Monday, December 31, 2012

சே குவேராவின் பிரபலமான கடிதங்கள்....


 பெற்றோருக்கு எழுதிய கடிதம்.


   


என் அன்பிற்குரியவர்களே, 

கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது.


சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் விடை பெற்று, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருந்தி எழுதியிருந்ததை இபொழுது நினைவு கூர்கிறேன். இன்று, நான் அத்தனை மோசமான ஒரு படைவீரன் அல்ல.

எனது நம்பிக்கை மேலும் உறுதியடைந்துள்ளது. என்னுடைய மார்க்சியம் ஆழமானதாகவும் தூய்மையானதாகவும் மாறிவிட்டது. சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களுக்கு ஒரே வழி, ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையின்படி நடக்கிறேன்.

சிலர், என்னை ஒரு சாகசக்காரன் என்று அழைக்கலாம். நான், சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம். தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்து கொள்ளத் தயங்காத சாகசக்காரன்.

இதுவே என்னுடைய கடைசிக் கடிதமாகவும் இருக்கலாம். நடக்க இருப்பதை தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது. ஒரு வேளை அப்படி நடந்துவிடும் எனில், இப்போதே என்னுடைய தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நான் உங்கள் அனைவரையும் ஆழமாக நேசிக்கிறேன். என்னுடைய நேசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை.

என்னுடைய வழியில் நடப்பது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். ஆனால், பல சமயங்களில் நீங்கள் என்னைச் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு வேளை, என்னைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போதைக்கு என் மீது நம்பிக்கை வையுங்கள். அது போதும் எனக்கு.

எனது கால்கள் தொய்ந்துவிட்டன. நுரையீரல்கள் ஓய்ந்து விட்டன. ஆனால் என் மனஉறுதி, எல்லாவற்றையும் சரிசெய்யும்.

இருபதாம் நூற்றாண்டின் இந்தச் சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.

அன்பு தாய், தந்தையே! உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இந்தத் தறுதலைப் பிள்ளை உங்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறான். ஏற்றுக் கொள்ளுங்கள்.

- எர்னஸ்டோ -


 
 

மனைவிக்கு எழுதிய கடிதம்

பிரியமானவளே!

உன்னைப் பிரிந்து போவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய். 

தைரியத்தை இழந்து விடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன். 

காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்றுஎண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது. 

உன் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன். 

இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித்தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

- சே -
 

குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.


அன்புள்ள ஹில்டாஅலெய்டாகாமிலாசிலியாஎர்னஸ்டோ!

நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நான் உங்களுடன்இருக்க மாட்டேன்.

உங்களுக்கு என்னை அதிகம் நினைவிருக்காதுஉங்கள் தந்தைதனது நம்பிக்கைகளுக்கு நேர்மையாக இருப்பவன்தனதுதத்துவத்துக்கு விசுவாசமாக இருப்பவன்.

நீங்கள் அனைவரும் நல்ல புரட்சிக்காரர்களாக வளரவேண்டும்.நன்றாகப் படிக்க வேண்டும்தொழில்நுட்பத்தைப் பற்றி நன்றாகத்தெரிந்துகொள்ளவேண்டும்.

தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்லபுரட்சி ஒன்றே மிகமுக்கியமானதுஉலகத்தில் எங்கேனும் யாருக்காவதுகொடுமைகள் நடந்தால்அவர்களுக்காக வருத்தப்படுங்கள்.

குழந்தைகளேஉங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.மீண்டும் உங்களை காண்பேன் என்று நம்புகிறேன்.மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்


அன்புள்ள ஹில்டா,

இந்த கடிதத்தை நீ நீண்ட காலத்துக்குப் பிறகுதான் படிப்பாய். உன்னைப் பற்றித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ இப்போது வளர்ந்து விட்டிருப்பாய். ஒரு குழந்தைக்கு எழுதுவதைப் போல் செல்லம் கொஞ்சி எழுத முடியாது.

நான், உன்னை விட்டு வெகு தொலைவில், நமது எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான், உன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொள்வதைப் போல், நீயும் என்னை நினைத்து பெருமை படுவாய் என்பது என் நம்பிக்கை.

நீண்ட காலத்துக்குப் போராட வேண்டியிருக்கிறது. ஆகையால், நீயும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைத் தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறைய படி. அம்மா சொல் பேச்சைக் கேள்.

எல்லா விதத்திலும் சிறந்தவள் என்று பெயர் எடுக்க வேண்டும். நல்ல நடத்தை, அர்ப்பணிப்பு, தோழமை உணர்வு போன்றவற்றை வளர்த்துக் கொள். உன்னுடைய வயதில் நான் அப்படி இல்லை. நீ வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பொருத்தமானவளாக நீ இருக்க வேண்டும்.

பெரிய மனுஷியே! உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் பிரிந்திருக்கும் காலத்துக்கும் சேர்த்து வைத்து ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

                                                                                            -அப்பா -
------------------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்
No comments:

Post a Comment