Monday, January 28, 2013

விலை உயர்ந்த பட்டை உற்பத்தி செய்யும் புழுக்கள்!

 
எங்கும், எப்போதும் பட்டாடைகளுக்கு தனி மதிப்பு உண்டு. பட்டுச் சேலை அணிந்த பெண்கள் தனி அழகாகவும், கம்பீரமாகவும் உணர்கிறார்கள்.

அணிபவருக்கு பெருமை தரும் பட்டாடைகளுக்கு ஆதாரமான பட்டு நூல்களை புழுக்கள்தான் உற்பத்தி செய்கின்றன.

ஒரு கூட்டுப்புழுவில் இருந்து ஆயிரத்து 600 மீட்டர் நீளமுள்ள பட்டு நூல் கிடைக்கிறது. பட்டு நூல், உருக்கு இழையை விட உறுதியானது என்பது சோதித்து அறியப்பட்ட உண்மையாகும். இது முக்கோணப் பட்டை அமைப்பைக் கொண்ட நீண்ட நூலாகும். பட்டுப் புழுக்கள், கம்பளிப் புழுப்பருவத்தில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் முசுக்கொட்டை இலைகளை உண்ணக்கூடியவை.


 
பட்டுப்புழுவின் (silk worm) விலங்கினப் பெயர் பாம்பிக்ஸ் மோரி (Bombyx mori) என்பதாகும். இது ஒவ்வொன்றும் 300 முதல் 500 முட்டைகளை இடக்கூடியது. இந்த முட்டைகளை மிகவும் சுகாதாரமான இடத்தில் வைத்து சரியான வெப்பநிலையில் பாதுகாத்தால், முட்டைகளில் இருந்து 20 நாட்களில் புழுக்கள் வெளிவரும்.

இந்தப் புழுக்கள் மிக மிக அதிகமாக உண்ணக்கூடியவை. இவை பட்டு நூல் சுரக்கிறபோது, மிக அதிக அளவு உண்ணுவதால், இவற்றின் எடை 25 முதல் 28 நாட்களில் 10 ஆயிரம் மடங்கு அதிகரிக்கும் என்ற உண்மை நமக்குப் பிரமிப்பை அளிக்கிறது.

இவ்வாறு நல்ல எடையுடன் வளர்ந்துள்ள இந்தப் புழு ஓரிடத்திலும் நிலைகொள்ளாது. மூங்கில் மரப்பொந்துக்குள் நுழைந்து 8 என்ற எண் வடிவத்தில் பட்டு நூல் இழை மூலம் கூடு கட்டுகிறது. புழுவின் கீழ்த்தாடைக்கு அருகில் உள்ள இரண்டு சுரப்பிகளில் இருந்து இரண்டு பட்டு நூல் வெளிவருகிறது. அது காற்றுப்படுகிறபோது இறுகிவிடுகிறது. இதை ரத்தம் உறைதலுடன் மேம்போக்காக ஒப்பிடலாம். உடலில் காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியே வருகிறது. அது காற்றுப்படுகிறபோது உறைந்து விடுகிறது.
 

அதேநேரத்தில் பட்டுப்புழு ஒருவித பசையையும் வெளியிடுகிறது. அந்தப் பசை, இரண்டு இழைகளையும் இணைத்து ஒரே இழையாக மாற்றுகிறது.

பட்டுப்புழுவை இப்படியே விட்டுவிட்டால் அது பியூப்பா பருவத்தை அடைந்து 3 வாரத்தில் பட்டுப்பூச்சியாக வெளியே வருகிறது. பட்டுப்பூச்சி வளர்ப்பவர்கள் குறைந்த அளவு எண்ணிக்கை உடைய பூச்சிகளைத்தான் இவ்வாறு வளர அனுமதிக்கின்றனர்.

மிகப் பெரும் பகுதியானவற்றை குக்கூன் பருவத்திலேயே சேகரித்து, கொதிக்கும் நீரில் போட்டுவிடுகிறார்கள். பின்பு அதில் இருந்து பட்டு நூல் எடுக்கிறார்கள். 110 குக்கூன்களில் இருந்து கிடைக்கும் பட்டு நூல் கொண்டு ஒரு ’டை’ அதாவது, கழுத்துப்பட்டை தயாரிக்க முடியும். ஒரு பட்டு ஜாக்கெட் தயாரிக்க 630 குக்கூன்கள் தேவைப்படுகின்றன. ஒரு பட்டுச் சேலை தயாரிக்க 6 ஆயிரம் குக்கூன்கள் வேண்டும்.


 

இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டு நூல் நெசவைத் தங்களது குடிசைத் தொழிலாகக் கொண்டுள்ளன. கைத்தறியைக் கொண்டு நெய்த சேலையில் தங்கள் கைத் திறமைகளைக் காட்டி மிகவும் சிறப்பாக கண்ணைக் கவரும் சேலைகளை நெய்கிறார்கள். இன்றைக்கு இயந்திரத் தறிகள் மூலமும் பட்டுச் சேலைகள் நெய்யப்படுகின்றன.

ஆயினும் கைத்தறிப் பட்டுகளை ஆதரிப்பதன் மூலம் நாம் எண்ணற்ற ஏழைகளுக்கு வாழ்வு அளிக்கிறோம்.


 
பனாரஸ், சூரத், மைசூர், குஜராத், ஒடிசா, காஷ்மீர் பல பகுதிகளும் பட்டுச் சேலைகளுக்குப் புகழ்பெற்று விளங்குகின்றன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நமது காஞ்சீபுரம் சேலைகள் பெருமை பெற்று விளங்குவது நமக்குத் தெரிந்ததுதானே!

--------------------------------------
தினத்தந்தி

No comments:

Post a Comment