Tuesday, January 8, 2013

ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறு





முஸ்லிம்களை ஒழிக்க திட்டம் !- கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று கடைபிடிக்கப்படுகின்றது.



கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.

இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.

இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்கிதங்களின் இதத்தை அவர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று ஒரு முஸ்லிம்கூட இல்லை எனலாம்.

780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில், ஆட்சி செலுத்திய மார்க்கத்தைச் சார்ந்த ஒருவரும் இல்லை. இது எப்படி? பிற்றை நாட்களில் முஸ்லிம்களை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்திட வேண்டும் என்பதை இலட்சியமாக ஆக்கிக் கொண்டு அங்கே ஒரு கூட்டம் திட்டம் தீட்டிற்று. அந்தத் திட்டம் ஓராண்டு திட்டமோ, ஒரு ஐந்தாண்டு திட்டமோ, ஒரு ஐம்பதாண்டு திட்டமோ அல்ல. அது 120 ஆண்டுகாலத் திட்டம்.

இப்படியொரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டி அதன் வழியில் அந்தச் சதிக் கும்பல் செயல்பட்டபோது, தன் திட்டத்தைத் துல்லியமாக நிறைவேற்றியபோது.. 1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன.

துருக்கி முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிள் நாட்டை 1553-இல் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். பால்கான் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. எகிப்தில் பணபலமும் படைபலமும் நிறைந்ததொரு ஆட்சியை முஸ்லிம்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ்.

இப்படி, உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?


இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது..

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இந்த இந்து வெறியர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படுத்திட முன் வந்தார்கள்.

இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாற்றையும் தெரியாது, தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதியையும் தெரியாது.

முஸ்லிம்களில் உள்ள சிந்தனையாளர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பார்கள், இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்கள் பூண்டோடு ஒழிக்கப்படுமுன் அதை முறியடிக்க முன் வருவார்கள், அதற்கான செயல் திட்டத்தை வகுத்திடுவார்கள் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தச் சிற்றேடு உங்கள் கைகளில் சமர்க்கப்படுகின்றது.



ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறு

 அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று வகைப்படுவார்கள்:

1. அரபுகளின் கிளைஞர்கள்

2. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் பிறந்த குழந்தைகள்.

3. கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்.

முஸ்லிம்களின் கையிலிருந்த கடைசி பகுதியான 'கிரனடா' வீழ்ந்தவுடன் அரபுகளின் கிளைஞர்களாக இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் துனீஸியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள். இப்படி ஸ்பெயினிலிருந்து குடி பெயர்ந்து சென்ற அத்தனை அரபு முஸ்லிம்களும் தாங்கள் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று விரும்பிய பகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடவில்லை. அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் கிறிஸ்தவர்களால் வழியிலேயே கொலை செய்யப்பட்டார்கள்.

ஸ்பெயினிலேயே தங்கிவிட்ட அரபுகளின் கிளைஞர்களான முஸ்லிம்களை-"வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள்" 'ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள்' என்றெல்லாம் குற்றம்சாட்டி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மேல் பாய்ச்சினார்கள்.

Madinat al-Zahra in Cordoba, Spain - Córdoba
Madinat al-Zahra in Cordoba, Spain

ஏனைய முஸ்லிம்கள், அதாவது.. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் இடையே பிறந்த முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்- இவர்களெல்லாம் ஸ்பெயினிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கி விட்டார்கள்.. இவர்களின் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்ற வகையில் - ஸ்பெயினில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அப்போது ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்தவர் 'பெர்டினன்டு' என்ற கிறிஸ்தவ மன்னர்.

கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் என்றாலும் கிறிஸ்தவ மன்னரின் இந்த உறுதி மொழியை முஸ்லிம்கள் அப்படியே நம்பினார்கள். இன்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்குத் தந்து கொண்டிருக்கும் உறுதி மொழியைப் போன்றதே இந்த உறுதி மொழியும்! இதை அன்றைய ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவ மன்னர் தந்த உறுதிமொழி வேறொன்றுமில்லை. அது இதுதான் 'எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமையுண்டு, பாதுகாப்பு உண்டு' இந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே.. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆங்காங்கே கொலை செய்துகொண்டே இருந்தார்கள்.

திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தக் கொலைகள் ஏதோ எப்போதோ நடக்கின்ற சிறு தவறுதான் என்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்தக் கொலைகள் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தீட்டப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி என்பது திறமையோடு மறைக்கப்பட்டது.. இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன.

ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போது, அவர்கள் இயன்ற வரை எதிர்த்துப் போராடினார்கள். போகப் போக எதிர்ப்பின் வேகம் குறைந்தது. பின்னர் எதிர்ப்பே இல்லை என்றானது.

ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்த இடங்களில் மன்னர் பெர்டினன்டின் பட்டாளம் முஸ்லிம்களைப் பலி கொண்டது. முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்றது.

அன்று ஸ்பெயினில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வுகளை இந்தியா விடுதலையடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்து வரும் முஸ்லிம் கொலைகளின் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவையாவும் ஒன்று போல் ஒரே திட்டத்தின் கீழ் நடந்து வருவதைக் காணலாம். அன்றைக்கு ஸ்பெயினில் கிறிஸ்தவ சதிக்கூட்டம் திட்டம் போட்டு முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் போது, ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த பெர்டினன்ட் அரசரின் கிறிஸ்தவ அரசு முஸ்லிம்களை அரசுப் பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை வேரறுக்க பின்வரும் வழி முறைகளைப் பின்பற்றிற்று அரசு. அவைகளாவன:

1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,

2) (மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.

4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.

5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.

6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.

8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.

9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.

பின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.

ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.

விரக்தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.

உலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை. அன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன. இவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.

மார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம்.. ஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள். அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.

அன்றைக்கு ஸ்பெயின் இருந்த சூழ்நிலையில் ஓர் 'அஹமது ஷா அப்தாலி' தேவைப்பட்டார். ஆனால் அப்படி யாரும் அன்றைக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் ஸ்பெயின் முஸ்லிம்கள் தங்கள் தனித்தன்மைகள் அனைத்தையும் இழந்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் என்ற நிலையை இழந்தார்கள். எஞ்சி இருந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்தார்கள், வெளிநாடுகள் நோக்கி நடந்தார்கள்.

இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டுதான் கி.பி 1612.
-------------------------------------------------------------------------------------
நன்றி :அதிரைநிருபர் 


No comments:

Post a Comment