Monday, January 28, 2013

சேமிப்பும் ஒரு கலையே





சேமிப்பு என்பது பாமர மக்களை வசீகரிக்கும் சொல். நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமார்த்திய சென் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், "சேமிப்பு என்பது குடும்பத்தின் ஆணி வேர்'.
பஞ்சம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தை வீழ்த்தி மனிதனால் இத்தனை நூற்றாண்டுகள் வாழ முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சேமிப்புதான். இன்றும் பல குக்கிராமங்களில் தானியங்களை மண் பானைகளில் நிரப்பி அதை விட்டத்தில் வைப்பதைக் காணக்கூடும்.

மனித நாகரிகத்தின் முன்னோடிகள் என எகிப்தியர்களைக் குறிப்பிடுகிறோம். அவர்கள் மண்ணால் "சால்' செய்து, இறந்தவர்களின் உடலை அதில் வைத்து மண்ணில் புதைத்தார்கள். அதைத்தான் நாம் முதுமக்கள் "தாழி' எனக் குறிப்பிடுகிறோம். அவர்கள் காலத்தை ஒத்த நம் மூதாதையர்கள் அதே சாலில் தானியங்களை அல்லவா சேமித்தார்கள்?

உலோக நாணயங்கள் வருவதற்கு முன்பு வரை நம் முன்னோர்கள் சாலில் தானியங்களை மட்டுமே சேமித்து வந்தார்கள். ஆனால் நாணயங்கள் வந்ததன் பிறகு மண் சால்கள் உண்டியலாகக் குள்ள உருவமெடுத்தன. அந்த உண்டியலில் நாம் சில்லறைக் காசுகளை சேமிக்கப் பழகினோம்.

இன்றைய சேமிப்புகள் வங்கியில் பணம் போடுவதாகவும், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் உள்ளது.


 

ஆரம்பத்தில் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே வங்கியை நோக்கிப் படையெடுத்தோம். ஆனால் இன்று கடன் வாங்குவதற்காகவும், நகைகளை அடமானம் வைப்பதற்காகவும் அல்லவா படையெடுக்கிறோம்?

இன்றைய உலகில் சேமிப்பு என்பது மிகவும் அரிதான பழக்கமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்களிடம் அந்தப்பழக்கம் மருந்துக்கும் இல்லை.

செல்போனில் பேசும்பொழுது பைசா தீர்ந்துவிட்டால் அந்த கம்பெனியிடமே கடன் வாங்கிப் பேசிவிடுகிறார்கள்.

சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.

பள்ளிகளில் அஞ்சல்துறை மூலமாக ஆர்.டி. சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அந்தப் பழக்கமும் இன்று காணாமல் போய்விட்டது.

ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!

உலக சேமிப்பு தினம் - அக்டோபர் 30.

---------------------------------------நன்றி-தினமணி

No comments:

Post a Comment