Tuesday, February 12, 2013

பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?..........




காதுகள் இரண்டும் எதற்காக?’ என்று இன்றைய இளைய தலைமுறையிடம் கேட்டால் உடனே பதில் சொல்லிவிடுவார்கள், ‘இயர் போன்’ மாட்டிக்கொள்வதற்காக என்று! காதுகளில் அதை மாட்டிக்கொண்டே பாட்டு கேட்கிறார்கள்... பேசுகிறார்கள்..! நாள் முழுக்க எங்கேயும், எப்போதும் அதோடுதான் அலைகிறார்கள்.

இளைஞர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும், வயதானவர்களும் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் நம்முடைய காதுகள் பாட்டு கேட்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். காது இல்லையேல் அறிவை வளர்க்க முடியாது. சதா பாட்டு கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளின் கேட்கும் திறன் குறைந்து விடும்.

கடினமான சில பணிகளை செய்யும் போதும், ஜிம்மில் சில பயிற்சிகளை மேற் கொள்ளும் போதும் ஓரளவு இயர் போனை பயன்படுத்திக்கொள்ளலாம். இயர்போன் பயன்படுத்த நீங்களே சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டால் அது உங்களுக்கு நல்லது.

* பாட்டின் ஓசையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கேட்க பழகிக் கொள்ளுங்கள்.

* எப்போதும் ஒரே அளவோடு ஒலி இருக்கட்டும். உயர்வு தாழ்வு அடிக்கடி வேண்டாம். நீங்கள் வண்டி ஓட்டுபவராக இருந்தால் இயர் போன் பயன்படுத்தாதீர்கள். அக்கம் பக்கத்து ஓசைகள் உங்கள் காதுகளில் விழுந்தால்தான் விபத்தின்றி வாகனம் ஓட்ட முடியும்.

* இசை மற்றும் ஓசை தொடர்புடைய தொழிலில் உள்ளவர்கள் தொடர்ந்து ஒலியை கேட்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்கள் 60 நிமிடங்கள் ஒலியை கேட்டால் அடுத்த 60 நிமிடங்கள் காதுகளுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். இடைவிடாமல் காதுகளுக்குள் ஒலியை பாய்ச்சக்கூடாது.

* தரமான இயர் போன்களை பயன்படுத்துங்கள்.

* அதிக பட்சமாக ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து பாட்டு கேட்காதீர்கள்.

* ‘இயர் பட்’ பொருத்தப்பட்ட போன்களை பயன்படுத்தாதீர்கள். அது சாதாரண ஒலியை எட்டுமடங்கு பெருக்கி காதுகளுக்கு அனுப்பும். அதனால் காதுகளுக்கு அதிக சேதம் ஏற்படும்.

* சிலர் ஒருகாதில் மட்டும் பொருத்தி பாட்டு கேட்பார்கள். இன்னொன்றை அருகில் இருப்பவர் காதில் பொருத்திக்கொள்வார்கள். அது தவறான வழக்கம். ஒரு காதுக்கு மட்டும் அதிக ஒலி அழுத்தம் கொடுத்தால், அந்த காது பழுதாகும்.

* அமெரிக்காவின் “ஜான் ஹோப் கிங்ஸ்” பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப்படி இயர்போன் பயன்படுத்தும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு காது பாதிப்பு ஏற்படு கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் வரும் ஆண்டுகளில் கேள்வித்திறன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என்ற பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது.

* ஐரோப்பிய யூ னி ய னி ன் ஆரோக்கிய கணிப்பு ஒன்று, ஒரு மனிதர் தினமும் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஐந்து வருடங்கள் இயர் போனை பயன்படுத்தி வந்தால் ஆறாவது ஆண்டு துவக்கத்தில் காதுகளின் பாதிப்பு ஏற்படும் என்கிறது.

* ஒலியின் அளவு 120 டெசிபலை தாண்டிவிட்டால் மூளை முழுக்க அந்த ஓசைக்கு அடிமையாகிவிடும். பிறகு வெளியுலக சத்தங்களை மூளை ரசிக்காது. இதனால் காதுகளுக்கு மட்டுமல்ல மூளையின் ரசிக்கும் ஆற்றலும் குறைந்துவிடும்.

* காதுகளின் கேட்கும் சக்தி குறைந்தால், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும். அருகில் உள்ளவர்களிடம் கோபப்படவும், சிடு சிடுக்கவும் செய்வோம். அது தனிப்பட்ட வளர்ச்சியை பாதிக்கும்.

-------------------------------
மாலை மலர் 

No comments:

Post a Comment