Thursday, July 4, 2013

நான் + நாம் = நீ





இந்த பதிவில் என் கணவரை பற்றி பதிய விரும்புகிறேன், இது முழுக்க முழுக்க என் கணவர் பற்றியதே. எனக்கு தோன்றுவது எல்லாவற்றையும் எழுதுகிறேன். சொற்பிழை, பொருட்பிழை இருப்பின் மன்னியுங்கள்.

என் தந்தை எனக்கு தந்தையாய் மட்டும்
என் தாய் எனக்கு தாயாய் மட்டும்
நாளை ஒரு சேய் பிறந்தாலும் அதுவும் எனக்கு சேயாய் மட்டும் 
ஆனால் நீ மட்டும் எப்படி ஒரு தந்தையாய், தாயாய், சேயாய், நண்பனாய் கூடுதலாய் சில நேரங்களில் கணவனுமாய் உள்ளாய்?

உன்னோடு நான் இணைந்து இன்றுடன் ஆனது வருடங்கள் ஒன்பது.
இத்தனை வருடங்களில் எத்தனை கண்ணீர், எத்தனை சண்டை, எத்தனை வருத்தம், அத்தனையும் உன்னால் தான், உன்னால் மட்டும்தான்.

உன்னை பிரியும் ஒவ்வொரு நொடியும் கண்ணை பிரியும் கண்ணீர் துளியும் மண்ணில் வீழ்ந்து மடிந்து போகும்...

உன் அகம் கொண்ட துன்பத்தை முகம் கொண்ட புண் சிரிப்பால் மூடி மறைப்பாய், இன்னுமா நீ நம்புகிறாய் உன் அகம் வேறு நான் வேறு என்று?

உடல் நோவு பொழுதெல்லாம் உன்னை நினைந்தே நோகின்றேன், நான் கொள்ளும் வலியை விட என்னை நினைந்து நீ நோகும் வலி மிகுதியென்று. 

கெஞ்சுவதும், கொஞ்சுவதும் என்னை விட நீ அதிகம், கோவி மிஞ்சுவதும் துஞ்சுவதும் உன்னைவிட நான் அதிகம்.

உன்னை தேடும் கணம் யாவும் கடும் நஞ்சுண்டு கனல் பருகிய மனம் 
உன்னை காணும் கணம் யாவும் கன்னல் கட்டுண்டு கனிச்சாறு பருகிடும் தினம்.

கருவுற்ற மனைவிதான் கணவனால் கண்ணும் கருத்துமாக கவனிக்கப்படுவாளாம், என்னை கண்ட நாள் முதல் இந்த நாள் வரை அப்படித்தான் நீ கவனிக்கிறாய் ஏன் உன் காதலை கருவாய் நான் சுமப்பதில் உனக்கு அத்தனை கர்வமா?

விரல்களின் தவம் இந்த கருவை கவி வழி பிரசவிக்க வேண்டுமென்று. மனம் இடையிடையே கூறுகிறது குறை பிரசவமாய் பிரசவி, அரைக் கருவை சுமந்துகொள்.

கட்டி அழுதிட நீ வேண்டும், 
ஒட்டி நடந்திட நீ வேண்டும்,
அட்டிப் புனைய நீ வேண்டும், 
எட்டிப் போகா வரம் வேண்டும்,
விரல் நெட்டி முறித்திட நீ வேண்டும், 
மண மெட்டி அணிந்திட நீ வேண்டும்,
அன்பை கொட்டி நிறைத்திட நீ வேன்டும்.


......................................
நன்றி :சாவித்ரி





No comments:

Post a Comment