Monday, July 29, 2013

நிறம் என்ற திரை நீக்கி.,,,,




பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவர் - 19 வயது - 
ஒரு பெரிய பென்சில் கம்பெனி மீது நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் வாங்கிய கிரேயான் பெட்டியில் தோல் நிறம் என்று குறிப்பிடப்பட்ட கிரேயான், இளஞ்சிவப்பு நிறமாக இருந்திருக்கிறது.

அவர் குறை என்னவென்றால் இந்தியாவில்  பெரும்பான்மை மக்களின் நிறம் இளஞ்சிவப்பு அல்ல. அதனால் அந்த வர்ணனை உண்மைக்குப் புறம்பாக உள்ளதென்றும், மேலும் இளஞ்சிவப்பு நிறத்தை தோல் அல்லது சருமத்தின் நிறம் என்று குறிப்பிடுவது இனத்தின் அடிப்படையில் புண்படுத்துவதாக உள்ளதென்றும், இழிவுபடுத்துவதாக உள்ளதென்றும் கூறி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் முன் அந்த நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி அந்த வர்ணனையை மாற்றி விடுங்களேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இசைவாகப் பதிலளிக்கவில்லை.

இதற்காக ஒரு வழக்கா? இது கவனம் ஈர்க்கும் நடவடிக்கை என்றெல்லாம் முணுமுணுப்புகள் காதில் விழுகின்றன. அவர் வழக்கு ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ தெரியாது. அவர் எழுப்பியிருக்கும் விவாதத்தில் ஆழம் இருக்கிறது என்பதைப் பலவித கோணங்களிலிருந்து பார்க்கலாம். நிறங்களில் உயர்வு எது, மட்டம் எது? இந்த உயர்வு, தாழ்வு அடிப்படையில் பார்த்தோமானால் எப்படி எல்லாம் அதிர்வலைகள் கிளம்புகின்றன.

அமெரிக்காவில் "நீக்ரோ' என்று கறுப்பு நிறம் கொண்டவர்களை அழைக்கக்கூடாது. அது இழிவுபடுத்துவதான சொல். இப்பொழுது அவர்களை "ஆப்ரோ அமெரிக்கர்கள்' என்று அழைக்கிறார்கள். நிறத்தின் அடிப்படையில் அந்த இனமே அடிமையாகிப் போனது. அதை எதிர்த்தவர் ஆபிரகாம் லிங்கன். அதுபோலவே நிறம் சார்ந்த பிரிவினைக் கொள்கையை (அபார்தெய்ட்) எதிர்த்தவர் நெல்சன் மண்டேலா. தன் இன மக்கள் இந்த இழிவிலிருந்து விடுபடப் போராடியவர்.

ஆனால், நம் நாட்டில் வெண்மை ஆள்வதும், கருமை ஒதுக்கப்படுவதும் கண்முன்னால் பல சூழ்நிலைகளில் நடைபெறுகிறது. குழந்தை பிறந்தவுடன் ஆணா, பெண்ணா, அடுத்தது நிறம். அதேபோல திருமணங்களிலும் சிவப்பு நிறத்தவர்களுக்கு மதிப்பெண்கள் கூடும். இந்த நிறம் சார்ந்த பாகுபாடு நம் மனதில் ஊறிப்போன ஒன்று.




மொழி என்பது வலுவான ஆயுதம். நேராக அப்பட்டமாகச் சொல்லாமல் ஒரே சொல்லினால் பல விஷயங்களை மனதில் ஏற்றிவிடலாம். பிறகு தகர்க்க முடியாத அபிப்ராயங்கள் நிரந்தரமாக வேரூன்றிவிடுகின்றன.

""வெளுத்த உள்ளம்'' ""வெள்ளை உடையணிந்த தேவதைபோல'' இவை ஒருபுறம். ""கருத்த அச்சமூட்டும் உருவம்'' மறுபுறம். இதுபோன்ற சொல் சேர்க்கைகள் மேலாக ஒன்று கூறுகின்றன. ஆனால், சொல்லாது அடியில் புதைந்த பொருள் என்ன? வெண்மை என்றால் தூய்மை, நல்லது, விரும்பத்தக்கது, கருமை என்றால் அச்சமூட்டுவது, தீமை. சரியா? நாம் எல்லோரும் சிவந்த நிறம் படைத்தவர்கள் அல்லர், பெரும்பாலும் பழுப்பு அல்லது கருமை சார்ந்த நிறம்தான். அப்பொழுது நாமெல்லோரும் நல்லவர்கள் இல்லையா?

முன்பு வரும் சிறுவர்களுக்கான கதைகள். அங்கே அமரசிம்மன் என்று ஒரு அரசனிருப்பார்,அவர் வெள்ளை நிறமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பார். அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி செய்யும் அமைச்சர் தந்திரசேனன் பழுப்பு நிறமாக இருப்பார். எந்த வயதிலிருந்து இந்த நிற வேற்றுமை விஷம் ஏறுகிறது பாருங்கள்.

அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஒரு பரீட்சை வைத்தார்கள். சின்னக் குழந்தைகள் படிக்கும் வகுப்பு, அவர்களுக்கு சில பொம்மைகளைக் கொடுத்து இதில் எது நல்ல பொம்மை, எது கெட்ட பொம்மை என்று தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். வெள்ளை நிற பொம்மைகளை நல்ல பொம்மைகள் என்றும், கறுப்பு நிற பொம்மைகளை கெட்ட பொம்மைகள் என்றும் குழந்தைகள் பிரித்தார்களாம்.

முதன்முதலாக டாக்டர் கென்னத் கிளார்க் என்பவர் 1939-ஆம் ஆண்டில் இந்தப் பரிசோதனையைச் செய்தார். 1950-ஆம் ஆண்டு மறுபடியும் அவரே இந்தப் பரிசோதனையைச் செய்து பார்த்தார். முடிவு மாறவில்லை.

2005-ஆம் ஆண்டில் கிரி டேவிஸ் என்பவர் திரும்பச் செய்து பார்த்தார். அதே குழந்தைகள் என்ன நிறமாக இருந்தாலும் அதே முடிவு. ஆண்டுகள் மாறலாம், பள்ளிக்கூடங்கள் மாறலாம், குழந்தைகள் மாறலாம். ஆனால், முடிவு மாறவில்லை. ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டு முறைதான் வரட்டுமே, இந்த மூடத்தனமான வெறுப்பு இன்னும் போகவில்லை.

இங்கு மட்டும் என்ன, ""கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு'' எல்லாம் சும்மா. அதுவும் கதாநாயகர்களுக்கு மட்டும்தான். கதாநாயகிகள் வெள்ளையம்மாக்களாகத்தான் இருக்க வேண்டும். இது அடிப்படை இலக்கணம். இது மாறாது. திருமணம் நடக்க வேண்டிய வேளையில் சிவப்பு நிறத்திற்கு மதிப்பெண்கள் கூடும் என்றேன். வெள்ளையாக இருந்தால் வேலைகூட கிடைக்குமாம். தோலை வெளுக்க வைப்பேன் என்று உறுதி கூறும் களிம்பு விளம்பரங்களைப் பாருங்கள். இவ்வளவு விளம்பரங்கள் என்றால் எவ்வளவு விற்பனை ஆக வேண்டும். யாரும் தோற்கும் குதிரை மீது பணம் கட்ட மாட்டார்கள். ஒரு பெண் சோகமாக இருப்பாள். பின் அந்த அறிவுரைபெற்ற பின் டக் டக்கென்று மேனி சிவந்துவிடும். பிறகு எல்லாம் இன்பமயம். வேலை கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். எல்லாம் எதனால்? அவள் படித்த படிப்பிற்கல்ல, அவள் தகுதிக்கல்ல, அவள் குணங்களுக்குமல்ல, அவள் நிறத்திற்கு.


உலகில் எத்தனை நிற மக்கள்! கிழக்காசியாவில் மஞ்சள் தோய்ந்த நிறம், அதிலும் வித்தியாசங்கள். ஆப்பிரிக்காவில் நல்ல கறுப்பு, சற்று லேசான கறுப்பு என்ற மாறுபாடுகள், பிறகு கோதுமை நிறம், வெளுத்த வெள்ளை, சிவந்த வெள்ளை, தந்த நிறம் இப்படி பல நிறங்கள் எல்லாம் தோலளவு ஆழந்தானே! அமெரிக்காவில் கறுப்பர் இன சமத்துவத்திற்காகப் போராடி உயிரை இழந்த மாபெரும் தலைவர் மார்டின் லூதர் கிங் ""எனக்கு ஒரு கனவு'' என்று ஒருமுறை சொற்பொழிவாற்றினார். அதில் சொல்வார் ""எனக்கு ஒரு கனவு - என் நாலு குழந்தைகள் வாழும் இந்நாட்டில் ஒரு நாள் வரும், அன்று அவர்கள் தோலின் நிறத்தின் அடிப்படையில் அல்லாது அவர்களின் குணங்களின் சாரத்தை ஒட்டி மதிப்பிடப்படுவார்கள்'' என்று. அங்கு 17-ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக கறுப்பு நிறத்தவர்கள் அடிமைகளாக வந்திறங்கினார்கள்.

பிறகு பருத்தித் தோட்டங்களில் ஊழியம் புரிய மேலும் வரவழைக்கப்பட்டார்கள். அங்கு இனப்பிரிவுடன் ஆண்டான்-அடிமை என்ற வேறுபாடு இருந்தது. இதேதான் தென்னாப்பிரிக்காவிலும். 


இங்குதான் ஒரு வயதானவர் தன் பெண்ணை அவள் கரிய திருமேனி கொண்ட மணாளன் அழைத்துச் சென்றதும் ""செங்கண்மால் தான் கொண்டு போனான்'' என்று தன்னைத் தேற்றிக்கொண்டார். அதுபோல மழை முகில்வண்ணம் கொண்ட அரசகுமாரனை ""அய்யோ இவன் வடிவென்பதை எப்படி வர்ணிப்பேன்'' என்று ஒரு கவி வியந்தார். இங்குதான் அமாவாசையை பௌர்ணமி என்று சொன்ன ஒரு பித்தர் பச்சை வண்ணமும் ஆகிய பெருமாட்டியே என்று பாடினார். அது... அது அவர்களுக்கு. நமக்கில்லையா?


******************
கட்டுரையாளர்:

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.
தினமணி,,

No comments:

Post a Comment