Thursday, December 20, 2012

பசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்


                 

உச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவரும். அம்மா அறைக்குள் அழுதபடி இருந்தார். ஒரு புறம் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்ற கவலையாக இருக்கலாம். மறுபுறம் அப்பாவிடம் இரவும் காலையும் வாங்கிய அடியினால் ஏற்பட்ட வலியாகவும் இருக்கலாம்.
நேற்று இரவு அப்பா காசு கொண்டுவருவார் என நம்பிக்கொண்டு காத்திருந்தோம்.. அவர் காசு கொண்டுவந்தால் காலையும் மதியமும் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என அவாப்பட்டுக்கொண்டும் மனம் அங்காலாய்த்துக்கொண்டும் இருந்தோம். இப்பவெல்லாம் நல்ல சாப்பாடு என்பது காலையில் ஒரு துண்டுப் பாணும் சினியும் அல்லது வாழைப்பழமும் மதியம் பருப்பும் தக்காளிக் குழம்பும் தான். ஆனால் அப்பா காசு கொண்டுவரவில்லை. நாம் நித்திரை கொள்ளும் நேரம் குடித்துவிட்டு ஆடி ஆடி வந்து சேர்ந்தார். அம்மாவுக்கு கோவம் பொத்துக்கிட்டு வர, திட்டு திட்டு என அப்பாவை திட்டினார். “இந்த மனுசன நம்பி வந்தனே…” எனப் புலம்ப தொடங்கியவர்… “…அந்தாளும் (அவரது தகப்பன்) இந்தாள (கணவரை) நம்பி கட்டிக்கொடுத்து விட்டு மேலே போய்ட்டுது… நான் தான் கஸ்டத்தை அனுபவிக்க வேண்டும்…வீட்டில சமைக்க ஒன்றும் இல்ல… பிள்ளைகளும் பசியில இருக்குதுகள்… இந்த மனுசனுக்கு இதிலெல்லாம் அக்கறையில்லை…. ஆன குடி மட்டும் வேண்டிக்கிடக்குது….” என வழமைபோல தனது கஸ்டங்களை சொல்லி முடித்தவர்… சிறிது நேரத்தில் பொறுக்க முடியாமல் தன் கணவரின் கோட்டைப்பிடித்து இழுத்து “உங்களுக்கு மூளை இல்லையா…” என உலுக்கினார். அப்பாவுக்கும் குடியிலும் ரோசம் பொத்துக்கொண்டு வந்தது… தனது பலம் முழுவதையும் திரட்டி அம்மாவின் கண்ணத்தில் “பளார்” என ஒரு அறைவிட்டார். பசிக்களையுடன் இருந்த அம்மாவிற்கு தன் மீது இடி விழுந்ததுபோல் இருந்திருக்கவேண்டும் சுருண்டுபோய் ஒரு மூலையில் கிடந்தவர்… மூக்கை சீறி சீறி தனது சாரியில் பிறட்டியவாறு அப்பாவைத் திட்டிக் கொண்டும் அழுதுகொண்டு அந்த அறையின் ஒரு மூலையில் இருந்தார்… அப்பாவும் அம்மாவிற்கு அடித்த அடியில் சக்தியிழந்து இன்னுமொரு மூலையில் தூங்கிப்போனார்…. நாமும் (குழந்தைகள்) பசிக் களையில் இவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியில் தூங்கிப் போனோம்….
காலையில் அப்பாவும் அம்மாவும் மீண்டும் சண்டை போடும் சத்தம் கேட்டு நாம் கண்விழித்தோம் ஆனால் படுக்கையை விட்டு எழும்பவில்லை… அம்மா அப்பாவுடன் சண்டை பிடித்துக்கொண்டே அப்பா கக்குசுக்குப் (மலம்) போவதற்காக தண்ணியை ஒரு பக்கெட்டில் நிறைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றார்… ஒதுக்குப் புறமாக தொடராக இருந்த பத்து வாலி மலசல கூடங்களின் முதலாவதாக இருந்த ஒன்றிக்கு கொண்டு போய் தண்ணிப் பக்கெட்டை வைத்தார். இந்த மலசலக் கூடங்களை இப்பொழுது யாரும் அதிகமாகப் பாவிப்பதில்லை… எல்லோருக்கும் அவர்கள் வீடுகளுக்குள் நவீன மலசலக் கூடங்கள் இருக்கின்றன… அம்மா கக்குசை (மலசல கூடத்தை) சுத்தம் செய்து விட்டு அப்பாவை அழைத்தார்… அப்பா போனபின்… இந்த இடைவெளியில் அம்மா என்னை எழுப்பி “டேய் விடியிரத்திற்குள்ள ரோட்ல ஏதாவது காசு விழுந்திருக்கா எனப் போய்ப் பார்” என்றார்.
இன்றுபோல் அப்பா குடித்துவிட்டு வரும் மற்ற நாட்களிலும் மற்றவர்கள் எழும்புவதற்கு முதல் அதிகாலையிலையே சென்று ரோட்டு ரோட்டாக பார்த்து விழுந்திருக்கும் காசுகளைப் பொறுக்கி வருவேன் நான்… இது நிச்சயமாக அப்பாவின்ட காசுதான்…. இன்றும் காசு கிடைக்கும் என்ற அவாவில் நானும் அவசரஅவரமாக வெளிக்கிட்டு ஓடினேன்…. நேற்று இரவு பெய்த மழையில் மண்ணும் மரங்கள் செடிகள் கொடிகள் பூக்கள் என அனைத்தும் குளித்து சுத்தமாகவும் அழகாகவும் இருந்தன… இது அதிகாலையை அழகாக்கியதுடன் என் மனதையும் இதமாக்கியது…
சேர்க்குல ரோட்டுக்கு பஸ் டிப்போ ரோட்டாலா சுத்தி வராமல் குறுக்கால ஏற படிக்கட்டு ஒன்று இருக்கின்றது.. அப்பா குடித்து விட்டு வரும் நாட்களில் எங்களுக்காக ஏதாவது சாப்பாடும் கேக் துண்டுகளும் வாங்கிவருவார். ஆனால் இந்தப் படிக்கட்டுல ஏற முடியாமல் தடுக்கி தடுமாறி முதல் படிக்கட்டிலையே விழுந்து விடுவார்… பின் தட்டுத்தடுமாறி எழும்பி ரோட்டின் இந்த முலையிலிருந்து மற்ற முலைக்கு சென்று வளைந்து வளைந்து நடந்தும் ஆடிக்கொண்டும் வீட்டுக்கு வந்து சேருவார்… ஆனால் ஆரம்ப படிக்கட்டிலையே அவர் நம் மீதான அன்பு அல்லது அக்கறையினால் வாங்கி வந்த சாப்பாடுகள் எல்லாம் விழுந்துவிடும்… சிலநேரம் சில்லரைக் காசுகளையும் கொட்டிவிடுவார்… இன்றும் அந்தப் படிக்கட்டில் சாப்பாட்டு பார்சல் ஒன்று மழையில் நனைந்து கரைந்து போயிருந்தது… இது நிச்சயமாக அப்பா எங்களுக்காக வாங்கி வந்ததாகத்தான் இருக்கவேண்டும்… .ஆனால் இந்தமுறை சில்லறைக் காசு ஒன்றும் கீழே விழுந்திருக்கவில்லை…. மண்ணுடன் கரைந்து போன சாப்பாட்டை பார்த்த ஏக்கத்துடனும் காசு கிடைக்காத ஏமாற்றத்துடனும் வீட்டுக்குத் திரும்பிவந்தேன்…
அப்பா கக்குசுக்கு (மலம்) கழித்துவிட்டு வந்து காலையிலையே அம்மாவிடம் காசு கேட்டார்… “என்னட்ட எங்க காசு இருக்கு…… பிராங்கிளின் ஹொட்டல்  (அட்டனிலிருக்கின்ற சாரயக்கடைகளில் ஒன்று) முதலாளியிடம் போய் கேளுங்கோ… கிடைக்கிற காசையெல்லாம் அங்கதானே கொடுக்கிறனிங்கள்…” எனக் கத்தினார் அம்மா… அப்பாவுக்கு அதக் கேட்கப் பொறுக்கவில்லை… ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை… ”கனக்க கதையாமல்… வாய மூடு…” என ஆங்கிலத்தில் கத்தினார்… அம்மாவும் விடுவதாக  இல்லை…. அம்மாவும் யாரிடம் தான் சண்டைபிடிப்பது… அவவும் அமைதியாக இருக்கவில்லை… பதிலுக்கு கத்தினா… கடைசியாக காலையிலையே அப்பாவிடம் அடிவாங்கினா பின்தான் அழுதுகொண்டு அமைதியானார்… அப்பா வீட்டில் நிற்க முடியாமல் வழமையைப் போல தனது பரன (பழைய) கோட்டையும் போட்டுக்கொண்டு பைல் கட்டுக்களையும் தூக்கி தனது கமக் கட்டுக்குள் இறுக்கிக்கொண்டு வெளியே போனார்….
                                       
அப்பாவிற்கு நேற்றைய குடிவெறி இன்னும் அவருக்கு முறியவில்லை போல…. இல்லாவிட்டால் இப்படி காலையிலையே சண்ட பிடிக்க மாட்டினம்… விடியக்காலையிலையே எழும்பி சந்தோஸமாகக் கதைத்துக்கொண்டு தேத்தண்ணியையும் குடித்துக்கொண்டு கனவு காணத் தொடங்கிவிடிவினம்… ஆனால் இன்று விட்டுக்குள் சனியன் வந்துவிட்டதாக்கும்…. இப்பொழுதெல்லாம் எங்கள் விட்டுக்கு அடிக்கடி சனியன் வருகின்றது…. இப்படியான நாட்களையெல்லாம் அம்மாவும் அப்பாவும் சனியன் பிடித்த நாட்கள் என்றுதான் எப்பொழுதும் சொல்வார்கள்… நாட்கள் என்ன தவறுசெய்தனவோ…? அல்லது இந்த நாட்கள் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கின்றனவோ…? யாருக்குத் தெரியும்…
அம்மா இருந்த கொஞ்ச சீனியில் தேத்தண்ணி ஊத்தி எங்களுக்கும் தந்தா…. வாயைக் கொப்பளித்துவிட்டு அதைக் குடித்தோம்… கொஞ்நேரத்திற்குப் பின் கோபால் பற்பொடியைக் கொண்டு பல் விளக்கி… ஆளாளுக்கு ஒரு கப் தண்ணியில் முகம் கழுவிவிட்டு..“அம்மா… பசிக்குது அம்மா…” என அழுதோம்… ஒப்பாரி வைக்க ஆரம்பித்தோம் “சமைக்க ஒன்றும் இல்ல… பாண் வாங்கவும் காசில்ல… காலையிலையே ஒப்பாரி வைக்காம பேசாம இருங்கோ…” என்றார்… சில நாளைக்கு அம்மா சொல்வதைக் கேட்காமல் தொடர்ந்து கத்தி அழுதுகொண்டிருப்போம்… பத்து வயதைக் கடக்காத எங்களுக்கு அவர்களின் கஸ்டங்களப்பத்தி என்ன தெரியும்… ஆனால் இன்டைக்கு அப்படி அழுவதற்கு நம்மிடமும் சக்தி இருக்கவில்லை…. அதைவிட மேலும் கத்தி அழுதால் அப்பாவின் மேல் உள்ள கோவத்தை அம்மா எங்கள் மீதும் காட்டலாம் என்ற பயத்தினால் பசியுடன் பேசாம வெளியில் வந்து குந்தியிருந்தோம்…
பக்கத்து வீட்டு பிள்ளைகள் விளையாடக் கூப்பிட்டார்கள்… நாங்கள் வரவில்லை எனக் கூறிவிட்டு வெளிக் கானில் சும்மா உட்காட்ந்து அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்…. வீட்டுக்கு கீழேயிருக்கின்ற பள்ளத்தாக்கில் பெரும் ஓலி எழுப்பி பகல் பன்னிரெண்டு மணி பொடிமெனிக்கே சென்று கொண்டிருந்தது… விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடிச் சென்று மேட்டிலிருந்து அதைப் பார்த்து கொண்டு அதில் பயணிப்பவர்களுக்கு கையசைத்து ஆனந்தமடைந்தார்கள்… நாம் அதில் ஆர்வமில்லாது அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்… பக்கத்து வீட்டு ஆன்டி தன் குழந்தைகளை சாப்பிட வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு சென்றா…. நாம் வெளியில் தொடர்ந்து இருப்பதைக் கவனித்த அவவுக்குப் புரிந்திருக்கும்… இன்றைக்கு எங்கள் வீட்டில் சமையல் இல்லையென… “கேட்டால் சாப்பாடு கொடுக்கவேண்டும்… இப்படி கேட்டுக் கொடுத்தால் பின் ஒவ்வொரு நாளும் கொடுக்கின்ற பழக்கமாகிவிடும்”  என அவர் மனதுக்குள் நினைத்ததால் கேட்காமலே வீட்டுக்குள் போனா…

                                            
நாம் இருக்கின்ற இடம் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒட்டிக் கொண்ட பத்து வீடுகள் வரிசையாக இருக்கின்ற வீடுகள். பொதுவாக தேயிலைத் தோட்டங்களில் இவ்வாறு உள்ள வீட்டுத் தொடரை லயம் என்பார்கள். ஆனால் இதனைப் “பேலி” வீடுகள் என்பார்கள்.  வீட்டு வாசல்கள் இணைந்து… அனைவருக்கும் பொதுவான நீண்ட ஒரு முத்தம் இருக்கும்…. இந்த வீடுகளில் உள்ளமைப்பு…. ஆரம்பத்தில் ஒரு சிறிய விராந்தையிருக்கும். அதன் பின் பெரிய அறை இருக்கும். இதையே அனைவரும் படுக்கையறையாக பயன்டுத்துவார்கள். அதற்கடுத்ததாக சிறிய அறை ஒன்று. இதைச் சிலர் குசினியாகவும் பயன்படுத்துவர். இதற்குப் பின் சிறிய வெளியும் மண்மேடு அல்லது மலையின் மேட்டுப்பகுதியும் இருந்தது… இந்த மேட்டுப் பகுதியில் மேலும் இரு பேலி வீடுகள் இருக்கின்றன… பணம் இருக்கின்ற பெரும்பான்மையானவர்கள் இந்த வெளியை மறைத்து குசினியாகவும் குளிப்பதற்குற்கும் பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் விட்டுக்குள்ளே தமக்கான நவீன மலசலக் கூடத்தையும் கட்டினார்கள். இதுதான் இப்பொழுது பிரபல்யம். பத்தடி ஆழமான குழியை வெட்டி, சிமேந்தினால் கட்டி குந்தியிருக்கின்ற கக்கூசை கட்டுகின்றார்கள். இதனால் இவர்கள் பொது வாலி மலசலகூடத்தைப் பயன்படுத்துவதில்லை…. முன் வாசலிலிருந்து பார்த்தால் பின்பக்கம் வரை தெரிகின்ற மாதிரித்தான் வீட்டிற்குள் செல்வதற்கான வழி இருக்கும். இந்த வீடுகளின் கூரைகளிலிருந்து மழைக்காலங்களில் விழும் தண்ணீர் ஓடுவதற்காக கட்டப்பட்டதுதான் நாம் குந்தியிருந்த கான். வீட்டின் முன் உள்ள கான் வெய்யில் காலங்களில் காய்ந்துபோயிருக்கும். ஆனால் வீட்டின் பின்னாலுள்ள கானில் எப்பொழுது சமைத்த ஊத்தை தண்ணி நிறைந்து இருப்பதால் தூர்நாற்றம் அடித்துக் கொண்டேயிருக்கும்.
இவ்வாறன ஒரு வீட்டொன்றில்தான் முன் விராந்தையை அடைத்து எமக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். வீட்டின் பின்னால் கடைக்கோடியிலிருக்கின்ற குசினியை அம்மா மட்டும் பயன்படுத்தலாம். அங்கு செல்வதற்கு மட்டுமல்ல முன் விராந்தையைத் தாண்டிச் செல்வதற்கே நமக்கு அனுமதியில்லை. அம்மா தான் சமைத்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இந்தக் குட்டி அறைக்குள் வருவா. இந்த அறைக்குள்தான் நாம் சாப்பிடுவது… படுப்பது… சண்டைபிடிப்பது என எல்லாம் நடக்கும். அந்தப் பேலி வீடுகளில் நம்மைப்போன்று வாழந்தது நாம் மட்டும்தான். இன்று நமக்கு சாப்பாடு இல்லாத்தால் கானில் குந்தியிருந்து வானத்தை வாய் பார்த்துக்கொண்டிருந்தோம். பின் அருகிலிருக்கின்ற மண்ணைக் கிண்டி விளையாடியபடி கொஞ்ச நேரம்…. மதியவேளை ஆதலால் பக்கத்து வீடுகளிலிருந்து வரும் சமையல் மணம் நமது பசியை மேலும் அதிகரித்தது. இளமையில் வறுமையும் பசியும் குழந்தைகளுக்கு கொடுமை….

                                          
இப்பொழுது பாடசாலை விடுமுறை. இதனால் அங்கு கிடைக்கின்ற திரிபோசவும் பிஸ்கட்டும் இல்லாமல் போய்விட்டது. அதிருந்தால் அதை உருண்டை பிடித்தாவது சாப்பிடலாம்…. அல்லது பள்ளிக்கூடம் இருந்தால்… இப்படி சாப்பாடாமல் போகின்ற நாட்களில் உதயராஜ், நடராஜ், ஜெயராம், ரவீந்திரன் போன்ற நண்பர்களின் சாப்பாடுகளை பங்குபோட்டு சாப்பிடுவேன். நான் சாப்பிடுவதற்காக அவர்களே  தருவார்கள். இன்று அதற்கும் வேட்டு விழுந்துவிட்டது. இன்று வெள்ளிக்கிழமை என்றாலும் கோயிலுக்குப் போனால் ஏதாவது சாப்பிடலாம். பரிட்சைக்காலங்களைத் தவிர மற்ற நாட்களில் கோயிலுக்குப்போவது பிரசாதத்தை வாங்கி அந்த நேர சாப்பாடாக சாப்பிடத்தான். இந்தக் கையிலும் அந்தக் கையிலும் என மாறி மாறி வாங்கி அதிக பிரசாதம் கிடைத்தால் வீட்டுக்கும் கொண்டு வருவேன்… வீட்டார் பசியாற… அல்லது சில காலங்களில் அட்டனிலுள்ள  பெரிய பணக்கார்களான கடை முதலாளிகளின் உறவுகளின் கலியாண நிகழ்வுகள் மலை உச்சியிலிருக்கின்ற (பணக்கார) மாணிக்கப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நடைபெறும்… நாமும் போய் அந்தக் கல்யாணப் பந்தியில் குந்திவிடுவோம். அவர்கள் நமக்கு முன்பின் தெரியாதவர்களாக இருப்பார்கள். சிலர் யார் என்று பார்க்காமல் சாப்பாட்டு பந்தியில் இருக்க விடுவார்கள். சிலர் ஒரளவு நேரத்திற்குப் பின்தான் விடுவார்கள். சிலர் விடவே மாட்டார்கள். அப்படியான நாட்களில் ஏமாந்து வீடு திரும்ப வேண்டியதுதான்.
இன்று முஸ்லிம்களின் நோன்பு காலமாக இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். பக்கத்து வீடுகளிலிருக்கின்ற முஸ்லிம் குழந்தைகளுடன் நாமும் சென்று பள்ளி வாசலில் நோன்பிருக்கின்ற முஸ்லிம்களுக்கு கொடுக்கின்ற கஞ்சியும் ரொட்டியும் வாங்கி வருவோம். நல்ல ருசியான சாப்பாடு…. ஆனால் கடந்த வருடம் “நோன்பிருக்கின்ற முஸ்லிம் மதத்தவர்களுக்குத்தான் முன்னுரிமை…”  எனக் கூறி எங்களை பிச்சைக்கார்களுடன் நிற்கும்படி கூறிவிட்டார்கள். நாம் இங்கு எடுப்பது பிச்சைதான். ஆனால் நாகரிக பிச்சை. இதனால் பிச்சைக்காரர்களுடன் எம்மையும் நிற்பாட்டியது நமக்கு பெரிய அவமானப் பிரச்சனையாகப் போய்விட்டது. வெட்கமாகவும் போய்விட்டது… அதுவும் நாம் பிச்சைக்காரர்கள் உடன் வரிசையில் பின்னுக்கு நின்றதால் அந்த வரிசை பிரதான வீதியில் செல்வோர் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது… நம்முடன் படிப்பவர்கள் அப்பாவின் நண்பர்கள் தோழர்கள் கண்டால் மேலும் எங்கள் மானம் மட்டுமல்ல அப்பாவின் மானமும் போய்விடும் என்ற தவிப்பும் இருந்தது…. இதைவிட பிச்சைக்காரர்களுடன் நின்றபோது அவர்களிடமிருந்து வீசிய மணம் பொறுக்க முடியாதிருந்தது. ஆனாலும் பசி மானத்தை வென்று அதையும் பொறுத்துக்கொள்ளப்பண்ணியது. இந்த அனுபவத்தால் கடந்த வருடத்துடன் இனி நோன்பு காலங்களில் பள்ளிவாசலில் கஞ்சி வாங்கப் போவதில்லை என முடிவெடுத்திருந்தோம். பசியிருந்தாலும் பரவாயில்லை அவ்வாறு போய் மானங்கெடுவதற்கு தயார் இல்லாமல் இருந்தது நமது மனதிற்கு. இந்த மனநிலை போனவருடம். ஆனால் இந்த வருடம்… இன்று சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் மனம் என்ன கூறியிருக்குமோ… ? பசி வென்றிருக்குமா…? மானம் வென்றிருக்குமா…?
                       
இவ்வாறு பட்டினி இருக்கும் நாட்களில் பசி பொறுக்க முடியாதபோது பக்கத்துவீடுகளில் மிஞ்சிய சாப்பாடு ஏதுவும் இருக்கா எனக் கேட்டு வாங்கி சாப்பிடுவது வழக்கம். தொடர்ச்சியாக ஒரு வீட்டில் கேட்காமல் மாறி மாறி ஒவ்வொரு வீடாக கேட்பது நமது வழமை. அவர்களும் பழைய அல்லது மிஞ்சிய சாப்பாடுகள் இருந்தால் தருவார்கள்… பத்து வீடுகள் கொண்ட பேலியில் நான்கு தமிழ் முஸ்லிம் குடும்பங்களும் நான்கு தமிழ் சைவக் குடும்பங்களும் இரண்டு சிங்களக் குடும்பங்களும் இருந்தார்கள். ஒரு சிங்களக் குடும்பம் அங்கிருப்பவர்களைவிட வர்க்கத்தில் உயர்ந்ததால் மற்றவர்களுடன் கதைப்பதில்லை. அவர்கள் அந்த வீட்டில் இருப்பது கூட வெளியே ஒருவருக்கும் தெரியாததுபோல் அவர்கள் செயற்பாடுகள் அமைதியாக இருக்கும். வீட்டுக்குள் தான் இருப்பார்கள். இதற்கு அவர்களுக்கு குழந்தைகளும் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். முதல் வீட்டில் இருக்கின்ற சிங்களக் குடும்பம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்கள். சண்டைக்காரர்கள். இனவாதிகள்.   இதனால் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் அவர்களுடன் கதைப்பதில்லை.
நாம் அந்தப் பேலியின் மறுமுனையிலிருக்கின்ற ஒரு முஸ்லிம் வீட்டின் முன்னறையில் குடியிருந்தோம். நாமிருந்த வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருக்கின்றனர். தாய் (நாம் உம்மா என அழைப்போம்) ஒவ்வொரு நாளும் ஐந்து தடவைகளும் தவறாமல் தொழுகையில் ஈடுபடுவா. இவ்வாறான நேரங்களில் நாம், குழந்தைகள், சத்தம் போடக்கூடாது. சத்தம் போட்டால் தொழுகை முடிய வந்து பேச்சு விழும். அவ எங்களை பேசுவது அம்மாவிற்குப் பிடிக்காது. ஆனால் திருப்பி அவரைப் பேச அம்மாவிற்குப் முடியாததால் எங்களை அடிப்பா.. “.சத்தம் போடாமல் இருக்கேலாத…” எனக் கேட்டு… நாங்கள் அம்மாவிடமிருந்து அடிவாங்காமல் தப்பித்து ஓட முயற்சிப்போம்… இது தினசரி நடக்கும் காட்சி….

                  
இன்று வழமையாக கேட்காத ஒரு விட்டில் சாப்பாடு கேட்பது என முடிவெடுத்து அந்த வீட்டுக்குப் போனேன். அந்த வீட்டுக்கார் அட்டன் நகரில் “கணேசன்” என்ற பெயரில் புடவைக் கடை வைத்திருக்கின்றார். இதனால் அவரின் மனைவியை “கணேசன் அன்டி” எனக் கூப்பிடுவோம். அவர் வீட்டு வாசல் திறந்திருந்தது… “கணேசன் அன்டி” என வாசலிலிருந்து தலையை வீட்டுக்குள் போட்டு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கேட்காதவாறு கூப்பிட்டேன். உள்ளிருந்து வந்த சமையல் மணம் என் பசியை மேலும் துண்டிவிட்டது… தனது சாரியை சரிசெய்தபடியும் கையை அதில் தூடைத்தபடியும் பின்பக்கத்திலிருந்த குசினியிலிருந்து வெளியே வந்தா அன்டி… வாசலில் நின்று கேட்டால் பக்கத்து வீட்டுக்கும் கேட்கும் என்ற வெட்கத்தில் அவ உள்ளே வரச்சொல்லும் முன்பே நான் உள்ளே சென்று, “அன்டி இன்டைக்கு வீட்டில ஒன்றும் சமைக்கவில்ல… பழைய சாப்பாடு மிச்சம் ஏதும் இருக்கா…”  என தயங்கித் தயங்கி கேட்டேன்… “ஓமடா இருக்கு….தாரன் …அதற்கு முதல்… இந்த சாப்பாடக் கொண்டு போய் கடையில மாமாட்ட கொடுத்துட்டு வாறியா… அதுக்கிடையில் உனக்கு சாப்பாடை போட்டு வைக்கிறன்…” என்றா…
இப்படித்தான் நாம் உதவி கேட்டால் பதிலுக்கு அவர்களும் நம்மிடம் ஏதாவது உதவி கேட்பார்கள் அல்லது வேலை சொல்வார்கள்… நமது தேவை நிறைவே வேண்டும் என்றால் மறுக்காமல் செய்யத்தானே வேணும்… நானும் சாப்பாடு கிடைக்கும் என்ற ஆர்வத்தில் ஓம் என்டு… அவர் தந்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டு எனது வாகனத்தை ஸ்டாட் செய்தேன். ஒரு கையில் சாப்பாடு இருக்க…. மறுகையால் அக்சிலேட்ட்டரை முறுக்குவதாய் பாவனை செய்ய… வாய் “புறுக் குறுக் “ என சத்தம் போட… காற்சட்டையின் பின்னால் குண்டிப்பக்கத்திலுள்ள இரண்டு சிறிய ஓட்டைகளிலிருந்து புகைவருவதுபோல் கற்பனை செய்ய… என் கால்கள் ஓடத்தொடங்கின… அம்மா எப்பவும் சொல்லுவா …”உனக்கு சாக்குலதான் காற்சட்டை செய்துபோட வேண்டும்…” என… “போற இடங்களில சக்கப்பணிய இருந்து தேய் தேய் எனத் தேய்த்து … எல்லாக் காற்சட்டைகளையும் ஓட்டையாக்கிவிடுவாய்…” எனப் பேசாத நாளில்லை…அதை யார் காதில வாங்கினா…அவவுக்குத் தெரியாது நான் வாகனம் ஓட இது எவ்வளவு உதவியாக இருக்குது என… ரோட் நேராக இருந்தபோதும் எனது வாகனம் வளைத்து வளைத்து ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு என மாறி மாறி முன்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது…. ஆனால் எனது மனம் பின்நோக்கி ஓடியது…
இப்பொழுது ஒரு இரண்டு வருடமாகத்தான் எங்களுக்கு இந்தக் கஸ்டம்… அட்டன் மல்லியப்பு வீட்டிலிருந்தபோது … அது பெரிய வீடாக இருந்தது… எந்த நேரமும் சாப்பாடு இருந்தது… சில நாளைக்கு பக்கத்திலிருக்கின்ற தம்பிராஜா அங்கில் ராதா அன்டி வீட்டுக்குப் போனால் பட்டர் பூசிய பாண் கிடைக்கும்… டேஸ்டாக இருக்கும்… அங்குபோவது எங்களுக்கு எப்பொழுதும் விருப்பமான ஒன்று… கீழ் தளத்தில் அவரின் வைத்தியசாலை இருந்தது… மேல் தளத்தில் வீடும் கட்சி அலுவலகமும் இருந்தது…. ஒரு நாள் அப்பா கட்சி அலுவலகத்திலிருந்து கோவமாக வந்தவர் வீட்டை நோக்கி நடந்தார்… நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்… மல்லியப்பு கடைகள் ஆரம்பிக்கின்ற இடத்தில் ஒரு பாலம்… அதனருகில் ஒரு முஸ்லிம் சாப்பாட்டுக் கடை இருக்கின்றது… இந்த இடத்தில் வைத்து எங்களுக்குப் பின்னால் வந்த இரண்டு பேர் அப்பாவை அடித்தனர். அப்பாவும் அடிக்கப்போனார்… ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து அப்பாவை அடித்துப்போட்டனர்… நான் பயத்தில் அருகிலிருந்த ஹோட்டலுக்குள் போய் நடுங்கிக் கொண்டு இருந்தேன்… அப்பொழுது எனக்கு எழு வயது இருக்கும்… கடையில் இருந்த ஆட்கள் வெளியில் வந்து சண்டையை நிறுத்தினர்… அந்த இரண்டும் பேரும் வந்த வழியே மீண்டும் கட்சி அலுவலகம் இருக்கின்ற பக்கமாகச் சென்றார்கள்…. அப்பா என்னையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்த பின்… அம்மாவையும் கூட்டிக் கொண்டு பொலிஸில் (முறைப்பாடு) என்றி போடச் சென்றார்கள்… பின் வீட்டுக்கு வந்து அன்று இரவிரவாக கதைத்துக் கொண்டிருந்தார்கள்… இரண்டு நாட்களில் நாம் வீடு மாறினோம்… பெரிய தனி வீட்டிலிருந்த நாம் ஒரே நாளில் மிகச் சிறிய அறைக்கு குடிவந்தோம்… இந்தப் பேலி வீடுகளில் நாம் மட்டும்தான் இப்படி வாழ்கின்றோம். மற்றவர்கள் எல்லோரும் தனித் தனி வீடுகளில் தான் வாழ்கின்றனர். அன்று பிடித்த கஸ்டம் சனியன்தான் இன்னும் தொடர்கின்றது…. இப்பவெல்லாம் இப்படித்தான் அம்மா அப்பா இருவரும் அடிக்கடி புலம்புவார்கள்….
இந்தப் பழைய நினைவுகளுடன் மனம் இருக்க…எனது உடல் வாகனம் நான் அறியாமலோ ஓடி ஓடி அவர்களின் கடைக்கு வந்துவிட்டது… அவர்களிடம் சாப்பாட்டைக் கொடுத்து விட்டு… பிரதான வீதியால் மீண்டும் ஓடி அட்டன் பஸ் டிப்போவிற்கு போகின்ற வீதிக்கு திரும்பினேன்… இந்த சந்தியிலிருந்து பார்த்தால் பிராங்கிளின் ஓட்டல் முன்பக்கம் நன்றாகத் தெரியும்.. இது ஒரு சாராயக்கடை… அப்பா பழைய கருத்தக் கோட்டையும் போட்டுக் கொண்டு அதன் முன்னால் நின்றுகொண்டு நண்பர்களுடன் ஏதோ கதைத்து விவாதித்துக்கொண்டிருந்தார்… நிச்சயமாக அரசியலாகத்தான் இருக்கும்… தனது பக்க நியாயத்தை வலியுறுத்தி வாதாடிக்கொண்டிருப்பார்… அப்படித்தான் அவரை எப்பொழுதும் கண்டிருக்கின்றேன்… இப்பவெல்லாம் அப்பா வெளிக்கிட்டு இந்த றோட்டலுக்கு காலை ஏழு மணிக்கே வந்துவிடுவார்… இதற்கு முன்னால் நின்று கொண்டு கடைக்கு வருகின்ற பத்திரிகைகளை முதல் ஆளாகப் படித்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்… ஆங்கிலப் பேப்பரை முதலிலும் தமிழ் பத்திரிகைகளை பிறகும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை முழுவதையும் ஓசியில் வாசித்துவிடுவார்… அதன்பின்தான் நண்பர்களுடன் விவாதம் ஆரம்பிக்கும்…

                       
அப்பாவிற்கு இந்த றோட்டல் முதலாளி தங்கநாயகமும் நண்பர் தான்… இந்த றோட்டலின் மூலையில் அட்டன் புகையிரதநிலையத்திற்குப் போடப்பட்ட தகரவேலியுடன் இருக்கின்ற சின்னஞ்சிறிய கடை வைத்திருக்கின்ற செருப்புத்தைக்கின்ற பண்டா என்ற கிழவரும் நண்பர் தான்… இந்த றோட்டலுக்கு முன்னாலிருக்கின்ற புதிய செங்கொடி சங்க உறுப்பினர் தட்டை சுப்பையா… முன்பக்க கட்டிடத்திலிருக்கின்ற சட்டத்தரணி சச்சிதானந்தம்… றோட்டலின் பின்னாலிருக்கின்ற அஜந்தா ஸ்டோரின் மேலேயிருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சி ஏ.ஓ.இராமையா…. இவர்கள் எல்லோரும் (பழைய) தோழர்கள்… நண்பர்கள்… இப்படி இவருக்கு சமூகத்தின் பல மட்டங்களிலும் நண்பர்கள் இருக்கின்றனர்…. பல நண்பர்கள் தேயிலைத் தோட்டங்களிலிருந்தும் வருவார்கள். இவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்… கங்காணிமார்… டீமேக்கர்… சில தொரமாரும் இருக்கின்றார்கள்… மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து கற்பிக்கும் ஆசிரியர்கள் எனப் பலர்… அப்பாவின் தோழர்கள், நண்பர்கள், மற்றும் தொழிற்சங்க வேலைகள் செய்ய வருவோர்  எல்லோரும் எங்களுக்கு மாமா என்ற உறவுடையவர்கள்…  அம்மாவிற்கு ஐந்து தம்பிமார் இருந்தும் அவர்களை நாம் மாமா என்று கூப்பிட்ட சந்தர்ப்பம் மிகவும் அரிது… அது வேறு கதை….வேறு களம்… மேற்குறிப்பிட்ட மாமாமார் சிலருக்கு ஐனவரி முதலாம் திகதி அல்லது சித்திரை புத்தாண்டு நாட்களில் என்றால் பொங்கல் அல்லது பால்சோறு அம்மா செய்து கொடுக்க… அவர்களிடம் கொடுத்து கைவிசேமாக காசு வாங்குவது எங்கள் வழமை… இன்று அதுவும் சாத்தியமில்லை…
இந்த நண்பர்களில் பலர் அப்பாவிடம் இருந்த தொழிற்சங்க சட்டங்கள் மற்றும் மொழிப் புலமைகளைப் பயன்படுத்தி தங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்வார்கள்… ஆனால் அதற்குரிய ஊதியம் மட்டும் கொடுக்க மாட்டார்கள்… பதிலாக ஒரு கிளாஸ் ரிங் (சாராயம்) வாங்கிக் கொடுப்பார்கள்… இப்படி ஆளாளுக்கு ஒரு ரிங் வாங்கிக் கொடுக்க நாள் முடிவில் அப்பாவிற்கு வெறி ஏறிவிடும்… நாங்கள் வீட்டில் பசியுடன் இருப்பதையும் மறந்து வீதியின் இரு பக்கங்களை ஆடி ஆடி அளந்து கொண்டு வீடு வந்து சேருவார்… இப்படித்தான் கடந்த இரண்டு வருடங்கள் நமது வாழ்க்கை ஓடுகின்றது…
அப்பாவை றோட்டலின் முன்னால் கண்டதனால் என் மனம் அவர் பின்னால் போக…. எனது உடல் வாகனம் என்னை ஏற்றிக் கொண்டு பிராங்கின் ஓட்டல்…அஜாந்த ஸ்டோர்ஸ்…பள்ளிவாசல்…ரெயில்வே பாலம்… படிக்கட்டுக்கள்… என எல்லாவற்றையும் கடந்து கணேசன் ஆன்டியின் வீட்டின் முன்னால் வந்து நின்றது…. “ஆன்டி சாப்பாட்டைக் கொடுத்துட்டு வந்துட்டேன்…” என்று கத்தி சொல்லிவிட்டு காத்திருந்தேன்… அவர் வருகைக்காக… ஒரு கிண்ணத்தைக் கையில் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தா… “சாப்பிட்டு விட்டு கிண்ணத்தைக் கொண்டு வந்து தா…” என்றார்… “சரி…” எனக் கூறிவிட்டு அவரிடமிருந்து பறிக்காத குறையாக சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வீட்டைநோக்கி ஓடினேன்… வீட்டில் அம்மாவும் தங்கைகளும் எனக்காக பசியுடன் காத்துக்கொண்டிருந்தார்கள்… கிண்ணத்தை நடுவில் வைத்துவிட்டு நாழுபேரும் சுத்தியிருந்தோம்… ஆவலுடன் கிண்ணத்தை திறந்தோம்…. “பக்” என ஒரு மணம் சாப்பாட்டுக்குள்ளிலிருந்து வந்தது… அறை இருட்டாக இருந்தது… பகலில் லைட்டைப்போட்டால் உம்மா  பேசுவா… இருந்தாலும் “படக்” கெண்டு லைட்டைப் போட்டுப் பார்த்தோம்… சாப்பாட்டின் மீது வெள்ளையாக பூஞ்சனம் பிடித்திருந்தது… …
….
மீராபாரதி
18.12.2012.

No comments:

Post a Comment