Monday, November 2, 2015

பட்டினித் தாய்!

திர் காலம் குறித்த கேள்விகள், நிகழ்காலத் தேவைகள் குறித்த ஏக்கங்கள் என இரண்டையும் தனது கண்களில் ஏந்தி அமர்ந்திருக்கிறார் இந்தத் தாய். பசி மயக்கத்திலிருக்கும் தன் மூன்று குழந்தைகளையும் தோள்களிலும், மடியிலும் கிடத்தியிருக்கும் இவரின் பெயர் புளோரன்ஸ் ஓவன்ஸ் தாம்சன் (Florence Owens Thompson). ஒட்டு மொத்த உலகத்தின் காவல்காரனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவில், 1929-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும், அதன் பாதிப்புகளையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றது டோரோதியா லாங்கெவினால் (Dorothea Lange) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்.

அமெரிக்காவில் 1929-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி 1939 வரை சுமார் பத்து வருடங்கள் நீடித்தது. தொழில் மயமாகப்பட்ட மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக இது கருதப்பட்டது. இந்த வீழ்ச்சியானது அமெரிக்கப் பங்குச் சந்தை மையமான வால் ஸ்ட்ரீட்டையே (Wall Street) அதிர வைத்து பீதியை உண்டாக்கியது. மேலும் பல ஆயிரக்கணக்கான பொருளாதார முதலீடுகளையும் நொடிப் பொழுதில் தரைமட்டமாக்கியது. இதனால் மக்களின் வாங்கும் திறனும், பொருளாதார முதலீடுகளும் வெகுவாகக் குறைந்தது. இதனடைப்படியில் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் அடியோடு குறைந்தது. தொழிற்சாலைகளில் ஆட்குறைப்புகள் அதிகளவில் அரங்கேறியதால் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது ஆப்ரிக்க அமெரிக்கர்கள்தான். காரணம் இவர்களின் வேலைகள் பறிக்கப்பட்டு, வெள்ளைக்கார அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டது. 1930-ம் ஆண்டு 50% சதவிதம் கருப்பின ஆப்ரிக்க, அமெரிக்க மக்களும், 1933-ம் ஆண்டு வாக்கில் சுமார் பதிணைந்து லட்சம் வெள்ளைக்கார அமெரிக்கர்களும் வேலைகளை இழந்துத் தவித்தனர். மேலும் அமெரிக்காவில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த வங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவைகள் மூடப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் சின்னாபின்னமாகியது.

1920-ன் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருந்தது அமெரிக்கா. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் வாங்கும் திறனும் அப்போது அதிகரித்திருந்தது. இதன் மூலம் மது அருந்துவது, புகை பிடிப்பது, குட்டைப் பாவாடைகள் அணிந்து கொள்வது போன்ற கலாசாரங்கள் பெண்களிடையே அதிகமாகப் பரவத் தொடங்கியது. ஆண்கள் இவைகளோடு, பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது, கார்கள் வாங்குவது, வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஈடுபாடு காட்டினர். இதில் முக்கியமான விஷயம் இவை அனைத்தையுமே கடன் பத்திரங்கள் மூலமாகவே வாங்கினர். இதன்மூலம் அமெரிக்கப் பொருளாதாரமும் அசுர வளர்ச்சியடைந்தது. ஆனால் இந்த வளர்ச்சி 65% அளவிற்கு உயர்ந்த போதும் அடித்தட்டு தொழிலாளர்களின் சம்பளம் வெறும் 8% மட்டுமே உயர்ந்தது. இதனால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியின் நீளம் அதிகரித்தது. அமெரிக்க மக்கள் தொகையில் மொத்த பணக்காரர்கள் 0.1%. இவர்களின் வருமானம் ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையின் 42% மக்களின் வருமானத்திற்கு நிகரானதாக அமைந்தது. இப்படியான காரணங்களினால்தான் 1929-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் நாள் அந்நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவை  அதள பாதாளத்திற்குத் தள்ளிய இந்த நாள் தான் கருப்பு செவ்வாய் என்று வர்ணிக்கப்படுகிறது.

அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஹெர்பட் ஹூவர் (Herbert Hoover) இந்தப் பிரச்னையை சரியாகப் புரிந்து கொள்ளாமலும், இந்த வீழ்ச்சியைக் குறைத்தும் மதிப்பிட்டு விட்டதோடு ''நமது தேசிய வாழ்வில் இது ஒரு கடந்த சம்பவம். வரும் காலங்களில் சரி செய்துவிடுவோம். இது ஒரு முக்கியமான பிரச்னை இல்லை'' என்று வார்த்தைகளை மட்டுமே உதிர்த்தார். இந்த வீழ்ச்சியால் உணவில்லாமல் தவித்த ஏழைகளை கண்டு கொள்ளாமல் விட்டார். அதோடு பணக்காரர்களுக்கும், தொழிற்சாலை அதிபர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக மட்டுமே அவரது திட்டங்களும் அமைந்தது. இத்தகையத் தவறானப் பொருளாதாரக் கொள்கையால்தான் அங்கு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த நிலையை மீட்டெடுப்பேம் என்ற உறுதிமொழியுடன்தான் 1932-ல் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் அதிபரானார். பதவியில் அமர்ந்த நூறு நாட்களுக்குள்ளேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கினார். மேலும் வங்கிகள் செயல்பாட்டு முறைகள், அரசாங்க நிர்வாகங்களை மேம்படுத்தி வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

1895 மே 26 அன்று அமெரிக்காவில் பிறந்தவர் போட்டோகிராபர் டோரோதியா லாங்கெ. போலியாவினால் பாதிக்கப்பட்டதால் இவரது வலது கால் பலம் இழந்து விட்டது. இதைபற்றி அவர், ''இது என் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வு. இதுதான் என்னை உருவாக்கியது. இதுதான் எனக்கு அறிவுரைகளையும், அவமானங்களையும் தந்தது. இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் என்னை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது'' என்றிருக்கிறார். இவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டதாலும், படிப்பில் நாட்டமில்லாததாலும் போட்டோகிராஃபியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர்.

1918-ம் ஆண்டு தன் கனவரோடு சேர்ந்து சான் ஃபிரான்சிஸ்கோவில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்க அது மிகவும் பிரபலமானது. இந்நிலையில்தான் 1929-ல் கருப்பு செவ்வாய் உருவானது. அப்போது அமெரிக்கப் பண்ணைப் பாதுகாப்பு நிர்வாகம் (US Farm Security Administration) (FSA) என்ற அமைப்புக்காக, வேலையில்லாத ஆண்களையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் புகைப்படம் எடுக்க சென்றார். அப்போது நிப்பொமா மேசா (Nipomo Mesa) என்ற இடத்தில்தான் புகைப்படத்தில் இருக்கும் அந்தத் தாயைக் காண்கிறார். அந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார், ‘’நான் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பசியுடன் துடிக்கும் அந்தத் தாயைப் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை காந்தம் இழுப்பது போல, அவரை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. என்னிடம் இருந்த கேமராவினால் புகைப்படம் எடுத்துக் கொண்டே அவரிடம் சென்றேன். அவர்களிடம் என்ன பேசினேன் என்று எனக்கு எதுவும் சரியாக ஞாபகம் இல்லை. அந்தக் காட்சி மட்டுமே என் மனதில் பதிந்திருக்கிறது. அவர்கள் பக்கத்து நிலத்தில் உடைந்து கிடக்கும் காய்கறிகளும், அவரது பிள்ளைகள் அடித்து எடுத்துவரும் பறவைகள் மட்டுமே அவர்களது உணவாக இருந்தது. பின்னர் அவரிடம் பேசியதில் அவர் வயது 32 என்றும், கையில் பணம் இல்லாததால் காரின் டயரை விற்றுத்தான் சாப்பாடு வாங்கினேன் என்றும் அவர் சொன்னார். அவரின் நிலையைக் கண்டு உண்மையில் நான் உடைந்துவிட்டேன்’’.

இவர் எடுத்த இந்தப் புகைப்படம் மார்ச் 1936-ல் சான் பிரான்சிஸ்கோ நியூஸ் (San Francisco News) என்ற பத்திரிகையில் வெளியானது. படம் வெளியான இரண்டே மாதத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தது அரசு. அமெரிக்காவின் பெரும் வீழ்ச்சியின் அடையாளமாக டோரோதியா லாங்கெவின் புகைப்படம் மாறிவிட்டது.

ன்றி : விகடன்
(உலகை உலுக்கிய புகைப்படங்கள் - 13)

No comments:

Post a Comment