சஹ்றா என்ற சொல்லுக்கு அரபு மொழியில் பாலைவனம் என்றே பெயர். அதனால்தான் இந்த பாலைவனத்துக்கும் சகாரா என்றே பெயர் வழங்கப்பட்டிருக்கக்கூடும். இதன் பரப்பளவு சுமார் மூன்றரை கோடி சதுர மைல்கள். இந்தப் பாலைவனம் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கும் முன்னர் ஏரிகளும், ஆறுகளும் இங்கே இருந்தனவாம்.

அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சகாரா ஆகிய 12 நாடுகளைத் தொட்டு சகாரா பாலைவனம் விரிந்து பரந்துள்ளது. நதிகள் ஓடியதற்கான சான்றுகளும், அந்த நீர்நிலைகளில் முதலை உட்பட பல வகை மீன்கள் வாழ்ந்ததற்கான படிமச் சான்றுகளும் கிடைத்துள்ளன. அதனால் மீண்டும் 15-ஆயிரம் ஆண்டுகள் கழித்து மாற்றங்கள் ஏற்பட்டு, இந்த இடம் மீண்டும் பசுமை அடையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தற்போதும்கூடப் பல ஆறுகள் குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி ஆகி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவை ஆண்டு முழுவதும் ஓடாமல் வற்றிவிடும் போக்கைக் கொண்டவை. இங்கு ஓடும் வற்றாத நதிகள் நைகர் மற்றும் நைல் நதிகள்.

பொதுவாக சகாரா உயிர் வாழ்க்கைக்கு உரிய இடமல்ல என்றாலும், சில நீர்நிலைகளை ஒட்டி மனிதர்களும், விலங்குகளும் வாழ்ந்துதான் வருகின்றனர். அதிக அளவு ஒட்டகங்களும், ஆடுகளும் மட்டுமே இங்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு வாழும் மஞ்சள் நிற தேள் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது என்றாலும், இது கொட்டி மனிதர்கள் இறப்பதில்லை. நரிகள் உண்டு. நீரில்லாமலேயே நீண்ட நாட்கள் வாழக்கூடிய ரிக், தாமா என்ற சிறு மான் வகைகளும் இங்கு உண்டு. சகாரா சிறுத்தைகளும் உண்டு. ஊர்வனவான பல்லிகள் மற்றும் மணல் விரியன்கள் காணப்படும் இந்தப் பிரதேசத்தில் பறவை இனத்தைச் சேர்ந்த நெருப்புக் கோழிகளும் உண்டு. வெள்ளி எறும்புகள் என அபூர்வ பெயர் பெற்ற எறும்புகள் சூடு தாங்காமல் இறக்கும் உயிரினங்களை உணவாக உண்டு மணலுக்கு அடியில் வாழ்ந்து உயிர் பிழைக்கின்றன.

ன்றி :  தி இந்து