசல்…ரெயில்வே பாலம்… படிக்கட்டுக்கள்… என எல்லாவற்றையும் கடந்து கணேசன் ஆன்டியின் வீட்டின் முன்னால் வந்து நின்றது…. “ஆன்டி சாப்பாட்டைக் கொடுத்துட்டு வந்துட்டேன்…” என்று கத்தி சொல்லிவிட்டு காத்திருந்தேன்… அவர் வருகைக்காக… ஒரு கிண்ணத்தைக் கையில் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தா… “சாப்பிட்டு விட்டு கிண்ணத்தைக் கொண்டு வந்து தா…” என்றார்… “சரி…” எனக் கூறிவிட்டு அவரிடமிருந்து பறிக்காத குறையாக சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வீட்டைநோக்கி ஓடினேன்… வீட்டில் அம்மாவும் தங்கைகளும் எனக்காக பசியுடன் காத்துக்கொண்டிருந்தார்கள்… கிண்ணத்தை நடுவில் வைத்துவிட்டு நாழுபேரும் சுத்தியிருந்தோம்… ஆவலுடன் கிண்ணத்தை திறந்தோம்…. “பக்” என ஒரு மணம் சாப்பாட்டுக்குள்ளிலிருந்து வந்தது… அறை இருட்டாக இருந்தது… பகலில் லைட்டைப்போட்டால் உம்மா  பேசுவா… இருந்தாலும் “படக்” கெண்டு லைட்டைப் போட்டுப் பார்த்தோம்… சாப்பாட்டின் மீது வெள்ளையாக பூஞ்சனம் பிடித்திருந்தது… …
….
மீராபாரதி
18.12.2012.

தேவதையே சீக்கிரம் வா...!

                  

காதலிப்பவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று முன்பு பார்த்தோம். கவிதை எழுதுவார்கள்... கதை சொல்வார்கள்... புரியாத மொழி பல பேசுவார்கள்.. புளகாங்கிதமடைவார்கள்... புலம்புவார்கள்.. மொத்தத்தில் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள்.

 உலக அளவில் காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து ஒரு வரிசைப்படுத்தியுள்ளனராம். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இப்படித்தான் அல்லது இதே ரீதியில்தான் காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. அது என்ன என்று பார்ப்போமா... 

                  

- ஐ லவ் யூ. உன்னை என் இதயத்தின் ஆழத்திலிருந்து காதலிக்கிறேன். நீ பிரிந்து போகும்போது நான் சோகமடைகிறேன்.. உன்னை நினைத்து கனவு காண்கிறேன்.. நீ என்னுடனேயே தங்கும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை.. தேவதையே, சீக்கிரமே வந்து விடு. -

 என்னிடம் HRT என்ற மூன்று எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அது எனக்குப் போதுமானதாக இல்லை. அத்துடன் EA என்ற வார்த்தைகளையும் சேர்த்து HEART என்ற உன் இதயத்தைப் பெற விரும்புகிறேன். ஒருவேளை அது எனக்குக் கிடைக்காவிட்டால் EA என்ற எழுத்துக்களை நீக்கி விட்டு U என்ற எழுத்தை மட்டும் சேர்த்து HURT என்ற பாதிப்பை சந்தித்து விடுவேன். ஆனால் எனக்கு HURT வேண்டாம். உன்னுடைய HEART மட்டுமே வேண்டும்... தருவாயா... 
                              

- நீ விட்ட காதல் அம்பு என் இதயத்தை தாக்கியபோது நான் குழைந்தேன், துடித்தேன், வென்றேன், அழகு பெற்றேன், வாகை சூடினேன்...

 - நீ என்னுடனேயே இருந்தாலும் சரி அல்லது என்னை விட்டுப் பிரிந்தாலும் சரி, எப்போதும் என் மனதிலேயே தங்கியிருக்கிறாய் என் தேவதையே.. என் இதயத்தோடு ஒன்றியிருக்கிறாய்.

                                  

 - சிலருக்கு நட்சத்திரம் ஒரு தீப்பந்தமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு வானம் நீல நிறமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு நாம் பொய்யரா என்று சந்தேகம் வரலாம்.. ஆனால் ஐ லவ் யூ என்று உன்னைப் பார்த்து நான் சொல்லும்போது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 

- உன்னை நினைப்பது ரொம்பவும் எளிது. அதைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் உன்னை இழப்பது இதயத்தை உடைப்பது போல. அதை மட்டும் என்னால் எளிதில் நினைக்க முடியவில்லை. 

                              

- வாழ்க்கை என்பது வாழ்வதற்காக, உனக்காக நான் வாழ்கிறேன். வாழ்க்கை என்பது கொடுப்பதற்காக, நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன். இதயம் என்பது துடிப்பதற்காக, நான் உனக்காக துடிக்கிறேன். அர்த்தங்கள் நிறைந்தது கனவு, ஆனால் எனக்குள் முழுமையாக நிறைந்திருப்பது நீ... நீ...நீ மட்டுமே.

 - என்னுடைய இதயத்தில் உன்னுடைய கண்களின் பிளாஷை நான் சேமித்து வைத்திருக்கிறேன். உன்னுடைய புன்னகையின் வெப்பத்தை சேர்த்து வைத்திருக்கிறேன்.. உன்னுடன் மிகவும் நெருக்கத்தில் நெருங்கியிருக்கிறேன், உன்னை அரவணைத்து நிற்கிறேன், உன்னைக் காத்து நிற்கிறேன்... என்றென்றும்...

 இதே பாணியில்தான் உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. இந்த லிஸ்ட்டில் நீங்க இருக்கீங்களா...

 


http://tamil.oneindia.in

அன்புள்ள மான் விழியே...

                       


உங்களுக்கு லவ் லெட்டர் எழுதத் தெரியுமா..

 என்னய்யா இப்படி ஒரு கேள்வி என்று டென்ஷனாவது புரிகிறது.. 
ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். காலத்தில் இப்படிப்பட்ட ஒரு கேள்வி நியாயமானதுதான்.. காரணம் நிறையப் பேருக்கு, நிறையக் காதலர்களுக்கு லவ் லெட்டர் எழுத எங்கே நேரம் இருக்கிறது... செல்லை எடுத்தோமா, மனசாரப் பேசினோமா, நாலு எஸ்.எம்.எஸ். அனுப்பினோமா என்று போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

 இப்படிப்பட்ட சூழலில், நமது கண்ணில் ஒரு காதல் கடிதம் பட்டது. படித்துப் பார்த்தபோது சுவாரஸ்யமாக இருந்தது...நீங்களும் படித்துப் பாருங்களேன்... 

அன்புள்ள மான் விழியே...

 உன் அழகிய, பெரிய கண்களை ஆழமாகப் பார்க்கும்போது அதில்தான் எத்தனை ஜொலிப்பு.. பிரகாசம்.. ஒவ்வொரு 'பிளாஷையும்' உணர்ந்து, உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்..

 உன் நினைவுகள் எனது மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளத்தை வாரியிறைத்தபடி இருக்கின்றன.. தெரியுமா உனக்கு..?

 இந்த மகிழ்ச்சியெல்லாம் உன் மீது கொண்டுள்ள நேசத்தையும், பாசத்தையும் ஒவ்வொரு விநாடியும் கூட்டிக் கொண்டே போக உதவும் 'எனர்ஜி' தரும் 'எரிபொருளாக' மாறி நிற்கின்றன. 

என் இதயத்தை நிறைத்து நிற்கும் இந்த சந்தோஷம், உன் இதயத்திலும் பிரதிபலிக்கும் என்றே நினைக்கிறேன்.

 காதலிப்பது பெரிய சந்தோஷம்தான் இல்லையா... அந்த உணர்வு தரும் சுகம், எல்லோருக்கும் கிடைத்து விடாது.. அதிலும் உன்னைப் போன்ற இனிய பெண்ணுடைய நினைவில் மூழ்கித் திளைப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம், பாக்கியம்...!

                            

 உன்னுடைய ஒவ்வொரு அசைவும், சின்னச் சின்ன பேச்சுக்களும் எனக்குள் இமயமலையை நிறுத்தி வைத்தது போல ஜில்லிட வைக்கிறது.. 

உன்னிடமிருந்து வரும் ஒவ்வொரு அசைவும் உணர்வுப் பூர்வமானது. எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அதை உணர்ந்து ரசிக்கும்போது எனக்குள் ஏற்படும் உற்சாகத்தை அளவிட இதுவரை எந்த அளவுகோலும் உலகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் உன் நினைவில்.. உண்மையில் நீ என்னை விட உயர்ந்தவள்...! 

புல்வெளிகளில் உன் காலடி படும்போதெல்லாம் அந்தப் புல்லுக்கும் புல்லரிக்குமே கண்ணே... நான் மட்டும் விதிவிலக்கா என்ன...?!

                         

 நீயும், நானும் சேர்ந்து நடக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை நிரந்தரமாக அனுபவிக்க விரும்புகிறேன்... 

உன் அருகில் நான் நடக்கும்போது எனக்குள் சின்னச் சின்ன எரிமலைகள் வெடித்துச் சிதறியதை நீ உணர்ந்திருக்கிறாயா...? 

உன் அழகிய காதலை எப்போதும் நான் நினைத்திருக்க எனக்கு வரம் தர வேண்டும் அந்தக் கடவுள்... இதுதான் இப்போது எனது ஒரே பிரார்த்தனை... 

உன் கண்களின் காந்த வீச்சிலிருந்து தப்ப நான் நினைத்ததே இல்லை.. அப்படியே விழுந்து கிடக்கவே ஆசை... அந்த பிரகாசமான ஜோதியில் நான் பொசுங்கி சாம்பலாகிப் போனாலும் கூட பரவாயில்லை... அப்போதும் உனக்குள்தானே நான் இருப்பேன்... 

இப்படியே காதலித்தபடி இருக்கலாமே...! இப்படிப் போகிறது அந்தக் காதல் கடிதம்... 

எழுதிப் பார்த்த அனுபவம் இல்லாதவர்கள் இப்போதே இதைச் செய்து பாருங்கள்... எத்தனை காதல் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பினாலும், போனில் பல மணி நேரம் பேசினாலும், உள்ளத்தைக் கொட்டி வார்த்தைகளை வடித்து உருவாக்கும் கடிதங்கள், நிச்சயம் எதிர்காலத்தில் படித்துப் படித்துச் சந்தோஷப்பட வைக்கும் காவியங்களாக இருக்கும்...

 





http://tamil.oneindia.in

செல்ல தேவதையே, கண்ணுறங்கு...! தாத்தாவோ அல்லது பாட்டியோ கதை சொல்லி அதை நாம் கேட்டு வளர்ந்த நாளெல்லாம் இன்று வெறும் கனவாகிப் போய் விட்டது.

                           

''... அந்த ராஜா வேட்டைக்குப் போனாரா, கூடவே அவரோட மந்திரிகளும் வந்தாங்களா... அப்பப் பார்த்து சிங்கம் திடீர்னு குறுக்கே வந்ததாம்...'' இப்படி நம்முடைய தாத்தாவோ அல்லது பாட்டியோ கதை சொல்லி அதை நாம் கேட்டு வளர்ந்த நாளெல்லாம் இன்று வெறும் கனவாகிப் போய் விட்டது. இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் தூக்கத்தின்போது கதை கேட்காமலேயே தூங்கிப் போகின்றனராம். 

அது ஒரு கனாக் காலம். அந்தக் காலம் மீண்டும் நிச்சயம் வர முடியாது. முன்பெல்லாம் குழந்தைகளைத் தூங்க வைக்க பாட்டுப் பாடியும், கதை சொல்லியும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் சிரத்தை எடுத்து தூங்க வைப்பார்கள்.



கண்மணிகளை படுக்க வைத்து, அவர்களுக்கு அருகே படுத்துக் கொண்டு நிலாக் கதையோ அல்லது தேவதைக் கதையோ அல்லது பட்டாம்பூச்சிக் கதையோ இல்லை ராஜா கதையோ சொல்லி தட்டிக் கொடுத்து தூங்க வைப்பார்கள். அது ஒரு கலை. வெறுமனே எதையாவது சொல்வது கதையாகி விட முடியாது. கதையை ரசிக்கும்படியும், தூக்கம் வருவதற்கேற்ற வகையில் மென்மையாகவும் சொல்வது எல்லோருக்கும் கை கூடாது. 


                                                    

காதுகளில் சின்னதாக தாலாட்டுப் பாடுவதைக் கூட இன்று பல பேர் மறந்து போய் விட்டனர்.

செல்ல மயிலே ஆராரோ 
சின்னக் குயிலே ஆராரோ
கண்ணுறங்கு கண்ணே ஆராரோ 
நீயும் உறங்கு ஆராரோ



 என்று சொல்லி ஒவ்வொரு விஷயமாக தாலாட்டுப் பாட்டில் போட்டு மென்மையாக தட்டிக் கொடுத்து, காதோரம் கிசிகிசுப்பாக பாடும்போது எந்தக் குழந்தையும் கண்ணயர்ந்து நிம்மதியாகத் தூங்கிப் போகும். 
                              
                                          

ஆனால் இப்படிப் பாட்டுப் பாடி, கதை சொல்லித் தூங்க வைப்போது இப்போது அருகி வருகிறதாம். இதற்குப் பதிலாக டிவி பார்ப்பதிலும், சிடியைப் போட்டுப் பாட்டுக் கேட்பதிலும், கம்ப்யூட்டர் கேம்ஸில் மூழ்கிப் போவதுமாக குழந்தைகளின் வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டதாம்.

மேலும் இன்றைய வீடுகளில் தாத்தா, பாட்டிகளைக் காண்பதும் பெரும் அரிதாகி விட்டது. அப்படியே தாத்தா, பாட்டிகள் இருந்தாலும் அவர்களிடம் இன்றைய பெற்றோர்கள் அண்ட விடுவதே இல்லை. பாட்டி கிட்ட போகாத, பழங்கதை சொல்லி போரடிப்பார் என்று சொல்லியே பலர் பிள்ளைகளை வளர்க்கின்றனராம். இப்படிப்பட்ட சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு அந்த கதை கேட்கும் அருமையான தருணம் பறி போய் விடுகிறதாம்.

பாட்டி மடியில் படுத்தபடி, அவரது செல்லக் கை நம்மைத் தட்டிக் கொடுக்க, இன்னொரு கை, தலையை கோதிக் கொடுக்க அவர் வாயிலிருந்து உதிரும் கதைகளையும், தாலாட்டுப் பாடல்களையும் கேட்டு நாம் தூங்கிய காலம்.. இன்று நம் குழந்தைகளுக்கு கடந்த காலம்...!





http://tamil.oneindia.in

மனசெல்லாம் வலிக்கிறதா?

                    

என்னால் எனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை... எனது சிந்தனைகளுக்குக் கடிவாளம் போட முடியவில்லை...இது பலரது புலம்பலாக உள்ளது. ஆனால் மனதைக் கட்டுப்படுத்தினால் இதையும் சமாளிக்கலாமாம், சொல்கிறார்கள் உளவியலாளர்கள். 

ஒவ்வொரு மனிதனுமே ஏதாவது ஒரு உணர்வுக்கு அடிமையானவன்தான். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. இந்த உணர்வுகளில் ஒன்றுக்கு, அவன் அல்லது அவள் ஆட்பட்டவராகவே இருக்க முடியும். கோபம், சந்தோஷம், துக்கம், ஏமாற்றம் என இந்த உணர்வுகளில் ஏதாவது ஒன்றுக்கு உட்பட்டுத்தான் வாழ முடியும். 

                         

ஒவ்வொருவரையும் இந்த உணர்வுதான் உந்தித் தள்ளி வழி நடத்துகிறது. ஆனால் இந்த உணர்வுகளை சமாளித்து, நாம் தடுமாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நாம் கீழே விழ மாட்டோம். மாறாக, உணர்வுகளுக்கு முற்றிலும் அடிமையாகி விட்டால், நாம் தடுமாறிப் போகும் நிலை ஏற்படுகிறது. 

சிலருக்கு கோபம் பெரும் பிரச்சினையாக இருக்கும். சிலருக்கு சநதோஷம் சில வகை சங்கடங்களைத் தரலாம். பலருக்கு ஏமாற்றம் பெரும் கவலையை ஏற்படுத்தலாம். ஏமாற்றம் எப்போது வருகிறது.. எதிர்பார்ப்பதால்தான். எதிர்பார்ப்புகள் எங்கு அதிகம் இருக்கிறதோ அப்போது கூடவே ஏமாற்றமும் வந்து நிற்கும். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றத்தின் தாக்கமும் அதிகமாகவே இருக்கும். எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கப் பழகும்போது ஏமாற்றத்தின் வலியும் குறையும் வாய்ப்புள்ளது.

                                          


 சரி இப்படி ஒவ்வொரு உணர்வும் நம்மைத் தாக்கும்போது அதிலிருந்து மீளுவது எப்படி?... இதை எப்படி சமாளிக்கலாம்?.. கீழே விழாமல் ஸ்டெடியாக நிற்பது எப்படி?... என்ன சொல்கிறார்கள் உளவியலாளர்கள்...? 

உணர்வுகள் உங்களை தாண்டி போக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணர்வுகளை நீங்கள் அடிமையாக்க வேண்டும். உந்தித் தள்ளும் உணர்வுகளுக்குப் பலியாகி விடாமல் எதிர்த்துப் போராட வேண்டும். 

                               
இதற்கு சில எளிமையான பயிற்சிகள் இருக்கிறது. 

 மனசெல்லாம் வலிக்கிறதா... வாய் விட்டு நன்றாக சிரியுங்கள்.

சோர்ந்து போவது போல உணர்கிறீர்களா... எங்காவது போய் ஜாலியாக சுற்றி விட்டு வாருங்கள். 

மனதைப் போட்டு ஏதாவது நினைவு உலுக்குகிறதா... சந்தோஷமாக ஒரு படம் பாருங்கள். 
எதையாவது நினைத்து ஏமாற்றமாக உணர்கிறீர்களா... அதை சுத்தமாக மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க முயலுங்கள்.
                             
                                        


 மனிதனின் மூளை மற்றும் மனதை விட மிகப் பெரிய மாஸ்டர் இல்லை என்பது உளவியலாளர்களின் கருத்து. மூளை சொல்வதை கேட்பதா, மனசு சொல்வதை கேட்பதா என்ற கேள்வி வரும்போது, கேட்கப்பட்ட கேள்விக்கு நாம் என்ன பதிலளிப்பது என்பது குறித்துத்தான் நாம் முதலில் கவலைப்பட வேண்டும் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். 

நம்மைப் போலவே மற்றவர்களும் சிந்திக்க வேண்டும், நம்மைப் போலவே அவர்களும் நினைக்க வேண்டும், நம்மைப் போலவே அவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். அந்த எதிர்பார்ப்பே முதலில் பெரும் தவறு என்று கூறும் உளவியாளர்கள், உங்களைத் தாண்டி உணர்வுகளைப் போக விடாதீர்கள். கடிவாளம் போட வேண்டிய இடத்தில் அதைச் செய்தால் மட்டுமே அதிலிருந்து நீங்கள் தப்ப முடியும் என்றும் அறிவுரை கூறுகிறார்கள்.




http://tamil.oneindia.in

எது சந்தோஷம்...?

                      


ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரமே நம்பிக்கைதான். இது நமக்கானது, இது நமக்குக் கிடைக்கும், இதை நம்பலாம், இதுதான் நமக்கு என்ற நம்பிக்கைதான் ஒவ்வொருவரையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது.

 வாழ்க்கைக்கு மட்டுமல்ல காதலுக்கும் கூட நம்பிக்கை மிகவும் முக்கியம். ஒரு சின்ன இழையளவு கூட அதில் தளர்வு வந்து விடக் கூடாது. மீறி வந்து விட்டால் அந்தக் காதலே உலர்ந்து உதிர்ந்து போய் விடும்.

 நீ என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறாய் என்னுடைய உலகத்தை நம்பிக்கையால் நிரப்புகிறாய் என் வாழ்க்கையை நீ மாற்றிப் போட்டாய் உனக்கே தெரியாமல் என்னை நிறைய மாற்றினாய். நீ எனக்கு அசாதாரணப் பெண் என்னையே எனக்கு உணர்த்தியவள் நீ. என்னை விட மதிப்பானவள் நீ உன் மென்மையான புன்னகையால் என் இதயம் முழுவதையும் இதமாக்குகிறாய் உன்னை, உன்னைவிட நான் அதிகம் புரிந்திருக்க இந்தக் காதலே காரணம் தொடர்ந்து என்னைக் காதலி...!
                    


 இப்படியெல்லாம் ஒரு காதலன், உணர்ந்தும், உய்த்தும் சொல்லக் காரணம் அந்தக் காதல் தந்த நம்பிக்கையும் தெம்பும்தான். ஒவ்வொரு காதலும் இப்படித்தான் - நம்பிக்கையையும், நல்ல பல விஷயங்களையும் கூடவே சேர்த்துக் கொடுத்து விட்டுத்தான் போகிறது - அது நீடித்தாலும் அல்லது அல்பாயிசில் முடிந்தாலும். 

எனக்கு எப்போதெல்லாம் மனம் கணத்துப் போகிறதோ உன் நினைவு வந்து லேசாக்குகிறது எப்போதெல்லாம் எனக்கு இதயம் வலிக்கிறதோ அப்போதெல்லாம் நீ வந்து லேசாக்குகிறாய்


                    
 இதுவும் காதல் கொடுக்கும் நம்பிக்கைதான்.. காதலின் நினைவும், காதலியின் நினைவும், காதலனின் நினைவும் ஒவ்வொருவருக்கும் மூச்சுக் காற்று போல. எதை வாசிக்க மறுக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் காதலை சுவாசிக்க யாரும் மறக்க மாட்டார்கள்.

 நீ வந்தது என் அதிர்ஷ்டம் கைக்குள் வர வேண்டிய அவசியம் கூட இல்லை ஏனென்றால் அதையும் தாண்டி என் மனசுக்குள் எப்போதோ வந்து விட்டவள் நீ. ஒவ்வொரு நாளும் உன் நினைவாகவே விடிகிறது ஒவ்வொரு இரவும் உன் நினைவிலேயே கழிகிறது இது போதும் என் தேவதையே...! 

அவள் பார்க்கிறாளோ இல்லையோ, அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ, அவள் வருகிறாளோ இல்லையோ, அது கூட இவனுக்குத் தேவையில்லையாம்.. அவளது நினைவு தரும் அந்த சுகம் போதுமாம்... இதை விட ஒரு பாசிட்டிவான விஷயத்தை வேறு எது தரும், சொல்லுங்கள்...! 

ஆதலினால் காதல் செய்யுங்கள்.. ஆயுசைக் கூட்டிக் கொள்ளுங்கள்.!





http://tamil.oneindia.in

என்னுயிரே.. என்னுயிரே...!

                     

வலி மட்டும்தானா காதல்... நிச்சயம் இல்லை.. ஒவ்வொரு காதலுக்கும் ஒரு வலிமையும் இருக்கும்... வலிமை தருவதுதான் உண்மையான காதல்.

உயிர்கள் இரண்டின் சங்கமம் கொடுக்கும் சுகம் இருக்கிறதே... அது சொர்க்கத்தையும் ஓவர்டேக் செய்து விடும் இந்த சுகானுபவம். ஒவ்வொருவருக்கும் காதல் பரம சுகத்தை மட்டுமல்ல, பாரம் சுமக்கத் தேவையான பலத்தையும் கூடவே தந்து விட்டுத்தான் செல்கிறது.

உன் அருகாமை கதகதப்பை என் தோள்களில் உணர்கிறேன். உன் சுகந்தத்தை என் நாசிகளில் உணர்கிறேன் உன் சிரிப்பொலியை என் காதுகளில் உணர்கிறேன். நான் எங்கோ... நீ எங்கோ இருந்தாலும்...


                                      

இதுதான் காதலின் அடிப்படை. உடல் ரீதியான உணர்வுகளையும் தாண்டி, இருப்பையும், நடப்பையும் தாண்டி, உள்ளங்கள் உரசிக் கொள்ளும் அந்த் தருணம் இருக்கிறதே... அடடா, அடடா.. அதுவல்லவோ சுகம்.

நீ எனக்கு விஷம் 

நீ எனக்கு இனிப்பு
நீ எனக்கு துவர்ப்பு
நீ எப்படி இருந்தாலும் எனக்கு நீ அமிர்தம்...





காதல் வந்தால் வரும் உணர்வு இது.

நீதான் என் இதயத்தைச் சுட்டாய்
நீதான் என் இதயத்தைப் பொசுக்கினாய் 
நீயேதான் அதற்கு மருந்தையும் போட்டு விட்டாய் உன் அன்பால்

காதலில் மட்டும்தான் இப்படி எப்படிப்பட்ட 'சூட்டையும்' தாங்கக் கூடிய பக்குவமும், பொறுமையும் வரும். நிறையப் பேர் சொல்வார்கள், காதலிக்க ஆரம்பித்து விட்டான், இனி இவன் அவ்வளவுதான் என்று. நிச்சயம் தவறு... காதலர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், குறிப்பாக ஆண்களிடம் கேட்டுப் பாருங்கள், அவன் எப்படியெல்லாம் 'பலன்' அடைந்தான் என்று தெரியும்.

              


மனசுக்குள் ஒரு அமைதி வரும், இதுவரை இல்லாத அளவுக்குப் பொறுமை வரும், எதையும் ரசிக்கும் மன நிலை வரும், கோபம் பறந்தோடும், குணம் கூடும், ஏன் அழகு கூட கூடும். அவனையே அவன் ரசிக்க ஆரம்பிப்பான். சுற்றியிருப்பவர்களை எல்லாம் பாசிட்டிவாக பார்க்கும் சிந்தனை வரும் - காதல் உணர்வுகள் ஒருபக்கம் அலையென பொங்கி, பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும், மறுபக்கம் இப்படிப்பட்ட மாற்றங்களும் கூடவே வந்து சேரும்.

வாழ்க்கையின் அழகான விஷயம் காதல்.. ஆயிரம் அர்த்தங்களை அது உங்களுக்குச் சொல்லித் தரும்.. மனசை காதலிக்கும்போது கிடைக்கும் சொர்க்க உணர்வு இருக்கிறதே, அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது, இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது...


பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் முடிந்து போகும் 

நீயும் அப்படியே 
நானும் அப்படியே 
ஆனால் கதை முடியும்போது 
உன் காதல் என்னுடன் ஒட்டிக்கிடக்கும் 
என் உயிருடன் கலந்த உதிரம் போல
 நாம் மரித்துப் போகலாம் 
நம் காதல் நம்மைப் பார்த்து சிரித்து காலத்திற்கும் நிற்கும்!

எனவே காதலை உணருங்கள், காதல் உணர்வோடு மூழ்கிப் போங்கள்.. தவறே இல்லை!




 http://tamil.oneindia.in

தேவதைக்காக ஒரு காத்திருப்பு!





ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொரு காதலுக்கும் ஒரு காத்திருப்பு இருக்கும். காத்திருப்பதும் கூட ஒரு வகையில் சுகமான விஷயம்தான். சின்னச் சின்ன காத்திருப்பு கூட இந்த நேரத்தில் மிகப் பெரிய யுகமாக தோன்றினாலும் கூட தேவதைகளின் பார்வை நம் பக்கம் படாதா என்ற எதிர்பார்ப்பு நமக்குள் ஏற்படுத்தும் அந்த சுகமான சந்தோஷம் இருக்கிறதே... அதற்கு வார்த்தைகளே இல்லை!.

 இப்படிச் சொல்கிறான் ஒரு காதலன்

 நீ உன் உணர்வுகளுக்குள் உன்னை மறைக்கப் பார்க்கிறாய் 

உண்மையை உள்ளுக்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறாய்

 ஆனால் நீ சொல்லவே தேவையில்லை கண்ணே உன் கண்கள் அத்தனையயும் சொல்லி விடுமே! 
நீ எப்போதும் சரியாகத்தான் பேசுவாய் ஆனால் இப்போதெல்லாம் மிகச் சரியாக தவறாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய்!



உனக்கும் எனக்குமான தூரம் ரொம்பப் பெரிதல்ல 
நீ காக்கும் மெளனம்தான் கொன்று தீர்க்கிறது உணர்வுகளுக்குப் போட்ட முக்காட்டை நீக்கு உன் குரல் பம்மித் தணியும்போதே தெரியவில்லையா நீ பேசுவது பொய் என்று!

 காதலியின் கண்ணாமூச்சி விளையாட்டு கூட காதலனுக்கு எவ்வளவு சுகமாகத் தெரிகிறது பாருங்கள்... அந்த அளவுக்கு பொறுமை காக்க அவனும் தயாராகி விட்டான்.. பின்னே, தேவதைகளைக் கோபித்துக் கொள்ள முடியுமா, முடியாதே...! 



இன்னொருவன் இப்படிச் சொல்கிறான்...

 எனது பொறுமைக்கு நிறைய பொறுமை உண்டு என் முடிவு வரை காத்திருக்கவும் நான் தயார் உன்னை நேசித்த உள்ளம் உண்மையானது இந்த நேசிப்பும் உண்மையானது உனக்கான இந்தக் காத்திருப்பும் உண்மையானது 

உண்மையான நேசிப்பு என்றுமே வீண் போனதில்லை எதைக் கொண்டும் மறைக்க முடியாத விஸ்வரூப கோபுரம் அது காலம் போனாலும் காலத்தையும் தாண்டி கதகதப்பாய் அது வைத்திருக்கும் நம் உணர்வுகளை! 

காத்திருப்பு பொதுவாக சங்கடமானதுதான், சஞ்சலத்தைக் கொடுக்கக் கூடியதுதான். ஆனால் காதலில் காத்திருப்புக்கும் ஒரு மதிப்புண்டு. காத்திருந்த காதல் என்றுமே வீண் போனதில்லை... மொத்தத்தில் காதல் சுகமானது.. அதுவும் தேவைதகளுக்காகக் காத்திருப்பது அருமையானது... எனவே காதலியுங்கள், காதலிக்கப்படுங்கள்!




Read more at: http://tamil.oneindia.in

தொலைக்காட்சி பெட்டி - ஒரு போதைப் பொருளா?


                             

தொலைக்காட்சி பெட்டி - எத்தனை வலிமையான, உலகம் முழுவதும் அனைத்து வயது மக்களும் அதிகம் பயன்படுத்தும் சாதனம். போன நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டு பிடிப்புகளில் மிக முக்கியமானது. மனிதன் முதன் முதலில் சந்திரனில் கால் வைத்த (1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி) நிகழ்ச்சியை, இந்த பெட்டி அமெரிக்க மக்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று பிரபலமடைந்தது. அந்த கால கட்டங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை வீடுகளிலிருந்தே கண்டுகளிப்பது என்பது அதிசயமாகவும் அவசியமாகவும் இருந்தது.

தொலைக்காட்சி பெட்டியினால் நிச்சயம் நமக்கு எத்தகைய தீமையும் இல்லை. அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் சிக்கல் உள்ளது.

இன்றைய பல ஆய்வு முடிவுகள் தொலைக்காட்சியின் மூலம் நன்மைகளுக்குப் பதில் தீமைகளே அதிகம் என்று கூறுகிறது. முக்கியமாக ஒரு மனிதனின் கற்பனைத் திறனை அது கடுமையாகப் பாதிக்கிறது என்கிறது. கற்பனைத் திறன் இல்லாத ஒருவன் எவ்வாறு ஒரு கலைஞனாவான்? விஞ்ஞானியாவான்? புதிய கண்டுபிடிப்பை அளிப்பான்? கற்பனை இல்லாத வாழ்க்கை அடுத்த கட்டத்தை அடைவதே இல்லை.

 
                                   
 புகை பிடிப்பது, மது அருந்துவது மற்றும் மற்ற போதைப் பழக்கங்களைப் போலவே கட்டுபாடற்ற தொலைக்காட்சி பயன்பாடும் கருதப்படவேண்டும். இது இன்று பெரும்பாலான குடும்பப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. குழந்தைகள் ஓடியாடி விளையாடுகிறார்களோ இல்லையோ அவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டியில் காட்சிகள் ஓடியாக வேண்டும்.

அலுவலகம் செல்லும் என் நண்பர்களிடம் கேட்டறிந்த வரையில் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் தொலைக்காட்சியைப் பயன்படுத்துகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் உடற்பயிற்ச்சிக்காக ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம் கூட செலவழிப்பதில்லை.
 
                      
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொண்டே உணவு உண்பது என்பது இன்று பெரும்பாலான வீடுகளில் கானப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நமக்கு உணவின் சுவை, அளவு தெரியாமல் அதிக அளவு உண்டு விடுகிறோம். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இது தான் உடல் பருமன் உள்பட பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றக் காரணம். மேலும் நமக்காக உணவு தயாரித்து வழங்கும் அம்மா அல்லது மனைவியை நாம் பெரும்பாலும் பாராட்ட மறந்து விடுகிறோம். அவர்களை விட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லவா நமக்கு முக்கியமாகப் போய்விட்டது.
 
                                  
இன்று ஒளிபரப்பில் உள்ள 95% தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கழிவுகள், அருவருப்பானவை. சேட்டிலைட் சேனல்கள் இவைகளை நமது வரவேற்பறைக்குள்ளும் படுக்கையறைக்குள்ளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. குப்பை மற்றும் கழிவுகளுக்கிடையே நல்ல நிகழ்ச்சியை கண்டெடுப்பது என்பது பெரும்பாலும் இயலாமல் போய்விடுகிறது.
குழந்தைகள் நம் சொல்லைக் கேட்டு வளர்வதில்லை. நம் செயல்கள், பழக்க வழக்கங்களைப் பார்த்து தான் வளர்கின்றனர். மாற்றம் நம்மில் தொடங்கி நம் குழந்தைகளின் மூலம் அடுத்த சந்ததிகளுக்குச் செல்ல வேண்டும் .

தொலைக்காட்சி பெட்டியே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எப்பொழுது எந்த நிகழ்ச்சி அவசியமோ, அப்பொழுது மட்டும், அந்த நிகழ்ச்சியை மட்டும் தான் பார்க்க வேண்டும். "வேண்டாம்" என்று நாம் சொல்லப் பழக வேண்டும்.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்பதால் உண்டாகும் நன்மைகள்
  • மின்சாரமும், மின்சாரத்திற்கு செலவிடப்படும் பணமும் மிச்சப்படுகிறது.
  • உங்கள் கண்களின் ஆயுள் அதிகரிக்கும்.
  • கணவன் மனைவியிடையே ஆரோக்கியமான நேரப் பங்கீடு உண்டாகும்.
  • குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோரிடம் நமது அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். அவர்களுக்கு அவசியமானதும் தேவையானதும் இதுதான்.
  • விருந்தோம்பல் வளரும்.
  • உடல் பருமன் கட்டுப்படும்.
  • குழந்தைகளின் ஆற்றலும் கற்பனையும் அதிகரிக்கும்.
  • அண்டை அயலரின் நட்பு வட்டம் பெருகும்.
  • உங்களுக்கும் ஒரு தனி லட்சியம் உண்டாகும். உங்களது பயணம் இப்பொழுது அதை நோக்கி எந்த தடைகளும் இன்றி பயணிக்கும்.
  • வெற்றியை ருசிக்கத் தொடங்குவீர்கள்.
  • மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அடுத்த தலைமுறைக்கு விளங்குவீர்கள்.
  •                     

 எவ்வாறு தொலைக்காட்சி பார்ப்பதை கட்டுப்படுத்துவது?
  •  நீங்கள் தான் எதிர்கால உலகின் நம்பிக்கை. என்னால் எதுவும் முடியும் என்று நம்புங்கள்.
  • படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சி பெட்டியை முதலில் அகற்றிவிடவும்.
  • தொலைக்காட்சி பெட்டியின் தொலையியக்கியை (TV remote control) வங்கி பெட்டகத்தில் (bank locker) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்துவிடுங்கள்.
  • நீங்கள் தற்சமயம் தொடர்ந்து பார்த்து வரும் நிகழ்ச்சியை தவிர்க்க, அவை ஒளிபரப்பாகும் நேரங்களில்
    • ஒருவாரம் அல்லது இரண்டு வாரம் ஒரு நிகழ்ச்சியை தவிர்க்கும் போது உங்களுக்கு அதன் மேல் உள்ள ஈடுபாடு நிச்சயம் குறைந்திருக்கும்.
    • உங்களுக்கு விருப்பான துறைகளில் உள்ள நல்ல நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். அருகில் உள்ள நூலகங்களில் நீங்கள் உறுப்பினராகிவிடலாம்.
    • சிறந்த நடைபயிற்ச்சியோ அல்லது உடற்பயிற்ச்சியோ செய்யலாம். 
    • உங்கள் மகன் அல்லது மகள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிகளுக்குச் சென்று அவர்களின் ஆசிரியர், நண்பர்களிடம் உரையாடி வரலாம். அவர்களின் திறமைகளையும் தேவைகளையும் பிரச்சனைகளையும் நேரடியாக அறியமுடியும்.
  • விடுமுறை தினங்களில் கட்டாயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்து குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு விளையாடி மகிழலாம். குடும்ப உறவு வலுப்படும். முக்கிய பண்டிகை மற்றும் பொது விடுமுறையின் போது அவற்றின் அருமை பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கேற்ப சொல்லிக் கொடுக்கலாம் (இதற்கு நாம் நிறைய படித்து தெரிந்து கொள்ளவது அவசியம்).
  • வசதி மற்றும் வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டு தோட்டம் அமைத்து பராமறித்து வரலாம். இதன் மூலம் வீட்டுச்செலவு கூட கணிசமாகக்குறையும்.
நம்மில் பலர் இரவு உணவு உண்டவுடன் உறக்கம் வரும் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் அதிகம். இதுவும் ஒரு தவறான பழக்கம். இது உடல் சோர்வை உண்டாக்கிவிடும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்பதை விட, அந்த நேரங்களை நம் திறமைக்கும் தகுதிக்கும் பொருளாதாரத்திற்கு உட்பட்டு, எவ்வாறு பயன் உள்ளதாகவும் சமுதாயத்திற்கு நன்றியுள்ளதாகவும் மாற்றுகிறோம் என்பதில்தான் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நாம் நமக்கான களத்தை முதலில் கண்டறிய வேண்டும். நிச்சயமாக அது தொலைக்காட்சிப் பெட்டியாக இருக்க வாய்ப்பு குறைவு. 

--லிங்கேஷ்.

முதல் காதல்



                  
-lingesh-


"என்னங்க இந்தப் பெட்டியை கொஞ்சம் கீழே இறக்கிக் கொடுங்கள்" என்று என் மனைவி என்னை அழைக்க படித்துக் கொண்டிருந்த நாவலை  வைத்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தேன்.

தயாராக ஒரு டேபிளை நகர்த்தி வைத்திருந்தாள். நான் அடுத்து என்ன கேட்பேன் என்பது இந்த இருபத்தி நான்கு வருட தாம்பத்திய வாழ்க்கையில் சரியாக புரிந்து வைத்துள்ளவள்.

எங்களுக்கு மகள் பிறந்தவுடன் அவள் உடுத்திய முதல் உடை, துண்டு, ஸ்வட்டர், செருப்பு, சூ, வலையல்கள், கொலுசு, விளையாட்டுப் பொருட்கள் என்று சகலமும் அந்தப் பெட்டியில் தான் இருந்தது. அதை ஒரு பொக்கிஷமாகவே பாதுகாத்துக் கொண்டிருந்தாள்.


அடுத்த வாரம் எங்களது ஒரே மகள் அருகில் உள்ள நகரத்துக் கல்லூரியில் மேற்படிப்புக்காக விடுதியில் தங்கிப் படிக்கப் போகிறாள். அதற்காக என் மனைவி படுக்கை அறையில் ஒரு ஷோகேஷ் செய்து அதில் நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களையும் புகைப்படங்களையும் காட்சிப்படுத்தும் எண்ணம். அதற்காகத்தான் இன்று அந்தப் பெட்டியை எடுக்கச்சொல்கிறாள். 

நானும்தான் அவள் என்னை நிராகரித்த போதும் அவள் நினைவாக என்னிடமிருந்த அவள் நினைவுகளைப் பொக்கிஷமாகவே பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அவள் கைக்குட்டைகள், நெற்றிப்பொட்டு, அவளும் நானும் சேர்ந்து பயனித்த பேருந்துச் சீட்டு, திரையரங்க அனுமதிச் சீட்டு, உதிர்ந்த முடி, புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், கடிதங்கள், வலையல்கள் என்று ஏகப்பட்டது.



எப்பொழுது எனக்கு அவள் மேல் காதல் வந்தது என்று தெரியவில்லை. பேரழகி என்று சொல்ல முடியாது ஆனால் பார்த்தவுடன் உண்டாகும் இன்பத்திற்காகவே பார்த்துக் கொண்டேயிருப்பேன். பாவாடை சட்டையில் ஒற்றைப் புத்தகப்பையுடன் இரட்டை ஜடை போட்டு அவள் திமிர் நடையுடன் வருவது இன்றும் என் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது. அவளிடம் எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டால் திரு திருவென்று விழிப்பேன். ஏனென்றால் அவள் என்ன செய்தாலும் எனக்கு அது பிடித்ததாகவே இருந்தது. ஒரு முறை ஆசிரியரின் கேள்விக்கு நான் தவறாக பதில் அளிக்க தண்டனையாக என் உச்சி மண்டையில் நங்கென்று ஒரு கொட்டுவிட்டார். என் கண்ணிலும் அவள் கண்ணிலும் கண்ணீர் எங்களது காதலுடன் எட்டிப்பார்த்தது. பள்ளியில் தோன்றிய காதல் பின்பு கல்லூரியிலும் தொடர்ந்தது.




பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததைக் கூடத் தவிர்த்து அவளுக்காக அவளுடன் படிக்க வேண்டும் என்று கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். அவனவன் நம்மிடம் ஒரு பெண் பேசமாட்டாளா என்று ஏங்கியபோது எனக்கு எங்களது காதல் பெருமையாகத் தெரிந்தது. பெருமைக்கு எருமை மேய்க்கக் கூடாது என்று கிராமத்தில் ஒரு வழக்குச் சொல் உள்ளது. பள்ளியில் பெரிதாகத் தெரியாத அவளின் பல குணங்கள் கல்லூரியில் தெரியத் தொடங்கியது. அவளின் எண்ணங்களை என் மேல் திணிக்கத் தொடங்கியதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினேன். இருந்தும் அவள் மேல் உள்ள அன்பால் காதலால் அவைகள் எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

இளங்கலை படிப்பு முடித்தவுடன் வாழ்க்கை நடத்த ஒரு வேலை வேண்டும் என்று அவள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு முதுகலை படிக்கும் கனவை ஒத்தி வைத்து வடஇந்தியாவில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டேன். எங்களது காதல் தொலைபேசியிலும், கடிதங்களிலும் வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் விடுமுறையிலும் தொடர்ந்தது. எங்களுடன் இளங்கலை படித்த நண்பர்கள் சிலர் அவளுடன் முதுகலை படித்து வந்தனர். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நண்பர்களின் வற்புறுத்தலால் தொலைதூரக் கல்வியில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தேன். நான் பார்த்து வந்த வேலையில் பெரிய சம்பளம் என்று ஒன்றும் கிடையாது. தங்க, சாப்பிட, தொலைபேசியில் அவளுடன் பேசுவதற்கே பற்றாக் குறையாகவே இருந்தது. படிப்புக்கு தேவைப்பட்ட பணத்திற்கு சிறு சிறு வேலைகளைச் செய்யத் தொடங்கியபோது அவளுடன் பேசும் நேரம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் எங்களுக்குள் எங்களுக்கே தெரியாமல் ஒரு இடைவெளி உருவாகத் தொடங்கியது.



சிறு சிறு ஈகோ மோதல்கள் அவ்வப்போது வருவதும் போவதும் உண்டு. அப்போதெல்லாம் என்னால் என் வேலையிலும் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பேன். நண்பர்கள் தான் ஆறுதல் சொல்லி சகஜ நிலைக்குக் கொண்டுவருவார்கள். எங்களது கதை தெரிந்த அலுவலகத் தோழியும் ஆறுதலாக இருந்தாள்.

கல்லூரி விடுமுறையில் என்னைப் பார்க்கவும் வட இந்தியாவை சுத்திப்பர்க்கவும் வந்த நண்பர்களில் ஒருவன் என் புகைப்பட ஆல்பத்தில் அலுவலகத் தோழியுடன் நட்பாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்பத்தினை எனக்குத் தெரியால் எடுத்துச் சென்று என் காதலியிடம் காட்டிவிட்டான். என்னைத் தொடர்பு கொண்டவள் எனக்கும் என் தோழிக்கும் தவறான உறவு இருப்பது போல் பேச எங்களுக்குள் பெரிய சண்டையாகிவிட்டது. வார்த்தைகளும் தடித்துவிட்டன்.
    


உன்னிடம் பேசுவதைவிட என் தோழியிடம் பேசும் போது ஆறுதலாக உள்ளது. உன்னிடம் பேசும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகப்பெரிய அசெளகரியம் உண்டாகிறது. பேசும் போதும் பேசிய பின்பும் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். ஆனந்தத்தைத் தூண்டவேண்டும். ஆனால் உன்னிடம் பேசும் போதும் பேசிய பின்பும் எனக்கு உன் மேல் உள்ள வெறுப்பு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. வெறுப்பு அதிகரிக்க அதிகரிக்க காதலும் தள்ளி நின்று எள்ளி நகையாடுகிறது.

ஆம் தவிர்த்து விடுவது தான் தீர்வு. சாக்கடை நீரைப் பருகினால் நோய் உண்டாகும் என்றால் அதை தவிர்த்து விடுவதுதான் நம் உடலுக்கு நன்று. அதைப் போலத்தான் காதலிலும் சில விசயங்களைத் தவிர்த்துவிடவேண்டும்.

இயல்பிலேயே நமக்குள் ஒத்துவரவில்லை. பிரிந்து விடுவதுதான் நமக்கும் நம் எதிர் காலத்திற்கும் நல்லது.

அதன் பின்பு எங்களுக்குள் உள்ள தொடர்பு முற்றிலும் அற்று விட்டது.

என் நண்பர்கள் அந்த இடியை என் தலையில் இறக்கினார்கள். அவளுக்கு திருமணம் செய்ய மாப்பிளை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று. சொன்ன செய்தியை அவளுடன் உறுதி செய்து கொள்ள நான் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவளைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்னைத் தவிர்த்துவிட்டாள் என்று பிறகு அறிந்துகொண்டேன்.

உடனடியாக விடுப்பு எடுத்துக்கொண்டு அவளைப்பார்க்க அவள் படிக்கும் கல்லூரிக்குச் சென்றேன். அவள் பெற்றோர் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராமல் நகரத் தொடங்கினாள்.

காதலுக்கும் வாழ்க்கைக்கும் நம்பிக்கை மிக மிக முக்கியம். அதுதான் ஆதாரமும் கூட. என்றைக்கு உனக்கு என் மேல் சந்தேகம் வந்து விட்டதோ, அன்றைக்கே நம் காதலும் செத்துவிட்டது. இதையும் மீறி நாம் வாழ்கையில் சேர்ந்தாலும் நிச்சயம் அது நரக வேதனையையே தரும். இதுதான் நான் அவளிடம் கடைசியாக பேசிய வாக்கியம்.

                 


பின்பு என் நண்பர்களும் எனக்காக அவளிடம் பேச முயன்று அவமானப்பட்டார்கள். ஆண்டுகள் பல கடந்துவிட்டன, காட்சிகள் பெருமளவு மாறிவிட்டது.

போன் எவ்வளவு நேரம் அடிக்குது அங்க உக்கார்ந்து என்ன யோசனை என்று கேட்டவாறே தொலைபேசியை எடுத்து பேசி வைத்துவிட்டு, என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க தலை வலிக்கிறதா, காபி தரட்டுமா என்றவளிடம் வேண்டாம் எனவும் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

மீண்டும் அவள் என்னைத் தொடர்பு கொள்வாள் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. என்னை சமுதாயத்தில் நிலை நிறுத்த போராடிக் கொண்டிருந்த காலகட்டம். நல்ல நண்பர்களின் உறுதுணையால் ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருந்த நேரம் அது. வாழ்கையில் கொஞ்சம் அனுபவத்தையும் மெச்சூரிட்டியையும் பெற்றிருந்தேன். எது தேவை எது தேவையில்லை என்று தீர்மானிக்கும் தெளிவான மனநிலை அப்போது இருந்தது என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவளின் குரல் கேட்ட அந்த நொடி... இப்பொழுது நினைத்தாலும் என் இதயத்துடிப்பு எகிறத்தான் செய்கிறது. ஆம் நான் தான் பேசுகிறேன் என்றதும் மறுமுனையில் நீண்ட அமைதி. நான் அந்த அமைதியை உடைக்க விரும்பாமல் அமைதியாகக் காத்திருந்தேன். நான் உன்னைப் பார்க்கனும். உன்னிடம் மனம்விட்டு பேசவேண்டும் என்றவளை மேற்கொண்டு பேசவிடாமல் எதற்கு என்றேன். பிளீஸ் என்ற கெஞ்சல் என்னை கட்டிப்போட்டது. சரி. அடுத்தவாரம் சந்திக்கலாம் என்று அவள் கூறிய இடத்தை கேட்டுக்கொண்டு தொலைபேசியின் தொடர்பைத் துண்டித்தேன்.
            
               

அப்போது என் பெற்றோர்களின் ஆதரவும் என்க்குப் பெரியதாக இல்லை. அவளைப் பிரிந்த பின் எல்லாமே எனக்கு என் நண்பர்கள்தான். அவர்கள் மட்டும் என்னுடன் இல்லையென்றால் நான் இன்று உயிருடனே இருந்திருக்க வாய்ப்பில்லை. அவள் எனக்கு இல்லை என்று தெரிந்ததும் என் மனது அதை ஒத்துக்கொள்ளவே இல்லை. எனக்குள் ஒரு சாத்தான் குடிபுகுந்த உணர்வு. என் உடல், உணர்வு எதுவுமே என் புத்தியின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த சாத்தான் தான் ஆட்டிப் படைத்தது. எனக்காக அவமானப்பட்ட என் நண்பர்களை நானும் அவமானப்படுத்த தொடங்கினேன். புகைப் பழக்கமும் மதுப் பழக்கமும் கட்டுபாடின்றி ஒட்டிக்கொண்டன. நண்பர்கள், என் உயிர் நண்பர்களால் என் தற்கொலை எண்ணம் தடுக்கப்பட்டது, புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் கட்டுப்படுத்தப்பட்து. தாய் தருவது முதல் பிறவி. அதற்குபிறகு ஒவ்வொரு முறையும் நமக்கு மறுபிறவி தருவது நம் நண்பர்களே.


அப்படி எனக்கு மறுபிறவி ஏற்படுத்திக் கொடுத்த நண்பர்களை உடனே தொடர்பு கொண்டு சற்று முன் தொலைபேசியில் வந்த தகவலைச் சொன்னேன். நீ என்ன நினைக்கிறாய் உன் உள் மனசு என்ன சொல்கிறது என்று கேட்டவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஒரு புனிதமான உறவைத்தரும் பந்தம் உருவாவது காதலிலும் வாழ்க்கையிலும் தான். காதலும் வாழ்க்கையும் வெவ்வேறல்ல. பரஸ்பரம் நம்பிக்கை மிக மிக முக்கியம். அப்போதுதான் இருவரின் பார்வையும் ஒற்றைப் பிம்பமாக பிரதிபலிக்கும். கணவன் மனைவியின் உறவு என்பது முகம் பார்க்கும் கண்ணாடியைப் போன்றது. அந்த உறவை, கண்ணாடியை ஒரு முறை தவறவிட்டுவிட்டாலும், உடைந்த அதன் பாகங்களை மீண்டும் பழையபடி ஒட்டவைக்க முடியாது. பின்பு அது வாழ்கையின் ஒற்றை பிம்பத்தை எப்போதும் காட்டாது.

 
            

மறுபிறவி தந்தவர்கள் தான் என் காதலுக்கு கல்லறையும் கட்டினார்கள்.

அவளை கடைசியாக சந்தித்த அன்று அவளிடம் நான் பொக்கிஷமாக பாதுகாத்திருந்த பொருட்கள் அனைத்தையும் தந்துவிட்டு ஏதும் பேசாமல் வந்துவிட்டேன். புரிந்து கொண்டிருப்பாள்.

ஏதாவது பேசி எனக்கு அவள் ஏற்படுத்திய வலியை அவளுக்கு திருப்பிக் கொடுக்க எனக்கு மனம் ஒப்பவில்லை.

காதலை அதுவும் முதல் காதலை நினைவு படுத்தும் பல நிகழ்வுகள் என் பின் வாழ்க்கையில் வரப்போகிறது என்று அப்போது நான் அறியவில்லை.

"தகுதியற்றவர்களின் மேல் நாம் வைக்கும் அளவுக்கு அதிகமான அன்பும் நம்பிக்கையும் பலமடங்கு துன்பத்தையே திருப்பித் தருகிறது" சரியாப்பா.... என்று வாரமலரில் வெளி வந்திருந்த ஒரு பொன் மொழியைப் படித்துக் கூறிய மகளைப் பார்த்து.... சரியென்றேன்.