Monday, December 17, 2012

யார் நல்லாசிரியன்?


யார் நல்லாசிரியன், அவரது குணாதிசயங்கள் எத்தன்மையதாக இருக்கவேண்டும் என்று நன்னூலில் கூறப்பட்டிருக்கிறது. 

‘குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை 
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை 
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் 
உலகிய லறிவோ டுயர்குண மினையவும் 
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே’ 



பதவுரை: 

குலன் – உயர்குடிப்பிறப்பும் 
அருள் – ஜீவகாருண்யமும் 
தெய்வம் கொள்கை – கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் 
மேன்மை - பெருந்தகைமையும் 
கலைபயில் தெளிவு – பல நூல்களில் பயின்ற தேர்ச்சியும் 

கட்டு உரை வன்மை – மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி, தொடுத்துச் சொல்லுகின்ற சொல்வன்மையும் (கற்றுத்தரும் வல்லமை) 

நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் – பூமியையும் மலையையும் தராசு கோலையும் பூவையும் ஒத்த உயர்ந்த குணங்களும் 

உலகு இயல் அறிவோடு – உலகத்தில் உள்ள நன்மை தரும் செயல்களை அறிந்திருக்கின்ற அறிவுடனும் 

உயர் குணம் இனையவும் – இவை போன்ற மிக உயர்ந்த குணங்கள் அனைத்தும் சேர்ந்து 

அமைபவனே – பொருந்தியிருக்கப் பெற்றவனே 

நூல் உரை ஆசிரியன் – நூலைக் கற்பிக்கும் நல்லாசிரியனாவான். 

கருத்துரை: 

உயர்குடிப்பிறப்பும், உயிர்களிடத்தில் அன்பும், கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் அளித்த பெருந்தன்மையான குணமும், பல நூல்களில் பயின்ற தேர்ச்சியும், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி, தொடுத்துச் சொல்லுகின்ற (கற்றுத்தரும் திறனும்) சொல்வன்மையும், பூமியையும் மலையையும் தராசு கோலையும் பூவையும் ஒத்த உயர்ந்த குணங்களும், உலகத்தில் உள்ள நன்மை தரும் செயல்களை அறிந்திருக்கின்ற அறிவும், இவை போன்ற மிக உயர்ந்த குணங்கள் அனைத்தும் சேர்ந்து பொருந்தியிருக்கப் பெற்றவனே நூலைக் கற்பிக்கும் நல்லாசிரியனாவான். 

இன்று ஆசிரியத் தொழில் செய்பவர்க
ள் ‘ஆசிரியத் தொழிலுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றுகிறோமா’ என்று தங்களுக்குத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.



::::எழுத்து இணையம் :::

No comments:

Post a Comment