அம்மா பசிக்குதே
தாயே பசிக்குதே
பாலும் பழமும் வேண்டாம் தாயே
பசிக்கு சோறு போட்டால் போதும்''
ஹைதர் காலத்து சினிமா பாட்டு. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த நானும் என் சகோதர சகோதரிகளுடன் - "கஸின்ஸ்' என்று நினைத்ததில்லை - இந்தப் பாட்டை பாடிக்கொண்டே இருப்போம். இந்தப் பாட்டின் பொருளைப் புரிந்து கொண்டோமா? அழுகை வரும். ஆனால், வறுமையின் முழுப்பரிமாணமும் புரிந்திருக்காது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பேராசிரியர் கூறினார் - ""சாலைகளில் பிச்சையெடுப்பவர்களைத் திருடர்களென்றும் சோம்பேறிகளென்றும் திட்டாதீர்கள். அவர்களுக்குப் பசி, உங்களிடம் கேட்கிறார்கள். முடிந்தால் கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப் பிடிக்காததற்குக் காரணங்கள் உங்களிடம் உள்ளன. அந்தக் குற்ற உணர்வைச் சமாதானப்படுத்துவதற்கு பிச்சை எடுப்பவர் மேல் தவறைத் திணிக்காதீர்கள்'' என்று! சிந்திக்க நிறைய நொடிகள் தேவை.
ஒரு மனிதநேயம் பொதிந்த, தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ராம் லக்கன் என்று ஒரு ஏழை. பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டம் என்று ஒரு சட்டம். நாம் சுதந்திரம் பெற்று எல்லோருக்கும் "ரோடி, கப்டா, ஓளர் மக்கான்' (உணவு, உடை, உறைவிடம்) இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனால், இந்தச் சட்டம் இன்றும் நிலுவையில் உள்ளது.
ராம் லக்கன் என்ன செய்தாரென்றால், 29-07-2005, 12 மணி அளவில் ராம்புரா (தில்லி) ரயிலடி அருகே கையை நீட்டி ஏதோ கேட்டார். உடனே இரண்டு காவல்துறை அதிகாரிகள், "மேற்படி சட்டத்தின் கீழ்' குற்றமிழைத்ததாக அவரைப் பிடித்துவிட்டார்கள். குற்றம் நிரூபணம் ஆகிவிட்டது என்று நீதிமன்றம் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டிலும் ராம்லக்கன் வெற்றி பெறவில்லை. உயர் நீதிமன்றத்தில் "சீராய்வு' மனு தாக்கல் செய்தனர்; அதில்தான் இந்தத் தீர்ப்பு கூறப்பட்டது.
அந்தத் தீர்ப்பு, பிச்சை எடுப்பவர்களை நான்கு வகையாகப் பிரித்தது. பசி, பட்டினியால் பிச்சை எடுப்பவர்கள் உயிர் வாழ்வதற்காகப் பிச்சை எடுக்கிறார்கள்; சட்டத்தின் குறிக்கோள் பிச்சை எடுப்பதைத் தடுப்பது; அதில் புதையுண்டு இருக்கும் இரு இலக்கு என்னவென்றால் - யாரும் பிச்சை எடுக்கக் கூடாது, யாரும் பிச்சையெடுக்கும் நிர்பந்த சூழலில் இருக்கக் கூடாது என்பதாகும்.
கனடா, இங்கிலாந்து நாட்டுத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, "வேறு வழியில்லாமல் ஒருவர் ஒரு சட்டத்தை மீறுகிறார் என்றால் அது குற்றமல்ல' என்றும், மேலும் - "எனக்குப் பசிக்கிறது' என்று சொல்லும் பேச்சுரிமை நம் குடிமக்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளது.
இவ்வாறாக பிச்சையெடுப்பதை சமூக நோக்கோடு பார்த்து, இந்தச் சட்டத்தின்கீழ் எப்படி நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்று விதிமுறை வகுத்துள்ளது.
எல்லோரும் பிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நாம் எப்படி இந்த விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல வருகிறேன். என் சிநேகிதர் ஒருவர் - இலங்கையிலிருந்து பல வருடங்களுக்கு முன் இங்கு வந்த தமிழர் - என்னைக் கேட்டார்; ""எங்கள் நாட்டில் யாரேனும் பிச்சை கேட்டால், அவரைப் பார்த்து அவர் கையில் காசைக் கொடுப்போம். நீங்கள் எல்லோரும் அவர்களைப் பார்ப்பதே இல்லையே, அவர்களும் மனிதர்கள்தானே?''.
கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது. உண்மைதானே? பிச்சையெடுப்பவரின் கண்ணியத்தை மதிக்க வேண்டும். அது அடிப்படை உரிமை, அது மனித உரிமை. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று சகோதரத்துவம். அவரும் நாமும் ஒன்றுதான். கவிஞர் ஜான் டன்னின் கவிதை இது. ""எந்தவொரு மனிதனும் தீவல்ல. எங்கோ சாவு மணி ஒலித்தால், யாருக்கு என்று கேட்காதே, அது உனக்காகவும்தான்''.
ஆனால் நாம், என் சிநேகிதர் சொன்னதுபோல, பிச்சை எடுப்பவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. அவர்களைத் திட்டுவோம், ஏசுவோம், அப்படியே காசை எடுத்தால் அதை விட்டெறிவோம். விதியின் வசத்தில் நாம் காசு கொடுக்கும் நபராக இருக்கிறோம், நாமே காசு கேட்கும் நபராகப் பிறந்திருக்கலாம், இல்லையா?
நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்தான் பெரும்பான்மையினர். வறுமையினால் அவர்களுக்கு வலிமை இல்லை. ஏழையாகப் பிறப்பது குற்றமென்றால், நம் நாட்டில் சிறைச்சாலைகள் இன்னும் லட்சக்கணக்கில் கட்டப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 32 ரூபாய்க்கு மேல் கிடைத்தால் அவர் ஏழை இல்லை என்று திட்டக் கமிஷன் கூறியது. பலவிதமான விமர்சனங்கள் இதற்கு.
அமெரிக்காவில் படித்து, இந்தியாவுக்கு வந்த இரு இளைஞர்கள் இந்தியனின் சராசரி வருமானம் என்ன என்று பார்த்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ஒரு நாளைக்கு ரூ. 150 என்று தெரிந்தது. பிறகு ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்குள் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அந்த 32 ரூபாய்க்குள் வாழ்ந்து பார்த்தார்கள்.
அந்தப் பரிசோதனைக் காலத்தின் முடிவில் அவர்கள் கூறியது இதுதான் - ""மறுபடியும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்ல ஆசைதான், ஆனால் முடியவில்லை; நாங்கள் நல்ல உணவை ஒவ்வொரு வாய் உண்ணும்பொழுதும், நம் நாட்டில் 40 கோடி மக்களுக்கு இந்த உணவு - கனவாகவே இருக்கும் என்பதை எங்களுக்கு நினைவூட்டியது. நாங்கள் இன்று பழையபடி எங்கள் சுகமான வாழ்வுக்குத் திரும்பிவிட்டோம். அவர்கள் தினமும் உயிருக்குப் போராடுகிறார்கள்... அவர்கள் வாழ்க்கையில் சுதந்திரம் சொற்பமே.. பசியோ ஏராளம்''.
ஒரு குற்ற உணர்வுகூட அந்த இருவரிடமும் தேங்கியது எனச் சொல்லலாம்.
ஏழ்மையெனும் முடிவிலா இருட்டு குகையில் பலர்... வெளிச்சமும் விருந்தும் வெளியே. எப்படி, இப்படி ஒரு சமமிலா தராசாக நம் சமூகம் உள்ளது?
""நம் எல்லோருடைய தேவைக்கு வேண்டியது நாட்டில் இருக்கிறது; ஆனால், நம்முடைய பேராசைக்குத் தீனிபோடும் அளவுக்கு இல்லை'' என்றார் காந்தியடிகள்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒருநாளில் மாற்ற முடியாது. ஆனால், ஏழைகளை - பிச்சையெடுப்பவர்களை மனிதர்களாக மதிக்கலாம் இல்லையா? இன்னொரு வழக்கு பற்றி சொல்கிறேன்.
ஒரு பிரெஞ்சு நாட்டுக்காரர் இந்தியா வந்தார். கேரளத்தில் அமிர்தானந்தமயி ஆசிரமம் சென்றார். அங்கிருந்து கிளம்பியபின் அவருடைய "பாஸ்போர்ட்' முதல் எல்லாம் திருடப்பட்டன. அவருக்கு பிரெஞ்சு மொழி தவிர வேறொன்றும் தெரியாது. பாவம், அலைந்து அலைந்து கன்னியாகுமரிக்கு வந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டில் அவர் மகள், அப்பாவிடமிருந்து தகவல் இல்லையே, அவருடைய விசாக்காலம் முடிவடைந்துவிட்டதே என்று நம் நாட்டிலிருக்கும் அவர்களுடைய தூதரகத்துடன் தொடர்பு கொண்டார். ஒன்றும் பலனில்லை.இந்தியா வந்து சென்னையில் உயர் நீதிமன்றத்தில் "ஹேபியஸ் கார்பஸ்' என்னும் "பேராண்மை மனு' தாக்கல் செய்தார். அவர் காணவில்லையென்றும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக எங்கோ அடைக்கப்பட்டிருக்கிறாரென்றும், உடனே அவரை கோர்ட்டின் முன் ஆஜர் செய்ய வேண்டும் என்றும் கேட்டார். உயர் நீதிமன்றம் அரசு வழக்குரைஞரிடம் உடனடியாக அவரை ஆஜர் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.அவர் வந்தார். விஷயம் என்னவென்றால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு திடீரென்று வீதிகளில் நிறைய பிச்சைக்காரர்கள் இருப்பதால் எல்லோரையும் "ரவுண்ட் - அப்' செய்ய வேண்டும் என்று தோன்றிவிட்டது. கிட்டத்தட்ட நூற்றுக்கும்மேல் பிச்சைக்காரர்களை வளைத்து அவர்கள் "மனநோய் உள்ளவர்களாக'ச் சான்றிதழ் பெற்று, மனநோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டனர். இந்த வழக்கில் வேறு சில பரிமாணங்கள் உள்ளன.அவர்கள் ஏழைகள்தான், பிச்சைக்காரர்கள்தான் - ஆனால், மனிதர்கள். அரசமைப்புச் சட்டத்தின் முழுப் பாதுகாப்பு உண்டு. மறந்து விட்டேனே, பிச்சையெடுத்து "ரவுண்ட் - அப்' செய்யப்பட்டவர்களில் அந்தப் பிரெஞ்சு நாட்டு அப்பாவும் ஒருவர். அவர் மகளுடன் "பெற்றோம் - பிழைத்தோம்' என்று தாய்நாடு சென்றார்.
தெருவில் சுற்றும் நாய்களை "ரவுண்ட்-அப்' செய்தாலே பிராணிகள் பாதுகாப்பு அமைப்புகள் ஆட்சேபிக்கின்றன. அந்தப் பிராணிகளுக்கு இருக்கும் ஆதரவும் அரவணைப்பும்கூட இந்த மனிதர்களுக்கு இல்லை. ஏன்? அவர்கள் ஏழைகள், அவர்கள் பிச்சையெடுத்தார்கள் அவ்வளவே. அதற்காக மனிதனுக்கு மனிதன் காட்டும் மரியாதை, அவர்களுடைய உரிமை என்று மறந்துபோகலாமா? அதுவும் அரசு? பிச்சையெடுத்தால் மனநோயாளிகளா? இல்லை குற்றவாளிகளா? சில சமயம் அரசின் செயல்பாடுகளே அவர்களை அந்த நிலைக்குத் தள்ளுகின்றன.தென்னாப்பிரிக்காவில் ஒரு வழக்கு. இம்முறை கொஞ்சம் வழக்கு ஓவர்டோஸ் - விஷயம் அப்படி. நம்முடைய பார்வையின் விளிம்பிற்கு வெளியே நிற்பவர்களுக்கு மனித உரிமைப் பாதுகாப்பு சற்றும் தளரக்கூடாது என்று சொல்ல வேண்டுமானால் வழக்குச் சான்றுகளுடன்தானே முன்வைக்க வேண்டும்?தென்னாப்பிரிக்காவில் ஒரு நகராட்சியில், ஊரை அழகுபடுத்துகிறோமென்று குடிசையில் வாழும் ஏழை கறுப்பர் குடும்பங்கள் வீதியில் நிறுத்தப்பட்டன. அந்த அரசின் செயலை தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றம் கண்டித்தது. "ஏழைகளின் சுயமதிப்பு அவர்கள் தெருத்தெருவாக தலைசாய்க்க ஒரு இடம் தேடுவதில், பாதிக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கை வறியவரின் வாழ்க்கை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்தால் அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவப் பார்வை காயப்படுகிறது'' என்று.ஆமாம் நீங்கள் காரில் செல்பவர் என்று வைத்துக்கொள்வோம். ""சாலையோரத்தில் நின்ற கடை வண்டிகள் எல்லாம் அப்புறப்படுத்திட்டான் ஸார். சுத்தமா இருக்கு'' என்பீர்கள். உங்களுக்கு சாலை சுத்தம். ஆனால், சாலையில் இட்லி விற்றவருக்கு அவர் வாழ்க்கையே அப்புறப்படுத்தப்பட்டது, இல்லையா?
அந்தத் தீர்ப்பு மேலும் சொல்கிறது; ""இந்த அநீதி நடக்கும் இடத்தில் சட்டம் - நீதியின் மேற்பார்வை அவசியம்'' என்று. இப்படி மனித உரிமைகள் பாதிக்கப்பட்டால் நீதிமன்றங்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க முடியுமா? எப்படி இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்த மூன்று தீர்ப்புகளும் கூறுகின்றன.
ஒருமுறை கோபாலகிருஷ்ண காந்தி தன்னுரையில் கேட்டார், ""சாலை ஓரப் பாதைகள் எங்கே போயின? இன்று மேம்பாலங்கள் பல முளைத்துவிட்டன. ஆனால் பாதசாரிகளுக்குப் பாதை?'' காரில் போவோருக்கு வசதிகள் வரட்டும், அதற்காக காலால் நடப்பவர்களுக்கு இடமே இல்லாமல் செய்யலாமா? அப்பொழுது ஏழைகள் பெரும்பான்மையாக இருக்கும் இங்கே - ஒதுக்கப்படுகிறார்கள், வேண்டாத எழுத்தை ரப்பரால் அழிப்பதுபோல.
அன்றொரு நாள் ஆராய்ச்சிமணியை அடித்தது ஓர் ஏழைப் பசு. நீதி அரண்மனையில் இருந்து ஓடிவந்து தீர்ப்புக் கொடுத்தது. அன்று அரசுத்துறையும் நீதித்துறையும் ஒரே இடத்தில் இருந்தன. இன்று சட்டத்தை இயற்றுபவர், செயலாக்குபவர், நீதியைப் பரிபாலனம் செய்பவர் என்று மூன்றாகப் பிரிந்தாலும் இலக்கு ஒன்றே. எல்லோரும் மக்களாட்சியில் சமம். வறியவர்களின் மனித உரிமைகள் சிறிதும் மாற்றுக் குறைவல்ல.
நாளைக்கு உங்களிடம் ஒருவர் பிச்சை கேட்டால், என் சிநேகிதர் சொன்னதுபோல அவரைப் பார்த்துக் காசைக் கொடுங்கள் - கொடுப்பதாக இருந்தால்; எதுவாயினும் "மனிதம்' காயப்படாமல் இருக்க வேண்டும்.
**************************
கட்டுரையாளர்: உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.