Friday, February 22, 2013

பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..!. முகநூலில் மூழ்கினால் முன்னேரமுடியாது.!!.

அண்மையில் என் முகநூல் பக்கத்தில் நண்பர் கோரிக்கை ஒன்று வந்தது. எங்கோ கேள்வி பட்ட பெயர் போல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்தேன். ஒரு சிறிய அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள என் சித்தி பையனின் முகநூல் பக்கம் அது. சிறிய வயதிலேயே கணினி பயன்பாட்டை தெரிந்து வைத்துள்ளான் என்ற சந்தோஷம் ஆயினும், அவன் தேர்வு செய்துள்ள முகநூலில் உள்ள தீமைகளை நினைத்து வருத்தமும் கூட. 
 
பதினாறே வயதான அந்த சின்னப் பையனின் முகநூல் பக்கத்தில் சென்று பார்த்தால், நூற்றுக்கணக்கான நண்பர்கள். அதில் பலர் பெண்களே!. நாங்கள் 10-ம் வகுப்பு படிக்கும் பொழுது ஆண் நபர்களே அதிகம் (இன்று வரையிலும் நமக்கு அப்படித்தான் ). இந்த சின்ன வயதில் இத்தகைய என்னத்தை அவன் மனதில் விதைத்ததற்கு இன்றைய கால அநாகரீக ஆபாச ஊடகங்களுக்கும் சினிமாக்களுக்கும் முக்கியப் பங்குண்டு. பெற்றோர்கள் இந்த விசயத்தில் மிகுந்த கவனம் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். 

இவன் பரவாயில்லை ஆண்பிள்ளை. ஆனால் டிவியும் சீரியலுமாக இருந்த இளம் பெண்கள் இன்று மொபைல் கையுடனும் கணினி மடியுடனும் இருப்பது கூடுதல் கவலை. இணையதளத்தின் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் ஏராளம் இருப்பின், இதுபோன்ற சமூக இணைப்பு சேவைத் (SNS- Social Networking Service) தளங்களால் மாணவர்களும் இளம் வயது பெண்களும் வழிகெட்டு சீரழிவது சுலபமே. இவர்களின் எதிர்காலக் கனவுகள் இந்த கணினியின் கதிர்வீச்சில் அழிந்து போக அதிக வாய்ப்பும் உண்டு. 

இது போன்ற சமூக இணைப்பு சேவை அளிக்கும் ஊடகங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த ஒன்றாக இருந்தாலும், அதன் நன்மையையும் தீமையையும் எடை போட்டால் தீமையின் பக்க தராசு தான் சற்று தரை தட்டுகின்றது . கல்வி கற்கும் இளைஞர்கள் அவர்களது 'கிளாஸ்புக்கில்' நேரத்தை செலவிடுவதை விட 'பேஸ்புக்கில்' தான் அதிகம் கழிக்கின்றனர். இவை எதிர்கால கிளைகளின் இலைகளை கருக வைக்கும் அதே சமயம் நூற்றுக்கணக்கான அசிங்கங்களும் ஆபாசங்களும் இவற்றில் அரங்கேறுவது வாடிக்கை ஆகிவிட்டது. 



 

சமீபத்தில் படித்த செய்தி “பேஸ்புக்கில் காதல் வயப்பட்டு கர்ப்பை பறிகொடுத்த இரண்டு பெண்கள்” பற்றியது. இது இவர்களுக்குத் தேவையா? பக்கத்து வீட்டுக்காரனையே நம்ப முடியாத இக்காலத்தில் இது போன்ற இணையவழி காதலை நினைத்து பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கின்றது. “முகநூல் நட்பது நட்பன்று – கொஞ்சம் அகநூல் கற்பதும் நன்று” என்று சொல்லும் அளவுக்கு இந்த ‘முகநூல்’ இளைஞர்களிடையே மிகவும் வேரூன்றி விட்டது. தான் நேரில் பார்க்க சுமாராக இருந்தால், அவர்களின் முகநூல் புகைப்படமோ சினிமாக்காரர்களின் அல்லது விளம்பர மாடல்களின் படங்களைக் கொண்டதாக மாறிவிடும். இப்பொழுது முகநூல் யாருடைய முகத்தை காட்டுகிறது என்பதே தெரியவில்லை.

இது ஒருவரை பற்றிய மாயையை ஏற்படுத்துமே தவிர உண்மையான முகத்தை (குணத்தை ) காட்டாது. சிலர் இதில் விதிவிலக்கு. கடந்த காலத்தில் நட்பை வளர்த்தது போல் இன்றைய கால நட்பு இல்லை. குட்டிச்சுவர் ஏறி உட்கார்ந்து, பேசி, கிண்டலடித்து, சண்டை இழுத்து பின்பு சமாதானம் ஆகும் சுகம் இந்த முகநூலில் உண்டோ?. 

சுகமான தென்றல் காற்று, மரத்தடி ஊஞ்சல், சீட்டுக்கட்டு, கில்லி, பம்பரம், கோலிக்குண்டு, கண்ணாமூச்சி இவற்றை நழுவவிட்டு கணினியின் மடியில் கற்பனை சருகுகள் ஆகிவிட்டனர். பாவம் இந்த காலத்து இளஞர்கள் கண்ணியும் கணினியுமாக காலத்தை கழிக்க கடைசியில் மிஞ்சுவது கற்பனையின் சாம்பல் மட்டும் தான். இவ்வாறு ஒரு புறம் இருக்க செல்போன்களில் தவழும் முகநூல் மென்பொருள் வசதி, இப்பொழுது தனது சேவையை படுக்கை முதல் பாத்ரூம் வரை நீளச் செய்துள்ளது. வாழ்த்துக்கள்!. 


 

முகநூலில் ஒரு நல்ல கருத்தை பதிவு செய்தால் அதை ‘லைக்” செய்ய ஒருவரும் இல்லை. அதே நேரம் ஒரு பெண் “நான் தூங்கப் போறேன்” என்று பதிவு செய்த பத்து நிமிடத்தில் 63 பதில்கள் மற்றும் எண்ணற்ற “லைக்குகள்”. அதில் 98% ஆண்களே. இவள் தூங்க இத்தனை அக்கப்போர்களா?. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை “செல்போன்களும் மாணவர்களும்” என்ற தலைப்பில் ஏராளமான விமர்சனங்கள். அதில் கூட ஒரு பெண் ஒரு ஆண் என்ற அளவுகோல் இருந்தது. இன்று இந்த முகநூலில், அறிவை கழற்றி வைத்து விட்டு நாகரீகம், பண்பாடு, கலாசாரம் மறந்து, ஆட்டு மந்தையாக மாறிவிட்டனர். 

ஒரு பெண்ணின் முகநூல் பக்கத்தில் எண்ணற்ற ஆண்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இவர்களின் மதிநுட்ப வளர்ச்சிக்கு பங்கம் விளைவித்து விட்டதோ?. என்னுடன் படித்த நண்பர்கள் பலரின் இன்றைய முகவரியை முகநூல் காட்டியது. ஆனால், அவர்களிடம் அன்று இருந்த நட்பையும் அன்பையும் இன்று அதே தரத்துடன் காட்டத் தவறிவிட்டது. எனது பிறந்த நாள் என்று என் முகநூல் காட்ட, வந்து குவிந்தது பல நூறு வாழ்த்துக்கள். ஆயிரம் பேர் சொல்லும் அந்த வாழ்த்துக்களில் ஏனோ எனக்கு மகிழ்ச்சி இல்லை. காரணம், முகநூல் நண்பர்களின் பட்டியலில் இருக்கும் பலர் எனக்கு முகம் தெரியா நண்பர்கள் தாம். அவர்களை நேரில் பார்த்தால் கூட எனக்கு அடையாளம் தெரியாது!. இது போன்ற அதிருப்திகள் பல உண்டு முகநூலில். ஆயினும் என் உண்மையான நட்புகள் இந்த முகநூலையும் கடந்து வந்து வாழ்த்து சொல்லும் என்பது உறுதி!. ஜாதி மத பேதமில்லாமல் நட்பையும் கற்பையும் கடைவிரிக்கும் பெருமை முகநூலூக்கே உரியது. 

முகநூல் ஆற்றும் இந்த சீரிய சமூகப் பணிகளுக்கெல்லாம் நம் நேரமும், கனவுகளும், பொருளாதாரமும் உரமாக அதன் விளைச்சலோ சமூக சீரழிவையும் ஒழுக்கக்கேட்டையும் தவிர வேறென்ன? முகநூலில் நட்பையும் காதலையும் வளர்ப்பது முடி இல்லா தலைக்கு சீப்பு போடுவதை போலத் தான் என்பதை இந்த சமூகம் என்று உணருமோ?. காலம் பதில் சொல்லும் முன் விழித்துக்கொள்ளுங்கள். 

உங்கள் குழந்தைகளை கண்காணியுங்கள். அறிந்தே அவர்களை வழிகேட்டில் விட்டு விடாதீர்கள். அவர்களின் சீர்கேட்டிற்கு நீங்களும் காரணம் ஆகிவிடாதீர்கள். தகுந்த முன் எச்சரிக்கைகளுடனும், நேரக் கட்டுப்பாட்டுடனும் முகநூலை பயன்படுத்துவது சிறந்தது. அறியாமையில் நம் முகத்தை முகநூலில் புதைத்தால் மக்கப்போவது நம் வாழ்க்கை தான் என்பதை நினைவில் கொள்வோம். 

-----------------------------------------------------------
ராஸிக் http://www.inneram.com/                                                                                                                                                                  Posted by அதிரை முஜீப்
http://www.adiraimujeeb.blogspot.com/2012/06/blog-post.ஹ்த்ம்ல்

மனதில் சுமக்கும் கனங்கள்




ஒரு மனோதத்துவ வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு தம்ளரில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கையில் ஏந்தியபடி மாணவர்களிடம் கேட்டார். “இந்தத் தம்ளர் எவ்வளவு கனம் இருக்கும்?” என்று கேட்டார்.

மாணவர்கள் பக்கத்தில் இருந்து பல உத்தேச பதில்கள் வந்தன. ”ஐம்பது கிராம்... எழுபது கிராம்.... நூறு கிராம்.... நூற்றி இருபது கிராம்....”

பேராசிரியர் சொன்னார். “இதை எடை போட்டால் தான் உண்மையான எடை நமக்குத் தெரியும். ஆனால் இது ஒருவரால் மிக சுலபமாக சுமக்கும் கனம் தான், இல்லையா?”

“ஆமாம்” என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

பேராசிரியர் கேட்டார். “இதை நான் சில நிமிடங்கள் கையில் ஏந்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?”

”ஒன்றும் ஆகாது” மறுபடி ஒருமித்த குரலில் பதில் வந்தது.

”இதை நான் ஒரு மணி நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

“கை வலிக்கும்” என்று ஒரு மாணவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“உண்மை தான். சரி, நான் இதை ஒரு நாள் முழுவதும் இப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

”தாங்க முடியாத வலி ஏற்படும்”, “கை தசைகள் இறுகி கையை நகர்த்த முடியாமல் போய் விடும்”, “ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டி வரும்”
என்று பதில்கள் வந்தன.

”அந்தப் பிரச்சினை ஏற்படுவது தம்ளரின் கனம் கூடுவதாலா?”

“இல்லை நீங்கள் தொடர்ந்து அதை பிடித்துக் கொண்டிருப்பதால் தான்”

”இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?”

ஒரு மாணவன் சுலபமாகச் சொன்னான். “அந்தத் தம்ளரை கீழே வைத்தால் போதும்”

பேராசிரியர் சொன்னார். “மிகவும் உண்மை. ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு எடையைக் கூட தொடர்ந்து நிறைய நேரம் கையில் ஏந்திக் கொண்டே இருந்தால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றை உங்கள் மனதில் சிறிது நேரம் வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அவற்றை நிறைய நேரம் சுமக்க ஆரம்பித்தால் சின்னப் பிரச்சினை கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தி விடும். அதையே நாள் கணக்கில் சுமக்க ஆரம்பித்தால் அது உங்களை வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் எந்த சுமையையும் இரவு தூங்கப் போகும் முன் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்கச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்கும். மறு நாளைய பிரச்சினைகளைச் சமாளிப்பது சுலபமாகும்”

மிக அழகான ஒரு உவமை இது. நமக்கு மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகத் தெரிகிறதே ஒழிய இறக்கி வைக்கத் தெரிவதில்லை. சுமைகள் கூடிக் கொண்டே போகும் தான் நம்மால் புதியதாக சின்னப் பிரச்சினை வந்தால் கூட அதை சமாளிக்கத் தெரிவதில்லை. ”ஐயோ இதுவுமா” என்று மலைத்துப் போய் விடுகிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்துப் பார்த்தால் அதை சமாளிப்பது சுலபமாக இருக்கும். பெரும்பாலானவை தனித்தனியாக அணுகும் போது அப்படி சமாளிக்க முடிந்தவையே. ஆனால் பிரச்சினைகளை சேர்த்து வைத்துக் கொண்டே சுமந்து நின்றால் அதன் பின் கூடும் எல்லாச் சின்னப் பிரச்சினைகளும் தாங்க முடியாதவையாக மாறி விடுகின்றன.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால் கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கி வைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே அவ்வப்போது மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதை சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்!


------------------------------------------------
நன்றி - என்.கணேசன் 

ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....





ஒரு தந்தையும் மகளும் ... 35 வயதுக்கும் குறைவான அப்பாவும் 5 வயதுக்கு குறைவான மகளும் .. அப்பாவின் கையைப் பிடித்தே…. உலகே தனதான சந்தோஷத்தில் மிதந்தபடி நடக்கிறாள்... அவளின் முகத்தில் பூக்களை விட அழகான மலர்ச்சி.... ஏதோ ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ...




ஒருவர் மட்டும் அமர்வதற்கான இருப்பிடம் காலியாக இருந்தது .. தந்தை மகளிடம் அதில் அமரும்படிச்சொன்னார்.. அவள் மாட்டேன் என மறுத்தாள்.. அவர் அமரப் போனார்.. தடுத்தாள்.. நின்றபடியே பயணம்.. அப்பாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டாள்.. மூக்கால் அவன் வயிற்றில் உரசினாள்.. முத்தமிட்டாள்.. தலை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள்.. அவர் சிரித்ததும் ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.. மீண்டும் வயிற்றில் முகம் புதைத்தாள்.. செல்லமாகக் கடித்தாள்.. அவன் நெளிந்தான் .. மீண்டும் அப்பாவின் முகம் பார்த்தாள்.. அவர் வலிப்பதுபோல் பாசாங்கு காட்டினார் .. இப்போது சிரிப்பில்லை அவள் முகத்தில்.. சடுதியில் கடித்த இடத்தில் முத்தம் கொடுத்தாள்.. மீண்டும் முகம் பார்த்தாள் .. அவன் சிரித்தபோது மிகுந்த சந்தோஷத்தில் அவளும் சிரித்தாள்..

அடுத்த நிலையம் ... மூன்று பேர் இறங்கியதால் இடம் கிடைத்தது .. இருவருக்கும் அமர .. அப்பாவும் மகளும் ஒவ்வொன்றில் அமர்ந்தார்கள் ..அடுத்த நொடி… தாவி அவர் மடியில் உட்கார்ந்துக் கொண்டாள் .. அவரும் சந்தோஷமாக ஒரு முத்தமிட்டு அவளை இறுக்கிக் கட்டிக் கொண்ட படியே அமர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் அவளின் கை அப்பாவின் காதை ..மூக்கை..கன்னத்தை என இழுக்கவும்..தடவவும் .. கிள்ளவும் தொடங்கியது.. அவளது உலகத்தில் அவளும் அவளின் தந்தையும் மட்டுமே..வேறு யாருமே இல்லை... திடீரென கழுத்தை இறுக்கிக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள்..

ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் பெண் இப்படித் தான் தன் அன்பைப் பொழிகிறாள் ... அதில் மாற்றமில்லை..அவள் எந்நாட்டைச் சார்ந்தவளாய் இருப்பினும் .. உரசியும்..முத்தமிட்டும் ..கடித்தும் இழுத்தும் ..கிள்ளியும்..அது அப்பாவில் தொடங்கி . அண்ணன் தம்பியில் வளர்ந்து..கணவனிடம் பரிணமித்து..மக்களிடம் செல்கிறது.... காலம் மாறுகையில் ஆட்கள் தான் மாறுகிறார்கள்..அவளின் அன்பில் மாற்றமில்லை.. வெளிபடுத்துவதிலும்.

பத்து நிமிடம் நானும் வாழ்ந்தேன் .. இதில் சற்றும் குறையா மகள் எனக்கும் இருக்கிறாள் இதே உயரத்திலும் வெளிப்படுத்துதலிலும்... நேற்றும் என் நெஞ்சோடு துயின்றாள் ....
----------------------------------------------------
# பெண்ணெனும் தேவதை #
-ரிலாக்ஸ் ப்ளீஸ்