Wednesday, September 25, 2013

தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவனிங்க!!!


              பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும்,  பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு. 
பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:
மூளை:
            மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.  
குடல்:
            குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.  
மார்பகம்:
            பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.  
சிறுநீர்ப்பை:
             இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.   
நுரையீரல்:
             20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான். 
குரல்:
            தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும்.  65 வயதுக்கு பலவீனமாகி, குரல்  ‘கரகர’ தான்.  
கண்:
             பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.  

இருதயம்:
             ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால்,  மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும்  குறைகிறது.  
கல்லீரல்:
           இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது.  குவாட்டரை நினைக்காதவரை  இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.  
சிறுநீரகம்:
            ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.  

எலும்புகள்:
            25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.  
பற்கள்:
            எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான்  சிலரிடம் கப்ஸ்.  

தசைகள்:
            முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.  

தோல்:
            தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.  

தலைமுடி:
           முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்;  வெள்ளை முடி தோன்றும்.

~~~~~~~~~~
தமிழ்வாசி பிரகாஷ்

குறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா?
         ஏதாவது ஒரு கடவுளின் பெயரைப் போட்டு, அந்தக் கடவுளுக்கான மந்திரங்களையும் குறிப்பிட்டு வரும் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பி வைத்தால் 24 மணி நேரத்தில்  நல்ல காரியம் கிட்டும். "அசட்டையாக இருந்து அழித்துவிட்டாலோ, அனுப்பாமல் விட்டாலோ அவ்வளவுதான். சோதனை தொடங்கிவிடும்'.  ஒரு காலத்தில் துண்டுப்பிரசுரமாக வந்த இந்தச் செய்தி, இப்போது நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப "நன்கு வளர்ந்து' செல்போன்களில் குறுஞ்செய்திகளாக வரத் தொடங்கியிருக்கின்றன.       

               ஏதாவதொரு சாமியாரின் பெயரைப் போட்டு, "இத்தோடு உங்களின் கஷ்டகாலம் நீங்கியது, இவர் உங்களை ரட்சிப்பார். இந்தச் செய்தியை 20 பேருக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த 30 நிமிஷங்களில் நல்லது நடக்கும், நம்புங்கள்' இதுவும் ஒரு வகை.    பள்ளி, கல்லூரித் தேர்வுக் காலங்களில் "சீசன்ஸ் கிரீட்டிங்ஸ்' போலவே ஒரு குறுஞ்செய்தி உண்டு. ஏதாவதொரு கடவுளின் பெயருடன் "ஐ லவ் யு' சேர்த்து, "இந்தக் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பிவைத்தால் பரீட்சையில் தேர்வாகிவிடலாம்'.  பயந்து போய் தன்னிடமுள்ள அத்தனை எண்களுக்கும் இவற்றை அனுப்பிவைக்கும் பரிதாபமான மாணவ, மாணவிகள் ஏராளம். படிக்கிற நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்பி அவர்களிடமிருந்து பதில், வசவு எல்லாவற்றையும் வாங்கிக் கட்டிக் கொண்டு தேர்வு எழுதும் அறைக்குச் சென்றால்...?  

             அடுத்து அறிவியல்பூர்வமான அச்சுறுத்தல் (!) "சில செல்போன் எண்களைக் குறிப்பிட்டு அவற்றிலிருந்து வரும் அழைப்புகளை சட்டை செய்யாதீர்கள். அவற்றை எடுத்துப் பேசினால், வைரஸ் உங்களின் செல்போன்களுக்குள் புகுந்து, செயலிழக்கச் செய்துவிடும்' என்ற குறுஞ்செய்தி பலரையும் அச்சுறுத்தியது.  அந்தக் குறுஞ்செய்தியில், பலருக்கும் இதை அனுப்பி வையுங்கள். யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற "அக்கறை' வேறு. அந்தச் செய்தியிலிருந்த எந்தவொரு எண்ணும் செயல்படாத எண் என்பது தொடர்பு கொண்டு பார்த்தால்தான் தெரியும். வைரஸ் பயம் காரணமாக எவரும் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுவதில்லை.  "அறிவியல்' என்றவுடன் சுலபமாக நம்பி விடுகின்றனர். ஏனென்றால், நம்மில் கணினி வைத்திருப்பவர்களுக்கு "சாஃப்ட்வேர் வைரஸ்', "ஹார்டுவேர் வைரஸ்' ஏற்கெனவே அறிமுகம். 

             இன்னும் சில குறுஞ்செய்திகள், "இரவு 11 மணி முதல் 12 மணி வரை விண்ணிலிருந்து செல்போன்களைத் தாக்கும் கதிர்கள் இறங்குகின்றன. அந்த நேரத்தில் செல்போன்களை அணைத்து வையுங்கள். மறக்காமல் (யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்) நண்பர்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பிவையுங்கள்' என்கிறது.  இதுபோன்ற குறுஞ்செய்திகள் இன்னும் வலுவைச் சேர்த்துக் கொள்வதற்காக ஏதாவது ஒரு பிரபல ஆங்கில நாளிதழையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன. "மேலும் விவரங்களுக்கு நேற்றைய நாளிதழைப் பாருங்கள்- நாசா அறிவித்திருக்கிறது'. சம்பந்தப்பட்ட நாளிதழில் பணியாற்றுவோருக்கே இந்த குறுஞ்செய்திகள் செல்லும்போது அவர்களுக்கும் பேரதிர்ச்சி.

                இன்னொன்று, ஏதாவதொரு வலைப்பூவின் முகவரியைப் போட்டு வரும் குறுஞ்செய்திகள். "அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த வலைப்பூவின் உரிமையாளர் உங்களின் செல்போனுக்கு ரூ. 72.81 பைசா "டாப் அப்' செய்வார். அடுத்த இரு நிமிஷங்கள் கழித்து கணக்கிலுள்ள மீதித் தொகையைச் சரிபாருங்கள்'. சரிபார்த்தால் என்ன இருக்கும்? எதுவும் இருக்காது. இதுவரை இருந்த தொகையும் குறுஞ்செய்தி அனுப்பிய வகையில் கழிந்து காலியாகியிருக்கும். 

              எங்கிருந்து இவை வருகின்றன என்பதை அத்தனை சுலபமாகக் கண்டறிந்து நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால், நமக்கு வரும் செய்தி கட்டாயம் நமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களாலேயே அனுப்பி வைக்கப்படுகிறது. அதிகபட்சம் அவர்களைக் கடிந்து கொள்ளத்தான் முடியும். அவர்களுக்கும் கிட்டத்தட்ட நண்பர்கள்தான் அனுப்பிவைக்கின்றனர். இப்படியே விசாரித்து, விசாரித்துச் சென்றாலும் அனுமார் வாலைப் போல நீள்கிறது விசாரணை.  ஒரு கட்டத்தில் விசாரணை துண்டித்துப் போய்விடும். ஏனென்றால், பெரும்பாலானவர்கள் வந்த குறுஞ்செய்தியை சேமித்து வைத்திருப்பதில்லை. ஏதாவதொரு செல்போனில் அது வந்த வழி அழிந்து போயிருக்கும்.  வியாபார நோக்கில் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களே இதுபோன்ற குறுஞ்செய்திகளைப் பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டையும் உறுதி செய்ய முடியவில்லை. 

               மக்களின் நம்பிக்கை, மூடநம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாவற்றையும் பயன்படுத்தி செய்யப்படும் இதுவும் ஒருவகையில் மோசடிதான்.   ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நமக்கு வரும் செய்திகளை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு அனுப்பிவைப்பது அபத்தம் மட்டுமல்ல, அநாகரிகமும்கூட. பெரும்பாலான இளைஞர்கள் பொழுதுபோக்காகவே இதைச் செய்கின்றனர்.  அடுத்து பரிதாபப்படுபவர்களுக்காக. குறுஞ்செய்தியின் தொடக்கமே, "அசட்டையாக இருந்து அழித்துவிடாதீர்கள்' என்பதுதான். 

        "இருதய அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதுக் குழந்தைக்கு மருத்துவச் செலவுக்காக நிதி தேவைப்படுகிறது. இந்தக் குறுஞ்செய்தியை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தால் போதும். அதன்மூலம் தலா பத்து பைசா பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குச் சென்றடையும்'.÷இப்படி எத்தனை பத்து பைசாக்கள் சேரும்? திட்டமிட்டு செய்யப்படும் இந்த வியாபார உத்தியை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்.  

             அடுத்து பாசத்துக்காக... "ஐ லவ் மை மம்மி'. இதை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தால் அம்மா - மகள் உறவு, அம்மா - மகன் உறவு செழிக்குமாம். குறுஞ்செய்தி அனுப்பினால் இந்த உறவுகள் செழிக்குமா என்ன? 

~~~~~~~~~~~~
தமிழ்வாசி பிரகாஷ்

காதல் - அது எப்படிப்பட்டது...

காதல் மிகவும் மென்மையானது இரு மனங்கள் மட்டுமே புரிந்துக் கொள்ளக்கூடிய ரகசிய வார்த்தைகளின் தொகுப்பு, அன்பு தீபங்களின் ஒளி வெள்ளத்தில் மூழ்கும் இரு உள்ளங்களின் துடிப்பை விவரிக்க எத்தனை கவிஞர்கள் வந்தாலும் ஈடாகாது.


விழி பேச, இதயம் கேட்க அப்பப்பா.... அந்ந ஓசையின் தாக்கம் அந்தக் 
காதலர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு மனித்துளியும் ஆனந்த ரீங்காரமிட்டுக் 
கொண்டேயிருக்கும்.

மனதில் காதல் அரும்பிய அந்த நாட்களில் உலகமே பூப்பூக்கிறது. ஒவ்வொரு நாள் 
விடியலிலும் அவளின் முகம் நூறு சூரியன்களை ஒத்திருப்பதை போலதொர உணர்வு. 
அவளின் கடைக்கன் பார்வையில், இவன் உள்ளம் வானத்தை முட்டி, அதையும் தாண்டி 
மேலே பறக்கத் தொடங்கியிருக்கும்.

முதன்முதலாக அருகருகே நடக்கத் தொடங்கும்போது சிறு அச்ச உணர்வுடன் 
தொடர்வது இனிமையிலும் இனிமை. வர்ணனையைத் தாண்டிய மெல்லிய உணர்வு அது.


இனி வரும் இரவுகளிலெல்லாம் அவள் மட்டும்தான் துணை. தூக்கத்தை மறந்து, அவள் 
நினைவுகளில் மூழ்கிய இரவுகள் தீயிலிட்டதைப்போன்று மிகவும் வெப்பமானது.
தனக்கெனவே துடிக்கும் இதயம் ;தன் வெளிக்காற்றை உள்காற்றாக ஏற்கும் நுரையீரல்.
இப்படி உலகமே அவளாக அவள் மட்டுமாக காட்சியளிக்கத் தொடங்குகிறது. உயிர்த்துடிப்பின் ஜீவ ஆதாரமான அவளுடனான வாழ்க்கையை காதல் அவனுக்குள் அவனையறியாமலேயே புகுத்தி விடுகின்றது. இனி அவளைப் பிரிப்பதும் அவனைக் கொல்வதும் ஒன்றாகி விடுகின்றது.
மெல்லத்தொடரும் இந்த நாட்கள் மகிழ்ச்சி ஆரவாரமிக்க நாட்களாகி விடுகின்றது.
முதல் ஸ்பரிசம் பேரானந்தத்திற்கு வழி கோலுகிறது. அவளைப்பற்றியதான எண்ணங்கள் மேலும் தீவிரமடைகின்றன. இருவருக்குமிடையேயான உறவு வலுப்பெறத் தொடங்குகிறது. தலைவனும், தலைவியும் உலகைப் புதிதாக காணத் தொடங்குகிறார்கள். எங்கும் ஆனந்த பூக்கோலம், மகிழ்ச்சி வெள்ளம், சுற்றியும ஆயிரம் பேர் இருந்தாலும் இவர்கள் இருவர் மட்டும் தனித்தே இருப்பதாக ஒரு உணர்வு கற்பனையில் கண்ட காட்சிகளை நிஜத்திலும் கண்டிட துடிக்கும் இரு இதயங்களின் ஓசை, அவர்கள் மட்டுமே அறிக்கூடியது. வார்த்தைகளால் விவரிக்க இயலாதது ஆதலின் வாழ்க்கையை ஆனந்தப் பூங்காவாக்கீட அனைவரும் காதல் செய்வீர்!


~~~~~~~~~~~~~~~~~~

ரூபன்