Monday, December 31, 2012

கைபேசியில் கத்தும் பெண்கள் ..!


                               



கைபேசியின் அழைப்பு சத்தத்தை கேட்ட உடனே சில பெண்கள் எரிச்சலடைந்துவிடுகிறார்கள். பின்பு போனை ‘ஆன்’ செய்த உடன் கத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கத்துவது பலரையும் முகம் சுளிக்கவைத்துவிடுகிறது. இந்த கூத்து, செல்போன் வந்த பின்புதான் தொடங்கியிருக்கிறது.

கன்னாபின்னாவென்று தேவையற்ற நேரத்தில் பேசுவது, வைக்கவிடாமல் தொடர்ந்து பேசுவது, சாலை விதிகளைக் கூடமதிக்காமல் பேசிக்கொண்டே கடப்பது, வாகனம் ஓட்டும் போது பேசுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது இதெல்லாம் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. இன்றைய இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்த நவீன சாதனங்களில் கைபேசி முதலிடம் வசிக்கிறது. நவீன வசதிகள் நமக்காக கிடைக்கும்போது அதை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள நமக்குத் தெரிய வேண்டும். அதை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா, ரவுடியாக பயன்படுத்துகிறோமா என்பது நமது மூளை சார்ந்த விஷயம்.

ஸ்ருதி நல்ல பெண்தான், அவள் கைக்கு செல்போன் வரும்வரை! அது வந்த பின்பு, அவள் செயல்பாடே மாறியது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்பும் அலுவலக தொடர்புடைய அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும். இவளும் முதலில் பொறுமையாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் டென்ஷன் தலைக்கேறி அடிக்கடி கத்துகிறாள். செல்போன் அழைப்பு வந்தாலே அவள் மனநிலை மாறிவிடுகிறது. எரிச்சல் அடைகிறாள். முதலில், ‘மறு முனையில் இருப்பவர்கள் நிலைமை தெரியாமல் பேசுகிறோமே’ என்ற குற்றஉணர்வு அவளுக்கு கொஞ்சம் இருந்தது. பின்பு அந்த குற்றஉணர்வு மறைந்து அதுவே அவளது இயல்பாகிவிட்டது. கத்துவதை தவறென்று அவளும் உணரவில்லை. அவளது குடும்பத்தாரும் அதை மாற்றியமைக்க முயற்சிக்கவில்லை. விளைவு, ஒருநாள் தன் மேலதிகாரி என்று தெரியாமல் காட்டுக்கத்தல் கத்திவிட்டாள். அநாகரீகமான அவளுடைய செய்கையை பார்த்து அதிர்ந்து போனார் அதிகாரி. பிறகென்ன அவள் அந்த வேலையை விடவேண்டியதாயிற்று.

எதை சிந்தினாலும் பொறுக்கி எடுத்துவிடமுடியும். ஆனால் பேசுவதை திரும்பி எடுக்க முடிவதில்லை. செல்போனில் பேசுவது பதிவாகிவிடவும் செய்கிறது. யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகள் நம்மை வளப்படுத்த வேண்டும். கைபேசி என்பது ஒரு இணைப்புச் சாதனம். அதன் மேல் நம் கோபத்தை காட்டக் கூடாது. யாராக இருந்தாலும் பணிவுடன் பேசுவதில் தவறொன்றுமில்லை. கைபேசியை வைத்துக் கொண்டு சுற்றியிருக்கும் உலகத்தையே மறந்து கூச்சல் போடுவது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.



                         

வனஜா என்ற பெண்மணி கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு கையில் பெட்டியோடு அம்மா வீட்டுக்கு புறப்பட்டு விட்டாள். பாதிவழியில் அவளுடைய கைபேசி கிணுகிணுத்தது, எடுத்து பேசினாள். அவளை சமாதானப்படுத்தி கணவர் திரும்ப அழைத்தார். அந்தப் பெண்மணியோ அவர்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சத்தமாகப் பேசினாள். ‘உங்களுடைய நடவடிக்கை சரியில்லை. இனி உங்களோடு என்னால வாழ முடியாது’ என்றாள். பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு உண்மையை ஆத்திரத்தோடு கொட்டிவிட்டாள். ‘உங்களுக்கு என் தந்தை சீர் வரிசையாக தந்த ஐம்பது பவுன் நகையையும் நான் எடுத்து வந்துவிட்டேன். இது என் அப்பா சம்பாதித்தது. இதை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு அங்கேயே இருந்துவிடப் போகிறேன் என்றாள்.

யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு சாதாரண சூட்கேசில் இருந்த ஐம்பது பவுன் நகையை அவள் செல்போன் பேச்சு காட்டிக்கொடுத்துவிட்டது. ஆட்டோ ஏறினாள். பின்பு பஸ் ஏறினாள். போகிற போக்கில் பின் தொடர்ந்த சிலர் திட்டமிட்டு அந்த சூட்கேசை பறித்துவிட்டு சென்றனர். இப்போது நகையும் இல்லை. கணவரும் இல்லை. தந்தையோடு கண்ணீரில் காலம் தள்ளுகிறாள். முன்பு லேண்ட்லைன் போன் வீட்டில் இருந்தது. பேசும் விஷயங்கள் மறைவாக, ரகசியமாக இருந்தது. இப்போது செல்போன் வந்து, நடுத்தெருவைக்கூட பேசும் இடமாக மாற்றிவிட்டது.

                                                

நம்முடைய வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு நவீன சாதனத்தை இப்படிநமக்கே குழிபறிக்கும் அளவுக்கு விட்டது யார், நாம்தான்! முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு கைபேசியை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுத் தர வேண்டியதிருக்கிறது. அவர்களைப் பற்றிய முக்கியமான தகவல்கள், போகுமிடம் எல்லாம் கைபேசி மூலம் மற்றவருக்கு சுலபமாக தெரியப்படுத்திவிடுகிறார்கள். ஒருவர் கைபேசியில் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்பதை உற்றுக் கேட்டால் போதும் அவர்களைப் பற்றிய முழுத் தகவலும் மற்றவருக்கு தெரிந்துவிடும்.

கைபேசியில் பேசும்போது பலருக்கு எதிர்முனையில் இருப்பவர் மட்டும் தான் நினைவில் இருக்கிறார்கள். சுற்றியிருக்கும் சூழல் மறந்துவிடுகிறது. கைபேசியில் பேசுவது ஒரு கலை. அந்த கலையை பயன்படுத்தி பேசி, பலர் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு, உறவுகளை நன்றாக பராமரிக்கிறார்கள். உங்கள் அருகில்கூட அப்படி ஒருவர் இருப்பார். அவரிடமிருந்து அந்த நல்ல கலையை கற்றுக்கொண்டு நீங்களும் பயன்படுத்துங்கள். சில நேரங்களில் தவறான அழைப்பு வந்து நம்மை தொல்லைப்படுத்தும். பொறுமையாக அதை நிராகரிக்கலாம். நாம் தவறாக யாருக்காவது போன் செய்து விட்டால், மன்னிப்பு கோரலாம். கைபேசியை நமக்கு துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். வினையாக மாற்றிக் கொள்ளக்கூடாது.
-----------------------------------------------------------------------------------------------------
தினத்தந்தி

No comments:

Post a Comment