Wednesday, August 21, 2013

பர்தாஃபோபியா


ஃபோபியாக்களில் பலவகை உண்டு. ஆனால், உடை வகைகளில் ஃபோபியா தருவதென்பதில் பர்தாவுக்குத்தான் தனிச்சிறப்பு. சேலைஃபோபியா, சுடிதார்ஃபோபியா, ஸ்கர்ட்ஃபோபியா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோமா என்ன? ஆனாலும், நிறைய பேருக்கு இந்த ஃபோபியா இருக்கிறது. இதைப் போக்குவது பற்றிப் பார்ப்போம்.

முன்காலத்தில், எல்லாப் பெண்களுமே சேலை அல்லது தாவணித் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள்.  முஸ்லிம் பெண்கள் கூடுதலாகத் தலையையும் மறைத்துக் கொள்வார்கள், இஸ்லாமிய வழிகாட்டுதல் அவ்வாறு என்பதால். மேலும், அப்போதெல்லாம் பெண்கள் எப்போதாவதுதான் வெளியே வருவதால், இம்முறையே பின்பற்றத் தோதுவாக இருந்தது. ஆனால், நாளாக நாளாகப் பெண்கள் படிப்பதும், பல துறைகளில் கால்வைத்து, வேலைக்குச் செல்வதும் அதிகரித்தது. பல வெளிவேலைகளுக்கும் உறவினர்களைச் சார்ந்திராமல், தாமே செய்துகொள்ளவும் ஆரம்பித்தனர்.

சேலையில் பல அவஸ்தைகள் உண்டு, உடுத்துவது முதல். என்னதான் பார்த்துப் பார்த்து அங்கங்கு பின் குத்தி வைத்தாலும், கவனமாக இருக்க வேண்டும். இருபாலர் படித்த என் கல்லூரியில், சேலை மட்டுமே பெண்களுக்கான கட்டாய  உடையாக இருந்தவரை, மாணவிகளின் வலதுபுறம்தான் மாணவர்களுக்கு இருக்கைகள் என்பது எழுதப்படாதச் சட்டமாக இருந்தது. ( ஒரு திருமணப் புகைப்படக்காரர் கல்யாண வீட்டில் கிடைத்த அனுபவங்களை, திட்டுகளை வைத்து, சேலையின் சிரமங்களைப்  பதிந்திருந்தார். அந்தப் பதிவை இப்போக் காணோம், காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு போல!!)

பிறகு, சுடிதார் சல்வார் அறிமுகமாச்சு. அறிமுகமான வேகத்துல, அது கிட்டத்தட்ட தமிழ்நாட்டு கலாச்சார உடை மாதிரி எல்லாரிடமும் இறுகப் பரவிப்பிடிச்சுடுச்சு. என்ன காரணம்? உடையின் எளிமை மற்றும் சௌகரியம். ஆமாம், சேலையைவிட இது மிகவும் வசதியான உடை!! பிறகு வந்த “நைட்டி”யும் பிரபலமடைவதற்கு அதன் வசதிதானே காரணம்.

அதேபோலத்தான், ‘பர்தா’வும். 90களின் நடுவேதான் இஸ்லாமிய விழிப்புணர்வோடு,  பர்தாவும் தமிழ்நாட்டில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் பெண்களும் பொது இடங்களில் அதிகம் புழங்கத் தொடங்கியிருந்தனர். பணிக்குச் செல்லும் பெண்கள் அன்றாட உடையாக சேலை அணிவது சிரமமானதே என்பது நான் கல்லூரி ஆசிரியையாகப் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம். அப்போது, பர்தா முறையிலான சேலை (முழு நீள ப்ளவுஸ் + ஸ்கார்ஃப்) அணிவேன் அச்சமயத்தில்.

பர்தா என்ற உடை, நைட்டியை ஒத்து இருப்பதுதான் அது பிரபலமானதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.  நைட்டியின் வசதியைத் தரும் அதே சமயம், சுடிதார்/நைட்டியில் குனிந்து நிமிர்வதில் உள்ள சங்கடம் இதில் இல்லை. பொதுவாகவே இப்ப பர்தா உலகமுழுதுமே ரொம்பப் பரவியிருக்கு, பல நாடுகளுக்கே  ”ஃபோபியா” தாக்குமளவுக்கு!!

என்னிடம் சமீபத்தில் ஒருவர், “பிரதீபா பாட்டீல், இந்திரா காந்தியெல்லாம் போட்ட மாதிரி முழுக்கை சட்டை போட்டு, முக்காடு  போட்டுகிட்டாலும் பர்தாதானே. அப்புறம் ஏன் தனியா பர்தா போடணும்?” என்று கேட்டார். உண்மைதான், நானும் அப்படித்தான் சேலையானாலும், சுடிதாரானாலும் முழுக்கை உடையும், ஸ்கார்ஃபும் அணிந்து வந்தேன். ஆனாலும், அவற்றில் இருக்கும் நடைமுறை சிரமங்கள் பல. அவரிடம் சொன்னேன், “அக்கா, பிரதீபா பாட்டீல் அம்மாவுக்கும், இந்திரா காந்திக்கும் சேலைத் தலைப்பைப் பிடிப்பது மட்டும்தான் வேலை. நமக்கோ,  கையில் நாலஞ்சு பையும் பிடிச்சுக்கணும்; அங்கேயிங்க ஓடுற பிள்ளையையும் பாக்கணும்; பேரம் பேசணும்; ஆட்டோவோ, பஸ்ஸோ நிறுத்தி, ஓடி ஏறணும், இறங்கணும். இவ்வளவுத்துக்கும் நடுவுல சேலையைப் பிடிக்கவா, பையைப் பிடிக்கவா, பிள்ளையப் பிடிக்கவா? இதுக்கு பர்தாவே பெஸ்ட்னுதான் நான் மாறி இப்போ அது ஆச்சு பன்னெண்டு வருஷம்” என்று சொன்னேன்.

இஸ்லாம் எந்த இடத்தில் நாம் இன்று ’பர்தா’ என்று சொல்லும், அரேபியப் பெண்கள் அணியும் ‘அபாயா’ போன்ற முழு நீள அங்கி போன்ற
ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஆனால், அங்க அவயங்கள் வெளியே தெரியாமல் முறையான ஆடை அணிய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது. அதனால்தான், உலக முழுதுமுள்ள முஸ்லிம் பெண்கள் அவரவர் வசதிக்கேற்றபடி, விருப்பப்படி முழு உடலையும் மறைக்கும்படி ஆடை அணிந்துகொள்கிறார்கள். அது பர்தா, ஸ்கர்ட்-டாப்ஸ்-ஸ்கார்ஃப், கால்சராய்-சட்டை-ஸ்கார்ஃப், முழுக்கை சுடிதார்-ஸ்கார்ஃப், சேலை-முழுக்கை சட்டை-ஸ்கார்ஃப் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படித்தான் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இதில் உலகெங்கும் பர்தா என்ற அங்கி அதிகமாகப் பரவியிருக்கிறதென்றால், காரணம் சிம்பிள்: It's more comfortable, that's all!!

இல்லை, பர்தா அரபு நாட்டு உடை; தமிழ் கலாச்சாரத்தில் திணிக்கிறார்கள் என்றெல்லாம் (அதுவும், பேண்ட்-ஷர்ட் போட்டவர்கள்) சொல்வதைப் பார்த்தால், சிரிப்புதான் வரும். தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளிகளில், பட்டிதொட்டிகள் இருப்பவை உட்பட அநேகமாக எல்லாவற்றிலும் சீருடையாகப்பட்டிருக்கின்றதே  சுடிதார், அதென்ன சங்ககாலப் பெண்கள் போட்டிருந்த உடையா? ஏன், அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் (இந்திய & மேற்கத்திய) பெண்கள்  உடல் முழுமையாக மறையும்படி அணியும்  பிஸினஸ் சூட் கூட பர்தா வகைதானே!!  எந்த உடையும் நிலைத்திருப்பதற்கு அதன் வசதிதான் காரணம். இந்தப் பதிவில் சொல்லியிருப்பதையும் படித்துப் பாருங்கள்.  இத்தகைய ஆபத்துகள் நிறைந்த உலகில் உடையில் கவனமாக இரு(க்க நினை)ப்பதில் என்ன தவறு?

என் நண்பர் ஒருவர், சில முஸ்லிம் பெற்றோர் பர்தாவைக் கட்டாயப்படுத்துவதாகவும்; பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டியதுதானே  என்றும் கேட்டார். அவரிடம், ‘ப்ளஸ் டூ படிக்கிற உங்க தம்பி கடைத்தெரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தபின், அவனுக்கு உங்கள் வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் சுதந்திரத்தைத் தராமல், ஏன் கண்டித்தீர்கள்?’ என்று கேட்டேன்.

ஒரு பெற்றோராகத் தன் மகன்/ளுக்கு, உணவு, உடை, உறைவிடம், கல்வி அளிப்பது மட்டும் பெற்றோரின் கடமையல்ல;  பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் சொல்லித் தருவதும் கடமையே. வயது வந்த பிறகு மட்டுமல்ல, சிறுவயதிலிருந்தே முறையான ஆடைகள் அணிவதும் அவசியமே என்று இந்நாளைய ஆபத்துகளை அறிந்த நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவர்கள் முழு உடல் மறைக்கும் ஆடையே பாதுகாப்பென்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

சுடிதார், சேலை, ஸ்கர்ட் உட்பட விரும்பும் உடைகளையே பர்தா முறையில் அணியலாம். தவறில்லை. என்றாலும், ’கலர்’களைக் கண்டுகொள்ளாமல், கருப்பு (அங்கி) பர்தாவுக்கு மாறுவதற்குக் கொஞ்சம் உரமான மனது வேண்டும். இதில் இருக்கும் வசதிகளாக நான் கருதுவது,  என் அழகு, அந்தஸ்து, ஆபரணம், ஆடை, அளவுகள் ஆகியவற்றிற்காக நான் மதிக்கப்படாமல், பர்தாவை மீறி வெளியே தெரியும் என் அறிவு, அன்பு, பண்பு, குணம், கல்வி ஆகியவற்றிற்காக மட்டுமே மதிக்கப்படுவேன். அதாவது பள்ளிகளில் சீருடை போல என்று சொல்லலாம். மேலும்,  இயல்பாகவே விலையுயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் மீது ஆர்வமின்மை ஏற்பட வைக்கிறது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, வெளியிடங்களில், நான் என் உடையின்மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லாததால், என் செயல்களின்மீது மட்டுமே கவனம் செலுத்தினால் போது.இதற்காகவே புர்கா போடலாமா என யோசிப்பதாக இங்கே ஒரு பெண் யோசிக்கிறார் பாருங்கள்.

நான் ஏன் முழு ஆடை அணிகிறேன்? ஆரம்பகாலங்களில் அம்மா சொன்னார், இஸ்லாம் சொல்கிறது என்பதே எனக்குத் தெரிந்த காரணம். பின்னாட்களில் செய்தித் தாட்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கண்ட நிதர்சனங்கள் பெண்ணுக்கு முழுஆடைதான் முதல் கவசம் என்பது புரிந்தது. இப்போதும் பலரின் பதிவுகளில் பெண்களைக் குறித்தான எழுத்துக்கள் என் எண்ணங்களுக்கு வலு சேர்க்கவே செய்கின்றன. ”ஆள் பாதி, ஆடை பாதி” என்பதன் உண்மையான அர்த்தம் புரிகிறது.

ஆரம்ப காலங்களில் எல்லாப் பெண்களுமே கண்ணியமான ஆடைதான் உடுத்தியிருந்தார்கள். ஆனால், காலப்போக்கில், அறிவை வெளிப்படுத்துவதாக எண்ணி உடலையும் வெளிக்காட்டும் உடைகள் புழக்கத்தில் வந்துவிட்டன. எவ்வளுக்கெவ்வளவு இறுக்கமாக, இறக்கமாக உடை அணிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சுதந்திரம் அவர்களுக்குக் கிடைப்பதாக இப்பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். எப்படி வந்தது இந்த எண்ணம்?

பர்தாவை எதிர்க்கிறோம், அது சுதந்திரத்தை முடக்குகிறது என்று சொல்லும் இவ்வெதிர்ப்பாளர்கள் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இதைத்தான்.  முழுதும் மூடினால் அடிமை; திறந்துபோட்டால்தான் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தைப் பாகுபாடில்லாமல் இளம்பெண்களின் மனதில் பதிய வைத்ததுதான் இவர்களுக்குக் கிடைத்த, இவர்கள் எதிர்பார்த்த வெற்றி.  இதன் தொடர்ச்சியே போட்டிருந்தாலும் போடாததுபோல உடலின் பெரும்பகுதியை வெளிப்படுத்துவதான இன்றைய மாடர்ன் உடைகள்!!

இவையெல்லாவற்றையும் விட அதிர்ச்சியான விளைவு ஒன்று உண்டு என்று சொன்னால், சின்னச் சிறார்களுக்கும் இதுபோன்ற உடைகள் அணிவிப்பதுதான்!!  இதனால், நம் உடல் தெரிய உடை அணிவது தவறொன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பிஞ்சு மனதில் பதிய வைப்பது மட்டுமல்லாமல், எத்தனை அபாயகரமான விளைவுகளுக்கு அச்சிறுமியை உள்ளாக்கும் சாத்தியங்களைத் உருவாக்குகின்றோம் என்பது பெற்றோர்களுக்குப் புரியாமல் போயிருப்பது - அதுவும்  பல கொடூரங்களைக் கண்டபின்னும் - ஏன்? அவர்களுக்குள்ளும் உடைகுறித்தானத் தவறான புரிதல் பர்தா-எதிர்ப்பாளர்களாலும் ஆழப் பதிய வைக்கப்பட்டிருப்பதுதான்.

இன்று, குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவை தவறில்லை என்ற அபிப்ராயம் மீடியாக்களாலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதுபோல, மீடியாவினால் பெண்கள் "commoditise" ஆக்கப்பட்டிருப்பதும், உடையைக் குறைப்பது தவறில்லை என்ற எண்ணம் சமூகத்தின்மீது திணிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம். இதைமீறி முழு உடை அணிபவர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்ததுதான் பர்தா-எதிர்ப்பாளர்களால் வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஆனால் முழுமையான கண்ணியமான உடை என்றுமே அறிவிற்கும், திறமைக்கும் தடையாகாது, மாறாக கவனத்தைச் சிதறாமல் ஒருமுகப்படுத்தி மேன்மேலும் முன்னேறவே உதவும் என்பது சாதித்தவர்களுக்குத் தெரியும்.

பர்தா அல்லது முழு ஆடையை எதிர்ப்பதைவிட, பல பெண்கள்மீது உடலைக் காட்டிப் பிழைக்கும் நிலை ”திணிக்கப்படுவதை” முதலில் எதிர்த்து, தடுப்பதே கட்டாய அவசியம். அவர்கள்தான் மிகமிகப் பாவப்பட்டவர்கள், பரிதாபத்திற்குரியவர்கள்.

பெண்ணுக்கு மட்டும்தான் முறையான ஆடை அவசியமா, ஆண்களுக்கில்லையா என்றால், எப்படி இல்லாமல் இருக்கும்? ஆண்களுக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு உண்டு. இதோ அதுகுறித்த வழிகாட்டுதல்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தரையில் கிடக்கும் அவரது கீழாடையைக் கணுக்கால்களின் பாதியளவுக்கு உயர்த்திக் கட்டச் சொன்னதாகச் சொல்வதாக ஸஹீஹ் முஸ்லிம் 4238 கூறுகிறது. அதாவது இந்த ஹதீத் சொல்வது ஆண்களுக்கும் முழு ஆடை அவசியம் என்றே.

ஆண்கள் ஆடைக்குறைப்பில் வியாபார உலகம் ஆர்வம் காட்டாததாலேயே  இது மிகவும் வலியுறுத்தப்படவில்லையோ என்னவோ.

பொது இடங்களில் ஆண்களுக்கும் உடையில் கட்டுப்பாடு வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படவேண்டியதே. எனவேதான் என் மகன்களுக்கும் கையில்லா சட்டைகளோ, அரை/முக்கால்/காலேஅரைக்கால் கால்சட்டைகளோ அணிவிப்பதில்லை. ஏன் என் கணவர், தந்தை, கஸின்ஸ் உட்பட என் குடும்பத்து ஆண்கள் யாரும் இவ்வாறு அணிவதில்லை.  பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும் என்று விரும்பும் எந்தச் சமூகத்து ஆணும் இதே போல அரைகுறை ஆடை அணிவதில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். (& vice-versa)

நான் கல்லூரியில் வேலை பார்க்கும்போது, என் சக ஆசிரியை கேட்டார், “உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.

...........................

நன்றி;- ஹுஸைனம்மா