Tuesday, September 11, 2012

ஈராக் உப ஜனாதிபதிக்கு மரண தண்டனை தீர்ப்பு

                                                     



ஈராக்கின் உப ஜனாதிபதி தாரிக் அல் ஹஷிமிக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஈராக் அரச அதிகாரிகளை கொலை செய்வதற்கு கொலைக்குழுக்களை நியமித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. தற்போது துருக்கியில் வசித்துவரும் தாரிக் அல் ஹஷிமி இவ்வழக்கில்  குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டளளது.

இத்தீர்ப்பின் பின்னர் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மட் தவுடோக்லுவை சந்தித்து  ஹஷிமி கலந்துரையாடினார். 

தனக்கு எதிரான மரண தண்டனை அரசியல் நோக்கமுடையது என துருக்கியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஹஷிமி கூறினார்.   தனது நெஞ்சில் அணிவிக்கப்பட்ட ஒரு பதக்கம்  இது என அவர் இத் தீர்ப்பை வர்ணித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஈராக்கின் இரண்டாவது உப ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட தாரிக் அல் ஹஷிமி,  2011 டிசெம்பர் மாதம் ஈராக்கின் முதலாவது உப ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.  

ஈராக் அரசாங்த்தில் சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட தலைவராக அவர், விளங்கினார். கொலைக்குழுக்களை நியமித்த குற்றச்சாட்டுகளையடுத்து அவர் கடந்த டிசெம்பர் மாதம் முதல் துருக்கியில் தஞ்சம் புகுந்தார்.

6 வருடகாலத்தில் தனது அரசியல் உட்பட பலருக்கு எதிராக 150  இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்துவதற்கு ஆயுதபாணிகளை நியமித்திருந்ததாக ஹஷிமி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2011 டிசெம்பர் மாதம் ஹஷிமியின் மெய்ப்பாதுகாவலர்கள் பலர்  கைது செய்யப்பட்டதுடன் நாட்டை விட்டு ஹஷிமி வெளியேறுவதற்கு ஈராக் அரசாங்கம் தடைவிதித்திருந்தது. எனினும் அவர் துருக்கிக்கு தப்பிச் சென்றார். 

டிசெம்பர் 19 ஆம் திகதி அவருக்கு பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்டாருக்கு சென்று கட்டார் அமீரை சந்திப்பதற்கு துருக்கி அரசாங்கம் அனுமயளித்தமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டமை குறிப்பிடத்தகக்து.  

அவர் துருக்கிக்கு தப்பிச் சென்ற பின்னரும் இதுவரை ஈராக்கின் முதலாவது உப ஜனாதிபதி பதவிக்கு வேறு எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தீர்ப்பின் பின்னர் ஈராக்கின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில்  சுமார் 100 பேர்  உயிரிழந்துள்ளனர்.


No comments:

Post a Comment