Wednesday, June 19, 2013

மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?




மன்னிப்பு என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிபடுத்தும் ஒரு செயல். மனிதனின் உயர் பண்பு !!

மன்னிப்பு கேட்பது என்பதை ஏதோ தன்
கௌரவத்தை அடகு வைப்பதை போல சிலர் பேசுவதை/எண்ணுவதை பார்க்கும் போது 
வேடிக்கையாக இருக்கிறது. தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து 
மன்னிப்பு கேட்பது மனித தன்மை...அதே சமயம் தன் செயல் அல்லது சொல் பிறரை
வருத்தபடுத்திவிட்டது என்பதை அறிந்த பின் மன்னிப்பு கேட்பது  
 மனிதனின் உயர் பண்பு.
ஆனால் குறைந்தபட்சம் நாம் மனிதராக கூட இருப்பதில்லை என்பதே உண்மை. 
ஒரு சொல்லோ செயலோ நம் 
மனதிற்கு சரியாக படும் அதேநேரம், பிறருக்கு பெரிய மனவருத்தத்தை அல்லது மன
காயத்தை ஏற்படுத்திவிடலாம். அது நம் கவனத்திற்கு வந்தால் உடனே வருத்தம் 
தெரிவித்து மன்னிப்பு கேட்டுவிட்டால் சம்பந்தப்பட்டவர் 'இல்லைங்க 
பரவாயில்லை என் மீதும் தவறு இருக்கிறது' என்று சமாதானத்துக்கு 
வந்துவிடுவார். அப்படியும் சொல்லவில்லை என்றால் அவரது மனசாட்சியே அவரை குத்தி காட்டி சிதைத்துவிடும்.
பகைவனுக்கும் அருளவேண்டும் 
என்று படித்திருந்தாலும் நம்மால் ஏன் அதை பின்பற்ற இயலவில்லை...? அதற்கு 
தடையாக நம் முன்னால் நிற்பது எது ? கர்வம், ஈகோ, தன்முனைப்பு போன்றவை தானே 
?! இவை எதுவும் என்னிடம் இல்லை என்று சொல்பவர்களும் மன்னிப்பு என்று 
வரும்போது தயங்கவே செய்கிறார்கள் !?
அனைத்து மதங்களும் மன்னிப்பதை பற்றி தெளிவாக விரிவாக கூறி இருந்தும் அதை 
ஏனோ பலரும் பெரிதுபடுத்துவதே இல்லை. பிறர் தவறை நாம் மன்னித்தால் நம் தவறை 
தேவன் மன்னிப்பான் என்று பல முறை பாடம் பயின்றாலும் அதை நடைமுறையில் 
செயல்படுத்துவதில்லை.




நெருங்கியவர்களிடம் 
தன் நண்பனை பற்றிய தவறான தகவல்கள் நமக்கு சொல்லபட்டிருந்தால் அதை நம்பி 
அவருக்கு எதிராக தவறுகளை செய்யலாம். உண்மை தெரிய வரும் பட்சத்தில் வலிய
சென்று மன்னிப்பு கேட்கலாம். 
மன்னிப்பு எதிரிகள் இரண்டு பேரை நண்பர்களாக்கி விடும். அதே 
நேரம் நண்பர்களுக்கிடையே என்றால் நட்பு இன்னும் இறுக்கமாகி விடும், 
இத்தகைய நட்புகளே மரணபரியந்தம் தொடர்ந்து வரும்.

மன்னிக்க முடியாது 


இப்படி கங்கணம் கட்டிக்கொண்டு 
இருந்தால் அந்த பாதிப்பு உங்களுக்கு தான். தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன்
அலைய நேரும். உங்கள் சந்தோசம், உடல் ஆரோக்கியம் உங்களுக்கு முக்கியம் 
என்றால் மன்னித்து பழகுங்கள்...
மன்னிக்க முடியாது என்பது எப்படி இருக்கிறது என்றால், 

* தவறு நடந்தது நடந்ததுதான்
* அதை சரிபடுத்திக்க முயற்சிக்கவே மாட்டேன்
* மறக்கவும் மாட்டேன்
* தவறுக்கு அடுத்தவங்களை காரணமாக சொல்வேன்
* சில நேரம் என்னையும் திட்டிப்பேன்
* மன அழுத்தத்தில் விழுவேன்
* மொத்தத்தில்.....எப்படியோ வீணா போவேன்...?!!!

பலர் இப்படிதான் தேவை இல்லாததை சுமந்திட்டு நிம்மதி இல்லாம வாழ்ந்திட்டு இருக்கிறாங்க...கண்டதையும் சுமக்காம
தூக்கி குப்பையில் வீசி எறிந்துவிட்டு, அவர்களை மன்னித்து மறந்து 
சுத்தமாக புறக்கணித்து புறந்தள்ளி விடுங்கள்...தெளிவாகுங்கள்...இயந்திர 
உலகின் நாளைய ஓட்டத்திற்கு நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டாமா...?! 




சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும்
ஒரு அற்புதமான மந்திரம். மிக அவசியமானதும் கூட. இதை உங்கள் வாழ்வில் 
நீங்கள் பின் பற்றினால் உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், சொந்தங்கள், 
உங்க குழந்தைகள், ஒரு தொடர் சங்கலி போல் இதனை பின்பற்றக்கூடும்...

தொற்றுவியாதி போல அடுத்தவரையும் பீடிக்கும், பின்னிக்கொள்ளும்...நல்ல 
சமூதாயம் அமையும்...சமூகம் மாறவில்லை என்று இருக்காமல் முதலில் நாம் 
மாறுவோம் மற்றவர்களையும் நல்ல பண்புகளால் மாற்றுவோம். நல்ல மாற்றங்களை 
நம்மில் இருந்து தொடங்குவோம்...விரைவில் நம் சமூகமும் மாறும்...



*******************************
kousalya

No comments:

Post a Comment