Monday, January 7, 2013

உலகின் மிக ஆபத்தான இடம்!

 

முன்னாள் சோவியத் ஒன்றியம் மறைத்து வைத்த மிக மோசமான ரகசியங்களில் ஒன்று அது. எழுபது வருடங்களில் இரண்டு அணுஉலை விபத்துக்கள்... 23,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பிற்கு ப்ளுட்டோனியம் பரவி 1,24,000 மனித உயிர்கள் காலத்திற்கும் முழுவதுமாக பாதிக்கப்பட்டு.... 

36,00,000 மக்கள்தொகை கொண்ட ரஷியாவின் செல்யாபின்ஸ்க் மாகாணத்திற்கு வாருங்கள். இந்த செல்யாபின்ஸ்க்கிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் 1940களின் இறுதியில் மாயக் என்ற அணுஆயுத கட்டுமானம் நிறுவப்பட்டது. 1990 வரை இந்த அணு ஆயுத கட்டமைப்பு இந்தப் பகுதியை அணு மற்றும் ரசாயன கழிவுகளால் தொடர்ச்சியாக கன்னா பின்னாவென்று சீரழித்தது. ஆனால் அதுவல்ல விஷயம்.

1957இல் இந்த அணுஆயுத தொழிற்சாலையின் குளிரூட்டும் பகுதி செயலிழந்தது. இதனால், கதிரியக்க மூலப்பொருள் சேமிப்பு காலன் வெடித்து மிகமோசமான அணு விபத்து சம்பவித்தது. அந்த அணுஆயுத மையத்தை சுற்றி 23000 சதுர கிலோமீட்டர பரப்பளவிற்கு கதிர்வீச்சு பரவியது. சிறிது நேரத்திலேயே உருவான கதிரியக்க மேகம் செல்யாபின்ஸ்க், ச்வேர்ட்லோவ்ச்க் மற்றும் டியுமென் மாகாணங்களுக்கு மேல் பரவி பொழிந்தது.
 
நதிக்கரையில் வாழ்ந்து வந்த 1,24,000 அப்பாவி மக்கள் கடுமையான அணு கதிர்வீச்சு பாதிப்பிற்கு உள்ளானார்கள். செர்னோபில் அணு விபத்து வெளியிட்டதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அணுக் கதிர்வீச்சை இந்த அணுகதிர்வீச்சு விபத்து வெளியிட்டது.

பிறகு.... அந்த இடம் உச்சபட்ச பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு சுமார் 10,700 மக்கள் சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அணுகதிர் விபத்திற்கு பிறகு உடனடியாக வியாதிகளும், மரணங்களும் அதிகரிக்கத்துவங்கின. பிறப்பு குறைபாடுகள், ஜீன் பாதிப்புகள், ஆண் பெண் மலட்டுத்தன்மை மற்றும் கேன்சர் எண்ணிக்கைகள் எகிறின. 1950 லிருந்து வெண்குஷ்டம் 41 சதவிகிதம் அதிகரித்தது. அந்த பகுதியின் நூறுகோடி காலன்கள் அளவுள்ள நிலத்தடி நீர் அனுக்கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டுளன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியின் மக்கள் தொகையில் குழந்தைபேற்றுக்கு தகுதியான மக்களில் சரி பாதி மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990இல் இந்த பகுதியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு மனிதனை ஒரே மணி நேரத்தில் கொன்று விடக்கூடிய அளவிற்கு ஆண்டு கதிர்வீச்சு நிரம்பியுள்ளதாக தெரிவித்தனர்.


 

இன்று...:


இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன.

அங்கு நீங்கள் ஒரு மணிநேரம் விசிட் செய்தால் இரண்டு நாட்கள் தொடர் தலைவலியால் அவதிப்பட நேரிடும். அந்தப் பகுதியில் காணப்படும் மீன்களில் 17,000 பெகியுரல் என்ற அளவிற்கும் காய்கனிகளில் 8,000 பெகியுரல் என்ற அளவிலும் அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிக கதிர்வீச்சு காணப்படுவதாக 1996 ல் ஒரு ஜெர்மன் ஆய்வு தெரிவிக்கிறது.

இவ்வித விஷத்தன்மைகளிளிருந்து இந்தப் பகுதியை தூய்மை படுத்தும் சர்வதேச முயற்ச்சிகள் துவங்கி விட்டன.

சரி. எப்போது முடியும்? இன்னும் நூறுவருடங்கள். மிகக் குறைந்த பட்சம்!

-------------------------------------------------------------------

நன்றி:இந்நேரம்

No comments:

Post a Comment