Thursday, October 31, 2013

மிஸ் யூ …..


                                 


சின்ன வெங்காயம் பற்றிய ஒரு தமிழ் நாட்டு பதிவரின்  அருமையான எண்ணங்கள் ...!

நம்ம வாழ்க்கையில், ஒருத்தர் நம்ம கூடவே இருக்கிர வரையில்,

அவர்களுடைய அருமை நமக்கு

தெரியாது! அவர்கள் தூர விலகி சென்ற பின்னர் தான், அவர்களுடைய

நியாபகங்கள் நம்மை துரத்தி துரத்தி வரும். இந்த பதிவு கூட, நான் ரொம்பவே

மிஸ் செய்யர ஒருத்தர பத்தி தான்! சின்ன வயசில், எனக்கு அவர அவ்வளவா

பிடித்ததில்லை! அவரை நேரில் கண்டாலே, ஒட்டம் பிடித்து விட்டு தான் மறு

வேலை, இல்லையேல் அழ அழ வைத்து விடுவார்! ஆனால் இவர் இல்லாம

நான் இல்லை என்ற நிலைமை ஒரு கால கட்டத்தில் வரும் என்று கனவில்

கூட நினைத்ததில்லை!

அவர் இப்போ எங்க கண்ணில் பட்டாலும், முதல் ஆளாய் அழைத்து வருவது

நான் தான்! இவ்ளோ ஸ்பெசலானவர், வேற யாரும் இல்ல.. நம்ம

Mr.சின்னவெங்காயம் அவர்கள் தான்!!

இவர் நம் தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை! தமிழ் நாட்டை

தாண்டி, எந்த ஊர் சென்றாலும், முதலில் தேடுவது இவரை தான்! தமிழர்,

மலையாளீ, இவர்களை தவிர, வேறு மாநிலத்தவர் எவருக்கும், இதன்

அருமை தெரியவில்லை! பெரிய வெங்காயமே, அவர்களுடைய விருப்பம்!

இதை எப்போ உரிச்சி, எப்போ வேலையை முடிக்க, என்று எரிச்சலை

வெளிப்படுத்துவார்கள்!

உண்மைதான், அதை தோலை உரித்து, வெட்டுவது,

என்பது அவர்கள் சொல்வது போல பெரிய வேலை தான், ஆனால், அவற்றின்

நற்குணங்களை அறிந்தோர் குறை சொல்ல மாட்டார்கள்!

இப்போ வெங்காயம் வெட்டுவதற்கு என்று நிறைய கருவிகள் வந்து விட்டன,

இதே மாதிரி, வெங்காய தோலை உரிப்பதற்க்கும், ஏதாவது கண்டுபிடித்தால்

நன்றாக இருக்குமே, என்று நானே பல முறை யோசித்ததுண்டு! நான்

சமையல் செய்ய படித்த புதிதில் இருந்து இன்று வரை, அழாமல் வெட்டியதே

இல்லை! நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, சில நேரம் காரணமே இல்லாமல் அழ

வைப்பர்கள், அது மாதிரி தான் இதுவும் என்று மனதை தேத்தி கொள்வேன்!

எனக்கு கல்யாணம் முடிந்து, புகுந்த வீடு சென்ற புதிதில், என்

அத்தைஎன்னை, வெங்காயம் வெட்டவே விட மாட்டார்… அவருக்கு பயம்,

நான் அழுது, அழுது வெட்டுவதை பார்த்து, என்ன புது பெண், வந்து கொஞ்ச

நாள் கூட ஆக வில்லை, இப்படி அழுதே என்று யாரும் சொல்லி

விடுவார்களோ என்று!! எவ்வளவு அழுகை வந்தால் என்ன, எனக்கு எந்த

குழம்பு, எந்த கூட்டு வைத்தாலும், கை நிறைய வெட்டி போட்டால் தான்

திருப்தியாக இருக்கும்!
என் பசங்க இருவரும், நான் சிறு வயதில் செய்தது போலவே,

வெங்காயத்தை, தனியாக எடுத்து தட்டின் ஒரமாக வைத்து விடுவர்!

அதனால் நான், வெங்காயம் போட்டதே தெரியாமல், குழம்பு

வைத்து, அவர்களை சாப்பிட வைத்து விடுவேன்! சும்மாவா, சின்ன

வெங்காயம், உடம்புக்கு குளிர்ச்சியை தரும், நம் ரத்தத்தை சுத்திகரிக்கும்

ஆற்றல் கொண்டது! மெட்ராஸ் ஐ, போன்ற கண் நோய், வரும் சமயங்களில்

எல்லாம், இந்த வெங்காயத்தை, வீட்டினுள், ஆங்காங்கே உரித்து

வைத்து விட்டால், ஒருத்தரிடம் இருந்து, இன்னொருவருக்கு பரவாது.. மிக

சிறந்த கிருமி நாசினி! காலில் முள் குத்தி வலி எடுப்பவர் கூட, இந்த சின்ன

வெங்காயத்தை நன்கு வதக்கி, ஒரு துணியில் வைத்து கட்டி விட்டால், முள்

தானாக சிறிது நேரத்தில் வெளியில் வந்து விடும்.. இப்படி நிறைய

பாட்டி வைத்தியங்கள் சொல்லிட்டே போகலாம்!

சரி, சரி நம்ம விஷயத்துக்கு வருவோம், இப்போ நாங்க இருக்கிர

குண்டூரில் சின்ன வெங்காயம் இல்லை! கல்யாண சீசன் சமயங்களில்

மட்டுமே விற்பனை செய்ய படுமாம்! விசேஷங்களின் போது, சாம்பாரில் இந்த

சின்னவெங்காயத்தை போடுவார்களாம்! இப்பெல்லாம், எவ்வளவு

கவனமாக சமையல் செய்தாலும், ஏதோ ஒன்றின் சுவை குறைந்தது

போலவே இருக்கிரது! நிஜமாவே, ரொம்ப மிஸ் செய்யரேன், Mr.சின்ன

வெங்காயம், மிளகாய் குழம்பு, வெந்தய குழம்பு, மீன் குழம்பு எதுவுமே, நீங்க

இல்லாமல் ருசிக்கவே இல்ல! அய்யோ, நம்ம ஊரு சின்னவெங்காய

பக்கோடா, எல்லாம் கண்ணுக்குள்ளேயே இருக்குது, போதும் இதுக்கு மேல

யோசிச்சா அழுகை வந்து விடும்! சின்ன வெங்காயம், உரிக்க, உரிக்க உள்

ள ஒன்னுமே இல்ல தான், ஆனால் என் உள்மனசுல, அதுக்கு நிறையவே

இடம் இருக்கு!!!!!!!


~~~~~~~~~~~

நன்றி 
mahalakshmivijayan

எண்ணங்கள் பலவிதம்

கிஃப்டுக்கு அடிமையாக்காதீர்கள் !

         

இரண்டு குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி அந்த வீட்டின் காலை பொழுது மிகவும் பரப்பரப்பாக இருக்கும். குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புவதற்கு போதும், போதும் என்றாகிவிடும். காலையில் பல் துலக்குவது ஆரம்பித்து, இவினிங் ஹோம் வொர்க் செய்வது அத்தனைக்கும் தொல்லைப்படுத்திவிடுவார்கள். நான் பால் குடிக்க வேண்டும் என்றால் நீ என்னை கடைக்கு கூட்டிட்டு போகவேண்டும் என் நிபந்தனையுடன் தான் அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள்.

இப்படி குழந்தைகள் தங்கள் செய்யும் அத்தனை வேலைக்கும் பதிலாக கொசுராக ஏதாவது வேண்டாதா பொருளையே அல்லது தேவையற்ற காரியங்களை செய்வதற்கும் லஞ்சமாக எதையாவது கேட்கிறார்கள். குழந்தைகளின் இந்த பழக்கத்தை பெற்றோர்கள் எப்படி சமாளிப்பது? இந்த பழக்கம் வருவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விளக்குகிறார் கேலிபர் அக்டாமி பள்ளியில் குழந்தைகள் மனநல ஆலோசகாராக பணிபுரிந்துவரும் வந்தனா மனோஜ்.

குழந்தைகள் இப்படி தங்களுடைய வேலை செய்வதற்கு ஏதாவது தர வேண்டும் என சொல்லும் பழக்கம் பெற்றோரிடம் இருந்துதான் வந்தது. அவர்கள்தான் ஆரம்பத்தில் குழந்தை எதையாவது செய்ய மறுத்தால் உடனே குழந்தைக்கு பிடித்த பொருளை கொடுத்து அந்த காரியத்தை செய்யுமாறு சொல்வோம். நீ பல் தேய்ச்சினா நான் உனக்கு சாக்லேட் தருவேன் அப்படின்னு ஆரம்பத்தில் பெற்றோர்கள்தான் குழந்தைகளிடம் கேட்பார்கள். பிறகு குழந்தைகள் அதையே பழக்கமாக வைத்துக் கொள்கிறார். இப்படி அவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைக்கு நீங்கள் ஏதாவது என்பது மிக மேசமான பழக்கம். 

இது நீண்ட கால தீர்வும் கிடையாது. இதன் விளைவாக குழந்தையும் எப்போதும் உங்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதோடு உங்களையும் கிப்ட் வாங்கி தரும் ஒரு மெஷினாகதான் பார்க்கும். அவர்கள் அன்றாட வேலைகளை ஏன் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை குழந்தைக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகதான் இருக்கும். குழந்தைக்கு புரியும் வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு எந்த சமயத்திலும் நீ இதை செய்தால் நான் உனக்கு இதை வாங்கி தருகிறேன் என வாக்கு தரக்கூடாது. அப்படி வாக்கு தந்தால் அதை வாங்கி கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் வாங்கி தரவில்லை எனில் உங்களைப் பற்றி குழந்தைகள் தன்னுடைய நண்பர்களிடம் தவறாக பேசுவார்கள். பாராட்டுகள் அனைத்து வாய்மொழியாகதான் இருக்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது சாதித்தால், உங்களுக்கு தோன்றினால் மட்டும் குழந்தைகளுக்கு தேவைப்படுவதை வாங்கி தரலாம். அதையும் முன்கூட்டி சொல்ல கூடாது. அப்படி சொன்னால் எனக்கு தேவையானப் பொருள் கிடைக்கிறது. அதற்காக இதை நான் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணம்தான் வளருமே தவிர வேறு எந்தவிதமான வளர்ச்சியும் இருக்காது. 

அடிக்கடி கிப்ட் வாங்கி தருவதால் குழந்தைகள் கிப்டுகளின் அடிமையாகிவிடுவார்கள். அது இல்லாமல் எதுவும் நடக்காது என்றாகிவிடும். நம்மிடம் எதிர்பார்ப்பதைப்போலவே மாற்றவர்களிடத்திலும் குழந்தைகள் எதிர்பர்ப்பார்கள். அதோடு அப்படி மற்றவர்களிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்றால் அதுவே அவர்களை மனசோர்வு அடைய செய்யும். இந்த மனசோர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்த கூடியது என்பதை பெற்றோர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். 

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட குழந்தைகள் கிப்டை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த சமயத்தில் குழந்தையை சமதனம் செய்ய நான் வாங்கி தருகிறேன் என்றுச் சொல்லிவிட்டு வங்கிதரமால் இருந்தால் அது தவறு. நாம் தான் குழந்தைகளின் முதல் ரோல்மாடல். நாளை குழந்தையும் நம்மைப்போலவே வாக்கு கொடுக்கும். ஆனால் செய்யாது. மேலும் வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தை திறமையாக எதாவது செய்தால் அதற்கு நீங்கள் பரிசு வாங்கி தருகிறீர்கள் என்றால் மற்றொரு குழந்தையிடம் இருக்கும் நல்ல விஷயத்தை கண்டுபிடித்து அதற்கு பரிசு வாங்கி தரவேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் மேலும் ஒன்றை செய்ய வேண்டும். திறமையை வெளிப்படுத்திய குழந்தையிடம் அவளுக்கு வாங்கி தரவில்லை என்றால் அவள் வருத்தப்படுவாள் என்பதை தெளிவாக சொல்லி புரியவைக்க வேண்டும். 

நன்றி : நம் தோழி

Monday, October 21, 2013

எச்சரிக்கை - அண்ட்ராய்ட் போனில் வைரஸ்
அண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் .


 இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது. இது அண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை அண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு வழுவே ஆகும்.

இதனைப் பயன்படுத்தியே இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த சாதனங்களில் பல அப்ளிகேஷன்களில் கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் புகுத்துகின்றன. இதனால் அந்த அப்ளிகேஷன்களின் ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை.

பயனாளர், தான் பயன்படுத்துவது ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்துகையில் கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின் அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன. இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.

இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால் எந்த சோதனைக்கும் முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால் பின்னர் செயல்பாட்டில் திருட்டு பைல் இயங்கி சேதத்தினை விளைவிக்கிறது. அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது. 

அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால் அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கை யற்ற இணைய தளங்களுக்கான லிங்க்கினை கிளிக் செய்திட வேண்டாம். மொபைல் ஆண்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம் போன் முழுவதனையும் சோதனை செய்திடவும்.

நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோட் செய்திட வேண்டாம். முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்த பின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்ட்லோட் செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தரும் அப்ளிகேஷன்களையே பயன்படுத்தவும்.
.........................................
வெப்துனியா

மின்னஞ்சலும் வெங்காய வியாபாரியும் - தன்னம்பிக்கை கதை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக,
ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,

‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.

Monday, October 14, 2013

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!
உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [ F.A.O ] தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.

வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக தூக்கி வீசப்படுவது நம்மிடம் ஏழை எளியோர் உள்ளனரே ! என்பதை மறந்து விடுவதுதான்.
ஒருவர் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றாலும் உணவை உட்கொள்ளும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சற்று அதிகமாகவே காணப்படும் காரணம் மன நிலையை அடக்கி வாசிக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களிடம் இல்லாததே !

பல கோடி ஏழை எளியோர்கள் உணவு தட்டுப்பாடால் வாடிக் கொண்டிருக்கிற நிலையில் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவில் ஐந்தில் ஒரு சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்.

உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கறை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம். மேலும் உணவின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுவது நமது கடமைகளில் ஒன்றாகும்.

---------------------------
நன்றி :M. நிஜாம்

Wednesday, October 9, 2013

லப்டப்... லப்டப்..!


டாக்டர் என்றதுமே 'நினைவு வருவது அவர் கழுத்தில் தொங்கும் ஸ்டெதாஸ்கோப் மாலை. உங்களுக்கும் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பைத் தொங்கவிட்டுக்கொண்டு, நடக்கும் ஆசை இருக்கும். இந்த 'ஸ்டெதாஸ்கோப்’ உருவானது எப்படி? செயல்படுவது எப்படி என்று பார்ப்போமா...

'ஸ்டெதாஸ்கோப்’ கருவியைக் கண்டுபிடித்தவர் 'லென்னே’ என்கிற பிரெஞ்சு மருத்துவர். 1781-ல் பிறந்த இவரின் முழுப் பெயர் ரினே தியோஃபில் ஹையஸிந்த் லென்னே (Rene Theophilie Hyacinthe Laennec). அவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை.
லூவர் என்ற இடத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார் லென்னே. சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கையில் மரக்கட்டைகள், நீண்ட கட்டைகளின் ஒரு முனையில் சின்ன ஆணிகளை வைத்து, உரசி அந்தச் சத்தத்தை இன்னொரு முனையை காதில் வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த லென்னேயின் மூளையில் பல்ப் எரிந்தது. மறுநாள் சிறுவர்கள் செய்ததைப் போலவே ஒரு காகித அட்டைக் குழலைச் செய்தார். அதை தன்னிடம் வந்த நோயாளிகளின் மார்பில்வைத்து, வருகிற ஒலியை காதில் கேட்டார். அப்போது கேட்கும் ஒலி துல்லியமாக இருந்தது. இதுதான் முதல் 'ஸ்டெதாஸ்கோப்’ உருவான கதை. 1816- ல் நடந்த நிகழ்ச்சி இது.

காகித அட்டைபோல பல்வேறு பொருட்களைவைத்து வெவ்வேறு விதமாகக் குழல்கள் செய்துபார்த்தார் லென்னே. மூன்று ஆண்டுகள் அவரே காசநோயால் அவதிப்பட்டார். 1819-ல் தன்னுடைய கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வுகளை 'டிலா ஆஸ்கல்டேஷன் மெடியேட்’ என்கிற நூலாக எழுதினார்.
முழு அளவு காட்டு

எந்தப் பொருளைப் பயன்படுத்திக் குழல் செய்தால், நன்றாக சத்தம் கேட்கும் என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்தார் லென்னே. 1826-ல் தன் நூலின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார். அதற்குப் பின் ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிட்டார்.

லென்னே காலத்துக்குப் பின், ஸ்டெதாஸ்கோப் பல வடிவங்ளைப் பெற்றது. ஒரு குழல், இரண்டு குழல்களானது. ஒலி துல்லியமாகக் கேட்கக்கூடிய வகையிலும் நீண்ட நாள் உழைக்கும் வகையிலும் புதுப்புது வகை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது நாம் மாலை போல பார்க்கும் ஸ்டெதாஸ்கோப் 'பைனாரல் ஸ்டெத்’ (Binural Steth) என்பது. இதில் இரண்டு செவித் துண்டுகள், ஒரு மார்புத் துண்டு, ஆங்கில Y எழுத்துப் போன்ற குழாய் போன்றவை உள்ளன. மார்ப்புத் துண்டு நோயாளியின் உடல் மீது வைக்கப்படுகிறது. செவித் துண்டுகள் மருத்துவரின் இரு காதுகளிலும் வைக்கப்படுகின்றன. குழல் வழியாக நோயாளியின் இதயச் சத்தங்களும், நுரையீரல் சத்தங்களும் கேட்கும். பைனாரல் ஸ்டெதாஸ்கோப், 1855-ல் டாக்டர் கம்மன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

இதயம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பதால் 'லப் டப்’ என்ற சத்தம் எழுகிறது. 'கூர்மையான லப், சற்றே நீண்ட டப்’ ஆகிய ஒரு ஒலிகளும் இதயத்தின் சுருங்கி விரியும் பணிகளால் ஏற்படுபவை.
இதயத்தில் கோளாறுகளோ, இதய வால்வுகளில் பிரச்னைகளோ இருந்தால், 'லப் டப்’ தவிர, கூடுதல் ஒலிகள் கேட்கும். இவற்றை மருத்துவ மொழியில் 'மர்மர்’ (Murmur) என்பார்கள்.

மார்புத் துண்டை, நோயாளியின் மார்புக் கூட்டின் வெவ்வேறு பகுதிகளில் வைத்துப் பார்க்கும்போது, அவருடைய மூச்சு ஒலி, மூச்சு விடுதலில் கோளாறுகள் இருந்தால் அதனால் ஏற்படும் கூடுதல் ஒலிக¬ளைக் கேட்க முடியும். மனித உடலின் பிரச்னைகளை தெளிவாகப்புரிய வைக்கும் ஒரு உன்னதக் கருவி ஸ்டெதாஸ்கோப்.
 
முழு அளவு காட்டு

நீங்களே செய்யலாம் ஒரு ஸ்டெதாஸ்கோப்:

ஒரு கனமான காகிதத்தையோ, அட்டையையோ எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாகச் சுருட்டி, இரு பக்கங்களிலும் நூலால் கட்டிவிடுங்கள்.
குழாய்போல இருக்கும் அல்லவா? அந்த அட்டைக் குழலின் ஒரு முனையை, உங்கள் நண்பனின் இடது பக்க மார்பில் வைத்து, இன்னொரு முனையில் உங்கள் காதைவைத்துக் கொள்ளுங்கள்.
'லப் டப்’ என்று ஒரு சத்தம் கேட்கிறதா?

இதையே குழல்போல இல்லாமல், கூம்பு போல செய்து, அகலமான பகுதியை நண்பனின் மார்பின் மேல் வைத்துவிட்டு அகலம் குறைவான பகுதியைக் காதில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது 'லப் டப் லப் டப்’ நன்றாகவே கேட்கும். நண்பனை இழுத்து மூச்சுவிடச் சொல்லுங்கள். இப்போது உங்கள் ஸ்பெஷல் கூம்பைக் கொஞ்சம் இப்படியும் அப்படியும் அவர் மார்பில் இடம் மாற்றி வைத்தால், அவர் மூச்சுவிடும் சத்தம்கூட காதில் தெளிவாகக் கேட்கும்.நன்றி : விகடன்