Thursday, August 29, 2013

வலியெனும் வரம்


வல்லமை” இணைய இதழில்  வெளியானது:

               
பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அரசு மருத்துவச் சமூக ஆர்வலர் ஒருவர் வந்திருந்து, தொழுநோய்க்கான விளக்கவுரை நிகழ்ச்சி நடத்தினார். உரை முடிந்ததும், கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று கூறவும், பலரும் பல கேள்விகள் கேட்டனர். அமுதா என்கிற என் சக மாணவி, “இந்நோய் வந்தால் வலி இருக்காதா?” என்று கேட்டாள். “நல்ல கேள்வி” என்று மிகவும் சிலாகித்துப் பாராட்டிச் சொன்ன அவர், எல்லாரையும் கைதட்டவும் சொன்னார். எனக்கோ இந்த கேள்வியில் பாராட்டுமளவு அப்படியென்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று வியப்பாக இருந்தது.

அவர் தொடர்ந்தார், “எந்த ஒரு நோய்க்குமே வலிதான் அதன் முதல் அறிகுறியாக இருக்கும். அதை வைத்துத்தான் நாம் எச்சரிக்கையடைந்து உடனே சிகிச்சை எடுக்க மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இந்தத் தொழுநோய்க்கு மட்டும் வலி என்பதே கிடையாது. வலி இல்லாததாலேயே, இந்நோய் தாக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருந்து விட நேரிட்டு, நோய் முற்றிக் குணப்படுத்தச் சிரமமான நிலைக்குச் சென்று விடுவதால் கை, கால் விரல்களை இழந்து விடுகிறார்கள்” என்று கூறினார். சட்டென்று பிடிபடவில்லை என்றாலும், ‘உக்காந்து யோசித்த’போதுதான் வலி என்பது நமக்கு ஒரு வரமே என்பது புரிந்தது.

சமீபமாக விகடனில் ஒரு கதை வந்தது, “வலி” என்ற தலைப்பு என்பதாகத்தான் ஞாபகம். கிராம மக்களைப் பலவித அடி, உதை என்று சித்ரவதை செய்து, வலிக்கு அஞ்ச வைத்து, அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பண்ணையாருக்கு, வலி என்கிற உணர்வே இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த உணர்வு இல்லாததால் அக்குழந்தை படும் பாடுகள் விவரிக்கப்பட்டு, அவர் தன் குழந்தைக்கு ‘வலி’ கிடைக்க வேண்டி மருத்துவர்களையும் தெய்வங்களையும் வேண்டி அலைவதாகப் போகும் கதை.


உடலில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், அது நமக்கு ஏதேனும் ஒரு சிரமத்தைத் தராத வரை அப்பாதிப்பை நாம் அறிய மாட்டோம். அது தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி, கால்வலி, காதுவலி என்று ஏதேனும் ஒரு வலியாக ரூபமெடுக்கும்போதுதான் அதனைக் குறித்து யோசிப்போம்.

உதாரணமாக, உயர் இரத்த அழுத்த நோய். இதன் இன்னொரு பெயரே “சைலண்ட் கில்லர்” என்பதுதான். ஆரம்ப நிலையிலோ, சற்று முற்றிய நிலையிலோ இதனால் எந்தப் பாதிப்பும் வெளிப்படையாகத் தெரியாது. மிகவும் முற்றிய நிலைக்குச் சென்ற பின்னர் வாதம், சிறுநீரகப் பாதிப்பு முதற்கொண்டு கோமா உள்ளிட்ட விளைவுகளை ஏற்படுத்திய பின்பே பி.பி. வந்திருப்பதைக் கண்டறிய முடியும். இதுபோலவே சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவையும் ஆரம்ப கட்டங்களில் வலி இன்மையால் கண்டறிவது தாமதப்படும். ஏன், கேன்ஸர் கூடச் சிலருக்குக் கடைசி நேரத்தில் கண்டறியப்படுவது இந்த வலியின்மையால்தானே?

இன்னொன்று, வலி ஏற்பட்டாலும், அதற்குச் சுய மருத்துவம் செய்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. முதுகுவலி என்றால், எடு ஒரு ப்ரூஃபனை; தலைவலியா இந்தா ஒரு பெனடால்; சளிக்காய்ச்சல்தானே, ஒரே ஒரு ‘அட்வில்’ போதுமே என்று நாமே திறமையான மருத்துவர்களாக இருக்கிறோம். இது பெண்களுக்கே மிக மிகப் பொருந்தும் என்றாலும், ஆண்களும் பல சமயங்களில் இதில் பெண்களுக்கு நிகராகவே அலட்சியமாக இருக்கின்றனர்.

இன்றைய சூழலில், ஒரு நெடும் பயணம் செய்து அலுவலகம் சென்று, வீடு வந்து சேருவதற்குள் அலுத்துச் சலித்துப் போய் விடுகிறது. அதற்கு மேல், மருத்துவமனைகளுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடந்து மருத்துவரைப் பார்க்கவும், பரிசோதனைகள் செய்யவும் எரிச்சல்பட்டு “தினம் பைக்கில் போய்ட்டு வரதுனால வர்ற முதுகுவலிதான். ரெண்டு நாள் ப்ரூஃபன் சாப்டுக்கிட்டாச் சரியாயிடும்” என்கிற சமாதானங்களால் மனசைத் தேற்றிக் கொள்கிறோம்.

ஏற்கனவே சொன்னதுபோல, ‘வலி’ என்பது ஒரு அடையாளக் குறியீடு. எங்கோ, எதுவோ சரியில்லை என்பதற்கான அபாயமணி. என்ன சரியில்லை என்று சரி பார்க்காமல் வெறுமே வெளியே தெரியும் அடையாளங்களை மட்டும் அழித்துக் கொண்டிருந்தால், உள்ளே புரையோடிப் போகும். நோய் நாடுவது மட்டுமல்ல, “நோய்முதலும்” – காரணமும் – கண்டறிந்து அகற்றினாலேயொழிய வலியிலிருந்தும் நிவாரணமில்லை; கடும் விளைவிலிருந்தும் தப்பிக்க முடியாது.

அதை விடுத்து, ”இது ஒண்ணுமில்லை; ஒரு மாத்திரையப் போட்டுட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா வலி சரியாய்டும்” என்றே சொல்லிக்கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால், குடலும், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுக் கூடுதல் விளைவுகளைத்தான் இழுத்துப் போட்டுக் கொண்டதாக ஆகிவிடும். வலி மருந்துகளின் விளைவுகள் மிகக் கடுமையானவை. இவற்றை அதிகமாக, தக்க அறிவுரை இல்லாமல், எடுத்துக் கொள்வதென்பது நம் சிறுநீரகத்தை நாமே அழிப்பதற்குச் சமம்.

“இல்லை, நாங்கல்லாம் ஆயின்மெண்ட்தான் தடவுறோம். மாத்திரைலாம் சாப்பிடுறதேயில்லை தெரியுமா” – இப்படிப் பெருமையாகச் சொல்லிக்கிறீங்களா? வாங்க, உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். ஆயின்மெண்ட்களும் நம் சருமம் வழியாக நம் உடம்பில் ஊடுறுவிப் போய்த்தான் வலியைக் குறைக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்கள் எல்லாமும் கூடத் தொடர்ந்து வழமையாக உபயோகிக்கக் கூடாதவையே!!

வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்களினால் ஏற்படும் விளைவுகள் குறைவாக இருக்குமென்று சொல்லமுடியாதபடிக்கு, இவையும் சரும அரிப்புகள், அல்சர், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு தருபவையாக இருக்கின்றன.

பயமுறுத்துவதாகத் தோன்றுகின்றதா? இல்லை, நம்மில் பலரும் இந்த வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வீரியத்தை அறியாதவர்களாக இருக்கிறோம். அறிந்திருந்தாலும், நேரமின்மை, வேலைப்பளு, இன்னபிற காரணங்களின்மீது பழியைப் போட்டுவிட்டு இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதனை அதிகமாகச் செய்பவர்கள் பெண்கள்தான். குடும்பத்திற்காக ஓடாய்த் தேயும் பெண்கள், தம் நலன் என வரும்போது ‘அடுத்த வாரம் பார்க்கலாம்’; ‘பசங்களுக்கு லீவு வரட்டும்’ என்றே தள்ளிப் போட்டு விடுகின்றனர்.

ஒரு சிறு வலி என்றாலும் மருத்துவரை நாடி ஓடச் சொல்வதல்ல கட்டுரையின் நோக்கம். வலி என்பது ஒரு பாதிப்பின் அடையாளம் என்பதால், அந்தப் பாதிப்பைக் கண்டறிந்து அதை நீக்கி முழுக் குணமடையவேண்டுமேயல்லாது; தற்காலிக வலி நிவாரணிகளை அளவில்லாமல் எடுத்துக்கொண்டு, அதனால் வரும் பாதிப்புகளையும் இலவச இணைப்பாக வாங்கி வைத்துக் கொண்டுச் சிரமப்பட வேண்டாமே.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். அச்சமயங்களில் அதிக அளவு தண்ணீர் குடித்து, சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றுங்கள். இதை நம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண்களிடமும், தெருவில், அண்டை அயலில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்!! பெண்கள் நலன் காப்போம்!!

............

”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று"

ஹுஸைனம்மாவின் பக்கங்களிலிருந்து .....






சிறுவயதில் படித்த கல்கண்டு வார இதழில் லேனா தமிழ்வாணன் ஒருபக்கக் கட்டுரைகள் எழுதி வந்தார்.  நல்ல அறிவுரைகளை, சுவாரசியமான நடையில் எழுதுவதால், பல மனதில் இறுக்கமாகப் பதிந்ததுண்டு. அவற்றில், “பிள்ளைகளிடம் நீங்கள் ஏதேனும் வாக்கு கொடுத்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். “ஆமா, நீ எப்பவும் இப்படித்தான் சொல்லுவே, ஆனா செய்யமாட்டே” என்று சொல்லிவிட்டால் அது பெற்றோராக நீங்கள் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது” என்பதும் ஒன்று.

இதையே பின்னாட்களில் ஹதீஸ் புத்தகங்களில் நபிகளாரின் அறிவுரையாகவும் கண்டேன்:  ஒரு சிறுவனை,   அன்னை ”இங்கே வா, நான் உனக்கு ஒன்று தருகிறேன்” என்று அழைத்தபோது நபி(ஸல்) அவர்கள் ”அவ்வாறு அழைத்துவிட்டு, அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள்” என்று கூறினார்கள். 

ஆனால், வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று சொல்வது; அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா மகனுக்கு பாக்கெட் மணி தருவது என, பெற்றோர்களின் பொய்களைக் கேட்டு வளரும் குழந்தைகளும் பொய் சொல்லுவது தவறில்லை என்று எடுத்துக் கொள்கின்றனர்.  அப்பெற்றோர்களும், “என்னிடம் பொய் சொல்லாத வரை சரி” என்று அதைக் கண்டுகொள்வதில்லை. 

இந்த ”எப்போதேனும் ஒரு பொய்”தான் எல்லா குற்றங்களுக்கும் ஆதாரஸ்ருதியாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதே இல்லை. 


திருந்தி வாழ நினைத்த ஒருவன், அதற்கான வழியைத் தேடியபோது, அவனிடம் ஒருவர் “எது வேண்டுமோ செய்துகொள். பொய் மட்டும் சொல்லாமலிரு.” என்றாராம்.  ”வாய்மை” என்ற தலைப்பில் ஓர் அதிகாரம் எழுதியுள்ள வள்ளுவரும் இதையே சொல்கிறார்:

”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று"                         
”பொய்யுரைக்காமையை மட்டும் கடைபிடித்து வந்தாலே போதும்;  மற்ற அறங்கள் செய்யத் தேவையில்லை”  என்று திருவள்ளுவர் எடுத்துரைப்பதிலிருந்து தெரியவருவது: ஒரு பொய்.. அதைச் சொன்னால் அது எல்லாத் தீயவைகளின் தொடக்கமாக அமையும்.  தவிர்த்தால்,  நல்வாழ்வின் தொடக்கம்.

...................
நன்றி : ஹுஸைனம்மா

Wednesday, August 28, 2013

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?


         



வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

**~~~~~~~~*
நன்றி : சிறுவர்மலர்

வெள்ளை மீசை பறவை!



படத்திலுள்ள, இந்த இன்கா டெர்ன்ஸ் எனும் பறவைகள் வளரும் போது, கூடவே நீண்ட வெள்ளை மீசையும் வளருகிறது. பெரு மற்றும் சிலி நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது.

ஸ்டர்னிடி குடும்பத்தை சேர்ந்த இப்பறவைகள், நீர் பறவை வகையை சேர்ந்தது. பார்க்க நம்ம ஊர் காக்கையை போல இருந்தாலும், கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப் படுகிறது. இதன் அலகுகள், ஆரஞ்சு கலந்த சிவப்பில் இருக்கும். தலைப்பகுதிக்கு, கீழ் இருபுறமும் வெள்ளை மீசை இருக்கும் ஒரே பறவை இனம் இதுதான். இதன் கால்களும், பாதமும் மருதாணி வைத்ததை போன்று, கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பாறைகளுக்கு நடுவிலும், மரப்பொந்துகளிலும் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும். ஒரு முறைக்கு, ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். இம்முட்டைகளை இப்பறவை கள், நான்கு வாரங்கள் அடைகாக்கும். இந்த அரிய வகை பறவை உலகளவில், மிக குறைந்த எண்ணிக்கையில், உள்ளதால், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


**~~~~~~~~~~~~~~**

நன்றி : வாரமலர்

Tuesday, August 27, 2013

செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!


                     

இருப்பதை இழந்து
அடிப்பவன் புகழ் பாடி
அடிமையாய் வாழ்பவனுக்கு,
ஆள்பவனின் பரிசு
அடியும் உதையும் மட்டுமே..!!!

என்ன இலக்கணத்தில்
மனிதனை கூறு போடுகிறான்
அரியாசனம் அமர்ந்தவன்..!!
அவன் அகமகிழ்ந்து இன்புற
இவன் புறத்தை துன்புறுத்தி
வேடிக்கை பார்க்கிறான்..!!

கூத்துக்கட்ட வந்தவனை
கூடி நின்று கை தட்ட வைத்து,
கூத்துப் பார்க்க போனவனை
கூனிக் குறுக வைத்து
கோமாளி ஆக்க பார்க்கின்றனர்
இக்காலத்து முதலாளிகள்..!!

சாண் ஏறினால் தானே
முழம் வழுக்கும்,
முக்காடு போட்ட
பண முதலைகள் அழியும் வரை
சாணும் ஏற முடியாது
முழமும் பார்க்க முடியாது..!!

வளைந்து வணக்கம் போட
வலுவிழந்த நம் முதுகு
இருக்கும் வரை,
குனிய குனிய குத்துகின்ற
அதிகார மேல் வர்க்கம்
இருக்கத்தான் செய்யும்...!!!

உடல் சோர்ந்து,
முகம் தோய்ந்து,
நாவறண்டு,
நரம்பு தளர்ந்து,
தோல் சுருங்கி
தொடை ஒடுங்கி
செத்த பாம்பு போல 
துடிக்கும் மக்களை அடித்தே
தங்களை வீரன் என்கின்றனர்,
ஆளும் அதிகார மக்கள்..!!!


 ** ~~~~~~~~~~~~~~ **

நன்றி : மனோ ரெட் 
Mano Red

Monday, August 26, 2013

மழைக்கால நினைவுகள்!!


செந்திலின் பக்கங்களிலிருந்து ...............



"அப்புறங் தம்பி... ஊருல மழை பெய்யுதுங்களா?"

எங்கள் ஊரில், அதிகமாகப் பழக்கமில்லாத இருவர் பேச்சைத் துவக்குவதற்கு மழை தான் பெரும்பாலும் உதவுகிறது. ஆங்கிலத்தில் ஐஸ்பிரேக்கர் என்றொரு வார்த்தையுண்டு. நீண்ட நேர அமைதியை உடைக்க பயன்படுத்தப்படும் சொல் அது. ஆங்கிலத்திலும் பெரும்பாலும் வானிலையே ஐஸ்பிரேக்கராக இருக்கிறது.
மழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா?
ஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.
"கண்ணூ மழை பேயுது.. நனைஞ்சீன்னா சலிப்பிடிச்சுக்கும்"னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு. "நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, பனிக்கட்டி மழை பேய்ஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சிருச்சு"னு எங்க ஆத்தா சொன்னப்ப "என் தலைல விழுந்தா என்ன ஆகும்"னு யோசிப்பேன். அதனாலேயே மழை பெய்தால் நனைவதில் உள்ளூர ஒரு பயம்.




மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் வெட்டுக்கிளி. எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க, வெளியில் சுற்றி வருவதில் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அதைப் பிடிங்கும் பொழுது ஒரு மண் வாசனை வரும் பாருங்கள்!! அடடா... எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் வெட்டுக்கிளிக்கும் ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. வெட்டுக்கிளியின் வாலைப் பிடித்து நண்பர்களிடம் விளையாட்டுக் காட்டுவது அலாதியானது.
சிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் வெட்டுக்கிளியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
எங்கள் ஊரான உடுமலையில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈறக்காற்று மட்டுமே வரும்.விசுவிசுவென ஈரக்காற்று வீச நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்தில் உட்கார்ந்து கதையடித்த நாட்களே நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது.
ஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா?



அடடா.. அது ஒரு அற்புதமான அனுபவம். ஆறின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.
இதற்கு நிகரான அனுபவமென்றால் அது குற்றாலம் அருவிகளில் தான் கிடைக்கும். அதுவும் குற்றாலச் சாரல் காலமென்றால் ஊரே சாரலில் நனைவதைப் பார்க்க முடியும்!! எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது!! அது தான் இயற்கையின் வரம்!!
கிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் சென்னை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..
கிண்டியில் உள்ள அண்ணா பல்கழகத்தில் தான் எனது பொறியியல் பட்டப்படிப்பு!! மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது இங்கே தான். இரவில் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுதிக்கு செல்லும் பொழுது வழியெங்கும் தவளைகளின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், மான்களின் சத்தமும் என வேறு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்படும். காலையில் பார்த்தால் மைதானம் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல புல் முளைத்துக்கிடக்கும்.
பசுமையான மைதானம், வழியெங்கும் உதிர்ந்த பூக்களும், மர இலைகளும் கல்லூரி வாழ்க்கைக்கே உரிய கலாட்டாக்கள் என்று இன்று நினைத்தாலும் இன்னுமொரு முறை அங்கே படிக்கலாம் என்ற ஆசை எழுகிறது.
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் வரை நகரவாசிகளின் மழைக்கால அனுபவம் கிடைக்கவில்லை. ஆனால் வேலைக்குச் செல்லும் பொழுது, மழைக்காலத்தில் சென்னையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.
சாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் பரவாயில்லை... வேளச்சேரி, பள்ளிக்கரனை, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல?இது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும்? எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்?
வள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு சென்னையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்?
யார் காரணம்?
நாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா?
நம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் சர்வசாதாரணமாகிவிடுகிறது.பிறகு சாலையெங்கும் தண்ணிர், சாலையெங்கும் குழிகள் என்று கூறி என்ன பயன்?
மழையைப் பற்றி மகிழ்ச்சியுடன் விசாரிப்பதைப் பார்த்துப் பழகிய எனக்கு "நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு" என்று பெரு நகரங்களில் பேச்சைக் கேட்பது சோகத்தையே தருகிறது!!

------------------
ச. செந்தில்வேலன்.

Wednesday, August 21, 2013

பர்தாஃபோபியா


ஃபோபியாக்களில் பலவகை உண்டு. ஆனால், உடை வகைகளில் ஃபோபியா தருவதென்பதில் பர்தாவுக்குத்தான் தனிச்சிறப்பு. சேலைஃபோபியா, சுடிதார்ஃபோபியா, ஸ்கர்ட்ஃபோபியா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோமா என்ன? ஆனாலும், நிறைய பேருக்கு இந்த ஃபோபியா இருக்கிறது. இதைப் போக்குவது பற்றிப் பார்ப்போம்.

முன்காலத்தில், எல்லாப் பெண்களுமே சேலை அல்லது தாவணித் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள்.  முஸ்லிம் பெண்கள் கூடுதலாகத் தலையையும் மறைத்துக் கொள்வார்கள், இஸ்லாமிய வழிகாட்டுதல் அவ்வாறு என்பதால். மேலும், அப்போதெல்லாம் பெண்கள் எப்போதாவதுதான் வெளியே வருவதால், இம்முறையே பின்பற்றத் தோதுவாக இருந்தது. ஆனால், நாளாக நாளாகப் பெண்கள் படிப்பதும், பல துறைகளில் கால்வைத்து, வேலைக்குச் செல்வதும் அதிகரித்தது. பல வெளிவேலைகளுக்கும் உறவினர்களைச் சார்ந்திராமல், தாமே செய்துகொள்ளவும் ஆரம்பித்தனர்.

சேலையில் பல அவஸ்தைகள் உண்டு, உடுத்துவது முதல். என்னதான் பார்த்துப் பார்த்து அங்கங்கு பின் குத்தி வைத்தாலும், கவனமாக இருக்க வேண்டும். இருபாலர் படித்த என் கல்லூரியில், சேலை மட்டுமே பெண்களுக்கான கட்டாய  உடையாக இருந்தவரை, மாணவிகளின் வலதுபுறம்தான் மாணவர்களுக்கு இருக்கைகள் என்பது எழுதப்படாதச் சட்டமாக இருந்தது. ( ஒரு திருமணப் புகைப்படக்காரர் கல்யாண வீட்டில் கிடைத்த அனுபவங்களை, திட்டுகளை வைத்து, சேலையின் சிரமங்களைப்  பதிந்திருந்தார். அந்தப் பதிவை இப்போக் காணோம், காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு போல!!)

பிறகு, சுடிதார் சல்வார் அறிமுகமாச்சு. அறிமுகமான வேகத்துல, அது கிட்டத்தட்ட தமிழ்நாட்டு கலாச்சார உடை மாதிரி எல்லாரிடமும் இறுகப் பரவிப்பிடிச்சுடுச்சு. என்ன காரணம்? உடையின் எளிமை மற்றும் சௌகரியம். ஆமாம், சேலையைவிட இது மிகவும் வசதியான உடை!! பிறகு வந்த “நைட்டி”யும் பிரபலமடைவதற்கு அதன் வசதிதானே காரணம்.

அதேபோலத்தான், ‘பர்தா’வும். 90களின் நடுவேதான் இஸ்லாமிய விழிப்புணர்வோடு,  பர்தாவும் தமிழ்நாட்டில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் பெண்களும் பொது இடங்களில் அதிகம் புழங்கத் தொடங்கியிருந்தனர். பணிக்குச் செல்லும் பெண்கள் அன்றாட உடையாக சேலை அணிவது சிரமமானதே என்பது நான் கல்லூரி ஆசிரியையாகப் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம். அப்போது, பர்தா முறையிலான சேலை (முழு நீள ப்ளவுஸ் + ஸ்கார்ஃப்) அணிவேன் அச்சமயத்தில்.

பர்தா என்ற உடை, நைட்டியை ஒத்து இருப்பதுதான் அது பிரபலமானதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.  நைட்டியின் வசதியைத் தரும் அதே சமயம், சுடிதார்/நைட்டியில் குனிந்து நிமிர்வதில் உள்ள சங்கடம் இதில் இல்லை. பொதுவாகவே இப்ப பர்தா உலகமுழுதுமே ரொம்பப் பரவியிருக்கு, பல நாடுகளுக்கே  ”ஃபோபியா” தாக்குமளவுக்கு!!

என்னிடம் சமீபத்தில் ஒருவர், “பிரதீபா பாட்டீல், இந்திரா காந்தியெல்லாம் போட்ட மாதிரி முழுக்கை சட்டை போட்டு, முக்காடு  போட்டுகிட்டாலும் பர்தாதானே. அப்புறம் ஏன் தனியா பர்தா போடணும்?” என்று கேட்டார். உண்மைதான், நானும் அப்படித்தான் சேலையானாலும், சுடிதாரானாலும் முழுக்கை உடையும், ஸ்கார்ஃபும் அணிந்து வந்தேன். ஆனாலும், அவற்றில் இருக்கும் நடைமுறை சிரமங்கள் பல. அவரிடம் சொன்னேன், “அக்கா, பிரதீபா பாட்டீல் அம்மாவுக்கும், இந்திரா காந்திக்கும் சேலைத் தலைப்பைப் பிடிப்பது மட்டும்தான் வேலை. நமக்கோ,  கையில் நாலஞ்சு பையும் பிடிச்சுக்கணும்; அங்கேயிங்க ஓடுற பிள்ளையையும் பாக்கணும்; பேரம் பேசணும்; ஆட்டோவோ, பஸ்ஸோ நிறுத்தி, ஓடி ஏறணும், இறங்கணும். இவ்வளவுத்துக்கும் நடுவுல சேலையைப் பிடிக்கவா, பையைப் பிடிக்கவா, பிள்ளையப் பிடிக்கவா? இதுக்கு பர்தாவே பெஸ்ட்னுதான் நான் மாறி இப்போ அது ஆச்சு பன்னெண்டு வருஷம்” என்று சொன்னேன்.

இஸ்லாம் எந்த இடத்தில் நாம் இன்று ’பர்தா’ என்று சொல்லும், அரேபியப் பெண்கள் அணியும் ‘அபாயா’ போன்ற முழு நீள அங்கி போன்ற
ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஆனால், அங்க அவயங்கள் வெளியே தெரியாமல் முறையான ஆடை அணிய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது. அதனால்தான், உலக முழுதுமுள்ள முஸ்லிம் பெண்கள் அவரவர் வசதிக்கேற்றபடி, விருப்பப்படி முழு உடலையும் மறைக்கும்படி ஆடை அணிந்துகொள்கிறார்கள். அது பர்தா, ஸ்கர்ட்-டாப்ஸ்-ஸ்கார்ஃப், கால்சராய்-சட்டை-ஸ்கார்ஃப், முழுக்கை சுடிதார்-ஸ்கார்ஃப், சேலை-முழுக்கை சட்டை-ஸ்கார்ஃப் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படித்தான் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இதில் உலகெங்கும் பர்தா என்ற அங்கி அதிகமாகப் பரவியிருக்கிறதென்றால், காரணம் சிம்பிள்: It's more comfortable, that's all!!

இல்லை, பர்தா அரபு நாட்டு உடை; தமிழ் கலாச்சாரத்தில் திணிக்கிறார்கள் என்றெல்லாம் (அதுவும், பேண்ட்-ஷர்ட் போட்டவர்கள்) சொல்வதைப் பார்த்தால், சிரிப்புதான் வரும். தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளிகளில், பட்டிதொட்டிகள் இருப்பவை உட்பட அநேகமாக எல்லாவற்றிலும் சீருடையாகப்பட்டிருக்கின்றதே  சுடிதார், அதென்ன சங்ககாலப் பெண்கள் போட்டிருந்த உடையா? ஏன், அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் (இந்திய & மேற்கத்திய) பெண்கள்  உடல் முழுமையாக மறையும்படி அணியும்  பிஸினஸ் சூட் கூட பர்தா வகைதானே!!  எந்த உடையும் நிலைத்திருப்பதற்கு அதன் வசதிதான் காரணம். இந்தப் பதிவில் சொல்லியிருப்பதையும் படித்துப் பாருங்கள்.  இத்தகைய ஆபத்துகள் நிறைந்த உலகில் உடையில் கவனமாக இரு(க்க நினை)ப்பதில் என்ன தவறு?

என் நண்பர் ஒருவர், சில முஸ்லிம் பெற்றோர் பர்தாவைக் கட்டாயப்படுத்துவதாகவும்; பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டியதுதானே  என்றும் கேட்டார். அவரிடம், ‘ப்ளஸ் டூ படிக்கிற உங்க தம்பி கடைத்தெரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தபின், அவனுக்கு உங்கள் வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் சுதந்திரத்தைத் தராமல், ஏன் கண்டித்தீர்கள்?’ என்று கேட்டேன்.

ஒரு பெற்றோராகத் தன் மகன்/ளுக்கு, உணவு, உடை, உறைவிடம், கல்வி அளிப்பது மட்டும் பெற்றோரின் கடமையல்ல;  பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் சொல்லித் தருவதும் கடமையே. வயது வந்த பிறகு மட்டுமல்ல, சிறுவயதிலிருந்தே முறையான ஆடைகள் அணிவதும் அவசியமே என்று இந்நாளைய ஆபத்துகளை அறிந்த நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவர்கள் முழு உடல் மறைக்கும் ஆடையே பாதுகாப்பென்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

சுடிதார், சேலை, ஸ்கர்ட் உட்பட விரும்பும் உடைகளையே பர்தா முறையில் அணியலாம். தவறில்லை. என்றாலும், ’கலர்’களைக் கண்டுகொள்ளாமல், கருப்பு (அங்கி) பர்தாவுக்கு மாறுவதற்குக் கொஞ்சம் உரமான மனது வேண்டும். இதில் இருக்கும் வசதிகளாக நான் கருதுவது,  என் அழகு, அந்தஸ்து, ஆபரணம், ஆடை, அளவுகள் ஆகியவற்றிற்காக நான் மதிக்கப்படாமல், பர்தாவை மீறி வெளியே தெரியும் என் அறிவு, அன்பு, பண்பு, குணம், கல்வி ஆகியவற்றிற்காக மட்டுமே மதிக்கப்படுவேன். அதாவது பள்ளிகளில் சீருடை போல என்று சொல்லலாம். மேலும்,  இயல்பாகவே விலையுயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் மீது ஆர்வமின்மை ஏற்பட வைக்கிறது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, வெளியிடங்களில், நான் என் உடையின்மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லாததால், என் செயல்களின்மீது மட்டுமே கவனம் செலுத்தினால் போது.இதற்காகவே புர்கா போடலாமா என யோசிப்பதாக இங்கே ஒரு பெண் யோசிக்கிறார் பாருங்கள்.

நான் ஏன் முழு ஆடை அணிகிறேன்? ஆரம்பகாலங்களில் அம்மா சொன்னார், இஸ்லாம் சொல்கிறது என்பதே எனக்குத் தெரிந்த காரணம். பின்னாட்களில் செய்தித் தாட்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கண்ட நிதர்சனங்கள் பெண்ணுக்கு முழுஆடைதான் முதல் கவசம் என்பது புரிந்தது. இப்போதும் பலரின் பதிவுகளில் பெண்களைக் குறித்தான எழுத்துக்கள் என் எண்ணங்களுக்கு வலு சேர்க்கவே செய்கின்றன. ”ஆள் பாதி, ஆடை பாதி” என்பதன் உண்மையான அர்த்தம் புரிகிறது.

ஆரம்ப காலங்களில் எல்லாப் பெண்களுமே கண்ணியமான ஆடைதான் உடுத்தியிருந்தார்கள். ஆனால், காலப்போக்கில், அறிவை வெளிப்படுத்துவதாக எண்ணி உடலையும் வெளிக்காட்டும் உடைகள் புழக்கத்தில் வந்துவிட்டன. எவ்வளுக்கெவ்வளவு இறுக்கமாக, இறக்கமாக உடை அணிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சுதந்திரம் அவர்களுக்குக் கிடைப்பதாக இப்பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். எப்படி வந்தது இந்த எண்ணம்?

பர்தாவை எதிர்க்கிறோம், அது சுதந்திரத்தை முடக்குகிறது என்று சொல்லும் இவ்வெதிர்ப்பாளர்கள் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இதைத்தான்.  முழுதும் மூடினால் அடிமை; திறந்துபோட்டால்தான் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தைப் பாகுபாடில்லாமல் இளம்பெண்களின் மனதில் பதிய வைத்ததுதான் இவர்களுக்குக் கிடைத்த, இவர்கள் எதிர்பார்த்த வெற்றி.  இதன் தொடர்ச்சியே போட்டிருந்தாலும் போடாததுபோல உடலின் பெரும்பகுதியை வெளிப்படுத்துவதான இன்றைய மாடர்ன் உடைகள்!!

இவையெல்லாவற்றையும் விட அதிர்ச்சியான விளைவு ஒன்று உண்டு என்று சொன்னால், சின்னச் சிறார்களுக்கும் இதுபோன்ற உடைகள் அணிவிப்பதுதான்!!  இதனால், நம் உடல் தெரிய உடை அணிவது தவறொன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பிஞ்சு மனதில் பதிய வைப்பது மட்டுமல்லாமல், எத்தனை அபாயகரமான விளைவுகளுக்கு அச்சிறுமியை உள்ளாக்கும் சாத்தியங்களைத் உருவாக்குகின்றோம் என்பது பெற்றோர்களுக்குப் புரியாமல் போயிருப்பது - அதுவும்  பல கொடூரங்களைக் கண்டபின்னும் - ஏன்? அவர்களுக்குள்ளும் உடைகுறித்தானத் தவறான புரிதல் பர்தா-எதிர்ப்பாளர்களாலும் ஆழப் பதிய வைக்கப்பட்டிருப்பதுதான்.

இன்று, குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவை தவறில்லை என்ற அபிப்ராயம் மீடியாக்களாலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதுபோல, மீடியாவினால் பெண்கள் "commoditise" ஆக்கப்பட்டிருப்பதும், உடையைக் குறைப்பது தவறில்லை என்ற எண்ணம் சமூகத்தின்மீது திணிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம். இதைமீறி முழு உடை அணிபவர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்ததுதான் பர்தா-எதிர்ப்பாளர்களால் வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஆனால் முழுமையான கண்ணியமான உடை என்றுமே அறிவிற்கும், திறமைக்கும் தடையாகாது, மாறாக கவனத்தைச் சிதறாமல் ஒருமுகப்படுத்தி மேன்மேலும் முன்னேறவே உதவும் என்பது சாதித்தவர்களுக்குத் தெரியும்.

பர்தா அல்லது முழு ஆடையை எதிர்ப்பதைவிட, பல பெண்கள்மீது உடலைக் காட்டிப் பிழைக்கும் நிலை ”திணிக்கப்படுவதை” முதலில் எதிர்த்து, தடுப்பதே கட்டாய அவசியம். அவர்கள்தான் மிகமிகப் பாவப்பட்டவர்கள், பரிதாபத்திற்குரியவர்கள்.

பெண்ணுக்கு மட்டும்தான் முறையான ஆடை அவசியமா, ஆண்களுக்கில்லையா என்றால், எப்படி இல்லாமல் இருக்கும்? ஆண்களுக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு உண்டு. இதோ அதுகுறித்த வழிகாட்டுதல்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தரையில் கிடக்கும் அவரது கீழாடையைக் கணுக்கால்களின் பாதியளவுக்கு உயர்த்திக் கட்டச் சொன்னதாகச் சொல்வதாக ஸஹீஹ் முஸ்லிம் 4238 கூறுகிறது. அதாவது இந்த ஹதீத் சொல்வது ஆண்களுக்கும் முழு ஆடை அவசியம் என்றே.

ஆண்கள் ஆடைக்குறைப்பில் வியாபார உலகம் ஆர்வம் காட்டாததாலேயே  இது மிகவும் வலியுறுத்தப்படவில்லையோ என்னவோ.

பொது இடங்களில் ஆண்களுக்கும் உடையில் கட்டுப்பாடு வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படவேண்டியதே. எனவேதான் என் மகன்களுக்கும் கையில்லா சட்டைகளோ, அரை/முக்கால்/காலேஅரைக்கால் கால்சட்டைகளோ அணிவிப்பதில்லை. ஏன் என் கணவர், தந்தை, கஸின்ஸ் உட்பட என் குடும்பத்து ஆண்கள் யாரும் இவ்வாறு அணிவதில்லை.  பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும் என்று விரும்பும் எந்தச் சமூகத்து ஆணும் இதே போல அரைகுறை ஆடை அணிவதில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். (& vice-versa)

நான் கல்லூரியில் வேலை பார்க்கும்போது, என் சக ஆசிரியை கேட்டார், “உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.

...........................

நன்றி;- ஹுஸைனம்மா

Tuesday, August 20, 2013

அண்ணன் என்னடா, தம்பி என்னடா..??

வேறு கிரகம் தேடி
அலைந்து கொண்டிருக்கும்
மனிதா..??
கிரகம் பிடித்தவன் போல்
கிறுக்கு கொண்டு அலையாமல்
இறுதி வரை உடன் வரும் உறவை 
கொஞ்சம் தேடிக்கொள்..!!

வயல் வரப்பு பிரச்சனையிலும் 
சொத்து தகராறிலும்
முதுகலை பட்டம் பெற்று
மீசை முறுக்கும் நீங்கள்,
உறவுகளை கொண்டாடுவதில்
ஆரம்ப நிலை தேற தவறி விட்டீர்கள்..!!!





அமாவசை காகம் தேடி
அருகில் அமர்ந்து
உணவளிக்கும் மாமனிதர்கள்
வீடு தேடி வரும் உறவை
வாயளவில் வரவேற்று
வரவேற்பறையில் கைகுலுக்கி
அனுப்பி விட்டு சிரிப்பது
என்ன கில்லாடி தனமோ புரியவில்லை..???

உறவுகளுக்குள் உரிமை
இருக்கிறதோ இல்லையோ,
பொய்களும்,புலம்பல்களும்
வக்கிரமும்,வயித்தெரிச்சல்களும்
நிரம்பி பொங்கி வழிகின்றது..!!
பாசம் பல நேரங்களில் பொய்த்து
வேஷம் கட்டவே துடிக்கிறது..!!

சொத்துக்களை கட்டி அழுபவன்
சொந்தபந்தத்தை அறுத்து எறிகிறான்,
தங்கத்திற்கு மதிப்பு கொடுப்பவன்
தங்கமான உறவுகளை மிதிக்கிறான்..!!
பங்கு வர்த்தகம் பேசும் இவனோ
பச்சை தண்ணீர் தர மறுக்கிறான்..!!

ரத்தபாசம் துறந்து வீணா போனவனுக்கு
அண்ணன் என்ன, தம்பி என்ன
எல்லாருமே ஒன்று போல் தெரியும் 
கண்ணாடி பேழை காட்சி பொருள் தான்..!!

கயிறு கட்டி உறவு கொண்டாடும்
சில நாட்களோடு மட்டும்
உறவுகள் நின்று விடாமல்,
உயிர் கூட்டி உணர்வு தந்து
இறுதி வரை வர வேண்டும்..!!


............................

(Mano Red)

Friday, August 16, 2013

கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!

இச்சமூகத்தில் தற்போது நிகழும் ஊழல்,வாரிசு அரசியல்,குடிமக்களின் விருப்பத்திற்கெதிரான ஆட்சி இதெல்லாம் பார்த்து நம் மக்கள் அடங்கிப் போவதற்கு காரணம் என்னவென்று சற்றே சிந்த்தித்துப் பார்த்தால் உண்மை விளங்குகிறது.இதற்கு நம் வரலாற்றுப் பக்கங்களைப் பின்னோக்கி புரட்ட வேண்டும்.

ஆதாம் ஏவாள் காலத்தை தாண்டி நம் நினைவில் நிற்பதென்னவோ மன்னராட்சியே! அந்த ஆட்சியில் என்ன நிகழ்ந்தது? பலமுள்ளவன் முதன் முதலில் மன்னராட்சியைத் தொடங்கினான்.பின்னர் அவனது வம்சம் ஆண்டது. பின்னர் அவனது குலத்தினர் மட்டுமே ஆண்டனர். மீதமுள்ளவர்கள் எல்லோரும் மன்னனின் அடிமைகள் அவர்கள் அவனுக்கும் அவனது குடும்பத்தார்க்கும் சேவகம் செய்ய வேண்டும்.வரி செலுத்த வேண்டும்.மரியாதை செலுத்த வேண்டும்.இன்னும் பல …………………..


                  


இதையெல்லாம் விட கொடுமை அவனுக்கு பக்கத்து நாட்டில் பொன்னாசை,பொருளாசை,மண்ணாசை அல்லது புகழாசை ஏதாவதிருந்தால் அவனது பலத்தினைக் காட்ட பல்லாயிரக் கணக்கானோரை போர் என்ற பெயரில் சாகடித்தனர். இதற்காகவே பிறந்தது போலவே மக்களும் மன்னர்களின் ஆணைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தனர் எம்மக்கள்.கிட்டத்தட்ட 18 நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.அதில் அடிமத்தனம் கொஞ்சம் மாறுபட்டு கொத்தடிமையானார்கள்.மன்னராட்சியிலாவது மக்கள் மீது கொஞ்சம் கரிசனம் இருந்தது.பொருட்களை சுரண்டி அங்கேயே சேர்த்து வைத்தனர் மன்னர்கள் ஆனால் இந்த வெள்ளையர்களோ அதை சுரண்டி அவர்கள் நாட்டிற்கு கடத்தைனர்.அதுவும் எப்படி வண்டி நுகங்களில் மாட்டிற்கு பதிலாக எம்மக்களைப் பூட்டி!
அப்புறம் எப்படியோ போராடி சுதந்திரம் வாங்கி மீண்டும் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் அடிமைகளாகி கிடக்கின்றோம்.என்ன ஒரு வித்தியாசம் என்றால் மன்னராட்சியில் போருக்கு மக்களை அனுப்பி மன்னனது மண்ணாசை தீர்ந்தது.ஆனால் இப்போதெல்லாம் அடுத்த நாட்டுக்காரனிடம் மக்களை அடகு வைத்து தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான்.


இரண்டாயிரம் ஆண்டாக மக்களின் அடிமைத்தனம் மாறவில்லை.அதன் பெயர்கள்தான் மன்னராட்சி,சர்வாதிகாரம் மற்றும் மக்களாட்சி என மாறியுள்ளது.இதியெல்லாம் உற்று நோக்கும் போது ஒரு பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது.

அது,.....
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”
2000 வருடமாக திருந்தாத நாம் இனிமேலா திருந்தப் போகிறோம்! 

.................

அசோகன்

Friday, August 2, 2013

அன்புள்ள அப்பா................




தந்தையர்  பற்றிய சில பொன்மொழிகள் ............

அப்பா வீட்டின் கூரை. ஏனோ யாரும் அண்ணாந்து பார்ப்பதில்லை, கூரையில்லாமல் வீடில்லை.

ஒருவருக்கு உபகாரம் செய்யவேண்டுமென்றால் முதலில் உன் தாய்க்கு செய், ஒருவருக்கு மரியாதை செய்யவேண்டுமென்றால் முதலில் உன் தந்தைக்கு செய்.

தந்தை மகனுக்கு எதையேனும் அன்போடு தரும்பொழுது இருவரும் சிரிக்கிறார்கள்.
மகன் திருப்பி செலுத்தும்போழுது இருவரும் அழுகிறார்கள்..........ஷேக்ஸ்பியர்.
 
தெய்வத்திற்கு தகப்பன் என்பதைவிய  புனிதமான பெயர் இருக்க முடியாது......வேர்ட்ஸ்வொர்த்.

யார் வேண்டுமென்றாலும் தந்தையாக இருக்கலாம். ஆனால் அன்பிற்குரிய அப்பாவாகத் திகழ்வது தனிக்கலை.............ஆனி காடஸ்.

தன் தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும்போது அவன் சொல்வது தவறு என்று உணரும் வயதுப் பிள்ளை அவனுக்கு இருக்கிறான் -சார்லஸ் வார்ட்ஸ்வோர்த்.

நல்ல அப்பாக்கள்... பாடப்படாத, போற்றப்படாத, கவனம் பெறாத சமூகத்தின் விலை மதிப்பில்லா சொத்துகள்............பில்லி க்ரஹாம்.

தந்தைகளை மரணம் நம்மிடம் இருந்து பிரிக்கலாம். நம் நினைவுகளில் நிரம்பி அழியாத நாயகர்கள் ஆகிறார்கள் அவர்கள்.........கொன்ராட் ஹால்.

 நூறு பள்ளி ஆசிரியர்களைவிட உயர்ந்தவர் ஒரு தந்தை...........ஜார்ஜ்ஹெர்பர்ட்.

வரலாற்று விநாடி வினாவில் நான் மூன்றாம் இடம் பெற்றபோது இரண்டாவது, முதலாவது இடமும் உன்னால் அடையமுடியும் என்றார் என் அப்பா. முதலிடம் வென்றதும் மாறாத புன்னகையுடன் இடங்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை; முனைதலே முக்கியம் என்றார். -  தாலியா சால்ட்ஸ்.

இயற்கையின் உன்னத படைப்பு தந்தையின் ஈடில்லா இதயம்...பிரான்கோயிஸ் ப்ரிவோஸ்ட்.

தன் அன்புக்குழந்தையை பால்யத்தில் பெரிய பெண் போல உணரச்செய்யும் தந்தைகள், வளர்ந்ததும் அவர்களை சிறுமி போல மிகைத்த அன்பால் உணரச்செய்கிறார்கள்.

என்னோடும் என் தம்பியோடும் புல் நிறைந்த தோட்டத்தில் தந்தை விளையாடுவார். அன்னை, ''புற்களை மிதித்து விடாதீர்கள்!' என்பார். தந்தை எங்கள் தலை கோதியபடி, ''நாம் புற்களை வளர்க்கவில்லை; பிள்ளைகளை வளர்க்கிறோம்!'என்பார்.............ஹார்மன் கில்ப்ரேவ்.

தந்தைகளிடம் கனிவோடு இருங்கள்; நீங்கள் பால்யத்தில் இருந்தபோது உங்களை அளவில்லாமல் அன்பு செய்தவர் அவர். உங்களின் நாவில் இருந்து உருண்டோடிய முதல் மழலை மொழியை முனைந்து புரிந்துகொண்ட நம்மின் அறியா உலகின் வெளிச்சத்தில் நிறைத்தவர் இல்லையா அவர்?...மார்கரெட் கோர்டினி.

தந்தைகள் எளியவர்கள். குறையா அன்பால் அவர்கள் நாயகர்களாக, சாகசக்காரர்களாக, கதை சொல்லிகளாக, கீதம் இசைக்கும் பாடகர்களாக மாற்றப்படுகிறார்கள்....பாம் பிரவுன்.

வெறும் உதிரம் உடலால் ஆனதில்லை தந்தை - பிள்ளை உறவு. அது இதயங்களால் பிணைந்த உன்னத உறவு......ஜோஹாத் ஷில்லர்.

அதீதக் கனிவுடன் என்னிடம் நடந்துகொண்டதால் சந்தேகமே இல்லாமல் என் அப்பாவே உலகின் மிகப்பெரிய வீரர்....ஆன் எலிசபெத்.

வெற்றிகரமான தந்தையாக இருக்க எளிய விதி ஒன்றுதான். பிள்ளை வளரும் முதல் இரண்டு வருடங்கள் பிள்ளையை கண்டுகொள்ளாதீர்கள்..........ஹெமிங்வே.

 (நன்றி விகடன்)