Friday, June 14, 2013

"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!"


ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம்!

தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம் (Father's Day). உலகம் முழுவதும் இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது.

பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான்.அதே நேரத்தில்,தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.ஒவ்வொரு தந்தையும்,தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து பொருள் ஈட்டி,வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களை செய்து குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.

அப்படிபட்ட,தந்தைக்கு குழந்தைகள் நன்றி தெரிவிக்கும் நாள்தான் தந்தையர் தினம். இந்த தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு முதலில் வித்திட்டவர் டோட் என்ற ஒரு அமெரிக்க பெண்தான்.

வாஷிங்டன் நகருக்கு அருகே உள்ள ஸ்போக்கேன் என்ற ஊரைச் சேர்ந்த சோனோராவின் தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்.இவரது தாய்,தனது 6-வது பிரசவத்தின் போது மரணமடைந்தார்.அப்போது,சோனோராவிற்கு வயது 16. ஆனால்,ஜாக்சன் ஸ்மார்ட்,தம் குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் ஏக்கம் வந்துவிடாதபடிக்கு,ஒரு தந்தையாக மட்டுமல்லாது,தாயுமாகி 6 பிள்ளைகளையும்  நின்று வளர்த்தெடுத்தார்.

தனது தந்தையின் இந்த பாசமும்,நேசமும் சோனோராவை அவர் வளர்ந்த பின்னர் நெகிழச் செய்து,அவரது தந்தை குறித்த பெருமிதம் கொள்ள வைத்தது.இந் நிலையில்தான்,1909 ம் ஆண்டுவாக்கில் தனது 27 வது வயதில்,அன்னையர் தினத்தன்று ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றார்.அங்கு, பாதிரியார் ஒருவர் அருள் உரை கூறிக் கொண்டிருந்தார்.

அதை பார்த்த சோனோராவுக்கு, "ஒரு குழந்தையின் வாழ்வில் அன்னையின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ,அதே போல தந்தையின் பங்கும் இருக்கும் போது,ஏன்? தந்தையர் தினமும் கொண்டாடக் கூடாது?" என்ற எண்ணம் உதித்தது.

அந்த எண்ணம் உதித்த கையோடு,சோனோரோ தந்தையர் தினத்தை கொண்டாடத் தொடங்கினார்.அதன் பின்னர், இது உலகம் முழுவதும் பரவியது.
1924-ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த கால்வின் கூலிட்ஜ்,முதல் முதலில் தந்தையர் தினத்தை அங்கீகரித்தார்.பின்னர், 1972-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்டு நிக்சன் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை 'தந்தையர் தினம்' கொண்டாடுவதை உறுதிப்படுத்தினார்.
அப்போதிருந்து,உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடும் முறை வேகமாக பரவியது. 

பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் என்றால் மிகை இல்லை.இந்த நாளில் ஒவ்வொரு குழந்தையும், தங்களின் முன்னேற்றத்திற்கு தந்தை பட்டபாடு, தியாகத்தை நினைக்க வேண்டும்.முடிந்த பரிசு பொருளை தந்தைக்கு கொடுத்து நன்றி பாராட்டுங்கள்!

அதைவிட,"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!" என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையை சொல்லுங்கள்.அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்..!

தந்தையின் அன்பு கிடைக்காமல் போவது,அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை,நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
==========================
நன்றி :விகடன். கொம்

No comments:

Post a Comment