Monday, June 24, 2013

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்கள் தேவைகள் இருக்கும். கணவனிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவனுக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும். தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்குமாம். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று நிபுணர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் படியுங்களேன்.

புண்படுத்தாதீங்க

மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடாதாம். மனது புண்படும்படி பேசக்கூடாதாம். அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டுமாம். முக்கியமாக பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாதாம்.

விட்டுக்கொடுக்காதீங்க

தன்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு கணவரை நம்பி மட்டுமே மனைவி வந்திருக்கிறாள். எனவே மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாதாம். முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.

குறை சொல்லதீங்க


மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.

மனம் விட்டுப் பேசுங்க

பணம் அவசியம்தான் அதற்காக குடும்பத்தை கவனிக்காமல் பணம் மட்டுமே குறிக்கோள் என்று பணத்தின் பின்னால் ஓடக்கூடாதாம். குடும்பம், குழந்தை இவற்றிர்க்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமாம். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது மனம் விட்டு பேசவேண்டுமாம். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

ஆலோசனை கேளுங்க

எந்த ஒரு விசயமென்றாலும் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவி சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த விசயத்தையும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் கூறவேண்டுமாம். அதேசமயம் அடுத்த பெண்ணைப் பற்றி மனைவியிடம் பாராட்டக்கூடாதாம்.

நம்பிக்கை வைங்க

எந்த ஒரு விசயத்தையும் மனைவியை நம்பி கூறவேண்டுமாம். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவியின் சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமாம். மனைவிக்கு உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம். அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாராம். இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.
************************நன்றி: போல்டு ஸ்கை

SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு ...

லாட்டரி சீட்டு மோகம் ஒழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிதாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்க, பரிசை வெல்லுங்க என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மக்களின் பணம் சம்பாதிக்கும் பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எப்படி எல்லாம் நம் பணம் பறிபோகிறது என்பதைப் பற்றி சின்னதாய் ஒரு ரவுண்ட் அப்.

கேம் ஷோவோ, ரியாலிட்டி ஷோ எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

உதாரணமாக கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள். சரியான விடையை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பி உடனே லட்சோப லட்சம் எஸ்.எம்.எஸ்கள் பறக்கும். பரிசு என்னவோ பத்து பேருக்குதான் போகும். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான லாபம் அடித்து வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

முன்பெல்லாம் பரிசுக்கு உரிய பதிலை போஸ்ட் கார்டில் எழுத வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசுக்குரிய விலை அதிகம் கொண்ட போஸ்ட் கார்டு விற்பனைக்கு வந்தது. அது மத்திய அரசின் தபால் துறையின் வருமானத்தை அதிகரித்தது. ஆனால் இன்றைக்கோ எந்த தொலைக்காட்சி என்றாலும் ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் டோல் ப்ரி சேவையை அறிமுகம் செய்யலாமே?.

********************
நன்றி :விநாயகாசெந்தில்

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!

படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம்.இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.
இதற்கு உதாரணம், மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.
ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள். 


*****************************
விநாயகாசெந்தில்— with Anusha Laxshan, Jeneeba Gurubaran, Ankavai Manmathan and நன்றி facebookநண்பர்கள் 

பழைய சோறு ......


 
பழைய சோறு ...... 

அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்து விட்டோம்... , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார்.


அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிற்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சால் பேன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட. 


காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார். 


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். 


அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும்  மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? (என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம். நன்றி facebookநண்பர்கள் 


செந்தில்குமார்

பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு

பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு


சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது.

வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
ஒருவன் தன் தலை முடியைத் தானே தூக்கி தன்னை மேலே உயர்த்திக்கொள்ள முடியாது. சுற்றியுள்ளவர்கள் தான் அவனது பணிவால் ஈர்க்கப்பட்டு பணிவுடைய ஒருவனை தனக்கு மேலே தூக்கி இருத்துவார்கள்.

இங்கே பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்காய் பிடித்தல் முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது இது ஏமாற்று. மனிதர்கள் காலில் விழுவதும் பணிவாகாது அடிமைதனமிது. சுயமரியாதை அற்ற கீழான செயல். தீமைகளுக்கு பணிவதும் கூடாது.


மற்றவர்களை புண்படுத்தாத, பிறரை மதிக்கும் பிறர் உணர்வை புரிந்து கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை லிப்டில் உயரே போவது போல் வாழ்வில் உயரச்செய்யும். மற்றவர்கள் படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற வேண்டும். ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.

பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாசம் கிடைக்கிறது. அவர்கள் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது . ஆசிரியர்கள் அடிப்பதில்லை. சிறப்பாக கவனித்து பாடம் சொல்லிக்கொடுகிறார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க் வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பை தருகிறது, எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள் பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது.

மற்றவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை கூட பணிவுடன் சொல்லும்போது அதற்கு நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ இருக்கும். இனிமையாக் பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கும். திறமையான பாய்மரக்கப்பல் மாலுமிகள் காற்றின் சக்தியைக் கொண்டே காற்றுக்கு எதிர் திசையில் கூட கப்பலை செலுத்த கூடியவர்கள்.

அதிகமான கல்வி, புகழ், பதவி, அதிகாரம், செல்வம் நம்மிடம் சேர்ந்தால் அதைக் கொண்டு பிறர் பயன் பெறும் வரை தான் நமக்கு உயர்வு. மாறாக அது தரும் செருக்கால் மற்றவர்களது உணர்வுகள் காயப்படும் போது நாம் நாம் கீழ் நோக்கி செல்லத் தொடங்குகிறோம். அப்படி பிறர் நோகும் படி மமதையில் வாழ்பவர்கள் கீழே விழ நேர்ந்தால் அவன் கதி மாட்டிக்கொண்ட பிக் பாக்கட் கதி தான்.

அறிவை , அதன் பலனை பிறருக்கு பகிர்ந்து கொள்ளாத அறிவாளிகளை யாரும் மதிப்பதும், விரும்புவதுமில்லை. யாருக்கும் பயன் படாத பணத்தை காக்கும் பணக்காரனைப் பற்றி தெரிந்து கொள்ள திருடனைத் தவிர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. புகழ் வரும்பொது தன்னடக்கத்தை பேண வேண்டும். புகழ் மமதையை தருமானால் மமதை விரைவில் அந்த புகழை அழித்து விடும்.

கல்வியும் சிந்தனையும் ஒருவனுக்கு சாபக்கேடாக கூட மாறலாம். கல்வியும் சிந்தனையும் ஒருவனை, அவனது உலகத்தை விரிவு படுத்துகிறது. அதோடு சேர்ந்து அவனது ஈகோவும் அதாவது "தான்" என்ற அகந்தையும் வளர்கிறது. பிறருக்கும் அவனுக்கும் இடையே முதலாளி தொழிலாளி போன்ற இடைவெளி அதிகரிக்கிறது. தனித்தனி தீவுகளாக மாறுகிறார்கள். இதனால் தான் கற்றவர்கள் ஒத்துப்போவதில்லை. படித்தவர்கள் தான் அதிகம் விவாகரத்து செய்கிறார்கள். கற்றவர்கள் தான் அதிகம் குழம்புகிறார்கள். உதாரணம் பாருங்கள் நாட்டு வைத்தியத்தில் எல்ல நோயும் வாதம், பித்தம், கபம் என்பதில் அடங்குகிறது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கு எத்தனை பிரிவுகள் தேவைப்படுகிறது. ஒரு கணினியியல் இன்று எத்தனை பிரிவுகளில் அறியப்படுகிறது. எத்தனை வித லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

பிறர் பேச்சை காது கோடுத்து கேட்பதும் பணிவு தான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம் மந்திரக்கோல் போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த தலைவனாக முடியும். அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்கள் பலருக்கும் பதவி மட்டும் தான் அடையாளம். அதிகார போதையில் பொதுமக்களிடம் பணிவின்றி நடந்து கொண்டவர் பலரும் பதவி போன பின் கிழிந்த துணி தரை துடைக்க போவது போல் ஆகி விடுகிறர்கள். ரவுடிகள் வாழ்வின் பிற்பகுதியில் அனாதை பிணமாகிறார்கள்.

சில பெரிய வியாபார ஸ்தாபனங்களில் முதலாளியே கஸ்டமர்களை கும்பிட்டு வரவேற்பார்கள். அல்லது அதற்கென்றே தனி ஆள் நியமித்திருப்பார்கள். அவர்கள் போடும் கும்பிடுகள் தான் அந்நிறுவனத்தின் மூல தனம். வாடிக்கையாளர்களை மதிக்காத எந்த கம்பனியும் உருப்பட்டதில்லை. customer is always right என்பதும் இது தான்.

தன்னைச் சுற்றித்தான் உலகம் எனும் மாயையை ஒழித்து, உலகத்தில் தான் ஒரு பாகம் எனும் அகந்தயற்ற நிலை மிக உயர்வான நிலை. எதையும் நாம் கொண்டுவரவில்லை, எதையும் எடுத்துச் செல்லப்போவதுமில்லை. எதையும் புதிதாகஅறிகிறோம் அன்றி எதையும் நாம் உருவாக்கி விடவும் இல்லை. நம் உலகத்தில் தான் மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?
இறைவன் இருக்கிறான் என நம்புவதும் இல்லை என்று நம்புவது அவரவர் நம்பிக்கை. அவரவர் நிலை பாடு .இரண்டுமே சரிதான். அது இறைவன் என்று கொண்டாலும் சரி நம்மை சுற்றியுள்ள உலகம் என்று கொண்டாலும் அந்த மாபெரும் சக்திக்கு நம் வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு உண்டு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அந்த சக்தியிடம் பணிவு காண்பிக்க வேண்டும். இந்த செல்வமும் புகழும் இறைவன் தந்தது அது இறைவனுக்கே சொந்தம் என்பது பணிவின் சின்னம். சந்தோசத்தை, வெற்றியை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இதில் இறைவன் என்பது நான் நீங்கலாக உள்ள உலகம் எனவும் பொருள் கொள்லலாம். இப்படி தன்னை சுற்றியுள்ளதை பெருமைப்படுத்தும் தன்னடக்கமான உள்ளம் ஜொலிக்கும் . காரணம் தன்னை சுற்றியுள்ள உலகத்தின் பிரதிபலிப்பு தான் "தான்" என்பது.
எல்லா மதங்களும் முதலில் பணிவை, கீழ் படிதலை அல்லது அகந்தை அறுக்கத்தான் போதிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டிய முதன்மை பண்பு இது தான்.இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாதவர் வாழ்க்கைப் பயணம் மிக கஸ்டமான பாதையில் .


**********************

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


 
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ....

இது பழமொழியே அல்ல. இது ஒரு விடுகதை. ஒரு கோட்டைக்குள் முப்பத்திரண்டு சிப்பாய்கள் என்று சொன்னால் எப்படி பல் என்று பதில் சொல்வோமோ அதுபோலத்தான் இதுவும். 

விடுகதைகளுக்கு வார்த்தைகளுக்கான பொருள் தேடத்தேவையில்லை.
 ஒரு செய்தியை பூடகமாக சுற்றிவளைத்து சொல்வது, நையாண்டியும் நக்கலும் கலந்து வெளிப்படுத்துவது , சில நேரம் விளையாட்டுத்தனம் 
கலந்து இருப்பதுதான் விடுகதைகள்.

`சின்ன மச்சான் குனிய வச்சான் ' என்றால் காலில் முள் குத்திக்கொண்டால் நாம் அதை குனிந்து பிடுங்குதை குறிப்பிடுவார்கள். முள் வந்து நமக்கு மச்சான் முறையா என்றால் சிரிப்பு வருகிறதுதானே!
அது போலத்தான் இந்த விடுகதையும். இதை பெரும்பாலானவர்கள் பழமொழி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் தவறு.
இதற்கான நேரடி பொருள் ஊர் இரண்டாகப் பிரிந்து விட்டால் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்று பொருள் வருகிறது.

ஆனால் கூத்து கட்டுபவர்களுக்கு ஊர் ஒன்றுப்பட்டு இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் நிறைய பார்வையாளர்கள் அவர்களின் கூத்தை ரசிப்பார்கள். அவர்கள் பிற ஊரைச் சேர்ந்தவர்களிடம் இவர்களின் திறமையைச் சொல்லும்போது அவர்களும் தங்கள் ஊருக்கு கூத்தாடிகளை அழைத்துச் சென்று மேடை அமைத்துக்கொடுப்பார்கள். அதன் மூலம் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு வருமானம் வரும். அங்கீகாரமும் கிடைக்கும். நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு சிலர் மேடையிலேயே வாழ்த்தி பணமும் தருவார்கள். இப்படி வாழ்க்கைக்குத்தேவையான பொருளாதாரத்துடன் பேரும் புகழும் வந்து சேரும். 

உண்மை இப்படி இருக்க ஊர் இரண்டுப் பட்டு நின்றால் கூத்தாடி எப்படி மகிழ்வான்? முதலில் ஊருக்குள் சண்டை இருந்தால் எந்த விழாவும் ஒழுங்காக நடக்காது என்பதே உண்மை.
இதற்கு உண்மையான பொருள் வாய், நாக்கு. வாய் திறக்காமல் இருக்கும் வரை நாக்கு மௌன சாமியாராக அமைதியாக படுத்திருக்கும். வாய் திறந்து உதடு இரண்டு பட்டால் நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசும். அதற்கு கட்டுப்பாடே கிடையாது கொண்டாட்டமாகி விடும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்கள்.செந்தில்குமார்

கொடிது கொடிது வறுமை கொடிது
அம்மா பசிக்குதே
தாயே பசிக்குதே
பாலும் பழமும் வேண்டாம் தாயே
பசிக்கு சோறு போட்டால் போதும்''

ஹைதர் காலத்து சினிமா பாட்டு. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த நானும் என் சகோதர சகோதரிகளுடன் - "கஸின்ஸ்' என்று நினைத்ததில்லை - இந்தப் பாட்டை பாடிக்கொண்டே இருப்போம். இந்தப் பாட்டின் பொருளைப் புரிந்து கொண்டோமா? அழுகை வரும். ஆனால், வறுமையின் முழுப்பரிமாணமும் புரிந்திருக்காது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பேராசிரியர் கூறினார் - ""சாலைகளில் பிச்சையெடுப்பவர்களைத் திருடர்களென்றும் சோம்பேறிகளென்றும் திட்டாதீர்கள். அவர்களுக்குப் பசி, உங்களிடம் கேட்கிறார்கள். முடிந்தால் கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப் பிடிக்காததற்குக் காரணங்கள் உங்களிடம் உள்ளன. அந்தக் குற்ற உணர்வைச் சமாதானப்படுத்துவதற்கு பிச்சை எடுப்பவர் மேல் தவறைத் திணிக்காதீர்கள்'' என்று! சிந்திக்க நிறைய நொடிகள் தேவை.

ஒரு மனிதநேயம் பொதிந்த, தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ராம் லக்கன் என்று ஒரு ஏழை. பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டம் என்று ஒரு சட்டம். நாம் சுதந்திரம் பெற்று எல்லோருக்கும் "ரோடி, கப்டா, ஓளர் மக்கான்' (உணவு, உடை, உறைவிடம்) இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனால், இந்தச் சட்டம் இன்றும் நிலுவையில் உள்ளது.

ராம் லக்கன் என்ன செய்தாரென்றால், 29-07-2005, 12 மணி அளவில் ராம்புரா (தில்லி) ரயிலடி அருகே கையை நீட்டி ஏதோ கேட்டார். உடனே இரண்டு காவல்துறை அதிகாரிகள், "மேற்படி சட்டத்தின் கீழ்' குற்றமிழைத்ததாக அவரைப் பிடித்துவிட்டார்கள். குற்றம் நிரூபணம் ஆகிவிட்டது என்று நீதிமன்றம் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டிலும் ராம்லக்கன் வெற்றி பெறவில்லை. உயர் நீதிமன்றத்தில் "சீராய்வு' மனு தாக்கல் செய்தனர்; அதில்தான் இந்தத் தீர்ப்பு கூறப்பட்டது.

அந்தத் தீர்ப்பு, பிச்சை எடுப்பவர்களை நான்கு வகையாகப் பிரித்தது. பசி, பட்டினியால் பிச்சை எடுப்பவர்கள் உயிர் வாழ்வதற்காகப் பிச்சை எடுக்கிறார்கள்; சட்டத்தின் குறிக்கோள் பிச்சை எடுப்பதைத் தடுப்பது; அதில் புதையுண்டு இருக்கும் இரு இலக்கு என்னவென்றால் - யாரும் பிச்சை எடுக்கக் கூடாது, யாரும் பிச்சையெடுக்கும் நிர்பந்த சூழலில் இருக்கக் கூடாது என்பதாகும்.கனடா, இங்கிலாந்து நாட்டுத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, "வேறு வழியில்லாமல் ஒருவர் ஒரு சட்டத்தை மீறுகிறார் என்றால் அது குற்றமல்ல' என்றும், மேலும் - "எனக்குப் பசிக்கிறது' என்று சொல்லும் பேச்சுரிமை நம் குடிமக்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளது.

இவ்வாறாக பிச்சையெடுப்பதை சமூக நோக்கோடு பார்த்து, இந்தச் சட்டத்தின்கீழ் எப்படி நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்று விதிமுறை வகுத்துள்ளது.

எல்லோரும் பிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நாம் எப்படி இந்த விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல வருகிறேன். என் சிநேகிதர் ஒருவர் - இலங்கையிலிருந்து பல வருடங்களுக்கு முன் இங்கு வந்த தமிழர் - என்னைக் கேட்டார்; ""எங்கள் நாட்டில் யாரேனும் பிச்சை கேட்டால், அவரைப் பார்த்து அவர் கையில் காசைக் கொடுப்போம். நீங்கள் எல்லோரும் அவர்களைப் பார்ப்பதே இல்லையே, அவர்களும் மனிதர்கள்தானே?''.

கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது. உண்மைதானே? பிச்சையெடுப்பவரின் கண்ணியத்தை மதிக்க வேண்டும். அது அடிப்படை உரிமை, அது மனித உரிமை. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று சகோதரத்துவம். அவரும் நாமும் ஒன்றுதான். கவிஞர் ஜான் டன்னின் கவிதை இது. ""எந்தவொரு மனிதனும் தீவல்ல. எங்கோ சாவு மணி ஒலித்தால், யாருக்கு என்று கேட்காதே, அது உனக்காகவும்தான்''.

ஆனால் நாம், என் சிநேகிதர் சொன்னதுபோல, பிச்சை எடுப்பவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. அவர்களைத் திட்டுவோம், ஏசுவோம், அப்படியே காசை எடுத்தால் அதை விட்டெறிவோம். விதியின் வசத்தில் நாம் காசு கொடுக்கும் நபராக இருக்கிறோம், நாமே காசு கேட்கும் நபராகப் பிறந்திருக்கலாம், இல்லையா?நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்தான் பெரும்பான்மையினர். வறுமையினால் அவர்களுக்கு வலிமை இல்லை. ஏழையாகப் பிறப்பது குற்றமென்றால், நம் நாட்டில் சிறைச்சாலைகள் இன்னும் லட்சக்கணக்கில் கட்டப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 32 ரூபாய்க்கு மேல் கிடைத்தால் அவர் ஏழை இல்லை என்று திட்டக் கமிஷன் கூறியது. பலவிதமான விமர்சனங்கள் இதற்கு.

அமெரிக்காவில் படித்து, இந்தியாவுக்கு வந்த இரு இளைஞர்கள் இந்தியனின் சராசரி வருமானம் என்ன என்று பார்த்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ஒரு நாளைக்கு ரூ. 150 என்று தெரிந்தது. பிறகு ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்குள் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அந்த 32 ரூபாய்க்குள் வாழ்ந்து பார்த்தார்கள்.

அந்தப் பரிசோதனைக் காலத்தின் முடிவில் அவர்கள் கூறியது இதுதான் - ""மறுபடியும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்ல ஆசைதான், ஆனால் முடியவில்லை; நாங்கள் நல்ல உணவை ஒவ்வொரு வாய் உண்ணும்பொழுதும், நம் நாட்டில் 40 கோடி மக்களுக்கு இந்த உணவு - கனவாகவே இருக்கும் என்பதை எங்களுக்கு நினைவூட்டியது. நாங்கள் இன்று பழையபடி எங்கள் சுகமான வாழ்வுக்குத் திரும்பிவிட்டோம். அவர்கள் தினமும் உயிருக்குப் போராடுகிறார்கள்... அவர்கள் வாழ்க்கையில் சுதந்திரம் சொற்பமே.. பசியோ ஏராளம்''.

ஒரு குற்ற உணர்வுகூட அந்த இருவரிடமும் தேங்கியது எனச் சொல்லலாம்.

ஏழ்மையெனும் முடிவிலா இருட்டு குகையில் பலர்... வெளிச்சமும் விருந்தும் வெளியே. எப்படி, இப்படி ஒரு சமமிலா தராசாக நம் சமூகம் உள்ளது?

""நம் எல்லோருடைய தேவைக்கு வேண்டியது நாட்டில் இருக்கிறது; ஆனால், நம்முடைய பேராசைக்குத் தீனிபோடும் அளவுக்கு இல்லை'' என்றார் காந்தியடிகள்.

சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒருநாளில் மாற்ற முடியாது. ஆனால், ஏழைகளை - பிச்சையெடுப்பவர்களை மனிதர்களாக மதிக்கலாம் இல்லையா? இன்னொரு வழக்கு பற்றி சொல்கிறேன்.ஒரு பிரெஞ்சு நாட்டுக்காரர் இந்தியா வந்தார். கேரளத்தில் அமிர்தானந்தமயி ஆசிரமம் சென்றார். அங்கிருந்து கிளம்பியபின் அவருடைய "பாஸ்போர்ட்' முதல் எல்லாம் திருடப்பட்டன. அவருக்கு பிரெஞ்சு மொழி தவிர வேறொன்றும் தெரியாது. பாவம், அலைந்து அலைந்து கன்னியாகுமரிக்கு வந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டில் அவர் மகள், அப்பாவிடமிருந்து தகவல் இல்லையே, அவருடைய விசாக்காலம் முடிவடைந்துவிட்டதே என்று நம் நாட்டிலிருக்கும் அவர்களுடைய தூதரகத்துடன் தொடர்பு கொண்டார். ஒன்றும் பலனில்லை.

இந்தியா வந்து சென்னையில் உயர் நீதிமன்றத்தில் "ஹேபியஸ் கார்பஸ்' என்னும் "பேராண்மை மனு' தாக்கல் செய்தார். அவர் காணவில்லையென்றும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக எங்கோ அடைக்கப்பட்டிருக்கிறாரென்றும், உடனே அவரை கோர்ட்டின் முன் ஆஜர் செய்ய வேண்டும் என்றும் கேட்டார். உயர் நீதிமன்றம் அரசு வழக்குரைஞரிடம் உடனடியாக அவரை ஆஜர் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அவர் வந்தார். விஷயம் என்னவென்றால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு திடீரென்று வீதிகளில் நிறைய பிச்சைக்காரர்கள் இருப்பதால் எல்லோரையும் "ரவுண்ட் - அப்' செய்ய வேண்டும் என்று தோன்றிவிட்டது. கிட்டத்தட்ட நூற்றுக்கும்மேல் பிச்சைக்காரர்களை வளைத்து அவர்கள் "மனநோய் உள்ளவர்களாக'ச் சான்றிதழ் பெற்று, மனநோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டனர். இந்த வழக்கில் வேறு சில பரிமாணங்கள் உள்ளன.

அவர்கள் ஏழைகள்தான், பிச்சைக்காரர்கள்தான் - ஆனால், மனிதர்கள். அரசமைப்புச் சட்டத்தின் முழுப் பாதுகாப்பு உண்டு. மறந்து விட்டேனே, பிச்சையெடுத்து "ரவுண்ட் - அப்' செய்யப்பட்டவர்களில் அந்தப் பிரெஞ்சு நாட்டு அப்பாவும் ஒருவர். அவர் மகளுடன் "பெற்றோம் - பிழைத்தோம்' என்று தாய்நாடு சென்றார்.தெருவில் சுற்றும் நாய்களை "ரவுண்ட்-அப்' செய்தாலே பிராணிகள் பாதுகாப்பு அமைப்புகள் ஆட்சேபிக்கின்றன. அந்தப் பிராணிகளுக்கு இருக்கும் ஆதரவும் அரவணைப்பும்கூட இந்த மனிதர்களுக்கு இல்லை. ஏன்? அவர்கள் ஏழைகள், அவர்கள் பிச்சையெடுத்தார்கள் அவ்வளவே. அதற்காக மனிதனுக்கு மனிதன் காட்டும் மரியாதை, அவர்களுடைய உரிமை என்று மறந்துபோகலாமா? அதுவும் அரசு? பிச்சையெடுத்தால் மனநோயாளிகளா? இல்லை குற்றவாளிகளா? சில சமயம் அரசின் செயல்பாடுகளே அவர்களை அந்த நிலைக்குத் தள்ளுகின்றன.

தென்னாப்பிரிக்காவில் ஒரு வழக்கு. இம்முறை கொஞ்சம் வழக்கு ஓவர்டோஸ் - விஷயம் அப்படி. நம்முடைய பார்வையின் விளிம்பிற்கு வெளியே நிற்பவர்களுக்கு மனித உரிமைப் பாதுகாப்பு சற்றும் தளரக்கூடாது என்று சொல்ல வேண்டுமானால் வழக்குச் சான்றுகளுடன்தானே முன்வைக்க வேண்டும்?

தென்னாப்பிரிக்காவில் ஒரு நகராட்சியில், ஊரை அழகுபடுத்துகிறோமென்று குடிசையில் வாழும் ஏழை கறுப்பர் குடும்பங்கள் வீதியில் நிறுத்தப்பட்டன. அந்த அரசின் செயலை தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றம் கண்டித்தது. "ஏழைகளின் சுயமதிப்பு அவர்கள் தெருத்தெருவாக தலைசாய்க்க ஒரு இடம் தேடுவதில், பாதிக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கை வறியவரின் வாழ்க்கை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்தால் அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவப் பார்வை காயப்படுகிறது'' என்று.

ஆமாம் நீங்கள் காரில் செல்பவர் என்று வைத்துக்கொள்வோம். ""சாலையோரத்தில் நின்ற கடை வண்டிகள் எல்லாம் அப்புறப்படுத்திட்டான் ஸார். சுத்தமா இருக்கு'' என்பீர்கள். உங்களுக்கு சாலை சுத்தம். ஆனால், சாலையில் இட்லி விற்றவருக்கு அவர் வாழ்க்கையே அப்புறப்படுத்தப்பட்டது, இல்லையா?


அந்தத் தீர்ப்பு மேலும் சொல்கிறது; ""இந்த அநீதி நடக்கும் இடத்தில் சட்டம் - நீதியின் மேற்பார்வை அவசியம்'' என்று. இப்படி மனித உரிமைகள் பாதிக்கப்பட்டால் நீதிமன்றங்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க முடியுமா? எப்படி இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்த மூன்று தீர்ப்புகளும் கூறுகின்றன.

ஒருமுறை கோபாலகிருஷ்ண காந்தி தன்னுரையில் கேட்டார், ""சாலை ஓரப் பாதைகள் எங்கே போயின? இன்று மேம்பாலங்கள் பல முளைத்துவிட்டன. ஆனால் பாதசாரிகளுக்குப் பாதை?'' காரில் போவோருக்கு வசதிகள் வரட்டும், அதற்காக காலால் நடப்பவர்களுக்கு இடமே இல்லாமல் செய்யலாமா? அப்பொழுது ஏழைகள் பெரும்பான்மையாக இருக்கும் இங்கே - ஒதுக்கப்படுகிறார்கள், வேண்டாத எழுத்தை ரப்பரால் அழிப்பதுபோல.

அன்றொரு நாள் ஆராய்ச்சிமணியை அடித்தது ஓர் ஏழைப் பசு. நீதி அரண்மனையில் இருந்து ஓடிவந்து தீர்ப்புக் கொடுத்தது. அன்று அரசுத்துறையும் நீதித்துறையும் ஒரே இடத்தில் இருந்தன. இன்று சட்டத்தை இயற்றுபவர், செயலாக்குபவர், நீதியைப் பரிபாலனம் செய்பவர் என்று மூன்றாகப் பிரிந்தாலும் இலக்கு ஒன்றே. எல்லோரும் மக்களாட்சியில் சமம். வறியவர்களின் மனித உரிமைகள் சிறிதும் மாற்றுக் குறைவல்ல.

நாளைக்கு உங்களிடம் ஒருவர் பிச்சை கேட்டால், என் சிநேகிதர் சொன்னதுபோல அவரைப் பார்த்துக் காசைக் கொடுங்கள் - கொடுப்பதாக இருந்தால்; எதுவாயினும் "மனிதம்' காயப்படாமல் இருக்க வேண்டும்.

**************************
கட்டுரையாளர்: உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.