Thursday, August 27, 2015

'கர்ஃப்யூட் நைட்’ - பஷரத் பீர்!

                               

-ந.வினோத்குமார்
A bloodstained label
Stuck to his lapel
Reads: In...
Does it mean 'Indian, Informer, Intruder, Insurgent?'
It bewilders to make it read 'Innocuous Innocent.'
சொந்த ஊர், சொந்த மண் என்பது அங்கே இருக்கும் உங்கள் வீடு மட்டுமானது அல்ல. அல்லது அந்த ஊரில் உங்களுக்கு இருக்கும் நிலங்கள், சொத்துக்கள் என்பவையும் அல்ல. அங்கே குடியிருக்கும் உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. காலம் காலமாக அந்த மண் சந்தித்து வரும் மாற்றங்கள், இழந்து வரும் புராதனங்கள், எதிர்கொள்ளும் துயரங்கள், அமிழ்த்தி வைக்கப்பட்ட சோகங்கள்... இவைகளினூடே இருக்கும் ஒடுக்கப்படல் நிகழ்வுகளும், விடுதலைக்கான கனவுகளுமாகச் சேர்ந்து புவிப்பரப்பில் தனக்கான எல்லைகளை வரைந்து கொண்டு மதம், இனம், கலாச்சாரம் போன்ற உங்களுக்கான அடையாளங்களைத் தருவதுதான் சொந்த ஊர் என்பது. 'இந்த ஊரில் இருந்து வருகிறேன்’ என்று நீங்கள் சொன்னால் அது உங்கள் வீட்டு முகவரியைக் குறித்ததானது அல்ல. நீங்கள் வாழும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்பதுதான் பொருள்.

அவ்வாறாக ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன் சமூகத்தில், தன் சொந்த ஊரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி, நமக்கு ஒரு வாழ்வனுபவத்தை அறிமுகப்படுத்துகிறார் பஷரத் பீர். அவரின் சொந்த ஊர்... காஷ்மீர். தன் ஊரைப் பற்றி அவர் சொல்வதற்குத் தேர்வு செய்துகொண்ட தளம் எழுத்து. அந்த எழுத்தில் உருவான அற்புதமான படைப்புதான் 'கர்ஃப்யூட் நைட்’ எனப்படும் இந்தப் புத்தகம்!

'வெள்ளைப் பனி மழை பொழிகிற அழகான ஊர்... ரோஜாக்களும், ஆப்பிள்களும் நிறைந்திருக்கிற அற்புதமான ஊர்...’ என்பன போன்ற எந்த அலங்கார வார்த்தைகளையும் பயன்படுத்தாமல்... 'காஷ்மீரின் ஒரு குளிர்காலத்தில் நான் பிறந்தேன்...’ என்று மிக எளிமையாக ஆரம்பிக்கிறபோதே நமக்குத் தெரிந்துவிடுகிறது... அடுத்து வரும் பக்கங்களில் எல்லாம் உண்மை பொதிந்து ஓர் ஆவணத்திற்கு உண்டான குணாதிசியங்களோடு இருக்கப் போகிறது புத்தகம் என்பது! உண்மை எப்போதும் தன்னை எளிமையாகத்தான் வெளிப்படுத்திக் கொள்கிறது. இல்லையா..?

‘LoC (Line of Control)'!  இதுதான் புத்தகத்தின் அடிநாதம். நம்மைப் பொறுத்தவரை இன்றும் கூட காஷ்மீர் என்பதை வெறும் சுற்றுலா தலமாகவும், சினிமா டூயட் ஷூட்டிங்கிற்கான லொகேஷனாகவும்தான் நமக்குள் படிந்திருக்கிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் ஊடுறுவல் நுழைவாயிலாக அது நமக்குக் காட்டப்படுகிறது. உண்மையில் காஷ்மீரின் வரலாறு ரத்தமும், ஆயுதங்களும், மரண ஓலமும் கலந்த ஒன்று. சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் முயற்சியால் சமஸ்தானங்கள் எல்லாம் ஒன்றிணைந்தன. ஆனால் காஷ்மீர் யோசித்தது. காரணம், அங்கே ஆட்சி செய்வது இந்து மன்னன் ஹரி சிங் ஆக இருந்தாலும், அங்கே இருந்த பெரும்பாண்மை மக்கள் இஸ்லாமியச் சகோதரர்கள். 1947-ல் இந்தியாவில் இருந்து ஜின்னா பாகிஸ்தானைப் பிரிக்கிறார். அப்போது காஷ்மீர் எங்களுக்கு வேண்டும் என்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். ஆனால் காஷ்மீரில் இருந்த மக்களோ இந்தியாவுடன்தான் இணைவோம் என்றார்கள். காஷ்மீரில் இருந்த இஸ்லாமியர்கள் ஷேக் முகமது அப்துல்லா என்பவரின் கீழ் அணி திரள்கிறார்கள். அவரும் இந்தியாவுடன் இணைய, மகாராஜா ஹரி சிங்கிற்கு ஒத்துழைப்புத் தருகிறார். காஷ்மீர் இந்தியாவில் இணைகிறது. ஆனால் அதற்குப் பிறகு பாகிஸ்தான் அவ்வப்போது காஷ்மீரின் மீது உரிமை கொண்டாடுவது தொடர, 1949-ல் ஐ.நா. மக்கள் வாக்கெடுப்பு (plebiscite) ஒன்றை நிகழ்த்துகிறது. அதன் அடிப்படையில் LoC  ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. ஆயிரம்தான் ஐ.நா.வே தலையிட்ட பிறகும், தன் வால்தனத்தை பாகிஸ்தான் விடுவதாக இல்லை. காஷ்மீர் இளைஞர்களை 'எல்.ஓ.சி.’ வழியாக வரவழைத்து அவர்களுக்குத் தீவிரவாத பயிற்சி அளித்து, மீண்டும் காஷ்மீருக்குள் ஊடுருவ விடுகிறது பாகிஸ்தான். இதற்கு 'ஹிஸ்புல் முஜாஹிதீன்’ போன்ற தீவிரவாத அமைப்புகளும் உதவி புரிகின்றன. இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு மாற்றாக ''Jammu and Kashmir Liberation Front (JKLF)', எனினும், இந்த அமைப்புகளுக்கு இடையே Insurgent Vs Counter-Insurgent'  எனும் வகையில் மோதல் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னையைக் கருவாக எடுத்துக் கொண்டது அதன் பின்னணியில் தன் வாழ்வனுபவத்தைச் சொல்லிச் செல்கிறார் பஷரத். 'ரெடிஃப்’, 'தெஹல்கா’ போன்ற ஊடகங்களில் பத்திரிகையாளராக இருந்தவர் பஷரத் பீர். இணையப் பத்திரிகையில் பணியில் இருந்த போது காஷ்மீர் பகுதிக்கான செய்தியாளராக டெல்லியில் இருந்து பணியாற்றியவர் இவர். அப்போது காஷ்மீர் பற்றி எழுத வேண்டும் என்று அவருக்கு எண்ணம் தோன்றுகிறது. அதனால் தன் பணியை விட்டுவிலகி தன் ஊரான ஆனந்த்நாகிற்குத் திரும்பிச் செல்கிறார். காஷ்மீர், ஸ்ரீநகர், சோஃபியன் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று 'எல்.ஓ.சி.’ தாண்டி தீவிரவாதப் பயிற்சிக்குச் சென்ற இளைஞர்கள், மத அடிப்படைவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள், இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கதைகளைத் தொகுக்கிறார். மீண்டும் அவர் பத்திரிகையாளராக, 'தெஹல்கா’வில் சேர்ந்த பிறகு இந்தப் புத்தகம் தோற்றம் கொள்கிறது.

தன் இளவயது வாழ்க்கை, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தல்... என்று இரண்டு பகுதியாக நம்மால் இந்தப் புத்தகத்தைப் பிரிக்க இயலும். ஆனால் அப்படி ஒரு பிரிவு இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தாத வகையில் சம்பவங்களைக் கோர்த்திருக்கிறார் பஷரத். எந்த ஓர் இடத்திலும், எந்த ஒரு சம்பவமும் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 'ஏ.கே.47-ஐ தீவிரவாதப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் 'கலாஷ்னிகோவ்’ என்று சொல்வது, டெல்லியில் தன்னை ஒருவர் காஷ்மீர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் அவர் பெறுகிற புறக்கணிப்பைச் சொல்வது, காஷ்மீரின் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்குச் செல்லும் போது அங்கே வைப்பட்டிருக்கிற செக் போஸ்ட்டில் உடல் தடவி சோதனை செய்வார்கள். அதுவே பழக்கமாக, ஒவ்வொரு முறை தன் வீட்டிற்குள் நுழையும் போதும் வீட்டு நுழைவாயிலில் கைகளைத் தூக்கி நிற்கிறார் ஒருவர். அதை ஒருவித புது நோய் என்று சொல்லி யாராவது அவரை 'செக்’ செய்தால்தான் வீட்டிற்குள் அவர் நுழைவார் என்று சொல்லும் நிகழ்வு என ஏகப்பட்ட டீட்டெய்ல்!

நமக்கு ஏதோ காஷ்மீர் என்பது ஹரி சிங் எனும் மன்னரால் ஆட்சி செலுத்தப்பட்ட ஒரு சமஸ்தானமாகத்தான் நமது பள்ளி வரலாற்று நூல்கள் சொல்லி இருக்கின்றன. உண்மையில், 16-ம் நூற்றாண்டில் தன் சுயத்தை முகலாயர்களிடத்தில் இழந்தது காஷ்மீர். பிறகு 18-ம் நூற்றாண்டில் ஆப்கன் அரசன் அஹமத் ஷா அப்தாலியிடம் வருகிறது. அதன் பிறகு 19-ம் நூற்றாண்டில் ரஞ்சித் சிங் எனும் சீக்கியரிடத்தில் வருகிறது. இறுதியாக 1846-ல் ஆங்கிலேயரிடத்திற்கு வருகிறது. சில சமரசங்கள், ஏமாற்றுதல்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிடமே சேர்கிறது எனும் வரலாற்றை இந்தப் புத்தகத்தின் வழியே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

காஷ்மீரைப் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவர்கள் வந்தார்கள், இவர்கள் வந்தார்கள் என்று பழங்கதைகளைப் பேசாமல், கிலானியின் வழக்கு, நாடாளுமன்றத் தாக்குதல் போன்ற 'கன்டெம்பொரரி’யான நிகழ்வுகளையும் இணைத்து எழுதி இருப்பதால், இந்தப் புத்தகத்தின் உண்மைத்தன்மை படிக்கப் படிக்க உயருகிறது.

1990-க்கு முன்பு வரை காஷ்மீர் பகுதி இஸ்லாமியர்கள் திருமணச் சடங்குகளை இரவிலும் தொடர்ந்திருந்தார்கள். ஆனால் அந்த வருடத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், இரவு நடக்க இருந்த மணமகள் வீட்டுப் புறப்பாடு நிகழ்ச்சி எனும் சடங்கின் போது அந்தப் பயணத்தில் இந்திய ராணுவம் மணப்பெண்ணைக் கற்பழிக்கிறது. இது நடந்து சுமார் பதினைந்து வருடங்களுக்குப்  பிறகு அந்தத் தம்பதியினரைச் சந்திக்கிறார் பஷரத். அவர்கள் மட்டுமல்ல... ஊரடங்கு இரவுகளின் போது ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டிச் சோதனை செய்து, விசாரணை என்று கொண்டு சென்ற தம் மக்களைக் காணாமல் போகச் செய்த இந்திய ராணுவத்தை எதிர்த்து தன்னைப் போன்று மக்களைத் தொலைத்தவர்களுக்காக இந்திய ராணுவத்தால் 'காணாமல் போனவர்களின் பெற்றோர் கூட்டமைப்பு’ எனும்  அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப் போராடி வரும் ப்ரவீணா அஹாங்கர், இந்திய ராணுவத்தின் விசாரணை என்ற பெயரில் நடைபெற்ற கொடூரங்களில் தங்களின் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, அதனால் உயிரணுக்களை இழந்து திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நண்பர்களின் உறவுகள், இந்தப் பிரச்னைகளால் இடப்பெயர்வுக்கு உள்ளான 'பண்டிட்’ குடும்பங்கள்... அப்படி ஒரு குடும்பத்தில் இருக்கும் தன் ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கச் செல்கையில் அந்த ஆசிரியர் தான் எழுதிய 'எடர்னல் சின்’ எனும் கவிதைப் புத்தகத்தை பஷரத்துக்குப் பரிசளிக்கிறார். அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு கவிதைதான் மேலே நீங்கள் கண்டது!

இப்படிப் பல நிகழ்வுகளைச் சொல்லி, இறுதியில் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே காஷ்மீரில் இருந்து பேருந்து சேவை விடப்படுகிறது. 'எல்.ஓ.சி.’யைத் தாண்டி இருபக்க மக்கள் தங்களின் உறவுகளைச் சந்திக்கிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம் ஒருவரின் சுயசரிதை அல்ல. இது ஒரு நரேட்டிவ் ஜர்னலிஸம்! நினைவலைகள்.... ரிப்போர்டேஜ் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எப்படிச் சொன்னாலும் இந்தப் படைப்பு மிக ஆழமான ஒன்று. அழகான ஒன்று!

நன்றி :-http://www.vikatan.com/news/article.php?aid=7472