இலங்கைச் சிறுத்தை | |
---|---|
மிருகக்காட்சிச்சாலையில் உள்ள ஓர் இலங்கைச் சிறுத்தை | |
காப்பு நிலை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணிகள் |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | ஊனுண்ணி |
குடும்பம்: | பூனைப் பேரினம் |
பேரினம்: | பான்தெரா |
இனம்: | P. pardus |
துனையினம்: | P. p. kotiya |
மூவுறுப்புப் பெயர் | |
Panthera pardus kotiya தெரனியாகல, 1956 | |
இலங்கைச் சிறுத்தைகளின் பரம்பல் |
இலங்கைச் சிறுத்தை (Sri Lankan Leopard, Panthera pardus kotiya) என்பது இலங்கையை தாயகமாகக் கொண்ட சிறுத்தைதுணையினமாகும். வனவிலங்கு வர்த்தகம், மனித-சிறுத்தை முரண்பாடு என்பவற்றால் இதன் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்இச்சிறுத்தை இனத்தை அருகிய இனம் என பட்டியலிட்டுள்ளது. 250 மேற்பட்ட எண்ணிக்கையில் இவை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.
இலங்கைச் சிறுத்தை துணையினம் பற்றி முதன் முதலில் 1956 இல் இலங்கை விலங்கியலாளரான போலஸ் எட்வட் பீரிஸ் தெரனியாகலை என்பவரால் குறிப்பிடப்பட்டது.
பண்புகள்
இலங்கையில் காணப்படும் சிறுத்தைகள் ஏனைய நாடுகளில் காணப்படும் சிறுத்தைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகின்றன. இந்தியாச் சிறுத்தைகளிலிருந்து கடலினால் பிரிக்கப்பட்டிருப்பதனால் இலங்கைச் சிறுத்தைகள் வித்தியாசமான முறையில் கூர்ப்பு அடைந்திருப்பதாக விலங்கியலாளர்கள் கருதுகின்றனர். எனவே இவற்றை அவர்கள் உப இனமொன்றாகப் பாகுபடுத்தி உள்ளனர். இலங்கையில் மட்டுமே காணப்படும் உப இனமான இலங்கைச் சிறுத்தை பந்ரா பார்டஸ் கொட்டியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கைச் சிறுத்தைகள் பழுப்பு மஞ்சள் தோலில் கரும் புள்ளிகள், இந்தியாச் சிறுத்தையைவிட சிறிய, நெருக்கமாக ரோசா மலர்கள் போன்ற அமைப்பினைக் கொண்டு காணப்படும்.
இருபதாம் நூற்றாண்டில் ஏழு பெண் சிறுத்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வின்படி, சராசரி எடை 64 lb (29 kg) ஆகவும், தலை முதல் உடல் வரையான சராசரி நீளம் 3 ft 5 in (1.04 m) ஆகவும், தலை முதல் வால் வரையான சராசரி நீளம் 2 ft 6.5 in (77.5 cm) ஆகவும் இருந்தது. 11 ஆண் சிறுத்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வின்படி, சராசரி எடை 124 lb (56 kg) ஆகவும் இருந்தது.
சூழலியலும் நடத்தையும்
இலங்கைச் சிறுத்தைகள் வருடத்தின் எந்தகாலத்திலும்இனப்பெருக்கத்தில்ஈடுபடக்கூடும். யால தேசிய வனத்திலுள்ள சிறுத்தைகள் சூன் - ஆகத்து, திசம்பர் - சனவரி காலத்திலும் உச்சமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சிறுத்தையில் கர்ப்பகாலம் 98 – 105 நாட்களாகும். பொதுவான இவை இரு குட்டிகளையே ஈனுகின்றன. ஒரே சூலில் ஒன்று முதல் நான்கு வரையான குட்டிகள் ஈனப்படலாம். குட்டிகள் முதிர்ச்சி நிலையை அடைய 18 மாதங்கள் பிடிக்கும். ஒரே சூலில் அதிக எண்ணிக்கையான குட்டிகள் பிறக்கும் சந்தர்ப்பத்தில் சில குட்டிகளே பிழைத்து வளர்கின்றன.
யால தேசிய வனத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இலங்கைச் சிறுத்தை மற்றைய சிறுத்தை துணையினங்களைவிட கூடி வாழும் இயல்பு குறைந்தவை என்கின்றன. பெண்களையும் குட்டிகளையும் தவிர்த்து, அவை தனியே வேட்டையாடுகின்றன. இருபால் விலங்குகளும் தத்தமது ஆட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்றன. பெண் சிறுத்தைகளின் சிறு பிரதேசத்தையும் சில ஆண் சிறுத்தைகளின் பிரதேசத்தையும் தன் பிரதேசமாக்கிக் கொள்கின்றன. அவை இரவில் வேட்டையாடுவதனையே விரும்புகின்றன. ஆனாலும் அவை பகலிலும் இரவிலும் வேட்டையாடக் கூடியன. தாம் கொன்ற இரைகளைச் மரங்களுக்கு அவற்றால் இழுத்துச் செல்ல முடியும். ஆனாலும், தமக்கு போட்டி இல்லை என்பதால் போதியயளவு இரை கிடைக்கும் என்பதாலும் குறைவாகவே மரங்களுக்கு இரையைக் கொண்டு செல்கின்றன. சிறுத்தைகள் உயர் ஊனுண்ணி என்பதால் தங்கள் இரையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கைச் சிறுத்தை அந்நாட்டின் உயர் ஊனுண்ணியாகவுள்ளது. பல பூனைக் குடும்ப இனங்கள் போல் இதுவும் சிறிய பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன அத்துடன் பெரிய விலங்குகளையும் உணவாக் கொள்ளும். உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் இலங்கைப் புள்ளிமான் இதற்கு அதிகளவில் இரையாகின்றன. இது மரைகள், குரைக்கும் மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் என்பவற்றையும் உணவாகக் கொள்கின்றன.
மற்றைய சிறுத்தைகள் போன்றே இவையும் வேட்டையாடுகின்றன. ஒலி எழுப்பாமல், பதுங்கி இரைக்கு அருகில் சென்றதும் விரைவாக உச்ச வேகத்தில் தாக்குதல் நடத்துகின்றன. இரையின் தொண்டையில் கடிப்பதன் மூலம் அவற்றைக் கொல்கின்றன.
வாழிடம்
வரலாற்றளவில் இலங்கைத் தீவை தங்கள் வாழிடமாக இலங்கைச் சிறுத்தைகள் கொண்டுள்ளன. இவற்றின் வாழிட வகைகளை பின்வருவாறு 3 வகைகளாகப் பிரிக்கலாம்.
- 1000 மிமி இற்கு குறைவான மழைவீழ்ச்சி கொண்ட வறள் வலயம்
- 1000-2000 மிமி இற்கு இடைப்பட்ட மழைவீழ்ச்சி கொண்ட உலர் வலயம்
- 2000 மிமி இற்கு அதிகமான மழைவீழ்ச்சி கொண்ட ஈர வலயம்
2001 முதல் 2002 வரையான ஆண்டுகளில், கடற்கரையை அண்டிய வறள் வலயத்தில் உள்ள யால தேசிய வனத்தில் "பகுதி I" இல் வளர்ந்த சிறுத்தை எண்ணிக்கை அடர்த்தி 100 km2 (39 sq mi) இற்கு 17.9 என கணக்கிடப்பட்டன. இவ் பகுதி I பெரிய கடற்கரை சமநிலத்தையும் மனிதனாலும் இயற்கையாகவும் உருவாக்கப்பட்ட நீர் கொள்ளும் இடங்களையும் ஊனுண்ணிகளுக்கான மிக அடர்த்தியான பகுதியாகவும் உள்ள இது 140 km2 (54 sq mi) ஆல் சுழப்பட்டது.
அச்சுறுத்தல்
சிங்கம், புலி போன்ற வலிமையில் கூடிய பெரிய ஊனுண்ணிகள் வாழும் நாடுகளில் சிறுத்தைகள் தம்உணவுக்காக அவற்றுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இப்போட்டி காரணமாக வலிமை கூடிய விலங்குகளால் சிறுத்தைகள் கொல்லப்படுவதும் உண்டு. இலங்கைக் காடுகளில் சிங்கம், புலி போன்றவை இல்லாமையினால் சிறுத்தைகளுக்கு அவ்வாறான போட்டி இல்லை. எனினும், மனிதன்சிறுத்தைகளின் பிரதான எதிரியாக மாறியுள்ளான். எனினும், இயற்கையான இரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது அவை மனிதக் குடியேற்றங்களை நாடிச் சென்று கால்நடைகளை கொன்று தின்கின்றன. இதனால் சிறுத்தைகளைக் கொல்வதற்கு மனிதன் நாடுகின்றான். மேலும், வனவிலங்கு வர்த்தகத்திற்காக சட்டவிரோத வேட்டையாடுவதால் (குறிப்பாக இந்தியாவிற்கு) இவை அச்சுறுத்தப்படுகின்றன.
பாதுகாப்பு
சிறுத்தைத் தோலுக்கு கேள்வி இருப்பதனால் தோலைப்பெறுவதற்காகப் பெருந்தொகையான சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. சேனைப் பயிர்ச்செய்கை, காடழித்தல்போன்றனவும் சிறுத்தைகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இலங்கைச் சிறுத்தைகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இலங்கைச் சிறுத்தையை அருகிய இனமாகப் (அழிவுறும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள விலங்காகப்) பிரகடனம் செய்துள்ளது. "காட்டுயிர் பாதுகாப்பு நம்பிக்கை" (Wildlife Conservation Trust) இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக இலங்கைச் சிறுத்தை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இவ்வமைப்பு ஆய்வுகளைச் செய்துவருகிறது.[
கூண்டில் அடைப்பு
திசம்பர் 2011 இன்படி, உலகளாவிய மிருகக்காட்சிச்சாலையில் 75 இலங்கைச் சிறுத்தைகள் உள்ளன. ஐரோப்பிய அருகிய இனங்கள் நிகழ்ச்சித்திட்டம் 27 ஆண், 29 பெண், பால் தெரியாத 8 இலங்கைச் சிறுத்தைகளைக் கொண்டுள்ளது.