Wednesday, October 17, 2012

கங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும்: ஆய்வில் அதிர்ச்சி

                                          Ganga Water Can Cause Cancer Study


புதுடெல்லி: இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கங்கை ஆற்றுப்படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலகோடி இந்தியர்களின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலகோடி இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு கங்கையை தரிசித்து புனித நீராடுகின்றனர்.
கங்கையில் இறந்தாலே அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.
புனிதநதியாம் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகி விட்டது. இந்த கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.
கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புனித நதியாக போற்றப்படும் கங்கை நதியைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் நாட்டில் உள்ள முக்கிய நதிகளை ஆய்வு செய்தால் என்னென்ன அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகுமோ?

No comments:

Post a Comment