மனித குல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதன் நெருப்பை உருவாக்க கற்றுக் கொண்டதை நாகரீக வளர்ச்சியின் ஆரம்பம் என்கிறார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாத முக்கியத்துவம் வாய்ந்தது மனிதன் உப்பை பயன்படுத்தத் தொடங்கியது. அதில் இருந்துதான் வேதியியல் என்ற விஞ்ஞானத்துறை தொடக்கம் பெறுகிறது.
***
உப்பு என்ற தமிழச் சொல்லுக்கு `சுவை' என்று பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகள் எல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தவை. உப்பு தமிழர் வாழ்வியல் சார்ந்தது.'உப்பிட்டவரை உள்ளளவும் நினை', `உப்புப்போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?', `உப்புத் தின்னவன் தண்ணி குடிக்கணும்', `தின்ற உப்புக்கு துரோகம் செய்யலாமா?' என்பன போன்ற தமிழ் வழக்குமொழிகள் இதனை நன்கு உணர்த்தும்.
***
சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை `வெள்ளுப்பு' என்பார்கள். செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா), உப்பும் (அளம்) கொடுத்த வழக்கத்தால் தான் `சம்பளம்` என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்தில் `சாலரி' என்ற சொல் `சால்ட்' என்பதன் அடியொற்றிப் பிறந்ததே! பயனற்ற வேலையை `உப்புப் பெறாத வேலை' என்று கூறுவார்கள்.
***
பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்கு தனி இடம் உண்டு. சுவையின் சின்னமாகவும், வளத்தின் ஆதாரமாகவும் உப்பு கருதப்பட்டது. இன்றும் பலரிடத்தில் புது மணமகள் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக் கொண்டே நுழையும் வழக்கமிருக்கிறது. அரிசி - உப்பு அன்பளிப்பாக வழங்குவோரும் உண்டு.
***
உப்பு உறவின் தொடர்ச்சியை குறிக்கும் குறியீடாகவும் விளங்குகிறது. ஒருவர் இறந்த ஒன்பது அல்லது பதினாறாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கமும் தமிழர்களிடத்தில் இருக்கிறது. இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இப்படி செய்கிறார்கள். தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தரும் உப்புபோல மனிதனும் பயன்பட வேண்டும் என்ற தத்துவமும் புழக்கத்தில் உண்டு.
***
உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர். சந்தைக்குரிய முக்கிய உற்பத்திப் பொருளாக உப்பு இருந்துள்ளது. உப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்பவர்கள் `உமணர்' எனப்பட்டனர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை ஏடுகளில் காணலாம். அவை பேரளம், கோவளம் என்று வழங்கப்பட்டன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
***
உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்டது. அதனால் மரவை எனப்படும் மரச்சட்டியிலும், கல்மரவை எனப்படும் மாக்கல் சட்டியிலும் வைத்து உப்பை பயன்படுத்தினார்கள். இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாகி விட்டன. உப்பு நன்றி உணர்ச்சியின் அடையாளமாகவும் கருதப்பட்டது. `தின்ன உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா' என்று பாரதி பாடியிருக்கிறான்.
***
காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகமும், தண்டி யாத்திரையும் இந்திய வரலாற்றில் முக்கியமானவை. உப்பு வரிக்கு எதிரான இப்போராட்டங்கள் உப்பின் முக்கியத்துவத்தையும், உப்பு மக்கள் வாழ்வு தழுவியிருந்தது என்பதையும் குறிக்கும் வரலாற்றுச் சம்பவங்களாகும். `உப்புக்கு வரிபோடும் அரசும் ஓர் அரசா?' என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத் தகுதியற்றது என முழங்கினர் தேசியவாதிகள். உப்பு விடுதலை உணர்வையும் ஊட்டியிருக்கிறது அல்லவா!
**************
source : http://www.eegarai.net/t53179-topic