Friday, December 21, 2012

Silbury Hill, Stonehenge, Avebury- அறிந்ததும் அறியாததும்



சில்பரி மலை, ஆவ்பரி கல் வட்டங்கள் மற்றும் ஸ்டோன் ஹெஞ்ச்


சில்பரி மலை      (
Silbury Hill)

     இங்கிலாந்தின் 'சில்பரி' என்னுமிடத்தில் 40 மீட்டர் உயரமும் (131 அடி), 167 மீட்டர் (548 அடி) விட்டமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. அதன் உச்சி தட்டையாக 30 மீட்டர் (98 அடி) விட்டம் உடையதாக உள்ளது. இது சுமார் 5 ஏக்கர் (2 ஹெக்டேர்) அளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த மலை இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது.

     இன்றிலிருந்து 4750 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மலை கட்டப்பட்டிருக்கிறது. கி.மு. 2400 முதல் கி.மு. 2300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மலை உருவாக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலை கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை.

     முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க 18 மில்லியன் மனித மணி நேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். 500 பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 15 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும்.

.      மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். தட்டையாக உள்ள அதன் மேல் பகுதி உருண்டை வடிவில் இருந்திருக்கலாம் என்றும், மத்திய காலத்தில் அது ஏதேனும் கட்டிடம் கட்டுவதற்காக தட்டையாக்கப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆவ்பரி கல் வட்டங்கள்         (
Avebury)


     சில்பரி மலைக்கு மிக அருகில், வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் (Avebury) 100 டன்களுக்கும் அதிக எடையுள்ள, நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 331.6 மீட்டர் (1088 அடி) விட்டமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. வட்டத்தை சுற்றியுள்ள கால்வாய் 21 மீட்டர் (69 அடி) அகலமும் 11 மீட்டர் (36 அடி) ஆழமும் கொண்டுள்ளது. மொத்தம் 98 கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில 40 டன்னுக்கு மேல் எடையுடையதாக உள்ளன. வடக்கு பக்கமுள்ள உள் வட்டமானது 98 மீட்டர் (322 அடி) விட்டம் உடையாதாக உள்ளது. இதில் உள்ள 4 கற்களில் 2 மட்டுமே நின்ற நிலையில் உள்ளது. தெற்கு பக்கமாக உள்ள வட்டமானது 108 மீட்டர் (354 அடி) விட்டமுடையதாக உள்ளது. 5.5 மீட்டர் (18 அடி) உயரமுள்ள ஒரு கல் நடுநாயகமாக நிறுவப்பட்டுள்ளது. இதுவும் 5000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதையும் யார் அமைத்தார்கள்? ஏன் அமைத்தார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. 

ஸ்டோன் ஹெஞ்ச்       (
Stonehenge)

     ஸ்டோன்ஹெஞ் இங்கிலாந்தில் உள்ள வில்ட்ஷயர் கவுண்டியில்,அமெஸ்பரிக்கு அருகே, சலிஸ்பரியிலிருந்து 13 கிமீ வடமேற்குத் திசையில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும். இந்த ஸ்டோன் ஹெஞ்ச் கி.மு. 3000 - கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இத் தொல்பொருட் சின்னத்தின், மிகப் பழைய பகுதியாகக் கருதப்படும், பழைய வட்டவடிவ மண் மேடுகளும், குழிகளும் கி.மு 3100 ஐச் சேர்ந்தவையெனக் கூறப்படுகின்றது.

     மிகப்பெரிய அளவுள்ள பாறாங்கற்களும் (Sarsen Stones) , நீலக்கற்களும் (Blue Stones) கொண்டு அந்த வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் 25டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமுமுள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள்.

     ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்ட விதத்தைக் கவனித்தீர்களேயானால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். நிலையாக நிறுத்தப்பட்ட கற்களில் முளை போன்ற கூரான ஒன்றை உருவாக்கி, அதற்கு மேலே வைக்கும் கல்லில் அந்த முளை பொருந்தும்படி ஓட்டையாகச் செதுக்கி, கற்கள் விலகாமல் இருக்க, பக்கவாட்டில் வளைந்த அமைப்புகளை உருவாக்கி, கனகச்சிதமாக வட்டவடிவமாகப் பொருந்தும்படி ஸ்டோன் ஹெஞ்சை அமைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் பாவித்த கருவிகள் என்று பார்த்தால், அவை வெறும் கற்கள்தான்.

நன்றி

http://en.wikipedia.org/wiki/Silbury_Hill
http://en.wikipedia.org/wiki/Stonehenge
http://en.wikipedia.org/wiki/Avebury
http://life-is-sciencee.blogspot.in




http://www.agalvilakku.com

No comments:

Post a Comment