Monday, November 19, 2012

நடிகனின் பயணம்!


-இளங்கோ


பிரிக்க முடியாதது-திரைப்பட ரசனையும்,ரசிக மனோபாவமும்! என சொல்லுமளவுக்கு இந்திய மனங்களில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது....பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்தாலும் தங்கள் மொழி படங்களில் நடிக்கும் கதாநாயகர், தங்கள் குடும்பங்களில் ஒருவராக,புனிதராக கருதுவதாகவே உள்ளது இந்திய குடும்பங்கள்...இதில் கல்வியறிவில் முதன்மை மாநிலமாக திகழும் கேரளமும் விதிவிலக்கல்ல...

முன்னணி நட்சத்திரங்களான மோகன்லாலும்,மம்மூட்டியும் மலையாள மனங்களை கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்துக் கொண்ட  இனிய கள்வர்கள்தான்..... இதில் மோகன்லால், ரஜினியை போல துரு துரு கதாபாத்திரங்களின்  வழி அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் சிவாஜியைப் போல,கமலைப்போல புதிய முயற்சிகளை மேற்கொண்டு தனது கம்பீர நடிப்பின் மூலம் இதயங்களில் நிரம்பியவர் மம்மூட்டி...

அதனால்தானோ என்னவோ 'மம்முக்கா' என செல்லமாய் அழைக்கிறார்கள் சேர நாட்டு மக்கள்....
அவரின் கம்பீரமே பெரும்பாலான சமயங்களில் மக்களில் இருந்து கொஞ்சம் தள்ளி வைத்து பார்க்கும் பெரும்பான்மை கருத்தியலை உருவாக்கியும் உள்ளது. ஆனால் அவரின் இதயமோ சராசரி மனிதனையும் நேசிக்கும் உயர்ந்த பண்பு கொண்ட "எளிய மனிதர்களின் நண்பன்" என பறைசாற்றுகிறது 'மூன்றாம் பிறை' எனும் 128 பக்கங்கள் கொண்ட நூல்....

தனது வாழ்வனுபவங்களை தாய்மொழியான  மலையாளத்தில் 'காழ்ச்சப்பாடு' எனும் நூலாக எழுதியிருந்தார் நடிகர் மம்மூட்டி..அதை அழகிய பதத்தில் , மனதிற்குள் சென்றபின் நறுமணம் வீசும் மலர்களாய் மலர செய்யும் எளிய நடையில் கே.வி.சைலஜா தாய்த்தமிழில் மொழிபெயர்த்த நூல் தான் 'மூன்றாம் பிறை'...

பிரபலங்கள் என்றாலே ஈர்ப்பு இருக்கும்,அதிலும்  அவர்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அளவில்லாத ஆர்வமும்,குறுகுறுப்பும் இயல்பிலேயே இணைந்துருக்கும். அந்த ஆர்வத்திற்கு தீனி போட்டுள்ளது இந்நூல்... நூறு பேர்களை அடித்து ஊரை காப்பாற்றும் கதாநாயகனாக வருபவர்கள் நிஜத்திலும் அதே பில்ட் அப்பை காட்டிகொள்வார்கள்.எந்தவித போராட்ட தகுதியும்,மக்களை நேசிக்கும் மாண்பும் இல்லாமலே அவர்களை ஆளவும் துடிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் தான் 'ஆக்சன் பாபு' அத்யாயத்தில் தான் பயந்ததை ஒப்புகொள்கிறார் நூலின் கதாநாயகன்..'வெறுமை' பகுதியில் முதியோர்களை நேசிக்கும் அவசியத்தை வலியுறுத்துகிறார்...

தான் திரைக்கு வருவதற்கு முன் வழக்கறிஞராக சில காலம் பணி புரிந்துள்ள மம்முக்கா அதன் அனுபவங்களை பேசும்போது மெய் மறக்கிறார்...நூலின் 6 வது பகுதி 'மூன்றாம் பிறை'யில் விவாகரத்து விசயமாக வழக்குமன்றதிற்கு (கோர்ட் ) வந்த முதிய ஜோடிகளின் காதலை ஸ்லாகித்து பேசுகிறார். குடும்ப உறவுகளின் நிர்பந்தத்தால் ஜீவனாம்சம் வேண்டி மனைவி வழக்கு போட்டுருந்தாலும் இருவருக்கும் இடையிலான காதல் அளவில்லாமலே இருக்கிறது...வழக்குமன்றத்தில் எதிரெதிரே நின்றுகொண்டு இருக்கும் அவர்கள் கண்களால் பருகி,இதயத்தால் பேசிக்கொள்ளும் காட்சியை விவரிக்கும் போது அவர்கள் மீதும்,தாய் பால் போன்ற தூய வடிவிலான காதலின் மீதும் மம்முக்கா கொண்டு இருக்கும் காதல் வெளிபடுகிறது...அது அவரை ஒரு கவிஞனை போல பேச வைக்கிறது....

'அன்பையும்,உணர்வுகளையும் கொண்டு மட்டுமே இணைக்கப்பட்ட இந்த பந்தத்தை அவர்களோடு எந்த பினைப்புமற்ற  நீதி மன்றத்தால் தகர்த்தெறிய முடியாது' என்கிறார் அழகாய்...

'துயரத்தின் பாடலிலோ'"விம்மித் ததும்பும் மனதோடு சாய்ந்துக் கொள்ள ஒரு தோள் தேடி வருபவர்களை வார்த்தைகளால் நீவி விடவும்,அவர்களின் கொதிக்கும் மனவேதனையில்  விழும் ஒரு துளி குளிர்ந்த நீராயாவது மாற வேண்டும்" என தோழமை பகிர்கிறார்.

சில மொழிகள் கற்று இருந்தாலும் தாய் மொழி மலையாளம் மீதுள்ள பற்று அவரின்  எண்ணங்களில், வார்த்தைகளில் வெளிப்படுகிறது .'வீ ஆர் மலையாளிஸ்' பக்கத்தில் ஆங்கில மோகத்தில் மலையாள மக்கள் வீழ்ந்துகொண்டு இருக்கும் அவலத்தை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார். இந்த உலகமயம், நுகர்வு மோகத்தை தூண்டி,ஆங்கில மொழி பேசுவதை பேண்டசி கலாச்சாரமாய் உருவாக்கி  ஒவ்வொரு தேசிய மொழியையும் சிதைத்தே வருகிறது என்பதற்கு இதுவும் ஓர் சாட்சி...

'கம்யூட்டரில்'  பாலியல் இச்சையை தூண்டும் ஒரு கருவியாகவும் கணினி மாறியுள்ளது என தகப்பனாய் ஐயப்படுகிறார்.ஆனால் மிஸ்டர் மம்முக்கா! இச்சை தூண்டும் பாலியல் காட்சிகளின் ஊற்றுகண்ணே திரைப்படங்கள் தான் என்பதை புரிந்துதானே இங்கே பேசுகிறீர்?!!

நட்பு,அன்பு,காதல்,சமூகம்,மதம் என அனைத்தையும் பேசுகிறார்...

எல்லோருக்கும் எல்லாம் சமமாய் கிடைக்கவேண்டுமெனும் கம்யூனிசத்தை தன் மதத்தின் வழி வழியுறுத்துகிறார்...

ஒரு மொழிபெயர்ப்பு நூலின் பலம் என்பது அந்நூலின் ஆன்மாவை சிதைக்காமல் பதிவு செய்யும் அழகியலில் உள்ளது...மம்முக்கா நேரடியாக நம் மனதோடு மனதாகவே  ஒரு நண்பனாக,சகோதரனாக,குடும்பஸ்தனாக பேசுவதை போன்ற பிரக்ஞையை உருவாக்குகிறது மொழிபெயர்ப்பு...எழுத்தாளர் சைலஜா அவர்களின் முந்திய, முதல் மொழிபெயர்ப்பு நூலான 'சிதம்பர ரகசியமும்' இப்படி பட்ட அழகியலை கொண்டவையே.(அந்நூலை பற்றியும் எழுத வேண்டும்)..கையில் மாட்டிகொண்ட புது வளையல்களை சோப்பு நுரை போட்டு தடவி மெதுவாய்,இலகுவாய் உருவி வளையல்களை கழட்டுவார்கள்...அப்படி ஒரு இலகுவாய்,மிருதுவாய் நம் மனதில் கருத்துக்களை  பதிய வைக்கிறது சைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு...ஒரே நடையில் படிக்க வைத்துவிட்டால் அது சிறந்த நடை கொண்ட நூல் என்பது எண்ணின் குருட்டு பாடம். அப்படிப்பட்ட எழுத்துக்களை கொண்டுள்ளதே  இவரின் மொழிபெயர்ப்பின் சிறப்பு.... 23 பகுதிகளாக பிரிந்துள்ள மம்முக்காவின் உணர்வின் மொழியை நெஞ்சோடு நெஞ்சாக கொண்டு பிணைத்துள்ளார்  சைலஜா.

பேருந்து ஜன்னலோர பயணத்தில், நம்மை கடந்து போகும் பசுமை,வறட்சி,காற்று,மழை சாரல்,வெப்பத்தின்  வீச்சு இவைகளை நாம் நுகர்வதை போன்றே மம்முக்காவின் உணர்வுகள் இங்கே நம் பயணத்தில் சுவை சேர்க்கிறது என்றால் சீரான வேகத்தில் பயணத்தை சுகமாக்கும் ஓட்டுனரை போல மம்முவின் வாழ்வனுபவங்களை சீரான வேகத்தில் நமக்கு பரிசளிக்கிறார் மொழிபெயர்ப்பாளர் சைலஜா.

'உங்கள் பெயரென்ன?'என்ற சாதாரண கேள்விக்கு கூட நீண்ட யோசனையுடன் 'பாஸ்' சொல்லிவிட்டு அந்தரங்கத்தை  பாதுகாக்கும் தமிழ் திரை நடிகர்களுக்கு மத்தியில் வெளிப்படையாக பேசும் மம்முக்கா நிஜ கதாநாயகர் தான்.

அவரின்   வாழ்க்கை வரலாறாக இல்லாமல், அவரை புரிந்துகொள்ள உதவும் அவரின் அனுபவ தொகுப்பாக உள்ள  'மூன்றாம் பிறை'..வாசிப்பவர்களுக்கு வளர்பிறை தான்.....


No comments:

Post a Comment