வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து வீடுகளிலும் சாம்பார், கூட்டு, பொரியல் என்று கொஞ்சம் அசத்தலான சமையலாக இருக்கும், அதிலும் ஏதேனும் விஷேசம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவு சமையல் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். அத்தகைய சமையல் செய்யும் போது அதில் கடலைப்பருப்பு கூட்டு செய்தால் அதன் சுவையோ அலாதியாக இருக்கும். அந்த சுவையான கடலைப்பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
தேங்காய் - 1/2 மூடி
தக்காளி - 1
வெங்காயம் - 1
குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை ஒரு அரை மணிநேரம் உற வைக்கவும். பின்பு கடலைப்பருப்பை கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வாங்கியதும், அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து கிளறி, வேக வைத்த கடலைப்பருப்பை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பை சரிபார்த்து, வேண்டுமென்றால் உப்பு போட்டு, மிளகாய் தூள் வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
தண்ணீரானது நன்கு சுண்டியதும், துருவி வைத்துள்ள தேங்காயை மேலே தூவி ஒரு முறை கிளறி இறக்கிவிடவும்.
இப்போது சுவையான கடலைப்பருப்பு கூட்டு ரெடி!!!
English summary
Make delicious kadalai paruppu kootu using this simple recipe from awesome cuisine.
No comments:
Post a Comment