Tuesday, September 11, 2012

அஜ்மலுக்கு விருது வழங்குகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை



சர்வதேசக் கிரிக்கெட் சபையின் இவ்வாண்டுக்கான விருதுகளுக்கான பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டிருக்காத பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விருதொன்றை வழங்கிக் கௌரவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாகா அஷ்ரப் தெரிவித்தார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட சர்வதேசக் கிரிக்கெட் சபையின் விருதுகளுக்கான குறும் பட்டியலில் டெஸ்ட் வீரருக்கான விருதில் சயீட் அஜ்மல் தெரிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. 32 கிரிக்கெட் வல்லுனர்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட இந்தக் குறும் பட்டியலில் சயீட் அஜ்மல் முதல் நான்கு வீரர்களில் ஒருவராகத் தெரிவாகியிருக்கவில்லை.

சயீட் அஜ்மலை குறும் பட்டியலில் சேர்க்குமாறு சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்த போதிலும், வாக்குகளின் அடிப்படையில் தெரிவான பட்டியலை தங்களால் மாற்றுவதற்கு முடியாது என சர்வதேசக் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர், உலகின் முதல்நிலை பந்துவீச்சாளராக சயீட் அஜ்மல் காணப்படுவதைப் பாராட்டி அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விருதினை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறவுள்ள உலக டுவென்டி டுவென்டி தொடரிலிருந்து பாகிஸ்தானுக்கு பாகிஸ்தான் வீரர்கள் திரும்பிய பின்னர் இவ்விருது அவருக்கு வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெறவுள்ள விருது வழங்கல் விழாவை பகிஷ்கரிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஷாகா அஷ்ரப், எனினும் கடைசி நேரத்தில் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முடிவு மாற்றப்பட்டு சயீட் அஜ்மல் சேர்க்கப்படுவார் என இன்னமும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment