Thursday, September 26, 2013

சுமையாகிப்போன அமெரிக்கக் கனவு!




உலகில் இப்போது ஒரே வல்லரசு நாடு அமெரிக்காதான். அப்படிப்பட்ட அமெரிக்காவில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் திருப்தியோடும் இருக்க வேண்டும் அல்லவா, அப்படி இல்லையே, ஏன்?

அமெரிக்கப் பொருளாதாரச் சூழல் யாரையும் நிம்மதியாக இருக்க விடவில்லை. நிம்மதி போவது இருக்கட்டும், எதிர்காலத்தைக் குறித்தும் அமெரிக்கர்கள் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது, இப்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே தங்களுடைய முதுமை நாள்களை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று கவலைப்படுகிறார்கள். அதைவிடக் கவலை, தங்கள் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள், என்ன படிப்பார்கள், எப்படி வேலை கிடைக்கும் என்பதைப் பற்றித்தான்.

அமெரிக்கர்கள் தேசப்பற்று மிக்கவர்கள். தங்களுடைய நாட்டின் அழைப்புக்கேற்பச் செயல்படுகிறவர்கள். அதேபோல, தன்னுடைய நாட்டு மக்களுக்கு எந்த ஆபத்து என்றாலும், அந்த இடம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஓடோடிச் சென்று உதவும் பண்பு அமெரிக்காவுக்கு உண்டு. அமெரிக்காவுக்கு ஆபத்து வரக் கூடிய இடம் அயல்நாடாக இருந்தாலும், பகையைத் தேடிச் சென்று அழிப்பதும் அமெரிக்காவின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், பொருளாதார ரீதியாக மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

1977 முதலே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் இருந்தாலும் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்றே அமெரிக்கர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை என்றாலும், அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆனால், அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா இரண்டாவது முறையாகப் போட்டியிட்டபோது, நாட்டு மக்களிடையே நம்பிக்கை வற்றிவருவதை ‘கேலப்’என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் கவனித்தது.

“அமெரிக்காவுக்கு என்று கனவொன்று இருக்கிறது என்று ஒபாமா தேர்தல் பிரசாரத்தில் கூறியபோது, மக்களிடையே முதல் முறை இருந்த உற்சாகம், ஆர்வம் ஏதும் இல்லை” என்று ஜோயல் பெனன்சன் என்ற ஒபாமா ஆதரவாளரே நினைவுகூர்கிறார்.

இவ்வளவு பணத்துக்கு வீட்டை வாங்கிவிட்டோமே, கடனை எப்படி அடைக்கப்போகிறோம், இரண்டு கார்களை வைத்திருக்கிறோமே, நிறைய செலவு வைக்கிறதே , மகன் அல்லது மகளைக் கல்லூரியில் சேர்க்க நிறைய பணம் தேவைப்படுமே என்றெல்லாம் கவலைப்படுகின்றனர்.

நிறைய செலவுசெய்து கல்லூரியில் படிக்கவைத்தாலும் நல்ல சம்பளம் கிடைக்கப்போவதில்லை, ஏன் படிக்கவைக்க வேண்டும் என்றுகூட மத்திய தரக் குடும்பத்துப் பெற்றோர் நினைக்கின்றனர்.

தொழில்துறை மந்தத்தினாலோ பொருளாதாரச் சரிவினாலோ இந்தச் சிந்தனை வரவில்லை. விலைவாசி உயர்வும் ஊதியம் அந்த அளவுக்கு உயராமையும் மக்களுக்குத் தெரிகிறது. கல்வி, சுகாதாரத்துக்கு அதிகப் பணம் செலவிட வேண்டியிருப்பதும் புரிகிறது. அமெரிக்க அரசின் நிதி நிர்வாகம் சரியாக இல்லாததால் தங்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருவதைப் பலர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் தீர்க்கும் ஆற்றல் அமெரிக்க அரசுக்கு இல்லை என்றே பலரும் நினைக்கின்றனர்.




பொருளாதார வளர்ச்சியில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது இல்லாமல் ஏழை, பணக்காரர் வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே வருவதை அவர்கள் பார்க்கிறார்கள். 2007 முதல் 2010 வரையில் தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளால் தங்களுடைய அந்தஸ்து, 1992-ல் இருந்த நிலைக்குச் சென்றுவிட்டது என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.

அமெரிக்கத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் கணிசமாகக் கூடியிருக்கிறது, அமெரிக்கத் தொழிலதிபர்களின் லாபமும் கணிசமாகக் கூடியிருக்கிறது. ஆனால், இந்தக் கூடுதல் வருவாய் (மிகை ஊதியம்) தொழிலாளர்களுக்குக் கிடைக்காமல் முதலாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடுகிறது. தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதியம் உயராமல் அப்படியே தேங்கி நிற்கிறது. அதேசமயம், விலைவாசி உயர்ந்து செலவுகள் அதிகரித்துவிட்டன. தேசிய வருமானம் உயர்ந்தாலும் அது மிகச் சிலரின் கைகளுக்கே போய்ச் சேர்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கான செலவு 90 சதவீதம் அதிகரித்துவிட்டது.பல்கலைக்கழகங்களில் கல்விக்கட்டணம் 27 சதவீதம் அதிகரித்துவிட்டது. தனியார் கல்லூரிகளில் கட்டணம் 13 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், அமெரிக்காவிலிருந்து மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் போன்ற பெரிய நிறுவனங்கள் வேறு நாடுகளுக்குத் தங்களுடைய தொழிற்சாலைகளைக் கொண்டுசென்றதுதான். அந்த நாடுகளில் சலுகை விலையில் கிடைக்கும் நிலம், நீர், மின்சாரம்,வரிச் சலுகை, குறைந்த ஊதியத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் ஆகியவை அவர்களுக்குப் பெரும் ஊக்குவிப்பாக இருக்கின்றன. இதனால், பல அமெரிக்க நிறுவனங்கள் ஏழை நாடுகளில் தங்களுடைய தொழிற்சாலைகளைத் திறந்து உற்பத்தியில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகின்றன. இதனால், அமெரிக்க நாட்டில் மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் செய்த முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபம், முதலாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுவிடுகிறது.

வேலையின்மையால் அமெரிக்காவில் ஏழைகளும் நடுத்தர மக்களும் வாழ்க்கைத் தரம் குறைந்து அல்லல்படுகின்றனர்.

இந்த நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல; பல ஐரோப்பிய நாடுகளிலும் பிரிட்டனிலும் நீடிக்கிறது. ஆனால், அந்த நாடுகளில் எல்லாம், “தங்களுடைய நாடுதான் முதலாவது நாடு, தங்களுக்குப் பிரச்சினைகளே வராது” என்கிற லட்சியக் கனவெல்லாம் கிடையாது. எனவே, அவர்கள் வாழ்க்கையை யதார்த்தமாக எதிர்கொள்கிறார்கள். அமெரிக்கர்கள் வெளியில் சொல்லத் தெரியாமல் மனம் புழுங்குகிறார்கள்!


~~~~~~~~~~~
 © தி கார்டியன்,
 தமிழில்: சாரி - நன்றி-திஹிந்து