Monday, June 24, 2013

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


 
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ....

இது பழமொழியே அல்ல. இது ஒரு விடுகதை. ஒரு கோட்டைக்குள் முப்பத்திரண்டு சிப்பாய்கள் என்று சொன்னால் எப்படி பல் என்று பதில் சொல்வோமோ அதுபோலத்தான் இதுவும். 

விடுகதைகளுக்கு வார்த்தைகளுக்கான பொருள் தேடத்தேவையில்லை.
 ஒரு செய்தியை பூடகமாக சுற்றிவளைத்து சொல்வது, நையாண்டியும் நக்கலும் கலந்து வெளிப்படுத்துவது , சில நேரம் விளையாட்டுத்தனம் 
கலந்து இருப்பதுதான் விடுகதைகள்.

`சின்ன மச்சான் குனிய வச்சான் ' என்றால் காலில் முள் குத்திக்கொண்டால் நாம் அதை குனிந்து பிடுங்குதை குறிப்பிடுவார்கள். முள் வந்து நமக்கு மச்சான் முறையா என்றால் சிரிப்பு வருகிறதுதானே!
அது போலத்தான் இந்த விடுகதையும். இதை பெரும்பாலானவர்கள் பழமொழி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் தவறு.
இதற்கான நேரடி பொருள் ஊர் இரண்டாகப் பிரிந்து விட்டால் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்று பொருள் வருகிறது.

ஆனால் கூத்து கட்டுபவர்களுக்கு ஊர் ஒன்றுப்பட்டு இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் நிறைய பார்வையாளர்கள் அவர்களின் கூத்தை ரசிப்பார்கள். அவர்கள் பிற ஊரைச் சேர்ந்தவர்களிடம் இவர்களின் திறமையைச் சொல்லும்போது அவர்களும் தங்கள் ஊருக்கு கூத்தாடிகளை அழைத்துச் சென்று மேடை அமைத்துக்கொடுப்பார்கள். அதன் மூலம் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு வருமானம் வரும். அங்கீகாரமும் கிடைக்கும். நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு சிலர் மேடையிலேயே வாழ்த்தி பணமும் தருவார்கள். இப்படி வாழ்க்கைக்குத்தேவையான பொருளாதாரத்துடன் பேரும் புகழும் வந்து சேரும். 

உண்மை இப்படி இருக்க ஊர் இரண்டுப் பட்டு நின்றால் கூத்தாடி எப்படி மகிழ்வான்? முதலில் ஊருக்குள் சண்டை இருந்தால் எந்த விழாவும் ஒழுங்காக நடக்காது என்பதே உண்மை.
இதற்கு உண்மையான பொருள் வாய், நாக்கு. வாய் திறக்காமல் இருக்கும் வரை நாக்கு மௌன சாமியாராக அமைதியாக படுத்திருக்கும். வாய் திறந்து உதடு இரண்டு பட்டால் நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசும். அதற்கு கட்டுப்பாடே கிடையாது கொண்டாட்டமாகி விடும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்கள்.



செந்தில்குமார்

No comments:

Post a Comment