Thursday, December 20, 2012

அன்புள்ள மான் விழியே...

                       


உங்களுக்கு லவ் லெட்டர் எழுதத் தெரியுமா..

 என்னய்யா இப்படி ஒரு கேள்வி என்று டென்ஷனாவது புரிகிறது.. 
ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். காலத்தில் இப்படிப்பட்ட ஒரு கேள்வி நியாயமானதுதான்.. காரணம் நிறையப் பேருக்கு, நிறையக் காதலர்களுக்கு லவ் லெட்டர் எழுத எங்கே நேரம் இருக்கிறது... செல்லை எடுத்தோமா, மனசாரப் பேசினோமா, நாலு எஸ்.எம்.எஸ். அனுப்பினோமா என்று போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

 இப்படிப்பட்ட சூழலில், நமது கண்ணில் ஒரு காதல் கடிதம் பட்டது. படித்துப் பார்த்தபோது சுவாரஸ்யமாக இருந்தது...நீங்களும் படித்துப் பாருங்களேன்... 

அன்புள்ள மான் விழியே...

 உன் அழகிய, பெரிய கண்களை ஆழமாகப் பார்க்கும்போது அதில்தான் எத்தனை ஜொலிப்பு.. பிரகாசம்.. ஒவ்வொரு 'பிளாஷையும்' உணர்ந்து, உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்..

 உன் நினைவுகள் எனது மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளத்தை வாரியிறைத்தபடி இருக்கின்றன.. தெரியுமா உனக்கு..?

 இந்த மகிழ்ச்சியெல்லாம் உன் மீது கொண்டுள்ள நேசத்தையும், பாசத்தையும் ஒவ்வொரு விநாடியும் கூட்டிக் கொண்டே போக உதவும் 'எனர்ஜி' தரும் 'எரிபொருளாக' மாறி நிற்கின்றன. 

என் இதயத்தை நிறைத்து நிற்கும் இந்த சந்தோஷம், உன் இதயத்திலும் பிரதிபலிக்கும் என்றே நினைக்கிறேன்.

 காதலிப்பது பெரிய சந்தோஷம்தான் இல்லையா... அந்த உணர்வு தரும் சுகம், எல்லோருக்கும் கிடைத்து விடாது.. அதிலும் உன்னைப் போன்ற இனிய பெண்ணுடைய நினைவில் மூழ்கித் திளைப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம், பாக்கியம்...!

                            

 உன்னுடைய ஒவ்வொரு அசைவும், சின்னச் சின்ன பேச்சுக்களும் எனக்குள் இமயமலையை நிறுத்தி வைத்தது போல ஜில்லிட வைக்கிறது.. 

உன்னிடமிருந்து வரும் ஒவ்வொரு அசைவும் உணர்வுப் பூர்வமானது. எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அதை உணர்ந்து ரசிக்கும்போது எனக்குள் ஏற்படும் உற்சாகத்தை அளவிட இதுவரை எந்த அளவுகோலும் உலகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் உன் நினைவில்.. உண்மையில் நீ என்னை விட உயர்ந்தவள்...! 

புல்வெளிகளில் உன் காலடி படும்போதெல்லாம் அந்தப் புல்லுக்கும் புல்லரிக்குமே கண்ணே... நான் மட்டும் விதிவிலக்கா என்ன...?!

                         

 நீயும், நானும் சேர்ந்து நடக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை நிரந்தரமாக அனுபவிக்க விரும்புகிறேன்... 

உன் அருகில் நான் நடக்கும்போது எனக்குள் சின்னச் சின்ன எரிமலைகள் வெடித்துச் சிதறியதை நீ உணர்ந்திருக்கிறாயா...? 

உன் அழகிய காதலை எப்போதும் நான் நினைத்திருக்க எனக்கு வரம் தர வேண்டும் அந்தக் கடவுள்... இதுதான் இப்போது எனது ஒரே பிரார்த்தனை... 

உன் கண்களின் காந்த வீச்சிலிருந்து தப்ப நான் நினைத்ததே இல்லை.. அப்படியே விழுந்து கிடக்கவே ஆசை... அந்த பிரகாசமான ஜோதியில் நான் பொசுங்கி சாம்பலாகிப் போனாலும் கூட பரவாயில்லை... அப்போதும் உனக்குள்தானே நான் இருப்பேன்... 

இப்படியே காதலித்தபடி இருக்கலாமே...! இப்படிப் போகிறது அந்தக் காதல் கடிதம்... 

எழுதிப் பார்த்த அனுபவம் இல்லாதவர்கள் இப்போதே இதைச் செய்து பாருங்கள்... எத்தனை காதல் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பினாலும், போனில் பல மணி நேரம் பேசினாலும், உள்ளத்தைக் கொட்டி வார்த்தைகளை வடித்து உருவாக்கும் கடிதங்கள், நிச்சயம் எதிர்காலத்தில் படித்துப் படித்துச் சந்தோஷப்பட வைக்கும் காவியங்களாக இருக்கும்...

 

http://tamil.oneindia.in

No comments:

Post a Comment