Wednesday, September 2, 2015

வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடும் 'மௌனம்'

ஒரு குறுகியகால வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்கமாட்டார்கள் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.
எல்லாம் இருந்தும் சிலருக்கு வாழ தெரியாது. சிலருக்கு இருப்பதை கொண்டு வாழதெரியாது. இன்னும் பலர் குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கையை வட்டமிட்டுகொள்வார்கள். இன்னும் சிலர், தன் வாழ்க்கை போராட்டத்துக்குள் மற்றவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களுடைய வாழ்க்கையையும் சீரழித்துவிடுவார்கள்.
இந்த பூவுலகில் பிறந்த எல்லா உயிர்க்கும் இறப்பு மட்டுமே நிரந்தரம். பிறப்பு, பிறந்து நன்கு வளர்ந்த பின்தான் பிறப்பின் இரகசியம் நமக்கு தெரியும். ஆனால் பிறந்தபின் நாம் நிச்சயம் ஒருநாள் இறந்துவிடுவோம் என்பதை வாழும்போது உணர்வோம்.
இந்த இரகசிய பிறப்பை அமைதியாக ரசித்து வாழ்பவர்கள் நம்மில் எத்தனை பேர். அந்த வாழ்க்கை போராட்டமாக மாறுவது ஏன்? விட்டுக்கொடுத்தல், பக்குவம், புரிதல், மரியாதை, அறிவு ஆகியன இன்மையால் வாழ்க்கையே போராட்டமாகிவிடுகின்றது.
விட்டுக்கொடுத்தல், பக்குவம், புரிதல், மரியாதை, அறிவு இவற்றை கடைபிடித்தால் அன்புக்கு பஞ்சமே இருக்காது. அன்பு இருந்தால் இந்த உலகத்தில் நிம்மதியாக இருந்துவிடலாம்.
அன்பை கொடுப்பதற்கும் அன்பை பெறுவதற்கும் எம்முடைய வார்த்தை பயன்பாடு மிகவும் முக்கியமானதும் இன்றியமையாததாகவும் இருத்தல் வேண்டும். அதுதான் வள்ளுவரே!
'தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு' 

'யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'

என்ற குரல்கள் மூலம் எடுத்தியம்பியிருக்கின்றார்.
அன்பை வார்த்தைகள் மூலம் மட்டுமல்ல மௌனத்தின் ஊடாகவும் வெளிப்படுத்தலாம். வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம்;. உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மௌனமாக இருக்கிறோம்.
இந்த உலகம் இரைச்சல் மிகுந்தது. எந்நேரமும் எல்லா காலத்திலும் ஏதாவது கூச்சலும் குழப்பமுமாகவே இருப்பது. அழுகை சத்தமும், அலறல் சத்தமும், அகங்கார கொக்கரிப்பும், அவசரமும், அதட்டலும் மிகுந்தது. மிருகங்கள் இரவில்  மட்டும் இரைக்காக கூச்சலிடும். 
ஆனால், எல்லா காலத்திலும் மனிதர்களின் கூச்சல் உலகத்தை இடையறாது அசைத்துக்கொண்டுதான் இருக்கிறது. 
இந்தக் கூச்சலுக்கு நடுவே, இந்த சந்தடிக்கு நடுவே, மௌனமாக இருத்தல் என்பது முடியுமா? இந்தக் கேள்வியை கேட்டுகும்போதே, எதற்கு மௌனமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் வரும்.
பல நேரங்களில் மௌனமாக இருப்பது கடினமே. மௌனத்தைக் கலைத்து உங்களை கோபமூட்டிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஒரு சிலர் செயல்படுவார்கள்.
உலகில் அவரவர் திறமையைக் கொண்டு முன்னுக்கு வருவோம் என்று நினைப்பவர்களை விடவும், அரசியல் பண்ணி மேலதிகாரிகளைப் போட்டுக்கொடுத்து எப்படியாவது அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என செயல்படுபவர்களே அதிகம். அதில் சிலர் வெற்றி பெறுவதும் உண்டு. ஆனால் அந்த வெற்றி நிலையானதாக இருக்காது. 
மௌனத்துக்கும் மனோதத்துவத்துக்கும் தொடர்புகள் அதிகம். பெரும்பாலான நேரத்துக்கு மௌனமாக இருந்தாலும் மனோவியாதி உள்ளவர்களாகக் கருதி மற்றயவர்கள் ஒதுக்கி விட நேரிடும். 
ஆனால், மௌனத்தால் பல விடயங்களைச் சாதித்தவர்களும் உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அடையாளம் என்பது பழமொழி. அதுவே எதிர்ப்புக்கும் அடையாளமாகக் கொள்ளலாம். 
ஒருவர் கூறும் விடயம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றால், அதனை ஆமோதிக்காமல் மௌனமாகச் சென்று விடுவோரும் உண்டு. இதனால், அந்தக் கருத்துகளை சம்பந்தப்பட்டவர் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல. 
மௌனமும் ஆன்மீகமும் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. ஆன்மீகத்தின் ஓர் அடையாளமான தியானம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துகிறோம். 
பரபரப்பு நிறைந்த இன்றைய உலகில் அவ்வப்போது ஒருநாள் மௌன விரதத்தைக் கடைப்பிடிப்போரையும் காண்கின்றோம். இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு மருத்துவ அடிப்படையிலும் உடல் உறுப்புக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. 
என்றாலும், எல்லா நேரங்களிலும் மௌனத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில் தேவையானவற்றைத் தெளிவாகவும் உறுதியாகவும் பேசுவது அவசியமாகிறது. 
அதிக ஒலியுடன் ஆவேசமாகப் பேசுவதால் உடலின் சக்தி வீணாவதுடன், அப்படிப் பேசுபவர்கள் மீதான மற்றவர்களின் பார்வையும் தவறானதாக நேரிடும். 
எனவே, அளவுடன் தேவையானவற்றைப் பேசி நல்ல மனோநிலையை அடைவோம். மௌனமொழி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம். (தொகுக்கப்பட்டது)

- See more at: http://www.tamilmirror.lk/147820/2015-06-11-18-32-07#sthash.0ySu0Pkh.dpuf

No comments:

Post a Comment