Friday, December 21, 2012

டெங்கு காய்ச்சல் -(அறிந்ததும் அறியாததும்)

                             டெங்கு காய்ச்சல் (Dengue fever) ஒருவகை வைரஸ் காய்ச்சல் ஆகும். ‘ஆர்போ’ என்ற வைரஸால் உருவாகிறது. இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.

     ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) வகை கொசுக்களால் இந்நோய்த் தொற்று ஏற்படுகிறது. இக்கொசுவின் கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பெரும்பாலும் விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது.

     டெங்கு பாதித்த ஒருவரை ஏடிஸ் எஜிப்டி கொசு கடித்ததும், கொசுவின் உடலுக்குள் செல்லும் ‘ஆர்போ’ வைரஸ் வளர்ந்து கொண்டேயிருக்கும். மற்றவரைக் கடிக்கும்போது ரத்தத்தில் கலந்து விடும். கொசுவின் உடலுக்குள் ஒருமுறை செல்லும் ‘ஆர்போ’ வைரஸ் 2 வாரங்கள் வரை வீரியத்தோடு இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரக்கூடியவை. பெண் கொசு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.

     குழந்தைகள், சிறுவர்களுக்கு கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும்.

                                            

     டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.

     டெங்கு வந்தாலே இறப்பு நேரும் என்பது மூட நம்பிக்கை. நோய் எதிர்ப்பு சக்தி, ஜீன் அடிப்படையில் இதன் தாக்கம் இருக்கும். அறிகுறிகள் தெரிந்தவுடனே சிகிச்சை எடுத்துக்கொண்டால் 1 வாரத்தில் குணமாகிவிடும். அலட்சியம் செய்தால், நிணநீர் சுரப்பி வீங்கி விடும். காய்ச்சலும் அதீத உடம்பு வலியும் இருக்கும். நெறி கட்டிக்கொள்ளும். இது இரண்டாம் நிலை. இதற்கும் சாதாரண சிகிச்சையே போதும். 

     இதற்கு மேலும் உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டால் கல்லீரல், மண்ணீரல் வீங்கிவிடும். எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்படும். இது மூன்றாம் நிலை. குளுக்கோஸ் ஏற்ற வேண்டும். இதற்கு அடுத்த நிலைதான் சற்று விபரீதம். மலம், சிறுநீரில் ரத்தக்கசிவு ஏற்படும். பல் ஈறு, மூக்கு, தோல்பகுதியில் திடீரென ரத்தம் கசியும். தகுந்த நேரத்தில் ரத்தமோ, ரத்தத் தட்டணுவோ ஏற்றுவதன் மூலம் இதையும் குணப்படுத்தி விடலாம். மனித உடலில் ரத்தம் உறையும் தன்மையைக் காக்கும் தட்டணுக்கள் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கியூபிக் மில்லி மீட்டர் அளவுக்கு இருக்க வேண்டும். எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழே சென்றால் உடனடியாக ரத்தம் அல்லது ரத்தத் தட்டணு ஏற்ற வேண்டும்.                                              
     டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.

     டெங்குவில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.

     இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும். 


                           


     டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பீதியடையத் தேவையில்லை.

     டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது (அ) டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது. மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு (அ) ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும். 

                                     

     டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும். எனவே மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்துகளை கொடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும். 

     டெங்கு தாக்கினால் உடலின் நீர்ச்சத்தை குறைத்து விடும். உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க இளநீர், கஞ்சி, உப்பு கரைசல் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்கியவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வடையாமல் தடுக்கும்.

     பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.

     பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

     பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.

     டெங்குவுக்கு சரியான மருந்தோ தடுப்பூசியோ கிடையாது என்று உலகம் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் - அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இயற்கை நமக்கு ஒரு அரிய பொருளை வழங்கியிருக்கிறது. டெங்குவை குணப்படுத்தும் அதிசய பொருள் இது. நம் வீட்டிலேயே இதை தயாரிக்கலாம் என்பது தான் விசேஷமே. 

     புதிதாகக் பறிக்கப்பட்ட பப்பாளி இலையில் இருந்து தான் இந்த பப்பாளி இலைச் சாற்றை தயாரிக்கவேண்டும். ஒரு முறை சாறு எடுப்பதற்கு 2 பப்பாளி இலைகளைப் பறித்து சுத்தம் செய்து வடிகட்டி துணியில் சாறைப் பிழிய வேண்டும். இதிலிருந்து இரண்டு மேஜைக்கரண்டி சாறு தான் கிடைக்கும். இச்சாறு மிகவும் கசப்பாக இருக்கும். இந்தச் சாற்றை அப்படியே உட்கொண்டால் அதன் வீரியம் குறையாமல் இருக்கும். எனவே ஒரு நாளைக்கு ஒரு முறை இந்தச் சாற்றைப் பருகினாலே போதுமானது. ஆனால் கசப்பு காரணமாக அப்படியே உட்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது பழச்சாற்றில் இதனைச் சேர்த்துப் பருகலாம். அப்படிச் செய்யும் போது ஒரு ஒரு நாளைக்கு இரு முறை உட்கொள்ளவேண்டும்.

     பப்பாளி இலைச் சாற்றில் உள்ள என்சைம்கள் டெங்குவை உருவாக்கும் வைரஸ்களை மட்டும் அல்ல வேறு பல கொடிய வைரஸ்களையும் எதிர்த்து போரிடும் தன்மை கொண்டவை.

     பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது.

http://www.agalvilakku.com

No comments:

Post a Comment