Monday, December 31, 2012

பிள்ளைகளின் பார்வையில் அப்பா!4 வயதில் - எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்.

6 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும்.

10 வயதில் - அப்பா நல்லவர்; ஆனால் சிடுமூஞ்சி.

14 வயதில் - எப்பவும் எதிலும் குறைகண்டுபிடிக்கும் ஆசாமி.

16 வயதில் - கால நடப்பைப் புரிந்து கொள்ளாதவர்.

18 வயதில் - சரியான எடக்கு மடக்குப் பேர்வழி.

20 வயதில் - இவரோட பெரும் தொல்லை; எங்கம்மா எப்படி இந்த ஆளோட குப்பை கொட்றாங்க?

30 வயதில் - என் பையனைக் கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசில எங்கப்பான்னா எனக்குப் பயம்.

40 வயதில் - எங்கப்பா எங்களைக் கட்டுபாடா வளர்த்தார். நானும் அப்படிதான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன்.

50 வயதில் - அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்? எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை.

55 வயதில் - எங்கப்பா எவ்வளவு திட்டமிட்டு எங்களுக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார். அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியாது.

60 வயதில் - எங்கப்பா ரொம்ப பெரிய ஆள்.

-------------------------------------------------------------------------
-kirupairajah -

DNA fingerprinting பரிசோதனை என்றால் என்ன?


ஆறு வேறுபட்ட நபர்களின் எளிமையான DNA fingerprinting மாதிரிகள் ஒப்பிடப்படும் முறை - மிக எளிமையான பரிசோதனை ஒன்றின் முடிவு இது. 

எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்பது டிஒக்சிரைபோநியுகிளியோரைட்டு (Deoxyribonucleic acid) மூலக்கூறுகள் கொண்டு ஆக்கப்பட்டது. 

எமது உடற்கலத்தின் கருவில் இருக்கும் பரம்பரை அலகுக்குரிய டி என் ஏ மூலக்கூறுகள் எமது பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் பெருமளவில் ஒத்திருக்கும். சிறிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இது ஆளாளுக்கு அவரவரின் குடும்ப பராம்பரிய அடிப்படையில் வேறுபட்டிருக்கும்.

எனவே ஒரு சந்தேக நபரினை டி என் ஏ பகுப்பாய்வின் மூலம் அடையாள காண வேண்டின் அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கலத்தின் கருவில் காணப்படும் சேதமாகாத டி என் ஏ யை, வெட்டும் நொதியங்கள் (restriction enzyme) எனும் வேதியல் கொண்டு துண்டு துண்டாக்கி பின்னர் அவற்றை ஏற்றமுள்ள முனைகளுக்கிடையில் சிறிய மின்னழுத்தத்தின் கீழ் டி என் ஏ துண்டங்கள் மற்றும் நிறமூட்டிகள் பரவக் கூடிய அகரோஸ் ஜெல் (Agarose gel) தகட்டில் பரவ விடுவர்.

நொதியத்தினால் வெட்டப்பட்ட டி என் ஏ துண்டங்கள் அகரோஸ் ஜெல்லில் பரவும் போது துண்டங்களின் பருமனிற்கு ஏற்ப அவற்றின் பரவல் வேகம் அல்லது தூரம் மாறுபடும். சிறிய துண்டங்கள் வேகமாக நகரும். பெரியவை மெதுவாக நகரும். ஆனாலும் இதற்கு நாட்கள் கிழமைகள் என்று அதிக நேரம் ஆகாது.


 

அப்படி டி என் ஏ துண்டங்கள் பரவிய தகட்டில் இருந்து பெறப்படும் அடையாளக் குறிகள் பாவனைக்கு இலகுவாக அமைய நைலோன் தகடொன்றில் பதிக்கப்பட்டு பெறப்படும். பின் அது கதிரியக் கூறுகளிடையே பரிகரிக்கப்பட்டு தேவையான டி என் ஏ பட்டிகள் பெறப்பட மீதமுள்ளவை கழுவி அகற்றப்படும். இவ்வாறு பெறப்படும் தகவலே டி என் ஏ fingerprinting அல்லது பகுப்பாய்வு தகவல் அல்லது தரவு என்று சுருங்கக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஊதா கடந்த கதிர்ப்பின் கீழ் ஆய்வு செய்வது இலகுவாக இருக்கும்.

உண்மையில் இதில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. மேற்கூறியது பொதுவான ஒரு வழிமுறையாகும்.


பொதுவாக ஒரு நபரை அவருடைய குடும்பத்தாரின் டி என் ஏ தரவுகளின் அடிப்படையில் இனங்காண வேண்டின் குறித்த நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல்களுடன் அவருக்கு நெருங்கிய இரத்த சம்பந்தமுள்ள அதாவது குறிப்பிட்ட நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளில் இருந்து பெற்ற டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளும் அவசியம்.அப்போதுதான் ஒப்பிட்டு தரவுகளை சரி பார்க்க முடியும். பொதுவாக உலகில் தேடப்படும் நபர்களின் அவர்களின் உறவினர்களின் டி என் ஏ தகவல்களை அரசுகள் சேகரித்து வைப்பது இப்போது வழமை ஆகும்.

இந்த டி என் ஏ பகுப்பாய்வுக்கு அதிக நேரம் எடுப்பதில்லை. சில மணி நேரங்கள் போதுமானது. ஆனால் சந்தேக நபரின் உறவினர்களின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் பெற முடியாத நிலை இருப்பின் சந்தேக நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளை சரி பார்த்துக் கொள்வது சிரமமானது.

அதுமட்டுமன்றி ஒரு நடுநிலையான ஆய்வின்றி இதுதான் இன்னாரின் டி என் ஏ தரவு என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம் அங்கு கோடுகளே கண்ணுக்குத் தெரியும். அந்தக் கோடுகளின் அடிப்படையில் நாம் இதுதான் இவரின் தகவல் என்று வெளியில் இருந்து உறுதிப்படுத்த முடியாது. நாம் குறித்த மாதிரியை குறித்த நபரின் உறவுகளின் மாதிரியோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் பரிசோதித்து ஒப்பிட்டே இறுதி முடிவுகளை சரி பார்க்க முடியும்.

ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு இதுதான் இன்னாரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் என்றால் அதிலிருந்து அவரை இனங்காண முடியாது. அதில் அவரின் உருவமோ அமைப்போ தெரியப் போவதில்லை. அவரின் அந்தத் தரவை அவரின் உறவினர் என்பவரின் மாதிரியோடு பரிசோதனை ரீதியில் நம்பத்தகுந்த நிலையில் ஒப்பிட்டு பெறப்படும் தரவுகள் மூலமே உறுதி செய்ய முடியும். எனவே டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை சரியான நடுநிலையான அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் நிகழும் பரிசோதனையின் வாயிலன்றி வேறு வகைகளில் உறுதிப்படுத்த முடியாது.

----------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் 

வங்கி பணவைப்பு புத்தகம்மோனிக்காவும் நிக்கும் திருமணம் முடித்தனர், திருமண நாள் நிறைவில்
மோனிக்காவின் தாயார் மோனிக்காவிடம் 1000 ரூபா பணம் வைப்புச்செய்து ஓர் புதிய வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்து, உனது வாழ்க்கையில் சந்தோசமான நிகழ்வுகள் நடக்கும் போது கொஞ்சம் பணத்தை இதில் வைப்புச் செய்து அதற்கான காரணத்தையும் எழுதி வைக்குமாறு சொல்லி அவர்களின் திருமணத்தின் ஞாபகார்த்தமாக அந்த பணம் வைப்புச் செய்த புத்தகத்தை கொடுத்தார். சிலகாலங்களுக்கு பின்னர் இப்புத்தகத்தை பார்க்கும் போது நீர் உன் வாழ்க்கையில் அடைந்த ஆனந்தம் உனக்கு புரியும் என்று சொன்னார்.

மோனிக்கா இதை நிக்கிடம் பகிர்ந்து இது ஓர் நல்ல ஆலோசனை எனவும்
அடுத்த பணவைப்புக்கான நிகழ்வை மிக ஆவலோடு எதிர்பார்திருந்தனர்

அவர்களின் பணவைப்பு விபரம்.....

* 7 Feb: Rs.100, first birthday celebration for Nick after marriage
* 1 Mar: Rs.300, salary raise for Monica
* 20 Mar: Rs.200, vacation trip to Bali
* 15 Apr: Rs.2000, Monica got pregnant
* 1 Jun: Rs.1000, Nick got promoted
* ..... And so on... 

நாட்கள் செல்ல செல்ல மோனிக்காவிற்கும் நிக்கிற்கும் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டு அவர்களிடம் சந்தோசமில்லாமல், கடைசியில் இருவரும் பிரிவது என முடிவெடுத்தனர்.

மோனிக்கா தன் தாயாரிடம் சென்று, நடந்தவற்றை சொல்லி, தனக்கு
நிக்கை திருமணம் செய்வதிற்கு எடுத்த முடிவை கற்பனை செய்யக்கூட முடியவில்லை என்று சொன்னார்.


 

தாயார் மோனிக்காவிடம் சொன்னார், உனக்கு திருமணவாழ்க்கை கசப்பாக இருந்தால் உனது விருப்பப்படி செய் என சொன்னார், அதற்கு முன்னர் தான் கொடுத்த பண வைப்பு புத்தகத்தை ஞாபகப்படுத்தி அதிலுள்ள பணம் முழுவதையும் செலவு செய்யுமாறு சொன்னார், ஏனெனில், அந்த கசப்பான வாழ்க்கை எதுவும் பதிவாக இருக்கக்கூடாது

மோனிக்காவும் அதுதான் சரி என சிந்தித்து, மறு நாள் வங்கிக்கு பணம்
எடுப்பதற்காக சென்று வரிசையில் காத்திருந்த வேளையில், அந்த பணம்
வைப்புச் செய்ததிற்கான காரணங்களை பார்த்து பார்த்து இருந்தவேளையில் பழைய ஆனந்தமான நினைவுகள் ஞாபகத்திற்கு வந்த போது, மோனிக்காவின் கண்கள் கலங்கியது, உடனே பணத்தை எடுக்காது வீட்டிற்கு திரும்பி சென்றார் மோனிக்கா

வங்கி கணக்கு புத்தகத்தை, நிக்கிடம் கொடுத்து பிரிவதற்கு முன்னர் அப்பணம் முழுவதையும் செலவு செய்யுமாறு கூறினாள்

அடுத்த நாள் நிக் அந்த புத்தகத்தை மோனிக்காவிடம் திரும்பவும் கொடுத்தார், அதை மோனிக்கா பார்த்த போது அதில் 5000 ரூபாய் மேலதிகமாய் வைப்பு செய்யப்பட்டிருந்தது அத்துடன் அதற்கான காரணம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது
'This is the day I notice how much I've loved you all these years. How much happiness you've brought me.'

அவர்கள் கட்டியணைத்து ஆனந்தகண்ணீர் மல்கி அந்த பணவைப்பு புத்தகத்தை பாதுகாப்பாக வைத்தனர்.

"When you fall in any way, don't see the place where you fell instead see the place from where you slipped. Life is about correcting mistakes."

----------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்

நெறிப்படும் பருவம்

 

மனித வாழ்வில் மாணவப்பருவம் மிக்க மதிப்புடையது. வயதுக்கும், அறிவுக்கும், கடமைக்கும் இணைப்புக் காட்டி முன்னோர்கள் மனிதனுடைய வாழ்வை நான்கு வகையில் பிரித்தார்கள். அவை 

(1) இளமைநோன்பு

(2) இல்லறம்

(3) அகத்தவம்

(4) தொண்டு 
என்பனவாகும். 

ஒன்றின்பின் ஒன்றாக முறையோடு இவற்றைப் பயிற்சி செய்வதற்காக வேறுபடுத்தியும், வரிசைப்படுத்தியும் பேசப்பட்டனவேயொழிய, வாழ்வில் பொறுப்பேற்ற ஒவ்வொருவருக்கும் இந்நான்கு பண்பாடுகளும் வாழ்வில் இணைந்தே செயலாக வேண்டும்.

மேலே விளக்கிய நான்கு பிரிவுகளில் இளமை நோன்பு என்ற ஒன்றைப் பயிலும் காலம்தான் மாணவப்பருவம் மனிதன் சிறப்புற, வாழ்வில் வளம்பெற இன்றியமையாத பருவமே எற்றதோர் பயிற்சிக்காலம்.

நல்வாழ்வின் இன்றியமையாத தேவைகளான

(1) எழுத்தறிவு

(2) தொழிலறிவு

(3) இயற்கை தத்துவ அறிவு

(4) ஒழுக்க பழக்கங்கள் 

என்ற நான்கும் இணைந்த கல்வியே முழுக்கல்வியாகும். இவற்றைப் பயின்று கொள்ளவேண்டிய பொருத்தமான, இன்றியமையாத காலம் மாணவப் பருவமே. எழுத்தறிவு, தொழிலறிவு இரண்டும் இன்று விரிவாக எல்லாப் பள்ளிகளிலும் கல்வி முறையில் பாடத்திட்டங்களாக கற்றுத்தரப்படுகின்றன. இயற்கைத் தத்துவ அறிவும் செம்மையான வாழ்வுக்கு ஏற்ற ஒழுக்க பழக்கங்களும் அகத்தவத்தாலன்றிக் கிட்டாது. மாணவர்களுக்குப் படிப்பில் மனம் நிலைக்க, ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்து பொருள் உணர, அவற்றை நினைவிலே வைத்துக்கொள்ள, போதிய மனவலுவு, கூர்மை, நுண்மை ஆகிய இவை அகத்தவம் (தியானம்) என்ற உளப்பயிற்சியினால்தான் கிடைக்கிறது.

 

உடல், உயிர், மனம், மெய்ப்பொருள் இந்நான்கின் நிலைகளையும் இவை ஒன்றோடொன்று இணைந்த உறவுகளையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளும்போதுதான் ஒருவர் விஞ்ஞானம் கல்வியில் எந்தப் பகுதியிலும் சிறந்து விளங்க முடியும். பொருளியல், உயிரியல், உளவியல், கருவியியல், சமூக இயல் அகிய விஞ்ஞானங்கள் வேறு வேறாகத் தோன்றிய போதிலும் உண்மையில் இவை எல்லாவற்றிலும் ஊடுறுவிய தொடர்பு இருக்கிறது. இக்கல்விகளில் ஆழ்ந்து பொருளுணர்ந்து கருத்தோடும், பொறுப்போடும் கல்வியில் தேர்ச்சிபெற அகத்தவப்பயிற்சி இன்றியமையாத் துணையாகும். மேலும் மனிதனிடம் அடங்கியுள்ள ஆற்றல்களை முறைப்படுத்தவேண்டுமாயின் இளமைநோன்புக் காலமாகிய மாணவப்பருவம்தான் சிறந்தது அறிவு ஆற்றல் சிதறாமல், செயல்கள் நெறி பிறழாமல் ஒன்றோடொன்று இணைந்து சிறப்புற மாணவப் பருவத்திலேயே பயிற்சி செய்துகொள்ள வேண்டும்.

இப்பருவத்தை நழுவ விட்டால் தேவையற்ற துன்பமும், சிக்கலும் விளைவிக்கத்தக்க எண்ணங்களும், செயல்களும் இடம் பிடித்துக்கொள்ளும். பிற்காலத்தில் இவற்றை மாற்றி ஒழுங்குபடுத்தி நலம் காண்பதில் மிகுதியான முயற்சி எடுக்க வேண்டும். ஏனெனில் பழக்கமாகிவிட்ட எண்ணங்களையும், செயல்களையும் மாற்றியமைப்பது என்பது மிகக்கடினம். எனவே மாணவப் பருவத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒவ்வொரு மனிதனும் சிறந்த ஆற்றலுள்ள நல்லதோர் நிதியாகத் திகழ வேண்டும் என்றால் மாணவப்பருவத்திலேதான் மனவளக்கல்வி இடம் பெறவேண்டும்.

ஒரு மனிதன் நற்பண்போடு வாழ்வில் சிறந்து விளங்கினால் உலகிற்கு, ஆயிரமாயிரம் மக்களுக்கு நலம் விளைக்கும் பெருநிதியாகத் திகழ்கிறான். இதே போன்று பருவத்தை நழுவவிட்டு புலன் வழியே சென்ற சூழ்நிலைக் கவர்ச்சிகளால் தேவையற்ற எண்ணங்களும், செயல்களும் இளம்வயதில் ஒருவரிடம் பதிந்து விட்டால் சமுதாய நலனையே அழிக்கக்கூடிய நச்சு ஆகிவிடுகிறது. மாணவப் பருவத்தில் அகத்தவம் பயின்று மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் பெறும்போது கல்வி நிலையங்களில் எவ்வகைக் குழப்பங்களும் ஏற்படாது. இதன் தொடர்விளைவாகத் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் திறமை மிகும் அமைதி நிலவும் சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் இவ்வாறு வாழ்வின் நெறியுணர்ந்து வாழ்ந்தால் சமுதாயத்தில் அரசியல் சிறப்புறும், பொருளாதாரம் வளம்பெறும்.

 

எழுத்தறிவு, தொழிலறிவு, இரண்டை மட்டும் வளர்த்துக் கொண்டு இயற்கை தத்துவம், ஒழுக்க பழக்கங்கள் இவற்றை அலட்சியம் செய்துவிட்டால் மனித சமுதாயத்தின் இன்ப ஊற்றே நச்சு ஆகிவிடும். வறண்டுபோகும்.

மாணவப்பருத்தில் அகத்தவம் புகுத்துவதற்கு மாணவர்கள் மட்டும் முயன்றால் போதாது, பெற்றோர்கள், மதத் தலைவர்கள், சமுதாய நல நோக்கமுடையவர்கள், ஆட்சித் தலைவர்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள் அனைவருமே கூட்டுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த பெரு நோக்கத்தோடு சிந்தனை ஆற்றல் மிக்க சமுதாய நலநோக்கமுள்ள அனைவருமே மனித குல நலப்பொறுப்பை ஏற்றுக் கொள்வோம்.
-------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்

வருடம் 2070 இல் எழுதப்படும் ஒரு கடிதம் - படித்ததில் பிடித்தது


இது[b] 2070 [/b]ஆம்ஆண்டு

நான் 50 வயதை எட்டி சற்று நாளாகின்றது , ஆனாலும் என் தோற்றம் கிட்ட தட்ட 85 வயதானவரை போல இருக்கின்றது... நான் சிறுநீரக (கிட்னி) வருத்தத்தால் ரொம்பவே அவதிபடுகிறேன். அதற்கு காரணம் நான் தேவையான அளவு நீரை அருந்தாமை ஆகும். இன்னும் ரொம்ப காலம் நான் உயிர் வாழ மாட்டேன் என கவலையாய் இருக்கிறது. ஆனாலும் நான் இந்த சமூகத்திலேயே ரொம்ப வயதானவன் என்கிற சந்தோஷமும் இருக்கிறது.

எனக்கு என் 5 வயது ரொம்பவே நன்றாக நினைவு இருக்கின்றது, அப்போதைய உலகம் ரொம்பவே வித்தியாசமானதும் கூட... பசுமையான நாட்கள் அவை.. பூங்காக்கள் நிறைய மரங்கள் இருந்தன. அழகான மலர் தோட்டங்களை எல்லா வீடுகளிலும் காணக்கூடியதாக இருந்தது. நான் அந்த நாட்களில் நான் அரை மணித்தியாலம் குளித்திருக்கிறேன். இப்போ நாங்கள் கனிப்பொருட்கள் நிரம்பிய எண்ணை மற்றும் டவல் மூலமாக தானே எங்கள் தோலை சுத்த படுத்தி கொள்கிறோம்...

அந்த காலங்களில் பெண்கள் தலையில் அழகான கூந்தல் இருந்தது, இப்போ தண்ணீர் கொண்டு சுத்த படுத்த முடியாததால் தலையை வழித்து கொண்டு மொட்டை தலை கொண்டவர்களாக அல்லவா இருக்கின்றோம். அந்த நாட்களில் என் தந்தை அவரது காரை குழாய் நீரை கொண்டு கழுவுவது வழக்கம், இதை என் மகனிடம் சொன்னால் நம்ப மறுக்கிறான், "நீரை இப்படி எல்லாம் வீணாக்குவார்களா" என என்னிடம் கேட்கிறான்.


 
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது அந்த காலத்தில் "நீரை சேமிப்போம்" என சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என எராளமான இடங்களில் விளம்பர படுத்தப்பட்டு இருந்தது, ஆனால் அப்போது தண்ணீர் என்பது அழிய கூடிய ஒன்றாக நங்கள் நினைக்கவில்லை. இப்போ ஆறுகள், ஓடைகள், குளங்கள், வாவிகள், நிலத்தடி தண்ணீர் எல்லாமே வறண்டு போய் விட்டது அல்லது அழிக்க பட்டு விட்டது.

உற்பத்தி துறை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்து விட்டது, வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது, இப்போதெல்லாம் உப்பிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் தொழில் சாலைகள் தான் வேலை தரும் முக்கிய நிறுவனங்களாக இருக்கிறன்றன, இவற்றிலும் அதிகமானோர் தனது சம்பளத்தின் ஒரு பகுதியாக குடிக்கும் நீரையே பெற்று கொள்கின்றனர்.


துப்பாக்கி முனையில் தண்ணீரை பறித்து கொண்டு போவது இப்போதெல்லாம் ரொம்பவே சகஜமாகி போய் விட்டது, உணவு என்பது 80% செயற்கை முறையானதாகவே இருக்கின்றது, முன்னெல்லாம் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம் என கருதபட்டது, அனால் இப்போது எனக்கு 1/2 கிளாஸ் தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. நங்கள் இப்போதெல்லாம் பாவித்து வீசி எறியும் உடைகளையே பாவிக்கின்றோம், இது குப்பைகளை அதிகரித்து விட்டது.

 
குப்பை தொட்டிகள் போல் மலசலகூட கழிவுகளும் தொட்டிகளுக்கே போகும் மாதிரி தான் செய்து உள்ளோம், எனேன்றால் வேறு எந்த வகையிலயும் கழிவுகளை அகற்ற நீர் போதாமை என்கின்ற காரணத்தால் ஆகும்.

இப்போதைய மக்களின் வெளிப்புற தோற்றம் ரொம்பவே விகாரமடைந்து காணப்டுகின்றது, வயது போனவரை போன்ற தோற்றம், தோல் தடிப்படைதல், விகாரமான தோற்றம் என்பன மிகவுமே சாதரணமான விஷயங்களாகி போய் விட்டன, அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாகவே தோலை தாக்குவதால் தோல் புற்றுநோய் என்பது மிகவும் சாதாரணமாகி போய் விட்டது. சிறுநீரக பாதிப்பு தான் இன்றைய கால கட்டத்தில் மக்களின் இறப்புக்கான முக்கியமான காரணம் ஆகும்.

தோல் கலங்களின் இறப்பால் இருபது வயதானவர்கள் எல்லாம் நாற்பது வயதானவரை போல தென்படுகின்றனர். விஞ்ஞானிகள் எல்லாரும் இதற்கு வேறு வழிமுறைகளை கண்டறிய இரவு பகல் பாராமல் போராடுகின்றனர் ஆனாலும் என்ன செய்ய தண்ணீர் என்பது செயற்கையாக உருவாக்க முடியாத ஒரு பொருளாகவே இன்னும் இருக்கின்றது, ஒட்சிசன் கூட இப்போ ரொம்ப குறைந்து உள்ளது காரணம் மரங்கள் மற்றைய தாவரங்கள் ரொம்ப குறைவடைந்ததால் ஆகும், இதன் காரணமாக அடுத்து சந்ததி புத்தி வளர்ச்சி குறைவடைய எராளமான வாய்ப்புகள் உள்ளன.


 

மனிதனின் இயல்பு நிலை மாற்றம் அடைய தொடங்கி விட்டது, விகார நிலை அடைய தொடங்கி பிறக்கும் குழந்தைகள் எல்லாம் விகாரமாகி எதோ ஒரு குறையுடனும், அவயவங்களில் பிரச்சினைகளுடனும் பிறக்கின்றன.

அரசாங்கத்துக்கு நாங்கள் சுவாசிப்பதுக்கு வரி கட்டுகிறோம், ஒரு நாளைக்கு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்சிசனின் அளவு 137 m3 ஆகும். இந்த வரியை கட்டாதவர்களை அரசாங்கம் விசேட சுவாசிக்கும் பிரிவிலிருந்து வெளியேற்றி சாதாரண காற்றை சுவாசிக்கும் இடங்களுக்கு அனுப்புகின்றது, இங்கு மனிதனுக்கு சூரிய சக்தியில் மூலம் சுவாசிக்க காற்று வழங்க படுகிறது, இந்த பிரதேசத்தில் உள்ள காற்று மிகவும் தரமானதாக இல்லாவிட்டலும், உயிர் வாழ போதுமானதாக இருக்கும், மனிதனின் சராசரி ஆயுட்காலம் 35 வருடங்களாகும்.

இன்னும் மிக சில நாடுகளில் பசும் புல் வெளிகள் காடுகள் ஆறுகள் இருக்கின்றன அவை ஆயுதம் தரித்த ராணுவங்களால் பாதுகாக்க படுகின்றன. தண்ணீர் மிகவும் விலை உயர்ந்த பொருளாக மாறி விட்டது, இப்போதைக்கு தங்கம், வைரங்களை விட தண்ணீரே மிகவும் விலை உயர்ந்த பொருள் ஆகும். நான் வாழும் பிரதேசத்தில் எங்கயுமே ஒரு மரத்தை தானும் காண முடியாது, காரணம் இங்கு பெய்யும் அமில மழை.


 

இதற்கெல்லாம் காரணம் நங்கள் இயற்கையை பாதுகாக்காமல் விட்டதும் , அணு சக்தி பிரயோகமுமே ஆகும், எங்களை இயற்கையை பாதுகாக்க சொல்லி எராளமாக எச்சரிக்க பட்டோம், ஆனாலும் நங்கள் யாருமே அதை பற்றி சிந்திக்கவில்லை, என் மகன் என் காலத்தை பற்றி கேட்கும் போது பசும் புல் வெளிகள், மலர்களின் அழகு, மழை, நீச்சல், ஆறுகளிலும் குளங்களிலும் உள்ள மீன்கள் எவ்வளவு தேவையோ அவ்வளவு நீரை குடிக்கும் வசதி, மனிதர்கள் எவளவு சுக தேகியாக வாழ்ந்தார்கள் என எல்லாம் கூறினேன்

அடுத்து என்மகன் கேட்டான் "இப்போ ஏன் அப்படி தண்ணீர் இல்லை?" என, பதில் சொல்ல முடியாமல் என் தொண்டையிலுள்ள உள்ள தண்ணீர் வற்றி விட்டது, ...

காரணம் தண்ணீரை வீணாக்கி இயற்கையை அழித்து, இப்போதைய இந்த தண்ணீர் இல்லா காரணத்துக்கு மூலமான சந்ததியை சேர்ந்தவன் என்ற முறையில், பதில் சொல்ல வார்த்தை இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன். நாங்கள் செய்த தப்புக்கு எங்கள் பிள்ளைகள் பெரிய விலையை கொடுக்கிறார்கள். இப்போதைக்கு மனிதனின் வாழ் நாள் குறைந்ததுக்கு நானும் காரணம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும்.

--------------------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்
சே குவேராவின் பிரபலமான கடிதங்கள்....


 பெற்றோருக்கு எழுதிய கடிதம்.


   


என் அன்பிற்குரியவர்களே, 

கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது.


சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் விடை பெற்று, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருந்தி எழுதியிருந்ததை இபொழுது நினைவு கூர்கிறேன். இன்று, நான் அத்தனை மோசமான ஒரு படைவீரன் அல்ல.

எனது நம்பிக்கை மேலும் உறுதியடைந்துள்ளது. என்னுடைய மார்க்சியம் ஆழமானதாகவும் தூய்மையானதாகவும் மாறிவிட்டது. சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களுக்கு ஒரே வழி, ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையின்படி நடக்கிறேன்.

சிலர், என்னை ஒரு சாகசக்காரன் என்று அழைக்கலாம். நான், சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம். தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்து கொள்ளத் தயங்காத சாகசக்காரன்.

இதுவே என்னுடைய கடைசிக் கடிதமாகவும் இருக்கலாம். நடக்க இருப்பதை தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது. ஒரு வேளை அப்படி நடந்துவிடும் எனில், இப்போதே என்னுடைய தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நான் உங்கள் அனைவரையும் ஆழமாக நேசிக்கிறேன். என்னுடைய நேசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை.

என்னுடைய வழியில் நடப்பது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். ஆனால், பல சமயங்களில் நீங்கள் என்னைச் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு வேளை, என்னைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போதைக்கு என் மீது நம்பிக்கை வையுங்கள். அது போதும் எனக்கு.

எனது கால்கள் தொய்ந்துவிட்டன. நுரையீரல்கள் ஓய்ந்து விட்டன. ஆனால் என் மனஉறுதி, எல்லாவற்றையும் சரிசெய்யும்.

இருபதாம் நூற்றாண்டின் இந்தச் சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.

அன்பு தாய், தந்தையே! உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இந்தத் தறுதலைப் பிள்ளை உங்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறான். ஏற்றுக் கொள்ளுங்கள்.

- எர்னஸ்டோ -


 
 

மனைவிக்கு எழுதிய கடிதம்

பிரியமானவளே!

உன்னைப் பிரிந்து போவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய். 

தைரியத்தை இழந்து விடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன். 

காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்றுஎண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது. 

உன் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன். 

இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித்தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

- சே -
 

குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.


அன்புள்ள ஹில்டாஅலெய்டாகாமிலாசிலியாஎர்னஸ்டோ!

நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நான் உங்களுடன்இருக்க மாட்டேன்.

உங்களுக்கு என்னை அதிகம் நினைவிருக்காதுஉங்கள் தந்தைதனது நம்பிக்கைகளுக்கு நேர்மையாக இருப்பவன்தனதுதத்துவத்துக்கு விசுவாசமாக இருப்பவன்.

நீங்கள் அனைவரும் நல்ல புரட்சிக்காரர்களாக வளரவேண்டும்.நன்றாகப் படிக்க வேண்டும்தொழில்நுட்பத்தைப் பற்றி நன்றாகத்தெரிந்துகொள்ளவேண்டும்.

தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்லபுரட்சி ஒன்றே மிகமுக்கியமானதுஉலகத்தில் எங்கேனும் யாருக்காவதுகொடுமைகள் நடந்தால்அவர்களுக்காக வருத்தப்படுங்கள்.

குழந்தைகளேஉங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.மீண்டும் உங்களை காண்பேன் என்று நம்புகிறேன்.மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்


அன்புள்ள ஹில்டா,

இந்த கடிதத்தை நீ நீண்ட காலத்துக்குப் பிறகுதான் படிப்பாய். உன்னைப் பற்றித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ இப்போது வளர்ந்து விட்டிருப்பாய். ஒரு குழந்தைக்கு எழுதுவதைப் போல் செல்லம் கொஞ்சி எழுத முடியாது.

நான், உன்னை விட்டு வெகு தொலைவில், நமது எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான், உன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொள்வதைப் போல், நீயும் என்னை நினைத்து பெருமை படுவாய் என்பது என் நம்பிக்கை.

நீண்ட காலத்துக்குப் போராட வேண்டியிருக்கிறது. ஆகையால், நீயும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைத் தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறைய படி. அம்மா சொல் பேச்சைக் கேள்.

எல்லா விதத்திலும் சிறந்தவள் என்று பெயர் எடுக்க வேண்டும். நல்ல நடத்தை, அர்ப்பணிப்பு, தோழமை உணர்வு போன்றவற்றை வளர்த்துக் கொள். உன்னுடைய வயதில் நான் அப்படி இல்லை. நீ வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பொருத்தமானவளாக நீ இருக்க வேண்டும்.

பெரிய மனுஷியே! உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் பிரிந்திருக்கும் காலத்துக்கும் சேர்த்து வைத்து ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

                                                                                            -அப்பா -
------------------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்