Monday, February 11, 2013

இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள் (பிப்.12)வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர், கடன் வாங்கி புத்தகங்களைப் படித்தார். அப்பாவிடம் இருந்து நேர்மையைக் கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.

வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை. ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது; ஒரு நாள் ஹாயாக அவர் சுடு சூப்பை முகத்தில் ஊற்ற, துடைத்த விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து பல தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்த இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார்.

ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து, அதில் ஒல்லியான முகவாட்டம் கொண்ட அவர், தாடி வளர்த்துக் கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை, நன்றி சொல்லி அப்படியே செய்தார்.

ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர், ‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’ என நக்கலாக சொல்ல, ‘‘அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்’’ என்றார் அமைதியாக.

வென்றதற்கு பின் கறுப்பின மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்திக் கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார். கொதித்து எழுந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவை விட்டு விலகி போர் தொடுத்தன. போர்களங்களில் தன் பிள்ளைகளை இழந்தார்; நாடே தத்தளித்தது. அப்பொழுது எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை என அறிவிப்பு வெளியிட தெற்கு மாகணங்களில் இருந்த கறுப்பின மக்களும் இவருக்கு ஆதரவாக போரில் குதிக்க நாடு ஒன்றுபட்டது.

கெட்டிஸ்பர்க் உரையில் தான் ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது என விளக்கம் தந்தார்; தேர்தல் வந்தது மீண்டும் வென்றார்.

ஆப்ரகாம் லிங்கனை ஜான் பூத் எனும் நாடக கலைஞன் நாடகம் பார்த்தபொழுது சுட்டுக்கொன்றான். அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது. மீளா தூக்கத்தில் ஆழ்ந்தார் அடிமைகளை ரட்சிக்க வந்த அந்தத் தலைவன்.

‘‘நான் வெல்வதைவிட உண்மையாக இருக்கவே வேண்டும்; நான் மாபெரும் வெற்றிகளை பெறுவதைவிட என் அக வெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால். அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்’’ என்றவர் ஆபிரகாம் லிங்கன்.

-----------------------------------------------------------------
- பூ.கொ.சரவணன்

அப்ரஹாம் லிங்கன் தனது மகனின் தலைமை ஆசிரியருக்கு எழுதிய மடல்

எனது மகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது, எனக்குத் தெரியும் எல்லோரும் நியாயமானவர்கள் அல்ல. எல்லோரும் உண்மையானவர்களும் அல்ல. ஆனால் மேலும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள் ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்தில் ஒரு வீரனும் உண்டு.; ஒவ்வொரு சுயநல அரசியல்வாதி உள்ள இடத்தில் ஒரு தன்னலம் கருதாத தலைவரும் உண்டு. ஒவ்வொரு பகைவன் உள்ள இடத்தில் ஒரு நண்பனும் உண்டு என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
இதற்கு காலம் எடுத்துக்கொள்ளும் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக்கொடுக்கவும். அது ஈட்டியது ஒரு டாலர் எனினும் கண்டெடுத்த ஐந்து டாலர்களைக் காட்டிலும் மிகவும் மதிப்புமிக்கதாகும்.
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை கொண்டாடவும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
உங்களால் முடியுமானால், அவனை பொறாமையிலிருந்து அப்பால் இருக்கச் சொல்லவும்.
மனம்விட்டு சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காண ஆரம்பத்திலேயே அவன் கற்றுக்கொள்ளட்டும்.
உங்களால் முடியுமானால், நூல்களின் அற்புதத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள், மேலும் வானத்தில் பறக்கும் பறவைகள், சுதந்திரமாய் ரீங்காரமிடும் தேனீக்கள், பசுமைக் குன்றுகள் மீது பூத்துக் குலுங்கும் மலர்கள் பற்றி ஆய்ந்தறியவும் அவனுக்கு நேரமளியுங்கள்.
ஏமாற்றுவதைக்காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது என்று அவனுக்கு பள்ளியில் கற்றுக்கொடுக்கவும்.
அவனுடைய சொந்த கருத்துக்கள் மீது நம்பிக்கை வைக்க கற்றுக் கொடுங்கள், எல்லோரும் அவை தவறானது என்று சொன்னாலும் கூட.
மெலியவர்களிடம் மென்மையாகவும், வலியவர்களிடம் வன்மையாகவும் நடந்துக்கொள்ள அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
வெற்றிபெறும் கட்சி பக்கமாக நிற்க எல்லோரும் முயற்சிக்கும் போது கூட்டத்தைப் பின்பற்றிச் செல்லாதிருக்க மன உறுதியை எனது மகனுக்கு அளிக்கவும்.
எல்லோரையும் கேட்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள், ஆனால் கேட்டதை எல்லாம் வடிகட்டி உண்மையை ஆய்ந்தறியவும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுக்கவும் கற்றுக்கொடுங்கள்.
முடியுமானால் இடுக்கண் வருங்கால் எப்படி நகுவது என்று கற்றுக்கொடுங்கள். கண்ணீர் சிந்துவதில் தவறில்லை என்பதை கற்றுக்கொடுங்கள். ஓயாது குற்றம் காண்போரை ஏளனம் செய்யவும், மிகவும் வாய் இனிக்கப் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
உடல் வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் விற்பதில் தவறில்லை ஆனால், அது தனது மனசாட்சியையும் ஆன்மாவையும் பணயம் வைப்பதாக இருந்துவிடக்கூடாது என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
கூப்பாடு போடும் கூட்டத்தில் அவன் செவிகளை அடைத்துக் கொள்ளவும்…. அவனுக்கு சரி எனப் பட்டதற்காக நின்று போராடவும், அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
அவனை மென்மையாக நடத்துங்கள்; ஆனால், அரவனைக்க வேண்டாம். ஏனெனில் நெருப்பில் புடம் போட்டால்தான் நேர்த்தியான எஃகு கிடைக்கும்.
பொறுமையின்றி இருக்க தைரியம் பெறட்டும். தைரியத்துடன் இருக்க பொறுமையுடன் இருக்கட்டும். எப்போதும் தன்னுள் விழுமிய நம்பிக்கையுடையவனாய் விளங்கட்டும். அப்போதுதான் அவன் மனிதைனத்தின் மீது விழுமிய நம்பிக்கையுடையவனாய் இருப்பான்.
இது ஒரு பெரும் கட்டளைதான்; ஆனால், உங்களால் என்ன செய்ய இயலும் என்று பாருங்கள். அவன் சின்னஞ் சிறுவன், என் மகன்.
***
***
நன்றி : தாஜ் | satajdeen@gmail.com