Tuesday, December 18, 2012

நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல... 
 

                        
நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல..வாழ்வில் ஒவ்வோரு வினாடியும் நாம் வாழ போரடுகிறோம் .. 
ஒரு சாதாரண நிகழ்வு சுவாசித்தல்..அதற்கு கூட வெளியில் இருக்கும் காற்றை உள்ளே அனுப்ப போராடுகிறொம்.. 
ஒரு தினத்தில் ஒவ்வொரு நிமிடமும் நம்மை பார்த்து பார்த்து செதுக்குகிறது. 
இந்த உலகை பார்க்கவே நீ வெளிவர உனக்கும் வெளி தள்ள உன் அம்மாவுக்குமான இடுப்பெலும்பு கோட்டையின் போரில் வென்று தானே உலகை பார்த்தாய்..பின் ஏன் சோர்ந்து போகிறாய்?.. 

                               
இந்த உலகம் மாற்றம் நிறைந்தது ..நேற்றைய குழந்தை இன்றும் குழந்தையாக இருப்பதில்லையே..வாழ்க்கையும் அப்படி தான் ,மாற்றம் எனும் வார்த்தை தவிர அனைத்துமே மாற கூடியதே... 
நாட்கள் செல்ல செல்ல உன் இலக்குகள் அதிகரிக்க வேண்டும்..உன் எல்லைகள் வரையறுக்க பட வேண்டும் .. 
ஆலமரம் ஒரு போதும் தன் விதைகள் சிறிதாக இருப்பதற்கு கவலை பட்ட்து கிடையாது...தான் ஒரு பெரிய விருக்‌ஷம் என கர்வபட்ட்தும் கிடையாது.. 
உனக்குள் ஆல மர விதை போன்ற அன்பு ஒளிந்து கிடக்கிறது ..நீ மட்டும் அன்பை வளர்த்து பார்... 

                               
ஒரு நாள் இந்த உலகில் விருக்‌ஷமாக வியாபித்து நிற்பாய்..உன் அன்பெனும் கிளையில் ஆயிரமாயிரம் கிளிகள்,புறாக்கள்,இன்னும் எத்தனையோ ஜீவன்கள் உன் அடைக்கலத்தில் வாழ்ந்திருக்கும்.. 
வாழ்வில் ஒரு நியதி உண்டு ..எப்போதும் ஒரு நல்ல தரமான விதை ஒரு பாறை இடுக்கில் விழுந்தால் கூட எப்படியாவது கற்றின் ஈரம் எடுத்து மண் துகள் சேகரித்து சில நாட்களில் வேர் விட்டு விடும் .. 
 

                                     

.ஆனால் ஒரு தரமற்ற விதை எத்துணை பண்படுத்தப்பட்ட தரமான விளை நிலத்தில் கூட துளிர் விடாமல் வீணாகி போய் விடுகிறது...நீ ஒரு தரமான விதை..இந்த சமூகத்தில்...ஒரு போதும் வீணாகி போய் விட கூடாது... 

                                                 

ஒவ்வோரு தடைகளையும் உன் படிகற்களாக்கி உன் பாதையை வகுத்து கொள்...உன் வானம் உன் கைக்கு எட்டும் தூரத்தில் தான்..நிலவை கூட நீ எட்டி பிடிக்கலாம்... நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல.. 


 

                         
பொய்யான போதையில் உன் மெய்யான பாதையை தொலைக்காதே..நம்பிக்கை மட்டும் தான் வாழ்க்கையை நடத்துகிறது.நாளைய தினம் எப்படி என நமக்கு தெரியாததால் மட்டுமெ வாழ்வு சுவாரஸ்யம் மிகுந்த்தாகி போய் விடுகிறது.. 
வாழ்வே நாம் பார்க்கும் கோணத்தில் தான் அமைகிறது..எனவே உன் வாழ்க்கை உன் கையில்... ஒவ்வோரு தடைகளையும் உன் படிகற்களாக்கி உன் பாதையை வகுத்து கொள்.. ..வெற்றி உன் இலக்கு..சாதனை புத்தகத்தில் உன் பெயரை தலைப்பாக்கு.. நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...
::::எழுத்து இணையம் :::

காதல் திருமணங்களும், மணமுறிவும் ..


                


இப்போதைய காலகட்டத்தில் காதல் திருமணங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரித்து உள்ளதோ, அதே அளவிற்கு அந்த காதல் திருமணங்கள் முறிவடைந்தும் போகின்றது. 
காதல் திருமணத்தை ஆதரிக்கும் கூட்டமாக உள்ள நாங்கள்,இது பற்றி இப்போது மிகவும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

                              

காதல் திருமணங்கள் அரங்கேறிய வேகத்திலேயே முறிவடைந்து போவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது புரிந்துணர்வு இல்லாமை,கவர்ச்சி மோகம், ஆடம்பர வாழ்க்கையில் மோகம்,ஆணாதிக்க சிந்தனையில் உள்ள ஆணும் சுதந்திரம்,பெண்ணுரிமை பற்றிய தெளிவில்லாத மனநிலையில் உள்ள பெண்ணும் இன்றைய காதல் ஜோடிகளாக வலம் வருவதால், கல்யாணமான சில காலத்திலேயே மணமுறிவுக்கு வருகின்றார்கள். 


 

                      
இன்னும் ஒரு முக்கியமான நிகழ்வாக நாம் பார்ப்பது அநேகமான காதல் திருமணங்களில் பெற்றோரின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் காதலனும் காதலியும் கணவன் மனைவி ஆகும் போது தமது பொறுப்புக்களில் இருந்து தவறுவதும்,பெண்களிற்கு பாதுகாப்பு மிகவும் குறைவாகவும் இருப்பதுடன், காதல் திருமண ஜோடிகளிடையே ஒரு அலட்சிய மனபாங்கு காணப்படுகின்றது.இவ்விதமான மன பாங்கு நாளடைவில் திருமண முறிவுக்கு காரணமாகின்றது.. 

                           காதல் திருமணமோ இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருப்பினும்,தேவையில்லாத ஆசைகளையும் ஆடம்பரங்களையும் குறைத்து, ஒழுக்க விதியை மாறாமல் தர்ம நியாயப்படி வாழ்ந்தால் தேவையிலா மணமுறிவை குறைக்க முடியும். 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையவர் 
என்பும் உரியர் பிறர்க்கு ...........

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!


                     நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு 
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான 
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி 
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்! 
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" 
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். 

                                          


இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது... 


                        
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு... 
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்... 
அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் 
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...! 
அதுவும் உங்களால் தான் முடியும்... 

படித்ததில் பிடித்தது... 
நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.

தலைக்கவசம் மிக மிக அத்தியாவசியத் தேவை


                                         

படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெரும்பாலானோர் தலைக் கவசம் அணிவதில்லை. இருசக்கர வாகனங்கள் ஓட்டும் அனைவருமே கண்டிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும். வேண்டாம் என்போர் ஆயிரம் காரணங்கள் சொல்வர். அறிவுடையோர் ஒவ்வொருவரும் தலைக் கவசத்தின் அவசியத்தை உணர்ந்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 


 

                            
தலைக் கவசம் வேண்டாம் என்பதற்கு அவரவர் பல காரணங்களை சொல்கின்றனர். தலைமுடி கலைகிறது. தலையில் வேர்க்கிறது, பின்வரும் வாகனங்களின் ஒலி கேட்கவில்லை, தலை கழுத்து வலிக்கிறது என பல நொண்டிச் சாக்கு காரணங்கள்.
தினம் தினம் நடக்கும் சாலை விபத்துக்களில் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்த உறவினர், நண்பர்களின் சொந்தங்களே தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்வதில்லை, தலைவிதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மீண்டும் தலைக்கவசம் இல்லாமல்தான் வாகனங்கள் ஓட்டுகின்றனர். 


                               

நான் ஓரமாகத்தான் ஓட்டுகிறேன், நிதானமாகத்தான் ஓட்டுகிறேன், மெதுவாகத்தான் ஓட்டுகிறேன் என்றெல்லாம் சொல்லலாம். செல்லும் வழியில் உள்ள சாலைகள், மற்ற ஓட்டுனர்கள், மேடு பள்ளங்கள், வேகத்தடுப்புகள் அனைத்தும் நல்லபடியாக இருக்கவேண்டுமே! 
சிறு கல் தடுக்கிவிடலாம், ஆடு, மாடு, நாய்கள் குறுக்கே வரலாம். திடீர் திருப்பங்கள், சாலையில் எண்ணெய் கசிவுகள், மணல் திட்டு்கள் ஆகியன சறுக்கிவிடலாம். விபத்துகள் நாம் எதிர்பார்த்து வருவதல்ல.

                        
எதிர்பாராமல் கீழே விழும்பொழுது மண்டையோட்டின் ஒரு புள்ளியில் (point) அடிபட்டாலும் கூட சிதறு தேங்காய் போல மண்டையோடு உடைவதுடன், அத்துடன் இணைந்த ரத்த குழாய்களும் தாறுமாறாக கிழிந்து, மூளைப்பகுதிக்குள் ரத்தக்கட்டு பெருகி மூளை செயல்பாட்டை இழந்துவிடும். மூளைச் சாவு ஏற்பட மிகுந்த வாய்ப்புண்டு. 


விபத்து நமக்கு ஏற்படாது, நான் சாக்கிரதையாகத்தான் ஓட்டுகிறேன் என்று அசட்டுத் தைரியம் கூடாது. நம் எதிரிலோ, பின்னாலோ ஓட்டுபவர்களும் அவ்வளவு எச்சரிக்கையாக வருவார்கள் என்பது நிச்சயமல்ல. இன்று வாகனம் ஓட்டும் நிறையப் பேர், மாணவர்களும் சரி, அலுவலகம் செல்வோரும் சரி, மற்ற தொழிலாளிகளும் சரி வேலைக்குப் போகுமுன்பும், வேலை முடிந்து வரும்பொழுதும் மதுவருந்தியே செல்கின்றனர். எனவே தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்ட எந்த விதமான காரணங்களோ, சால்ஜாப்புகளோ சொல்லக் கூடாது. 


 

           
விபத்தினால் ஏற்படும் இறப்பைத் தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மிக மிக அத்தியாவசியத் தேவை. நாம் ஆரோக்கியமுடன் வாழ 'தலைமுடியா, உயிரா' என்பதை நாம் அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

ஓடி விளையாடு பாப்பா!ஓடி விளையாடு பாப்பா - நீ 
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா 
கூடி விளையாடு பாப்பா - ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா 

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு 
மாலை முழுதும் விளையாட்டு - என்று 
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா 
 

                             

பாரதியின் இந்த வரிகளை படிக்காதவரில்லை. ஆற்றல் மிகுந்த இந்த தொலைநோக்கு கொண்ட வீரத்தமிழனின் வரிகளை வெறும் நான்கு மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமே பள்ளியில் புகட்டுகின்றனர். 

மழலை மாறாத வயதிலேயே பள்ளியில் அதிக நேரம் செலவிட வைத்து, மாலை வீடு திரும்பியவுடன் தனி வகுப்பு சென்று பாடம், இரவு வீடு திரும்பியவுடன் பள்ளி வேலைகள் என்று விளையாட வேண்டிய இந்த வயதில் காலை முதல் மாலை வரை புத்தக மூட்டை சுமக்கும் சுமை தாங்கியாக மாற்றியுள்ளது இன்றைய உலகம்.

                                

என்னதான் மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க அரசு முப்பருவமுரையை கொண்டு வந்தாலும், இன்று அவர்கள் மன நிலை ஒரு இயந்திரம் போலவே தான் உள்ளது. 

சர்வதேச தரம் கொண்ட பள்ளிகள் என்று திறக்கப்படும் பள்ளிகள் எல்லாம் ஊருக்கு வெளியே தான் திறக்கப்படுகின்றன. அங்கு தான் இடம் இருக்கிறது என்று அதை நியாயப் படுத்தினாலும், அது ஊருக்கு வெளியில் தானே! 

காலை ஏழு மணி முதலே மழலைகள் பள்ளிப் பேருந்திற்காக வெளியில் காத்திருப்பதை பார்த்தால் சில சமயம் பரிதாபமாக தான் உள்ளது. 

சில சர்வதேச பள்ளியில் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு வரை அங்கேயே வழங்கப் படுகிறது. அந்த அளவிற்கு வீட்டை விட்டு வெளியே சென்று படிக்க வைக்க பெற்றோர்கள் முடிவு செய்ய காரணம் பின்னாளில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற காரணம்! 

நல்லறிவு, ஆங்கில அறிவு தான் காரணம் என்றால் அது வீட்டருகில் இருக்கும் நம்மூர் பள்ளிகளிலேயே கிடைக்கும்! 

                                      

ஓடி விளையாட வேண்டிய வயதில், வீட்டிலேயே இயக்குபிடி வைத்துக்கொண்டு தொலைக்காட்சிப்பெட்டியிலும், கணிப்பொறியிலும், கை பேசியிலும் தான் விளையாடும் நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளனர். 

நாம் மட்டும் எண்ணில் அடங்காத பல விளையாட்டுகளை தெருவில் விளையாடிவிட்டு, பெரும் கூட்டம் கூடமாக அக்கம் பக்கத்துக்கு வீட்டு நண்பர்களோடு கூடி விளையாடிவிட்டு இக்கால குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருப்பது எதனால்? 

கண்ணாம்பூச்சி, கல்லா-மண்ணா, திருடன்-போலீஸ், பூதொட்டி, கில்லி-தண்டா, சடுகுடு, ஓட்டப்பந்தயம் என்று கணக்கில்லா ஆட்டங்களை விளையாடி மகிழ்ந்தோம். இன்று வீதியில் நடக்கும்போது அங்கு சிறுவர்கள் விளையாடுவதை காண முடியவில்லை! 

குலை குலையை முந்திரிக்காய் என்று அன்று நாம் விளியாடிய பொது தெருவிற்கே கேட்கும் அந்த சத்தம், இன்று எங்கும் கேட்பதில்லை! 

நமது தொன்று தொட்டு வந்த விளையாட்டுகள் இன்று மறைந்து வருகின்றன. பாண்டியாட்டம், பல்லாங்குழி, நான்கு சோழி, பரமபதம் என்று கூட்டம் கூடமாக விளையாடிய இந்த ஆட்டங்கள் இன்று எங்கும் காண இயலவில்லை! 


நமது பாரம்பரிய ஆட்டங்கள் வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு ஆட்டத்திலும் சில அர்த்தங்கள் மறைந்திருந்தன. பலாங்குழி, பரமபதம் - வேகமாக கணக்கு போட வைத்தது, நான்கு சோழி - ஆற்றலை வளர்த்தது, சடுகுடு, கண்ணாம்பூச்சி - நண்பர்களோடு ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கியது. இதுபோல பலபல அர்த்தங்கள் நிறைந்த விளையாட்டுகளாக இருந்தன நமது தமிழ் விளையாட்டு. 

ஆனால், இன்றைய மேற் குறிப்பிட்ட நவீன மின்ன்னணு விளையாட்டுகளும், தொலைக்காட்சியும் சாதித்த இன்று - சிறு வயதிலேயே குழைந்தைகளை மூக்கு கண்ணாடி போட வைத்தது தான்.   

                    என் குழந்தை POGO பாத்தாதான் சாப்பிடுவான் என்றும் பெருமை பட்டுக்கொள்ளும் அந்த பெற்றோருக்கு தான்; தன் குழந்தையை வெளியில் சென்று விளையாட சொல்லும் கடமை நிறைந்திருக்கிறது! 

தொலைக்காட்சியும், ஏனைய இயந்திரங்களும் தான் சிறு வயதிலேயே அவர்களை வீட்டில் கட்டிப்போட்டிருக்கிறது! 

குழந்தைகளுக்கு இனி பாடத்தை கற்பிக்கும் பொது , அதன் அறத்தை கற்பித்தால், நாம் சொலாமலேயே வீதியில் சென்று விளையாட செல்வார்கள். 

இனியும் நீ ஓய்ந்திருத்தல் ஆகாது பாப்பா, நீ ஓடி விளையாடு பாப்பா.
  ::::எழுத்து இணையம் :::

எதிரி நீங்க தான்..........


நம் ஒவ்வொருக்கும் வாழ்கையின் மீது தனியொரு தோற்றம் இருக்கிறது. ஒவ்வொருக்கும் வாழ்கை பற்றி தனி தனி கண்ணோட்டங்கள், எண்ணங்கள்.. ஒரு சிலர் அவர்கள் வாழ்கையை அவர்களே சிக்கலாக மாற்றுகிறார்கள். மனித உறவு அன்புடன் தொடங்குகிறது, அன்புக்காக ஏங்குகிறது, அன்பை தேடி அலைகின்றது. 

நான் சந்தித்த ஒருவருக்கு நல்ல கல்வி, கை நிறைய சம்பாத்தியம், நல்ல குடும்பம் என வாழ்கை அமைந்தாலும் அந்த நபர்க்கு இன்னும் வாழ்கையில் திருப்தி இல்லை. அந்த நபரிடம் நான் சிறிது உரையாடினேன், அப்போது அவர் தான் இப்போது உள்ள அந்தஸ்தை விட அதிகமாக உயர வேண்டும், அதை பற்றிய கவலையில் உள்ளேன் என்றார். அவருடைய கவலைக்கு என்ன காரணம்? அடிப்படை தேவைகள் பூர்த்தியான பிறகு அடுத்து பிறதேவைகள் மற்றும் விருப்பங்கள் அவரை ஆடம்பர வாழ்வின் தேடலுக்கு ஓட்டிக்கொண்டு செல்கிறது. பைக்கில் பயணிக்கும் ஒருவருக்கு அடுத்து கார் வாங்க ஆசை, கார் வாங்கிய பிறகு அடுத்து அதிலே அதிக சொகுசு உள்ள கார் வாங்க ஆசை, இப்படியே அவனின் மனம் கிடைத்ததை பற்றி மகிழாமல் இல்லாத ஒன்றை தேடி தேடி மனம் அமைதியை தொலைக்கின்றது. 

அந்த மனிதரை போல நம் கண்கள் முன் பல நபர்கள் தங்களின் வாழ்கையில் கிடைத்த பல நல்ல விஷயங்களை நினைத்து மகிழாமல், இல்லாத ஒன்றை தேடி தேடி அவர்களின் வாழ்கை பயணம் ஏக்கத்துடன் செல்கிறது. நிறைவேறிய ஆசை, வேண்டிய வசதி, கிடைத்த அன்பு இருந்தும் இன்னும் அதிக ஆசை, அதிக ஆடம்பரம், அதிக வசதி, அதிக அன்புக்காக மனிதன் நிம்மதியை தொலைத்து கவலையில் மூழ்கிறான். வாழ்க்கை என்பது ஒரு பயணம், நம் பயணத்தில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் பலர் வாழ்கையின் எளிய உண்மையை புரிந்துகொள்வது இல்லை. உங்களுக்கு அமைந்த வாழ்கையை நினைத்து மகிழ்ச்சியுடன் பயணியுங்கள், உங்களின் வாழ்கையில் இல்லாத ஒன்றை நினைத்து கவலைக்கொள்ளாதிர்கள்.
                         ::::எழுத்து இணையம் :::