Friday, November 2, 2012

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ?


குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை.  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. “அம்மா..” என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது. 
சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். சிலர் ரொம்ப லேட்டா தான் பேசவே ஆரம்பிப்பார்கள். தாத்தா பாட்டி இருக்கும் வீடுகளில் பிள்ளைகள் சீக்கிரம் பேசுவார்கள். காரணம் பாட்டிகள் குழந்தைகளுக்கு எதையாச்சும் சொல்லித் தந்து கொண்டே இருப்பது தான். குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கலையைப் பற்றி அமெரிக்காவின் என்.ஐ.எஃப்.எல் (National Institute for Literacy ) சுவாரஸ்யமான பல விஷயங்களை விளக்குகிறது.
ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதெல்லாம் குழந்தைகள் விஷயத்தில் ஒத்து வராது. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். தாத்தா. பாட்டி, மாமா என உறவுகளில் ஆரம்பித்து, பார்க்கின்ற பொருட்களின் பெயர்களையெல்லாம் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கண்ணுக்குத் தட்டுப் படும் பொருட்கள் பற்றியெல்லாம் சொல்வது தான் கல்வியின் முதல் நிலை.
சில குழந்தைகள் தெளிவாகப் பேசுவார்கள். சிலருக்கு வார்த்தைகள் தெளிவாய் வராது. சிலருக்குத் தொடர்ச்சியாய் பேச வராது. எந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது பெற்றோரின் சாமர்த்தியம். அதற்குத் தக்கபடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எக்கச் சக்கப் பொருட்கள் எல்லார் வீட்டிலும் உண்டு. டிவி முதல் மிதியடி வரை எல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர்களுக்கு நிறைய விஷயங்கள் மனதில் தங்கி விடும்..
வார்த்தைகள் பழக்கியாச்சா ? இப்போது குழந்தைகளே வீட்டுக்குள் உள்ள பொருட்களின் பெயரை சொல்லிச் சொல்லி சந்தோசப்படும். இப்போது அவர்களுக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். கதை பேசுவது கற்காலக் கலை. பலர் இதில் நடிகையர் திலகங்கள் தான். ஏற்ற இறக்கமாய், ஆக் ஷனுடன், தாள லயத்துடன் கதை சொல்வார்கள். கணவர்களே குழந்தைகளாய் மாறி ரசிப்பார்கள். குழந்தைகளுக்கோ சுவாரஸ்யம் தாங்காது. திரும்பத் திரும்ப கதைகளைக் கேட்பார்கள். குழந்தைக் கல்வியின் மிக முக்கியமான சங்கதி குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவது தான் !
கதையை சொல்லிக் கொடுத்தாச்சா. இப்போ அவர்களிடம் கதைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் அப்படியே உங்களை இமிடேட் பண்ணுவார்கள். ரசியுங்கள். தடுமாறும் இடத்தில் சொல்லிக் கொடுங்கள். கதை சொல்லி முடித்து விட்டு எதையோ சாதித்ததாய் குழந்தைகள் கர்வத்துடன் பார்ப்பார்கள். அவர்களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள், அது ரொம்ப முக்கியம்.
குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது அவர்களுடைய மூளைக்கு சுவாரஸ்யமான வேலை கொடுங்கள். அதாவது தோட்டத்துக்குப் போகிறீர்கள் என்றால், இங்கே என்னென்ன பச்சை கலர் பொருட்கள் இருக்கிறது ? சதுர வடிவில் என்னென்ன இருக்கின்றன ? இப்படி கொஞ்சம் கேள்விகளைக் கேளுங்கள். இங்கே என்னென்ன பொருட்கள் “A” எனும் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என ஒரு புதிர் போடுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லையெனில் நீங்கள் துவங்கி வையுங்கள். எறும்பு என்றால் Ant – A யில் தான் ஆரம்பிக்கும் என எறும்பு தேடுங்கள்.  
குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டார்களா ? இப்போது அடுத்த நிலைக்குத் தாவி விடுங்கள். பள்ளியில் என்னென்ன நடந்தது என கேளுங்கள். அவர்கள் உற்சாகமாய் கதை பேசுவார்கள். நீங்களும் அதே உற்சாகத்தில் கேளுங்கள். இங்கே நீங்கள் வாக்கியங்களைக் கவனியுங்கள். குழந்தைகளுக்கு “இது தப்பு” என்று சொல்வதை விட சரியானதை நீங்கள் பேசிக் காட்ட வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்கிறார் ஷானன் எம் கேனன் (Shannon M. Cannon) எனும் எழுத்தாளர்.
பள்ளிக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இனிமேல் வீட்டுப் பாடம் தான் தலையாய கடமை என முடிவு கட்டி விடாதீர்கள். குழந்தைகள் வந்ததும் வராததுமாக வீட்டுப் பாடம் கொடுத்து மிரட்டாதீர்கள். அவர்களுக்கு அது வெறுப்பைத் தந்து விடக் கூடும். இன்னும் சொல்லப் போனால், நீங்கள்கூப்பிடும்போதெல்லாம் குழந்தை வந்து படிக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். அதனால் தான் கல்வியை அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் தரவேண்டிய அவசியம் வருகிறது.
சில குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கும். உடனே அம்மா ஓடிப்போய் ஒரு புது பிளேட் எடுத்து வருவார். அதில் மிக்கியின் படம் போடப்பட்டிருக்கும். இதோ பாரு மிக்கி பிளேட், சாப்பிடலாமா என அழைத்தால் குழந்தை ஓடி வரும். அடுத்த நாள் “மம்மி மிக்கி பிளேட்ல சாப்பாடு கொடு” என குழந்தையே கேட்கும். கல்வியும் அப்படித் தான். அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்லிக் கொடுத்தால் விரும்பிக் கற்பார்கள். 
இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லிக் கொடுப்பது ஒரு வகை. தோட்டத்தில் போய் நான்கு கற்கள் எடுத்து வா என்பது இன்னொரு வகை. முடிவு ஒன்று தான் வழிகள் தான் வேறு வேறு. பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் ரசனையை !. டிவிடி பிளேயரில் சினிமா பாடல்களைக் கட் பண்ணிவிட்டு. ரைம்ஸ் போடுங்கள். ஆடியோ நூல்கள் வாங்கிப் போடுங்கள்.  புத்தகத்தைக் கொடுத்து படம் வரையச் சொல்லுங்கள். இவையெல்லாம் சில எளிய வழிகள் என்கிறார் கேரி டிரன்பெல் (Gary Direnfeld) எனும் குழந்தைகள் நல நிபுணர்.
ஒருவேளை குழந்தை ஏதாவது கிறுக்கிக் கொண்டு உங்களிடம் வரும். உங்களுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. “என்னடா வரஞ்சிருக்கே.. ஒண்ணுமே புரியலையே..” என்று சொன்னால் எல்லாமே அவுட். “அழகா இருக்கே. என்ன வரைஞ்சிருக்கே சொல்லு” என ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தனது படைப்பை விவரிப்பதன் வழியாகப் படத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் ! 
குழந்தைகளுக்கு ஈகோ உண்டு. அவர்களுடைய முயற்சிகளை கிண்டலடிக்கவே செய்யாதீர்கள். கிண்டல், கேலி, விமர்சனம் எல்லாம் குழந்தைகளுடைய சிந்தனையை மழுங்கடிக்கும். உதாரணமா, ஒரு படத்தில் எப்படி கலர் அடிக்க வேண்டும் என்பதைச் சொல்வது தான் உங்கள் வேலை. அப்புறம் தன்க்கு விருப்பமான கலரை அடிப்பது குழந்தையோட சாய்ஸ். அதுல போய் “மூக்குக்கு நீலக் கலர் அடிக்கிறியே சேச்சே… “ என்று நக்கலடிக்காதீர்கள். மம்மி… ஒரு எட்டுத் தலை பூனை வந்து, சைக்கிளைக் கடிச்சுக் கடிச்சு தின்னுச்சு” என குழந்தை கதை சொன்னால் ரசித்துக் கேளுங்கள். லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க.
இசையை ரசிக்காத குழந்தைகளே இருக்காது. அவர்களுக்கு நல்ல பாட்டுகள் மூலம் கல்வியைச் சொல்லிக் கொடுங்கள். ஒரு பாட்டு சொல்லிக் குடுங்க. அப்புறம் அந்த பாட்டிலுள்ள வார்த்தைகளையெல்லாம் மாற்றி வேறு வார்த்தைகள் போட்டு பாடுங்க. குழந்தைகளையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவர்கள் தங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைப் போட்டுப் பாட ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது ரொம்பவே அவசியம். அது கொஞ்சம் கஷ்டமான வேலை. காரணம் ஹால்ல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டி.வி. ! அதனால வாசிப்பதற்கு குழந்தைகளுக்கு தனியா, அமைதியா, காற்றோட்டமா ஒரு அறை இருப்பது ரொம்பவே அவசியம்.
குழந்தைகள் வாசிக்கும் போது சிறு சிறு பகுதிகளாக வாசிக்கச் சொல்லுங்கள் அவர்கள் சுவாரஸ்யமாக வாசிப்பார்கள். ஏனோ தானோன்னு இருக்காம ரொம்பக் கவனமாய் கேளுங்கள். அவர்கள் தடுமாறும் இடங்களை திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லுங்கள். அதிகமாக வாசிக்கும் போது அவர்களுடைய உச்சரிப்பும் அழகாகும். பொருளும் தெளிவாகும். வாசித்த கதையிலிருந்து ஏதாச்சும் கேள்விகள் கேளுங்கள். கதையை மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். கதையின் வரிசை, கதாபாத்திரங்களின் வரிசையைச் சொல்லச் சொல்லுங்கள். இவையெல்லாம் குழந்தைகளின் அறிவை ஷார்ப்பாக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம், கதை சொல்லும் போதே கதாபாத்திரங்கள் வழியாக குழந்தைகளுக்கு மனித மதிப்பீடுகளையும் சொல்லிக் கொடுப்பது. “அந்த குருவி தன்னோட குஞ்சுக்கு தீனி கொடுத்துச்சு. ஏன்னா குஞ்சுங்க மேல அம்மாக்கு ரொம்ப அன்பு. அன்புன்னா என்னான்னு தெரியுமா ?” என அன்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பியுங்கள். கல்வி வார்த்தைகளைப் படிப்பதல்ல, வாழ்க்கையைப் படிப்பது தான் என்கிறார் கரோலின் வார்னிமுன்டே (Carolyn Warnemuende )எனும் குழந்தைகள் நல நிபுணர்.
குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கறேன் பேர்வழின்னு குர்குரே, சிப்ஸ், சாக்லேட் என அடுக்கித் தள்ளாதீங்க. ரொம்பத் தப்பு. அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாகக் கொடுங்கள். டிராயிங், கலரிங், ஸ்டோரி என எதுவானாலும் பரவாயில்லை. குழந்தைகளின் கல்வி ஆர்வம் அதிகமாகும். குழந்தைகளின் விருப்பம் வீடியோ கேம்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் காமிக் புத்தகத்தை விரும்பிப் படிப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஆர்வம் அதிகமாய் இருந்தால் ஸ்போர்ட்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அனிமல்ஸ் பிடிக்குமெனில் அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். 
வீக் எண்ட் வந்தாச்சுன்னாலே தியேட்டருக்கு ஓடாதீங்க. அப்பப்போ லைப்ரரிக்குப் போங்க. பிள்ளைங்க லைப்ரரியில் நேரம் செலவிடட்டும். குழந்தைகளுக்கு வெரைட்டியாய் புத்தகங்களும் கிடைக்கும். அப்பார்ட்மெண்ட் வாசிகளென்றால் ரொம்ப வசதி. பக்கத்திலுள்ள பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு புக் கிளப் ஆரம்பிக்கலாம். பெற்றோர்கள் அதற்கு வகை செய்தால், நட்பும் அறிவும் விரிவடையும். 
குழந்தைகளை மார்க் வாங்கும் மிஷினான பார்க்கவே பார்க்காதீர்கள். அது கல்வியின் மீது குழந்தைக்கு வெறுப்போ பயமோ வரக் காரணமாகி விடும். “குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் கற்க வைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அவர்களைக் கற்க நீங்கள் வழிகாட்டுங்கள். அது தான் அவர்களுக்குள்ளே உள்ள அறிஞரை வெளிக்கொணரும்”. இதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, உலகையே வசப்படுத்திய பிளாட்டோ தான்.
கடைசியாய் ஒன்றே ஒன்று. கல்வி என்பது ஒரு சீசன் கிடையாது. அது எப்போதும் தொடரும் சமாச்சாரம். அதனால் முதலில் காட்டும் உற்சாகம் கடைசி வரை இருக்கட்டும்.
*

   நன்றி:  சேவியர் 

No comments:

Post a Comment