Monday, September 24, 2012

அண்டார்டிக்கா பனிப்படலங்கள் வேகமாக உருகுகிறது!


கடல் நீர்மட்ட அபாயம்!
அண்டார்டிக்காவின் அதிவிரைவு பனி உருகுதலால் கடல் நீர்மட்டம் 16 அடி உயரும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
 அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்படலங்கள் மிக வேகமாக உருகிவருகின்றன. காரணம் பனிக்கு அடியில் உள்ள சுடுநீரினால் உருகுதல் செயல்பாடு முன்பை விட அதிகமாகவும் விரைவாகவும் நடைபெறுவதாக அண்டார்டிகா கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் மிதக்கும் பனிப்படர்வுகள் ஆண்டொன்றுக்கு 23 அடி உருகி வருகிறது. இன்று வரை இதற்கான காரணம் மானுட தொழிற்புரட்சிக்குப் பிந்தைய நடவடிக்கைகளால் அதிகரிக்கும் வெப்ப வாயு வெளியேற்றத்தின் விளைவான புவி வெப்பமடைதலால் பனி உருகுதல் விரைவாக நிகழ்கிறது என்று கருதப்பட்டு வந்தது.

புவிவெப்பமடைதலால் ஏற்படும் பனி உருகுதல் இருந்தாலும், கடல் நீர் உஷ்ணமடைவதால் பனி உருகுதல் படு வேகமாக நடைபெறுவதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் "நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.

சுமார் 20 மிகப்பெரிய பனிப்படர்வுகள் அடியில் உள்ள உஷ்ண நீரினால் உருகுகிறது என்று பிரிட்டன் அண்டார்டிகா ஆராய்ச்சியாளர் ஹாமிஷ் பிரிட்சர்ட் தெரிவித்துள்ளார்.

கடலின் மேற்பரப்பில் காற்றின் தன்மையினால் பனிக்கு கீழ் உள்ள கடல் நீர் உஷ்ணமடைகிறது. காற்றின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் ஓசோன் ஓட்டை, கரியமில வாயு வெளியேற்றத்தினால் ஏற்படும் குளோபல் வார்மிங் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

இதனால் கடல் நீர்மட்டம் உயர்கிறது. கடலில் அடர்த்தியாஅன் பனிப்படலங்கள் இருக்கும்போது நிலத்தில் உள்ள பனி உருகி விழும்போது கடலுக்குள் அது செல்லாமல் தடுக்கிறது. ஆனால் தற்போது அது போன்று தடுக்கப்பெறுவதில்லை.

மேற்கு அண்டார்டிக்கா பனிப்படர்வுகள் உருகி வருவதால் அது முழுதும் உருகி விட நூறாண்டுகள் ஆகாது சில பத்தாண்டுகளே ஆகும். அவ்வாறு உருகினால் கடல் நீர் மட்டம் 16 அடி உயரும் அபாயம் உள்ளதாக இந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது, கடல் நீர்மட்ட உயர்வில் அண்டார்டிகாவின் பங்கு என்ன என்பது குறித்த மிக முக்கியமான தகவல்களை இந்த ஆய்வு கண்டுபிடித்திருப்பதாக மற்ற விஞ்ஞானிகளும் இதனை ஆமோதித்துள்ளனர்.

No comments:

Post a Comment