Sunday, August 30, 2015

குற்ற உணவு...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்!

                                மரணத்தை எதிர்நோக்கிய பெரும்பசியுடன் காலியான மாட்டிறைச்சி டப்பாவை கையில் வைத்துக் கொண்டு கண்களில் பெரும் ஏக்கத்தோடு, தலை பெரிதாகவும், எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறான் இந்த ஆப்ரிக்க சிறுவன். தன் உடலின் எடையைக் கூட தாங்க சக்தியற்ற நிலையில் சூம்பிப் போய் கிடக்கும் தனது கால்களை பிடித்துக் கொண்டு நிற்கும் இச்சிறுவனின் புகைப்படம் நைஜீரியாவில் நடந்த  இனப்படுகொலையையும் வலிந்து உருவாக்கப்பட்ட உணவுப் பஞ்சத்தையும் உலகத்திற்கு அறிவித்தது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து நைஜீரியா 1960ஆம் ஆண்டு விடுதலை அடைந்தாலும், அந்நாட்டில் பல்வேறு இனக்குழுக்களுக்குள் நிலவிய அதிகாரப் போட்டி மற்றும் சண்டைகளால் அரசியல் மற்றும் சமூக நிச்சயமற்ற சூழல் நிலவியது.

குறிப்பாக வடக்கு பகுதிகளில் பெரும்பான்மையாக இருந்த இஸ்லாம் மதத்தை தழுவிய ஹவுசா மற்றும் ஃபுலானி (housa and Fulani) இனத்தினருக்கும், மிஷினரிகளால் கிறிஸ்துவர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டு தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த இக்போ (Igbo) இனத்தவர்களுக்கும் இடையே நிலவிய போட்டி சண்டைகளில் இரண்டு முறை ராணுவ புரட்சி நிகழ்ந்தது. 1966ஆம் ஆண்டு நடந்த இந்த புரட்சியில் முப்பதாயிரம் இக்போ இனத்தினர் உயிரிழந்தனர்.

இனவேறுபாடுகளாலும், மத வேறுபாடுகளாலும் வடக்கு நைஜீராவிடமிருந்து பிளவுபட்டிருந்தனர் இக்போ இனத்தினர். அதனால் இவர்கள் இனத்தை சார்ந்த பெரும் வியாபாரி ஒருவரின் மகனான  ஜெனரல் ஒடுமெக்குவு ஒஜுக்குவு (General C. Odumegwu Ojukwu) தலைமையில் ஒன்று திரண்டு ஒருங்கிணைந்த நைஜீரியாவில் இருந்து விலகியதோடு, தாங்கள் பெரும்பான்மையாக இருந்த தென்புலத்தில் பியாஃப்ரா குடியரசு (Republic of Biafra) எனும் தனி நாட்டை 1967 மே 30ல் ஏற்படுத்தினர். இக்போ இனம் பிரதானமாக உள்ள பியாஃப்ராவை தனி நாடாக காபான், ஹைத்தி, ஐவரிகோஸ்ட், தான்சான்யா, ஸாம்பியா (Gabon, Haiti, Ivory Coast, Tanzania and Zambia)ஆகிய ஐந்து ஆப்பிரிக்க நாடுகள் அங்கீகரித்தன என்றாலும் வளர்ந்த நாடுகளில் ஃபிரான்ஸ் தேசம் மட்டுமே ஆதரித்தது. அதேசமயம் பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் வடக்கு நைஜீரிய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.

எண்ணெய் வளம் மிகுந்த தெற்கு பகுதி பியாஃப்ரா குடியரசாக  பிரிந்ததை தொடர்ந்து வடக்கு நைஜீரியாவுக்கும், பியாஃப்ரா குடியரசுக்கும் இடையே 1967 ஆம் ஆண்டில் நைஜீரிய சிவில் போர் எனும் உள்நாட்டு போர் உருவாகியது. போர் தொடங்கிய முதல் வருடத்திலேயே பலம் பொருந்திய வடக்கு நைஜீரிய ராணுவம் பியாஃப்ராவின் அனைத்து எல்லைகளையும் சுற்றி வளைத்துவிட்டது. பின்னர் கடலோரங்களில் உள்ள எண்ணெய் வளம் பொருந்திய இடங்களையும் ஹார்கோர்ட் (Harcourt) துறைமுகத்தையும் கைப்பற்றிய பின் பியாஃப்ராவின் எல்லைகளை முற்றிலுமாக அடைத்தது. அப்படி அடைத்ததன் மூலம் பியாஃப்ராவில் கடும் உணவுத் தட்டுப்பாடும், பஞ்சமும் ஏற்பட்டது. தமது போர்த் தந்திரமாகக் கருதி வடக்கு நைஜீரியா செய்த இந்த செயலினால் அடுத்த இரண்டரை வருடங்களில் அங்கு வாழ்ந்த சுமார் 20 லட்சம் இக்போ இனத்தினர் பட்டினியால் உயிரிழந்தனர். இந்தப் படுபாதகச் செயலை மற்ற நாடுகளிடம் இருந்து மறைக்க வடக்கு நைஜீரியா செஞ்சிலுவை சங்கத்தின் உதவி உட்பட அனைத்து சர்வதேச உதவிகளும் பியாஃப்ராவிற்கு கிடைக்காமல் தடுத்தது.

நைஜீரியா எடுத்த இந்த நிலைப்பாட்டினால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும், அங்கு நடந்த போர் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இதில் வேதனை தரும் விஷயம் எது என்றால் ஒட்டுமொத்த உலக நாடுகளில் இருந்தும் பியாஃப்ரா முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் எந்த பத்திரிகைகளிலும் போர் பற்றியோ பஞ்சத்தைப் பற்றியோ சிறு செய்தி கூட வரவில்லை. இந்நிலையில் 1969ஆம் ஆண்டு (Sunday Times Magazine) சண்டே டைம்ஸ் பத்திரிகையில் உலகம் முழுவதும் உள்ள சூழலியல் அழிவுகள் மற்றும் போர் அழிவுகள் பற்றிய புகைப்படங்கள் எடுக்கும் பணியில்  ஈடுபட்டிருந்த டான் மெக்கலின் (Don McCullin) எனும் புகைப்படக் கலைஞர் பியாஃப்ரவில் நிகழும் போர் பற்றி அறிந்து அங்கு சென்றிருந்தார். அப்போது போர் மற்றும் பஞ்சத்தால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்க ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கூடாரம் ஒன்றில் நிறமிக்கேடு நோயினால் தன் தோல் நிறம் வெளிறி போன இச்சிறுவனையும், இவனைப் போல அனாதை ஆக்கப்பட்ட மற்ற இக்போ இன சிறுவர்களையும் கண்டார்.
1964 முதல் 1984 வரை சைப்ரஸ், காங்கோ, பியாஃப்ரா, வியட்னாம், கம்போடியா, வங்கதேசம் மத்திய கிழக்கு எல் சால்வடார் போன்ற போர் நிகழ்ந்த நாடுகளுக்கு நேரில் சென்று போர் அழிவுகளை பதிவு செய்த  டான் மெக்லின், இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட சூழல் பற்றி நினைவு கூறுகையில், "அந்த கூடாரத்தில் நுழைந்தவுடன் அந்த நிறமிக்கேடு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனை கண்டேன். பசியினால் பீடிக்கப்பட்ட அச்சிறுவன் விவரிக்கவே முடியாத அளவிற்கு கொடுமையான நிலையில்இருந்தான். மரணத்தை எந்த நேரமும் எதிர் நோக்கி இருந்த நிறமிக்கேடினால் வெளிறிய தோல் கொண்ட அச்சிறுவன் அவனை சூழ்ந்திருந்த ஏனைய கறுப்பின அனாதை குழந்தைகளால் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டு அவர்களால் விலக்கி வைக்கப்பட்ட கொடுமைக்கு ஆளாகியிருந்தான் அச்சிறுவன். அவனது நிலை குத்திய பார்வை என்னில் குற்றவுணர்ச்சியையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி அலைக்கழித்தது. அவன் என்னை நோக்கி நெருங்கினான். அவன் நெருங்க நெருங்க பெரும் சஞ்சலத்தில் ஆழ்ந்தேன்.  பட்டினியாலும், நிராகரிப்பாலும் தாக்கப்பட்ட அந்த எளிய அப்பாவி சிறுவர்களை பார்த்து நொந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர்  இந்த பெரும் அவலத்தையும், அதன் கோர விளைவுகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் கூறிக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் எனது தாய்நாடான பிரிட்டனில் அதே வயதையொற்றிய சிறுவர்கள் உணவைப்பற்றி கவலைப்படாமல் அந்த வயதுக்கே உரிய சந்தோஷத்துடன் இருப்பது நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு எண்ணங்களும் என்னை மனதளவில் துன்புறுத்தி கொண்டிருந்த போது என்னை யாரொவொருவர் தொட்டதை போல உணர்ந்தேன். அந்த கைகள் என்னை நோக்கி நெருங்கி வந்து என் கைகளை பற்றிய அல்பினோ சிறுவனது கைகள் தான் என்று கண்டபோது என் கண்களில் அழுகை வர முயற்சித்தது. இக்குழந்தைகள் முன் அழக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு இச்சிந்தனையில் இருந்து விலகி வேறு எதையாவது யோசிக்க முயற்சி செய்து தோற்றுப் போனேன். அச்சிறுவன் கொஞ்சம் கூட ஒரு சராசரி மனிதன் போல இல்லாமல் எப்படியோ உயிர்பிழைத்து இருக்கும் ஒரு சிறிய எலும்புக்கூடு போலவே காட்சியளித்தது என் மூளை மடிப்புகளில் ஆழமாக பதிந்து விட்டது. என்னால் ஏதாவது செய்ய முடியுமானால் என் வாழ்வின் அந்த கருப்பு நாளை பற்றிய நினைவுகளை தகர்த்தெறியவே விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டான் மெக்லினால் எடுக்கப்பட்ட இச்சிறுவனின் புகைப்படம் ஜெர்மனியின் யூத இனப்படுகொலையினை (Holocaust) நினைவூட்டி, பார்த்தவர்களது மன சாட்சியை உலுக்கியது.

பிரிட்டிஷ் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இப்படம் வெளியானதற்கு பின்னர் அது நாள் வரை உலகத்தின் பார்வைக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நைஜீரிய போர் மக்கள் மத்தியில் பொது விவாதமாக உருவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்போ இன மக்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி அந்த காலக்கட்டத்தில் அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் அரசாங்கங்களுக்கு தினசரி அனுப்பபட்ட இருபத்தி ஐந்தாயிரம் கடிதங்களே இப்புகைப்படத்தால் தட்டி எழுப்பப்பட்ட மானுட அறவுணர்ச்சியின் சாட்சியாக விளங்குகிறது. டான் மெக்லினின் பியாஃப்ரா போர் புகைப்பட தொகுப்பு வெளியான  பின்னர் ஐநா சபை வான் மூலமாக தென் நைஜீரியாவில் உணவுப் பொருள் வழங்கத்  தொடங்கியது. மேலும் பல போர் சூழல்களில் சிறப்பான பணியாற்றிய 1999ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எல்லைகள் கடந்த மருத்துவம் (Doctors Without Borders-Médecins Sans Frontières ) எனும் சர்வதேச அமைப்பு தொடங்கவும் இப்புகைப்படமே நிமித்த காரணமாக விளங்கியது.

ஆப்பிரிக்காவை மையமாக வைத்து போட்ஸ்வானா (Botswana), ஸாம்பியா (Zambia) மற்றும் தென் ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோய் ஏற்படுத்திய கோர தாக்குதல் பற்றியும், எத்தியொப்பாவின் (Ethiopa) தொலைந்த இனக்குழுக்கள் பற்றியும் மேலும் 2007ல் டார்ஃபூரில் (Darfur) நிகழ்ந்த இனப்படுகொலையால் அகதியாக்கப்பட்டவர்களை பற்றியும் டான் மெக்லின் தனது புகைப்பட கட்டுரைகள் மூலம் உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதுபோன்ற புகைப்படங்களை எடுத்த பின்னர் ஒவ்வொரு முறையும் உணவில் கை வைக்கும்போதும் குற்ற உணர்வு மேலிடுவதாக கூறும் டான் மெக்லினுக்கு, வாழ்நாள் சாதனைக்கான நியூயார்க்கின் புகைப்படக்கலையின் சர்வதேச மையத்தால் (International Center for Photography) 2006ஆம் ஆண்டு கார்னல் கப்பா விருது (Cornell Capa Award ) வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
- புகைப்படம் பேசும்

-ஜெ.முருகன்

நன்றி: http://www.vikatan.com/