Friday, November 2, 2012

Point of Sale –( POS )


“சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ?” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ! காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட்.
மிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்காகக் கட்டாமல் மிச்சம் மீதியை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைப்பவர்களுக்கு அதுவே வட்டி மேல் வட்டி வந்து இரத்தம் உறிஞ்சும் அட்டையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை.
கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவீர்கள். பிறகு பணம் செலுத்துவதற்காக உங்களுடைய அட்டையைக் கடையில் கொடுப்பீர்கள் இல்லையா ? அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது ! அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?
1973ல் ஐ.பி.எம் (IBM) நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபிஎம் 3650 மற்றும் ஐபிஎம் 3660 இரண்டும் தான் இவற்றின் முன்னோடி ! 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது ! இப்போதைய பி.ஓ.எஸ் கள் அதி நவீனம் !
கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. அதே போல பி.ஓ.எஸ் கருவியில் செயல்படுவதற்கென்றும் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. 1992ம் ஆண்டு மார்ட்டின் குட்வின் மற்றும் பாப் ஹென்றி எனும் இருவரும் இணைந்து ஐ.டி ரிடெயில் ( IT Retail) எனும் ஒரு மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் செயலியில் செயல்படக் கூடிய அந்த மென்பொருளை இன்றைய “பி.ஓ.எஸ்” மென்பொருட்களின் பிதாமகன் என்று சொல்லலாம்  ! தப்பில்லை !
“பார் கோட்” (Bar Code) தெரியும் தானே ? பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே !. அது வந்த பிறகு பி.ஓ.எஸ் கருவிகளின் முகமும், அகமும் மாறிப் போய்விட்டது.
இன்றைக்கு வழக்கமாக இருக்கும் முறை இது தான். நீங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு கார்டைக் கொடுக்கும் போது விற்பனையாளர் அந்த கார்டை பி.ஓ.எஸ் கருவியில் தேய்க்கிறார். கருவி அந்த கார்டில் உள்ள எண்ணை ஸ்கேன் செய்து கொள்கிறது.
சில பி.ஓ.எஸ் கருவிகளில் தானாகவே எண் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அதை டைப் செய்ய வேண்டும் ! அதன் பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் விஷயத்தையும் கொடுத்தால் கருவி ஒரு “செய்தி”யை நெட்வர்க்கிற்கு அனுப்பும். அந்த நெட்வர்க் “சுவிட்ச்”(Switch Software) எனப்படும் மென்பொருளுக்கு அந்தத் தகவலை அனுப்பும்.
சுவிட்ச் தான் நம்முடைய வங்கிக் கணக்கில் கை வைக்கும். கார்ட் நல்லது தானா ? அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா ? என பல சோதனைகளுக்குப் பிறகே அது வேலை பார்க்கத் துவங்கும். டெடிட் கார்டாய் இருந்தால் உடனடிப் பணக் குறைப்பும், கிரடிட் கார்ட் எனில் கணக்கில் வரவு வைக்கவும் சுவிட்ச் தான் முடிவு செய்யும். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. பெரும்பாலானவை “ஃபைனான்ஸியல் டிரான்ஸாக்சன்ஸ்” தான்.
உதாரணமாக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறுமுட்டச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கடைசியில் பில் வரும். உங்களுடைய கார்டை வைப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி “பில்” கொண்டு வைப்பார்கள். ஒருவேளை நீங்கள் ரொம்ப தாராள மனம் படைத்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள் ? அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது ? நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே ? யோசித்ததுண்டா ?
இந்த டிப்ஸ் – டிரான்சாக்ஸன் “பிரி ஆத்” (Pre Auth) எனப்படும். பிரி ஆத்தரைசேஷன் ( Pre Authorization) என்பதன் சுருக்கம் தான் அது ! ஏற்கனவே ஒரு அனுமதி தகவல் பகிர்வை உங்கள் கார்டைப் பயன்படுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள். இல்லையேல் அது டம்மி டிரான்சாக்ஸனாக மாற்றப்பட்டுவிடும்.
வேகமான செயல்பாடு, பணத்தை நாலு தடவை எச்சில் தொட்டு எண்ணும் அவஸ்தையிலிருந்து விடுதலை, கணக்கு இடிக்குதே என தலையைச் சொறிவதிலிருந்து எஸ்கேப், எளிய பயன்பாடு, கள்ள நோட்டுப் பிரச்சினை இல்லை என ஏகப்பட்ட பயன்கள் இந்த பி.ஓ.எஸ் பயன்பாட்டில் உண்டு.
ஒரே ஒரு சிக்கல், இந்த கருவியின் பயன்பாட்டு அடிப்படையில் உரிமையாளர் பணம் கட்ட வேண்டும் என்பது தான். அந்தப் பணம் மென்பொருள் தயாரிப்பவர்கள், மெயின்டென்ய் செய்பவர்கள், இணையப் பயன்பாடு கொடுப்பவர்கள் என பலருக்கும் போய்ச் சேரும். அதற்கெல்லாம் சேர்ந்து பொருட்களில் விலை ஏற்றி உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள் என்பது சொல்லக் கூடாத தொழில் ரகசியம்.
இந்த பி.ஓ.எஸ் கருவிகளில் வயர் இணைக்கப்பட்டது, வயர்லெஸ் என இரண்டு வகைகள் உண்டு. இணைப்பு கருவிகள் டெலபோன் வயருடன் இணைக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் கருவிகள் ‘கம்பியில்லாத் தந்தி’ தொழில் நுட்பத்தில் இயங்குவது ! போகும் வழியில் டிராபிக் போலீஸ்காரர் உங்களை வழிமறித்து “ஃபைன் “ கொடுக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் பி.ஓ.எஸ் மெஷின் வயர்லெஸ் வகையைச் சேர்ந்ததாய் இருக்கும் !
வெளிநாடுகளில் வயர்லெஸ் பி.ஓ.எஸ் கருவிகள் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் நீங்கள் வண்டியை பார்க்கிங் செய்யும் இடமானாலும் சரி, பயணிக்கும் டேக்ஸி ஆனாலும் சரி, காய்கறி கடை ஆனாலும் சரி, ஹோட்டல் ஆனாலும் சரி எல்லா இடங்களிலும் வயர்லெஸ் மயம் தான் ! ரேடியோ அலைகள் மூலமாக தகவல்கள் அனுப்புவது தான் இவற்றின் அடிப்படை. இந்த கருவி ஒரு மாஸ்டர் கணினியுடன் இணைக்கப்பட்டு தகவல்கள் சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவற்றின் முதல் அங்கீகரிக்கப்பட்ட நியமம் உருவானது 1996ம் ஆண்டு. OPES எனும் இந்த   நியமத்தை மைக்ரோசாஃப்ட், எப்ஸன், என்.சி.ஆர் கார்பரேஷன், ஃபுஜிஸ்டு போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ஒன்று கூடி உருவாக்கின. 1996ம் ஆண்டு இதன் முதல் பாதம் மண்ணில் பதிந்தது ! OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது ! இது 1999ல் வெளியானது.
பி.ஓ.எஸ் கருவி வழியாகச் அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலையும் டிரான்ஸாக்சன் ( Transaction) என்று பொதுப்படையாக சொல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந்த தகவல்கள் ஒரு பி.ஓ.எஸ் கருவியிலிரிந்து இன்னொரு நெட்வர்க் வழியாக சுவிட்ச் நோக்கிப் போகும் இடம் பாதுகாப்புப் பிரச்சினை உடையது !  திருட்டுப் பயல்களால் திருடப்பட்டுவிடும் அபாயம் உண்டு. அதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அமைத்திருப்பார்கள்.
டெஸ், டபிள் டெஸ், டிரிப்பிள் டெஸ்( DES, Double DES, Tripple DES ) போன்றவையெல்லாம் பிரபலமானவை . DES என்பது Data Encryption Standard என்பதன் சுருக்கம். பி.ஓ.எஸ் கருவி தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதும், மறுமுனையில் அந்த செய்தி மீண்டும் சரியான படி வாசிக்கப்படுவதும் தான் இதன் அடிப்படை. அதை எத்தனை அடுக்கு சங்கேதமாக்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை டபிள், டிரிப்பிள் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
இன்னொரு பாதுகாப்பு முறை உண்டு. அது தான் இப்போது மிகப் பிரபலம். அதாவது ஒவ்வொரு செய்தியுடனும் ஒரு சங்கேதக் குறியீடு இருக்கும். எனவே திருடுவது ரொம்பக் கஷ்டம். அப்படியே தகவலைத் திருடினாலும் பியூஸ் போன பல்ப் போல அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்த முறையை டக்பிட் ( DUKPT – Derived Unique Key Per Transaction) என்கின்றார்கள்.
சில கடைகளுக்கு பல மாடிகள் இருக்கும். ஒவ்வொரு மாடியிலும் சிலப் பல பி.ஓ.எஸ் டிவைஸ் கள் இருக்கும். அவற்றில் எல்லாம் மொத்தம் என்னென்ன விற்பனை நடந்திருக்கின்றன என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் வசதியையும் “பி.ஓ.எஸ்” மென்பொருட்கள் தருகின்றன. அதே போல நாட்டின் பல இடங்களில் இருக்கும் தொடர் கடைகளின் பி.ஓ.எஸ் டிவைஸ் கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்க்கும் வசதியும் மிக எளிதிலேயே கிடைக்கும் ! இவை வெப் பேஸ்ட் கருவி இணைப்பாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை !
பி.ஓ.எஸ் டிவைஸ் கள் பல வகை உண்டு. சில கருவிகள் மானிடர், பண டிராயர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் “கையொப்பம்” போடும் வசதி இருக்கும். சிலவற்றில் கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸ்மார்ட் கார்ட் என எல்லா வகைகளையும் பயன்படுத்த முடியும், சிலவற்றில் செக்களைக் கூட ஸ்கேன் செய்ய முடியும். சில பி.ஓ.எஸ் டிவைஸ்களில் டிஸ்கவுண்ட் கூப்பன் போன்றவைகளைப் பயன்படுத்த முடியும் !  தேவைக்குத் தக்கபடி கிடைக்கும் என்பதே சுருக்கமாய் சொல்ல வந்த விஷயம்.
அடுத்த முறை கடைக்காரர் கார்டை ஸ்வைப் செய்யும்போ, “சார் இதுல என்ன செக்யூரிடி செக் யூஸ்பண்றீங்க ? டெஸ்ஸா ? இல்லை டக்பிட்டா ?” என கேட்டு அவரை மிரளச் செய்யுங்கள் !
நன்றி : தினத்தந்தி – மவுஸ் பையன்

No comments:

Post a Comment