Friday, December 14, 2012

வெற்றியும் இன்பமும்..!


                                    

உங்களுக்கு இனிப்பு பிடிக்குமா? காரம் பிடிக்குமா? என்று கேட்டால், இனிப்புதான் பிடிக்கும் என்று எல்லாருமே சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
இனிப்பை விட காரத்தை அதிகமாக விரும்புகின்றர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், நீங்கள் ஆனந்தமாக இருக்க விரும்புகிறீர்களா, அழுதுகொண்டு இருக்க வேண்டுமானாலும் கேளுங்கள். வருவது ஒரே பதிவாகத்தான் இருக்கும்.
“ஆனந்தமாக”
ஆனால், எப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதுதான் பலருக்கு புரியாத புதிராக இருகிறது; விளங்காத விஷயமாக இருக்கிறது.
இவர்கள், ஒரு விஷயத்தை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.
                                    
எப்போதும் ஆனந்தமாக இருப்பது என்றால், எப்போதும் “சந்தோஷமான விஷயங்களே நடந்து கொண்டிருக்க வேண்டும். சந்தோஷமான மனிதர்களே வந்து சந்திக்க வேண்டும். சந்தோஷமான செய்திகளையே அவர்கள் சொல்ல வேண்டும் எதிர்பார்த்ததெல்லாம் நடக்க வேண்டும்; எதிர்பார்த்த நேரத்திலேயே நடக்க வேண்டும்…”
- இப்படியெல்லாம் ஆசைப்படுவதுதான் அடிப்படைத் தவறு. இப்படி நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கேற்றபடி நாம்தான் திட்டமிட்டு காரியங்களை நடத்திச் செல்ல வேண்டும்.
முன்யோசனை, திட்டம், உழைப்பு இத்தனையும் இதற்குத் தேவை.
இங்கேயும் ஒரு கொக்கி இருக்கிறது.
நமது தரப்பிலிருந்து, அல்லது எதிர்பாரத இடத்திலிருந்து கூட, இடைஞ்சல்கள், எதிர்ப்புகள் தாமதங்கள், ஆகியவை முளைப்பதை தவிர்க்க முடியாது.
எதிர் தரப்பிலிருந்து, அல்லது எதிர்பாராத இடத்திலிருந்துகூட, இடைஞ்சல்கள், எதிர்ப்புகள், தாமதங்கள், ஆகியவை முளைப்பதை தவிர்க்க முடியாது.
அங்கேதான் நாம் அடிபடுகிறோம். அல்ல்ல்படுகிறோம். வாழ்கை இனிமையாக இல்லையே என்று வருத்தப்படுகிறோம். நிகழ்வுகள் போலவே, மனிதர்களிடமும் நாம் நிறைய எதிர்பார்க்கிறோம்.
                                          
மற்றவர்கள் நம்மிடம் இப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது,
“நன்றாக வரவேற்க வேண்டும், நன்றாக உபசரிக்க வேண்டும், கேட்டவுடன் தந்து விட வேண்டும், நமக்காக விட்டுக்கொடுத்துவிட வேண்டும், நாம் சொல்லை அப்படியே ஏறுக்கொள்ள வேண்டும்” என்றெல்லாம் எதிர்பார்க்கிறோம்.
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இது எவ்வளவு அறிவீனமான எதிர்பார்ப்பு.
மற்றவர்கள் என்றால் யார்?
அவர்களும் நம்மைப்போலவே, ஆசைகளும், தேவைகளும், தேடல்களும், உணர்வுகளும் பதவி கர்வமும் உடைய மனிதர்கள் தானே!
நாம் எதிர்பார்ப்பது போல்தானே அவர்களும் எதிர்பார்ப்பார்கள்?
                                    

அதைத்தான் மறந்துவிடுகிறோம். உணர்ந்து கொள்ள மறுக்கிறோம். ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்.
அதுதான் பிரச்னை.
இதற்கென்ன செய்யலாம்?
நமது பொறுப்புகளை உணர்ந்து இலக்குகளைத் தீர்மானித்து, அதற்கான காரியங்களையும் கடமைகளையும் அந்தந்த நேரங்களில் சிறப்பாகச் செய்து வருவது முதல்கட்ட முயற்சி.
எதிர்ப்படும் ஏமாற்றங்கள், தடைகள், தாமதங்கள், இவைகளால் வேகம் குறைந்தாலும், வீரியம் குன்றாமல், முன்னிலும் முனைப்பாக, துடிப்பாக, ஊக்கத்துடன் செயல்படுவது இரண்டாம் கட்ட முயற்சி.
அப்போதுதான் வெற்றி என்பது நம் விழிகளில் தெரியும்.
சரி, வெற்றி மட்டுமே ஒருவனுக்கு ஆனந்தத்தை அளித்து விடுமா?
ஒரு பழமொழி கேள்விபட்டிருப்பீர்கள்.
“மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது.”
ஆம். வெற்றியே காணாத மனிதர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் ஆனந்தமாக இல்லையா என்ன?
இருக்கிறார்கள்.
காரணம், அவர்களின் பார்வை; அவர்களின் பக்குவம்.

                            
வாழ்வைப்பற்றிய அர்களின் கோட்பாடுகள் என்ன?
இருப்பதில் திருப்தியடை.
இருப்பதை முழுமையாக அனுபவி.
இல்லாததில், தகுதிக்கேற்றவைகளை அடையமுயற்சி விடும்.
தகுதியற்றவைகளுக்கு ஏங்காதே.
இழந்தவைகளை ஈடுசெய்து விடலாம் என்று நம்பு.
காலம் கனியும் என்று காத்திரு.
பாதகம் செய்தாரை பழிவாங்க எண்ணாதே.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்பு.
ஒருவன் செய்யும் உதாசீனம், உலகமே செய்யும் உதாசீனம் அல்ல.
தோல்விகளும் அவமானங்களும் இறைவன் அளிக்கும் இன்னொரு வாய்ப்புகள்.
தொல்லைகள் வந்தாலும் அதில் நல்லதும் இருக்கும்.
மற்றவர்களின் தவறுகளை மன்னித்து விடு.
தகுதிக்கு மீறி எதிர்பார்க்காதே.
எல்லோரையும், எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.
சக்திக்கேற்றபடி பிறருக்கு உதவு.
தவறுகள், மனிதர்க்கு சகஜம்.
இடர் என்று எதிர்பட்டால் “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது” என்று முடங்காதே.
என்னதான் நல்லது நடந்தாலும், பிறருடன் ஒப்பிட்டு, இருக்கிற இன்பத்தைத் தொலைத்து விடாதே.
சுருக்கமாக,
இன்பத்தைத் தேடும் முயற்சியில், துன்பத்தில் சிக்காதே.
ரோஜாவை ரசிப்பது இன்பம். முட்களைப் பார்த்து முகஞ்சுளிப்பது துன்பம்.
ஆக, இன்பம் சுரப்பது இதயத்தில். சுரக்க வைப்பது, எதையும் எப்படிப்பார்ப்பது, எப்படி எடுத்துக்கொள்வது எனும் பக்குவம் வேண்டும்.

No comments:

Post a Comment