Monday, November 19, 2012

ஒரு குழந்தையின் இதயமும், சில துளி வாழ்க்கையும்……

கை.அறிவழகன்
little-things-photo
பெங்களூரின் அதிகாலைக் காற்று திறந்த கதவுகளின் வழியாக குளிரோடு வழிந்து கொண்டிருந்தது, திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் அலுப்பூட்டும் சுவர்கள், இரவெல்லாம் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்து, வெளிறிய முகங்களோடு வேலைக்குப் போகும் மனிதர்கள்.
எங்கோ ஒரு வீட்டின் காலை அவசரத்தை உணர்த்தும் "குக்கர்" ஓசை, உறக்கம் கலைப்பதற்காகத் திரும்பிப் படுக்கும் நிறைமொழியின் அசைவுகள் என்று அந்த நாள் ஒரு வழக்கமான நாளாகவே இருக்கும் என்று நினைத்திருக்கும் போது அலைபேசி ஒலித்தது,
பெயர் இல்லை, யாராக இருக்கும் என்கிற குழப்பத்தோடு நாற்காலியில் இருந்து எழுந்து அலைபேசியை எடுப்பதற்குள் அழைப்பு நின்றிருந்தது. பதிவாகி இருந்த எண்ணுக்குத் திரும்ப அழைத்த போது கரகரத்த குரலில் மும்பை அலுவலக நண்பன் சாய்நாத் தயங்கியபடி "காலை நேரத்தில் தொந்தரவு செய்கிறேனா?" என்றபடி தொடர்ந்தான்.
"ஒரு உதவி செய்ய வேண்டும் ஹரிஷ்" (அறிவழகன் என்கிற பெயரின் வட இந்திய மொழியாக்கம்), "சொல்லுங்க சாய்நாத்", எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் குழந்தைக்கு இதயத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது, அவர்கள் புட்டபர்த்தி மருத்துவமனைக்குச் சென்று கேட்டதில் அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள், இப்போது பெங்களூரில் இருக்கிறார்கள், ஜெயதேவா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்று யாரோ சொன்னார்களாம், அது குறித்து நீங்கள் முடிந்தால் விசாரித்து அவர்களுக்கு உதவ முடியுமா?". என்று நிறுத்தினான் சாய்நாத்,
"குழந்தை இப்போது எங்கே இருக்கிறது? என்ன வயது? என்று நான் கேட்டபோது சாய்நாத் சொன்னான் "இரண்டு வயது". அன்றைய காலை நொடி நேரத்தில் அவசரமயமாகிப் போனது. ஜெயதேவா மருத்துவமனையின் முகப்பில் அவர்கள் இருக்கிறார்கள், குழந்தையின் தந்தையின் அலைபேசி எண்ணை உங்களுக்கு நான் குறுஞ்செய்தியாக அனுப்புகிறேன், இயன்றால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என்கிற சொற்களை என் காதுகளுக்குள் செலுத்தி விட்டு அலைபேசி அடங்கிப் போனது.
இரண்டு வயதுக் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை, தாயும் தந்தையும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் அலைகிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள், எத்தனை வலி நிரம்பிய பயணம் அது, வாழ்க்கை பரிசளித்த குழந்தையின் இதயத்தில் இருக்கிற ஓட்டையில் தேங்கிக் கிடக்கிற தங்கள் சுக துக்கங்களோடு அவர்களின் தவிப்பு கண்களில் நிழலாடியது,
இடைவெளியில் அலைபேசி எண்ணைக் குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தான் சாய்நாத்.குழந்தையின் தந்தைக்கு அழைத்தபோது மராட்டி கலந்த ஹிந்தியில் "நாங்கள் ஜெயதேவா மருத்துவமனையின் முகப்பில் அமர்ந்திருக்கிறோம், விசாரணை அலுவலகம் ஒன்பது மணிக்குத் திறக்கும் என்று சொல்கிறார்கள், அதுவரை நாங்கள் இங்கேயே இருப்போம், உங்களைக் குறித்து சாய்நாத் சாப் சொன்னார்" என்றார். "சரி அங்கேயே இருங்கள், நானும் ஒன்பது மணிக்கு அங்கே வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பத் தயாரானேன்.
ஜெயதேவா மருத்துவமனை நான் வசிக்கிற வீட்டில் இருந்து வெகு தூரமில்லை என்றாலும் பெங்களூரின் காலை நேரச் சாலைகள் பீதியூட்டும் நெருக்கடி மிகுந்தவை, சாகசங்கள், உரையாடல்கள் எல்லாம் முடிந்து ஜெயதேவா மருத்துவமனையின் வாயிலுக்குள் நுழைந்து நேரத்தைப் பார்த்த போது 9.20 ஆகிவிட்டிருந்தது, மீண்டும் ஒருமுறை அலைபேசியில் குழந்தையின் தந்தையை அழைத்து அவர்கள் இருக்கிற இடத்தை அடைந்த போது மருத்துவமனை தனது வழக்கமான இரைச்சலுடன் அன்றைய பொழுதைத் துவக்கி இருந்தது,
ஏக்நாத்தும் அவரது மனைவியும் எழுந்து வணக்கம் சொன்னார்கள், அந்த வணக்கத்தின் பின்னே ஒரு குழந்தையின் உயிரும், அதைக் காக்கும் வேண்டுதலும் நிரம்பி இருப்பதாக நான் உணரத் துவங்கினேன், இருவரும் மிக இளவயதுக்காரர்கள், ஏக்நாத்துக்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து வயது இருக்கக் கூடும், அவரது மனைவியோ இன்னொரு குழந்தையைப் போலிருந்தார்.
மராட்டிய மாநிலத்தின் ஊராகப் பகுதிகளில் நிகழும் இளவயதுத் திருமணங்களில் அதிகம் பாதிப்படைவது குழந்தைகள் தான் என்கிற உண்மை ஏனோ முகத்தில் அறைந்து நின்றது. குழந்தை ஒரு அழகிய மலரைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள், தன்னைச் சுற்றி நிகழும் போராட்டங்கள் ஏதும் அறியாதவளாக அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படி இருப்பதே நல்லது, வாழ்க்கையையும் அதன் வலியையும் மனிதர்கள் உணரத் துவங்கும் போது அவர்களுக்கு வயதாகி விடுகிறது, குழந்தைகள் வயதான மனிதர்களின் வலியைக் குறைக்க அனுப்பப்பட்ட அற்புத மலர்கள், அவர்கள் விடும் மூச்சுக் காற்றின் நறுமணங்களில் தான் அழுகிய வாழ்க்கையின் நாற்றம் கொஞ்சமேனும் மட்டுப்படுத்தப்படுகிறது.
Stone-Age-For-Kids
நாங்கள் பல்வேறு அலுவலர்களையும், மருத்துவர்களையும் அன்று சந்தித்தோம், கண்ணுக்குத் தெரியாத அந்தக் குழந்தையின் வலி குறித்து ஜெயதேவா மருத்துவமனை அத்தனை அக்கறை காட்டவில்லை, குறைந்தபட்ச செலவுத் தொகையைக் கட்டினால் மட்டுமே இங்கு அனுமதி கிடைக்கும் என்றும், அனுமதி கிடைத்த பிறகு குறைந்தது இருபது நாட்கள் காத்திருக்க வேண்டும் என்கிற மக்கள் தொடர்பு அலுவலர் சொன்னபோது அந்தப் பெற்றோரின் கண்கள் களைப்படைந்து உள்வாங்கியது போலிருந்தது.
பதினைந்து நாட்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தவறினால் உயிருக்கு எந்த வகையிலும் உறுதி அளிக்க முடியாது என்று மும்பை சியோன் மருத்துவமனை ஒரு குறிப்பு எழுதி அனுப்பி இருந்தது. நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனை ஒன்றே எஞ்சி இருக்கும் வாய்ப்பு, இரண்டு மாடுகளையும், கொஞ்சம் நிலத்தையும் விற்று விட்டு இந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி விட வேண்டும் என்று தவிக்கிற அந்தப் பெற்றோரின் முன்னாள் நானும் ஒரு குழந்தையைப் போலச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
அவர்களின் கையில் நாற்பதாயிரம் ரூபாய் பணம் இருக்கிறது, குறைந்தது இந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டில் இருந்து மூன்று லட்சம் வரை செலவாகக் கூடும் என்று சந்தித்த மருத்துவர்கள் அனைவரும் சொல்லி இருந்தார்கள், நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. நம்பிக்கையிழந்த மனத்தைக் குழந்தையின் சிரிப்பும் விளையாட்டும் சிலிர்ப்பூட்டி சிறகுகள் பொருத்தியது.
எனது அலுவலகத்தின் இயக்குநருக்குத் தொடர்பு கொண்டு குழந்தையின் நிலை குறித்து நீண்ட நேரம் விளக்கி நீங்கள் உதவியே ஆக வேண்டும் என்று சொன்னவுடன் அவர் "அந்தப் பெற்றோரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டுச் சொல்" என்றார். அவர்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கலாம் என்றவுடன், நான் நிறுவனத்தின் சார்பில் ஐம்பதாயிரம் தருகிறேன், பிறகு இன்று மாலையில் முதலாளியிடம் பேசி அவரிடம் இருந்து ஏதேனும் உதவி பெற இயலுமா என்று முயற்சிக்கிறேன், நீ அவர்களோடு இருந்து உதவி செய் என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தார்.
நம்பிக்கை வலுப்பெற ஆரம்பித்தது, ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் வரை கையில் இருக்கிறது என்னுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் இருபதாயிரம் ரூபாயையும் சேர்த்து. சித்தி செச்சாரே என்கிற அந்த இரண்டு வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் எங்களோடு பயணித்துக் கொண்டே இருக்கிறாள், நான் அவ்வப்போது அந்தக் குழந்தையின் இதயம் வழக்கமான குழந்தைகளை விடவும் மிக வேகமாகத் துடிப்பதை ஒரு விதமான கலக்கத்தோடு பார்த்தபடி பயணிக்க வேண்டியிருந்தது.
பள்ளியில் இருந்து சீருடைகளோடு திரும்பிக் கொண்டிருந்த எண்ணற்ற குழந்தைகளை வழி நெடுகப் பார்த்தபடி நாங்கள் நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனைக்குள் நுழைந்தோம், பல்வேறு விசாரணைகள் மற்றும் சந்திப்புகளின் முடிவில் நாங்கள் கொலின் ஜான் என்கிற மிகப்பெரிய மருத்துவரின் இணை மருத்துவரைச் சந்தித்தோம்.
கௌரவ் செட்டி என்று அழைக்கப்படும் அவர் ஒரு மருத்துவருக்கான கனிவையும், புன்னகையையும் தன்னுடைய கடும் பணிச் சுமைகளுக்கு இடையே மறக்காமல் வைத்திருந்தார், ஒருவிதமான மன்றாட்ட மனநிலையில் என்னுடைய ஆற்றலை எல்லாம் பயன்படுத்தி அந்த மருத்துவரிடம் நான் ஏறக்குறைய அரை மணி நேரம் பேசினேன்.
இறுதியில் குறிக்கப்பட்டிருந்த இருந்த இரண்டு லட்சம் ரூபாயில் தன்னுடைய அறுவை சிகிச்சைக் கட்டணமான இருபத்து ஐந்தாயிரத்தை இந்தக் குழந்தைக்காக நான் வழங்குகிறேன் என்று தன்னுடைய முத்திரைத் தாளில் அவர் எழுதிக் கையெழுத்திட்டார்.
மேலும் சில சலுகைகளை வழங்கும்படி கட்டணச் சலுகைப் பிரிவுக்கும் அவர் குறிப்பு எழுதி இருந்தார். இறுதியாக மருத்துவமனை ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணம் செலுத்தி நீங்கள் குழந்தையை அனுமதிக்கலாம் என்றும் இரண்டு மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் சொல்லி முடித்தார்கள் கட்டணப் பிரிவு அலுவலர்கள். அன்றைய நாள் முடிவுக்கு வந்திருந்தது, மருத்துவமனை அருகிலேயே ஒரு சிறிய தங்கும் விடுதியில் அறையைப் பதிவு செய்து அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு வீடு திரும்பினேன்.
மனம் முழுவதும் சித்தி செச்சாரே என்கிற அழகிய மலர் போன்ற அந்தக் குழந்தையின் முகம் நிறைந்திருந்தது, இரவில் மகிழ்ச்சியும் மனித வாழ்க்கையின் மகத்துவமும் நிரம்பிய அந்த அழைப்பு எனது இயக்குனரிடம் இருந்து வந்தது, ஒரு லட்சம் தவிர்த்து மீதித் தொகையை நமது முதலாளி வழங்குவதாகச் சொல்லி இருக்கிறார், நீங்கள் நாளை அலுவலகத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம், தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான பணச் சிக்கல்கள், நிதிச் சுமைகள் வந்த போதெல்லாம் நான் காத்து வைத்திருந்த நேர்மையும், கடும் உழைப்பும் என்னுடைய முதலாளிகளின் தவிர்க்க இயலாத தேவையாக இருந்ததன் பலனை இந்தக் குழந்தைக்காக நான் அறுவடை செய்து கொண்டேன்.
பொழுது வேகமாக புலர்ந்து விட்டிருந்ததோ இல்லை மனம் பொழுதை வேகமாய்ப் புலர வைத்திருந்ததோ தெரியவில்லை, குழந்தைகள் தொட்டிச் செடிகளை உடைத்து விட்டதற்காகப் பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கும் என் வீட்டு முதலாளி சிக்கிய யாரிடமோ தன்னுடைய பொருளீட்டு புராணம் பாடிக் கொண்டிருந்தார்.
அலுவலகம் சென்று நிதியாளரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவமனை வந்த போது பதினோரு மணியாகி இருந்தது, குழந்தையைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி அறுவை சிகிச்சைக்கு உடல் தயாராக இருப்பதை உறுதி செய்து கொண்டு அனுமதிப் பிரிவில் "ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு குழந்தையை அனுமதியுங்கள் மீதிப் பணத்தை நாளை கட்டுகிறோம்" என்று நான் சொன்னபோது அவர்கள் மறுத்தார்கள், மீதிப் பணத்தையும் இப்போதே கட்டினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தங்கள் ஒழுங்கு விதிகள் சொல்வதாக அவர்கள் சில காகிதங்களைக் காட்டினார்கள்.
அந்தப் புதிய சிக்கலைச் சமாளிக்க என்னுடைய அதிகம் பயன் படுத்தப்படாத கடன் அட்டை துணைக்கு வந்தது, மீதிப் பணத்தை கடன் அட்டையில் இருந்து பெற்றுக் கொண்டு ஒப்புதல் சீட்டில் என்னைக் கையெழுத்திடச் சொன்னபோது பல புதிய பொருட்களை குடும்பத்திற்காகவோ, குழந்தைக்காகவோ வாங்கிய போதெல்லாம் இல்லாத நிறைவும், மகிழ்ச்சியும் அந்த அறையெங்கும் நிரம்பி இருந்தது. அனுமதிக்கப்பட்ட குழந்தையின் கூடவே ஒருவர் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டதால் குழந்தையின் தாய் குறித்து அதிகம் கவலை இல்லை.
ஏக்னாத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்கிற முடிவோடு குழந்தையை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விட்டு விட்டுத் திரும்பும் போது மருத்துவரின் சொற்கள் காதில் எதிரொலித்தன, "அறுவை சிகிச்சையின் போது குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பு அறுபது விழுக்காடு வரையில் இருக்கிறது". அந்த சொற்களின் பின்னே ஒளிந்திருக்கும் மரணத்தின் முப்பது விழுக்காடு எனது கால்களையே தடுமாறச் செய்தது என்றால் பெற்றவர்களின் மனம் என்ன பாடுபடும், திரும்பி ஒருமுறை அந்தக் குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பை உள்வாங்கினேன், ஏதோ ஒரு கோவிலில் இருந்து கொண்டு வந்திருந்த விபூதியை அந்தக் குழந்தையின் மேலே பூசிக் கொண்டிருந்தாள் அந்தத் தாய், அவளுக்குத் தெரியாது இங்கிருக்கும் மருத்துவர்களே இந்தக் குழந்தையைக் காக்கப் போகும் கடவுளரென்று…..
ஏக்நாத் வீட்டுக்கு வருவதற்கு மறுத்தார், "நான் இங்கேயே இருக்கிறேன் சார், என் மனைவிக்கு ஹிந்தியும் தெரியாது, மருத்துவர்கள் ஏதாவது சொன்னால் கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது" என்று பிடிவாதமாய்ச் சொன்னவரின் கண்களில் தனது குழந்தையைப் பிரிந்து வர முடியாத ஒரு தாயின் ஏக்கம் நிறைந்திருந்தது. மூன்றாம் நாள் காலையில் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றபோது தனது அழுக்குப் பையோடு வாசலில் நின்றிருந்தார் ஏக்நாத் என்கிற அந்த பாசம் நிரம்பிய தந்தை.
இரவு "எங்கே உறங்கினீர்கள் ஏக்நாத்?" என்று கேட்டபோது எதிர்த் திசையில் இருந்த புதரை நோக்கிக் கையைக் காட்டினார், தன்னுடைய குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்றால் நான் இதை விடக் கொடிய வனப் பகுதியிலும் படுத்துறங்கத் தயாராக இருப்பதாகச் சொன்னபோது அவரது கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நான் வேறு பக்கமாய்த் திரும்ப முயற்சி செய்தேன், சொற்கள் முடிந்து போகிற கணங்களில் ஒரு துளிக் கண்ணீர் பேரிலக்கியமாகிறது, மிதமிஞ்சிய மகிழ்ச்சியிலும், மிதமிஞ்சிய கவலையிலும் மனிதர்களிடம் மீதமிருப்பது சில கண்ணீர்த் துளிகள் மட்டும்தானே.
அறுவை சிகிச்சை செய்வதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என்கிற செவிலியர்களின் சொற்களை நம்பி நான் அலுவலகம் திரும்பினேன், பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு ஏக்நாத்திடம் இருந்து அழைப்பு வந்தது, "இன்றே அறுவை சிகிச்சை செய்கிறார்களாம் சார்", குழந்தைக்குக் காலையில் இருந்து ஏதும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள், நீங்கள் வந்தால் எங்களுக்கு ஆறுதலாய் இருக்கும் என்கிற அவரது குரல் உடைந்து நொறுங்கி இருந்தது.
dad-kid
அலுவலகத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்த போது குழந்தைக்குப் பச்சை நிறத்தில் ஆடை அணிவித்திருந்தார்கள், தங்கள் குறிப்புகளை எல்லாம் முடித்துக் கொண்ட பின்னர் குழந்தையை மருத்துவர்கள் கேட்டபோது அந்தத் தாய் தனது குழந்தையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கொடுக்க மறுத்தார், "மேரா பச்சே, மேரா பச்சே" என்கிற அந்தத் தாயின் அழுகுரல் மருத்துவமனைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.
உயிர் வாழ்க்கையின் அடையாளமான உடலோடு மனிதன் போராடிக் கொண்டே இருக்கிறான், உடலை மையமாக வைத்து நடக்கிற இந்த வாழ்க்கை என்கிற விளையாட்டில் மனிதன் கடைசியில் என்றோ ஒருநாள் தோற்றுப் போயாக வேண்டும், ஆனாலும் விடாது போராடும் மனிதனின் துணிச்சலும், அவனது ஆற்றலும் அளவிட முடியாதது மட்டுமில்லை என்றாவது ஒருநாள் அவன் வெற்றி பெறுவதற்கான அவனது பயிற்சியாகவும் இருக்கக் கூடும்.
குழந்தை சித்திக்கு இது இறுதிப் படுக்கையாகவும் இருக்கக் கூடும், அவளது உடல் வாழ்க்கைப் போராட்டத்தில் இன்று வெற்றி பெறுமேயானால் இன்னும் அறுபது எழுபது ஆண்டுகள் எந்தச் சிக்கலும் இல்லாமல் உயிர் வாழ முடியும் என்கிற நம்பிக்கையே அந்தக் கணத்தில் மேலோங்கி இருந்தது. நாங்கள் காத்திருப்புப் பகுதியில் அமர வைக்கப்பட்டோம், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஒலிபெருக்கியில் நாங்கள் அழைக்கப்படுவோம்.
அந்த அறை முழுவதும் தந்தையை அனுப்பி விட்டுக் காத்திருக்கும் மக்களும், மக்களை அனுப்பி விட்டுக் காத்திருக்கும் பெற்றோரும் நிரம்பிக் கிடந்தார்கள், தங்கள் அன்பானவர்களின் பெயரை அந்த ஒலிபெருக்கி எப்போது சொல்லப் போகிறது என்று காத்துக் கிடக்கும் மனிதர்களிடையே காலம் கடத்துவது என்பது எத்தனை வலி மிகுந்ததாய் இருக்கிறது, பார்ப்பவர்களிடமெல்லாம் அவர்கள் நம்பிக்கையையும், நல்ல செய்திகளையும் எதிர்பார்க்கிறார்கள், நம்பிக்கையும், வலியும் நாற்காலிகள் எங்கும் நிரம்பி வழிகிறது.
நான்கு முப்பத்தைந்து மணிக்கு ஒலிபெருக்கியில் பெருகி வழிந்தது "சித்தி செச்சாரே" என்கிற அந்தப் பெயர், பெயரின் பாதிச் சொல் ஒலிபெருக்கியில் ஒட்டிக் கிடந்த போதே காணாமல் போயிருந்தார்கள் சித்தியின் பெற்றோர், சிக்கல் என்னவென்றால் என்னுடைய நுழைவுச் சீட்டும் அவர்களிடமே இருந்தது தான், நுழைவுச் சீட்டின்றி எங்கேயும் நுழைவதில் நம்மை (தமிழர்களை) விஞ்ச யார் இருக்கிறார்கள், சில சாகசங்கள் புரிந்து நானும் மூன்றாம் தளத்தை அடைந்தேன்.
காலுறைகள், நீல நிற அங்கிகளை அணிந்து கொண்டு நாங்கள் அந்த உயர் பாதுகாப்பு அறையின் நடைப்பகுதியில் நடக்கத் துவங்கியபோது சொற்களும், சூழலும் மறைந்து ஒரு மெல்லிய கயிற்றைப் போல ஏதோ ஒன்று கழுத்தை இறுக்குகிறது, எந்தச் சிக்கல்களும் இல்லாமல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக கௌரவ் செட்டி என்கிற அந்தக் கடவுள் எங்களைப் பார்த்துச் சொல்கிறார், பெயரும் முகமும் மறைக்கப்பட்டு அவளருகில் நின்று உயிர்ப் பாதுகாப்பு எந்திரங்களை இயக்கியபடி குழந்தையின் பிஞ்சுப் பாதங்களை மெல்ல நகற்றும் அந்த இளம் மருத்துவரின் கரங்களில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
கடக்கும் செவிலியர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் தெரிகிறது, நாங்கள் வெளியேறி மருத்துவமனை முகப்புக்கு வந்த போது அந்தக் குழந்தையின் தாய் என்னை பார்த்துக் கை கூப்புகிறார், உலகில் நான் பெற்ற மிகச் சிறந்த வணக்கம் அது, என்னுடைய வாழ்க்கையின் நாட்கள் முழுமைக்கும் அந்த வணக்கம் போதுமானதாகவும், நிறைவானதாகவும் இருக்கிறது. "மேரா பச்சே மில்கயா", மேரா பச்சே மில்கயா" (என் குழந்தை எனக்குக் கிடைத்து விட்டது) என்று கட்டிப் பிடித்து அழும் "ஏக்நாத்" என்கிற அந்தத் தந்தை தான் எத்தனை மேன்மையான மனிதன்.
universal_love____by_sundeepr
நன்றி மருத்துவர்களே (டாக்டர்.கொலின் ஜான் & டாக்டர் கௌரவ் செட்டி), இந்த விவசாயியின் குழந்தைக்காக உங்கள் கட்டணங்களை மட்டுமே இழந்தீர்கள், ஆனால், உலகின் மனசாட்சியில் இடம் பெற்றீர்கள். ஏக்நாத்திடம் விடைபெற்று வெளியே வருகிறேன் நான்,
உடல்களால் நிரம்பிய வாழ்க்கை வெளியெங்கும் பரவிக் கிடக்கிறது, இப்போது உயிர் ததும்ப அழுவதும், உயிர் ததும்பச் சிரிப்பதுமே எனக்கான இறுதி வாய்ப்பாக இருக்கிறது, இம்முறை என்னுடைய தேர்வு உயிர் ததும்ப அழுவது……..

***************


No comments:

Post a Comment