Friday, March 8, 2013

அப்பா என்ற அவதாரம்




வசந்த காலத்து வாசல் முனையில் என்னை விட்டு விட்டு கோடைகாலத்திலேயே தங்கி விட்ட என் தந்தையே! கண்கள் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவனை போல நீ இல்லாத நாளில் உன் அருமையை நினைத்து ஏங்குகிறேன். அம்மாவின் வயிற்றிலிருந்து வெளிவந்து விழுந்த என்னை தோள்மீது சுமந்தாயே! உன் சுருள்முடியை பற்றி கொண்டு என் பிஞ்சு கரத்தால் உன் முகத்தில் அறைந்த போதும் என் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தம் கொடுத்தாயே! உன் பரந்த மார்பின் மீது ஏறி நின்று சங்கு சக்கர சாமி என்று குதித்து நான் ஆடிய போதும் என் குதிகால்களுக்கும் உதடுகளால் ஒத்தடம் கொடுத்தாயே! அத்தனையையும் நான் மறந்து போனது ஏன்?

வயல்காட்டு வரப்பின் மீது உன் விரல்பிடித்து நடப்பேன் இளகிய மண்ணிற்குள் என் இளம்பாதம் பதிந்து சேற்றை வாரி பூசியபோதும் உன் தோள்மீது என்னை உட்காரவைத்து என் கால் சேற்றை உன் கன்னத்தில் பூசிகொள்வாய் பறக்கும் தும்பியை பிடித்து வால்நுனியில் நூல்கட்டி பறக்க விட வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதற்கு நெருஞ்சி முட்கள் காலில் தைத்த போதும் ஒற்றை கையால் முள்ளை பிடுங்கி எரிந்து விட்டு தும்பி பிடிக்க தாவி நடப்பாய் கிடைத்த தும்பியையும் விட்டு விட்டு அடுத்த தும்பி வேண்டுமென்று அடம்பிடித்து நான் அழுதாலும் அதட்டலாக எதுவும் பேசாமல் என் ஆசையை தீர்க்க எத்தனிப்பாய்.

வெள்ளிகிழமை சந்தைக்கு நீ போய்விட்டு நடுசாமத்தில் வந்தாலும் தூங்கும் என்னை எழுப்பி உட்கார வைத்து இனிப்பு மிட்டாயை வாயில் திணிப்பாய் ஊரெல்லாம் சுற்றி ஓடி ஓய்ந்து போய் வீட்டுக்கு வந்து உண்ணாமல் குடிக்காமல் உறங்கி நான் போனால் அம்மா உருட்டி தரும் சாத உருண்டையை மடியில் என்னை சாத்தி கொண்டு கைநிறைய நீ எனக்கு ஊட்டி விடுவாய். உறக்கத்தில் நான் உன் வேஷ்டியில் சிறு நீர் கழித்தால் கூட ஆடை மாற்றாமல் என்னை சுத்தம் செய்வாய் சித்திரை மாதத்து கொடும் வெயில் புழுக்கத்தில் தூக்கம் வராமல் நான் நெளிந்து நெளிந்து படுத்தால் விடியும் வரைக்கும் விழித்திருந்து விசிறியால் காற்று வீசுவாய் ரோமங்கள் அடர்ந்த உன் மார்பில் என்னை சாய்த்து கொண்டு தட்டி கொடுப்பாய்.

மணலில் விரல்பிடித்து அச்சரம் எழுத துவங்கினால் என் விரல் கன்றி போய்விடுமென்று தவிட்டின் மீது எனக்கு எழுத சொல்லி கொடுத்தாய் பள்ளிக்கூடம் சென்று கற்க முடியாத பாடங்களை கிணற்று மேட்டில் என்னை உட்க்கார வைத்து தினசரி போதிப்பாய் ராபர்ட் கிளைவையும், கஜினி முகமதுவையும் மட்டுமே சொல்லி தந்த பாடபுத்தகங்களை தாண்டி விக்கிரமாதித்தனையும் வீர சிவாஜியையும் நீயே எனக்கு அறிமுகம் செய்தாய் வகுத்தல் கூட்டல் கணக்குகளை தாண்டி வாழ்க்கை கணக்கை வழிபிரளாமல் வகுத்துக்கொள்ள வழியும் சொன்னாய்.

கலித்தொகை தொடங்கி அகநானூறு வரையிலும் இலக்கிய சாரளத்தையும் எனக்கு காட்டினாய் எழுத்து கூட்டி வாசிக்க தெரியாத என்னை கவிதைகள் படைக்க ஆர்வமூட்டினாய் நான் எழுதி கொடுத்த வார்த்தை கிறுக்கல்களை முதல்முதலாக படித்து பேஷ் பேஷ் என தட்டி கொடுத்தாய். திக்கி திணறி பேசவே தயங்கும் என்னை மேடையில் ஏற்றி பேசவைத்து கைகளை தட்டினாய்

மருத்துவன் காட்டிய பத்திய உணவை தினமும் தின்று நாக்கு செத்து போன போது உச்சி வெயிலில் தோள்களில் என்னை சுமந்து கொண்டு அறுசுவை உணவை நான் அருந்தி பார்க்க பர்லாங்கு தூரம் நடந்து செல்வாய். எனது கற்பனை சிறகுகள் விரிந்து பறக்க பலவண்ண ஓவியங்களையும் உருவ பொம்மைகளையும் பரிசாக கொடுப்ப்பாய். ஒரு சிற்பி எப்படி சிலையை செதுக்குவானோ அப்படி என்னை செதுக்கி பார்த்த என் ஞான தந்தையே! எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்ற நான் உனக்கு தந்தது என்ன? உச்சி கால வேளையிலும் நிலா உலா வரும் பொழுதிலும் எண்ணி பார்க்கிறேன் எண்ணி கொண்டே இருக்கிறேன். உனக்கு தந்தது என்னவென்று இன்னும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

மரங்கள் வந்து பாராட்டும் என்றா மேகம் மழையை தருகிறது? வண்டுகள் வந்து சாமரம் வீசும் என்றா மலர்கள் தேனை தருகிறது?. மீன்கள் கூடி கால்பிடித்து விடும் என்றா நதி நீரை தருகிறது? சூரியனும் சந்திரனும் வெளிச்சம் தருவது பூமியின் பாராட்டு வார்தைகளுக்காகவா? நீ பாலை வனத்தில் மழையை தந்த மேகம்!. மதுவை பிரதிபலன் பார்க்காமல் வாரி வழங்கும் மலர்! தாகம் தனிப்பதற்கென்றே அவதாரம் எடுத்த நதி! உயிரை வாழவைக்கும் ஆதவ மதி!.

ஏனோ தெரியவில்லை காலகாலமாக அம்மாவை மட்டுமே புகழ்கின்ற நாக்குகள் தகப்பனின் தியாகத்தை கண்டுகொள்வதில்லை தனது பிள்ளைகளின் உடல் நோகாமல் பாதுகாக்கும் பஞ்சு மெத்தைகளாக அப்பாமார்கள் அனைவரும் கட்டிலில் மீது அசையாமல் கிடக்கிறார்கள். சுடும் மணலில் தனது கால்களை புதைத்து உடலில் நிழலை பிள்ளைகளுக்கு கொடுத்து கால வெயிலில் பொசுங்கி கிடக்கிறார்கள். அம்மா கொடுத்த ரத்தம் வளர்ந்து செழிப்பதற்கு அப்பா கொடுக்கும் தழை உரம் ஏனோ அங்கிகாரம் இல்லாமல் மூலையில் கிடைக்கிறது.

அறிஞர்களின் அறிவும் தியாகிகளின் தியாகமும் அவர்கள் காலத்திற்கு பிறகு தான் கவனத்திற்கு வருமாம் அதே போலவே என் தந்தையே! நீ இல்லாத போது நீ கொடுத்த நிழலின் அருமை தெரிகிறது.நீ ஓடிய உழைப்பின் பெருமை புரிகிறது. நீ வாழ்ந்த காலத்தில் ஒரு சிறிய துண்டு துணியை கூட கொடுக்காத என்னை வாழ்த்தி நின்றாயே அந்த அர்ப்பணமே நீயே இறைவன் என்று எனக்கு அடையாளம் காட்டுகிறது. என்ன செய்வது கடவுளை நாங்கள் சிலைகளாகவே பார்க்கிறோம்.
 

http://www.ujiladevi.in/

No comments:

Post a Comment